எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 ஜூலை, 2023

பால் சுரக்கும் பாளை - சோகிசிவா நாவலுக்கு திரு. துரை அறிவழகன் அவர்களின் முன்னுரை.

 பால்சுரக்கும் பாளை
கால ஊற்றில் இருந்து கசியும் நீர் குடித்த பொடிக் குருவி ஒன்றின் பார்வையில் இருந்து விரிகிறது நகரத்தார் கலாச்சார வாழ்வும் அவர்களின் தத்துவமும்
.

ஆச்சி, அப்பச்சிகள் என வாழ்ந்த மூதாதையர் சமூக வாழ்வின் சாரத்தின் ரேகைகளோடு தன் கதை வரைபடத்தை வரைந்துள்ளார் நாவலாசிரியர்.

சுண்ணாம்புக் கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை அரைத்து முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்த கலவையில் சுவர் பூச்சு; ஓடைக் கற்களை கொண்டு வந்து கைச் சூளையில் நீர்த்த சுண்ணாம்புக் கலவையில் சுனை சிற்பங்கள்……இப்படி வீடு கட்டுவதற்கு என்றே வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள்.

இளையாத்தங்குடியை ஆதி கோவிலாகக் கொண்டு ஒன்பது நகரக் கோவில்களை உள்ளடக்கிய   நிலவியல் எல்லைகளைக் கொண்டவர்கள் நகரத்தார்கள். தெற்காசியா, ஐரோப்பிய தாக்கத்தில் உருவான கலை இவர்களுடையது.   

இந்த நகரத்தார் வாழ்வியல் பண்பு  ரேகைகளை அடி நிலமாகக் கொண்டு தளிர் இலை காட்டியுள்ளது "சோகி-சிவா" நாவல்.

"கரும்பு தின்னவனுக்கு கரும்பு ருசி; வேம்பு தின்னவனுக்கு வேம்பு ருசி" என்றொரு 'சொலவம்' உண்டு. இந்த நாவலின் மொழி தனி ருசி; வாசிப்பு உணர்த்தும் அந்தச் சுவையை. சிறு கோடுகளில் அழுத்தமான சித்திரத்தை உயிர்ப்பித்துவிடும் நேர்த்தியான மொழி கட்டமைப்பு கொண்ட எழுத்து நடை இந்த நாவலாசிரியருடையது.  இயல்பில் அமைந்த மொழி.

இயற்கையின் அழகுகள், பாரம்பரிய பண்பாட்டு வேர்கள், நகரத்தார் வாழ்வியல் கட்டமைப்பு இவை அனைத்தும் கரைந்த நிலத்தில் நடவு கண்டுள்ளது நாவல்.

"கிளிப்பிள்ளைகளும் சட்டாம்பிள்ளைகளும் பெருத்துப் போன சனநாயாக காலம்" என்று தன் சம காலத்தைக் குறித்துச் சொல்லுவார் கி.ராஜநாராயணன். இப்படியான ஒரு காலத்தில் எளிமையின் தனித்த அழகுடன் மலர்ந்து உள்ளது இந்த நாவல். இருண்மை உலகமோ படிம அடுக்குகளோ இல்லாத சுனை நீர் ஓட்டத்தில் அமைந்த கதைப் போக்கு.

அடுக்கப்பட்ட நாழி ஓடுகளின் பாசிப் படர்வுகளில் இருந்து முகம் காட்டும் தாவர அழகுடன் வரையபட்டுள்ள நாவல் இது. நகரத்தார் வட்டார மொழியின் கலை வடிவ ஆவணம் என்று "சோகி - சிவா" நாவலைக் குறிப்பிடலாம்.

ஆதி கிராமங்கள் பனை சூழ்ந்தவைகள். பனைகளில் 'கள்ளப்பனை'கள் உண்டு. எல்லா பனை ஏறிகளுக்கும் பால் சுரந்துவிடாது இந்தப் பனைகள். கலாபூர்வ எழுத்துக்களை சுரக்கும் கைவாகு எல்லா எழுத்தாளர்களுக்கும் வாய்க்காது.

தேனம்மை அவர்களின் கைகள் கள்ளப் பனைகளின்  பாளைகளில் பால் சுரக்கச் செய்யும் கைகள்.

"பெத்தவள் பேரும் வைக்கணும் என்பார்கள்.

வைத்த பெயர் துலங்கணுமே என்கிற கவலை படைப்பாளிக்கு.

எதுவும் நம்மிடம் இல்லை என்கிறது அனுபவச் சொல்.

ஆகக் கடைசியில் உலகம்தான் ஒரு  பெயரை வைக்கும்.

அதுவே நிலைச் சட்டமாகும்"

'வேதபுரத்தார்க்கு' நாவலின் முகப்பு உரையை இப்படி ஆரம்பிப்பார் கி.ரா.

முகப்பு நிலையில் இருக்கும் கலை அழகுமிக்க சூரியப் பலகையின் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது 'சோகி - சிவா' நாவல் . 

சிறப்பான அடையாளம் பெற வாழ்த்துக்கள்.

*

துரை.அறிவழகன்

*

 டிஸ்கி:- சோகி சிவா நாவலின் முன்னுரை வழங்கிய திரு துரை. அறிவழகன் சார் அவர்களுக்கு அன்பும் நன்றியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...