எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2020

யுவைடிஸ்

 யுவைடிஸ்


டுப்படிப் பத்தியில் ஐயாவுக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டிருந்தாள் ஒமையா. அப்பத்தா இல்லாததால் ஐயா வீட்டில் தங்குவதில்லை. கிணற்றடிக் காளியம்மன் கோவில் பக்கம் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள் ஐயா. அங்கே நண்பர்களோடு அவ்வப்போது சீட்டுக் கச்சேரியும், அரட்டைகளும், தினசரிகள் பார்த்து அரசியல் அலசல்களும் நடக்கும். எப்போதும் எல்லாரும் சீட்டு விளையாடும் இடம் என்பதால் அதற்கு சங்கம் என்று பெயரிட்டு இருந்தார்கள் ஐயாவின் நண்பர்கள். 

கீழ்வாசலில் நின்று கண்ணைச் சுருக்கியபடி ”சீக்கிரம் கொடாத்தா “ என்று பரபரத்து கொண்டிருந்தார் சோமண்ணன்.

வெற்றிலை பொகையிலை போட்டுச் சிவந்திருந்த வாய்க்கு ஈடாக ராத் தூக்கமில்லாமல்  செக்கச் செவேலனக் கிடந்தன சோமண்ணனின் கண்கள்.


எப்போது பார்த்தாலும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். மாநிறம்தான் என்றாலும் சூரியனை உலவ விட்டதுபோல் இரண்டு கண்ணும் ஜொலிக்கும். எல்லாருக்கும் வாய் சிரிக்கும் என்றால் சோமண்ணனுக்குக் கண்ணுதான் முதலில் சிரிக்கும். ஐயாவுக்கு அமையும் ஆட்களும் ஐயாவைப் போலவே.

ஐயாவின் கண்கள் போல சாந்தமானவை அண்ணனின் கண்களும். ஒற்றை நாடி சரீரம். லேசாய் வழுக்கை விழுந்த தலை. ஒரு ப்ளெயின் சட்டை, கட்டம்போட்ட லுங்கி இதுதான் அவர் அணிவது.

”எப்பண்ணே நீங்க படுக்கப் போவீக. கண்ணு ரெண்டும் இப்பிடிச் செவந்து கெடக்கே “

“அது கெடக்காத்தா. நேத்து தியேட்டர்ல எம்சியார் படம். அதுல வர்ற பாட்டை எல்லாம் திரும்பத் திரும்ப ஓட்டிப் படம் முடிய விடிகாலை ஆயிருச்சு. போடாட்டா உய் உய்னு விசிலடிச்சுக் கத்துறாய்ங்க. மொதலாளி ஐயாதான் போட்டு விடு சோமுன்னாக. இதே தேட்டர்ல இதே எம்சியார் படத்த மூணாவது தடவையாய்ப் போடுறோம். அவர் போயே பதினைஞ்சு வருசமிருக்கும். இப்பவும் கூட்டம் குமிஞ்சு தள்ளுது. டிக்கெட் வாங்க ஒருத்தன் தலை மேலே ஒருத்தன் ஏறி ஓடியாரான் கியூவுல நிக்காம “ பேசிக் கொண்டே கண்களைக் கசக்கிக் கொண்டார் சோமண்ணன்.


”அண்ணேன். ஐயாவுக்கு வைச்சதோட இன்னும் ஐஞ்சாறு பூரி எக்ஸ்ட்ரா வைச்சிருக்கேன். ஐயாவுக்குப் பரிமாறிட்டு நீங்களும் சாப்பிட்டுட்டுப் போங்க”

“நேரமாச்சு ஆத்தா. இன்னிக்குப் புதுப் படப் பொட்டி வருது. மொதலாளி சீக்கிரம் வரச் சொன்னாக. ஐயாவுக்கும் சாப்பாடு கொடுக்கத் தோதா வேற ஆளு அமையலயேன்னு நான் வந்தேன். அங்கே ஐயாவோட யாராச்சும் தங்கி இருப்பாக. அவுக சாப்பிடட்டும்.”

“அங்கே போனாக் கிடைக்காதுன்னா இங்கனயே சாப்பிட்டுட்டுப் போங்கண்ணேன்”

”உன் கைச் சமையல் என்ன நான் சாப்பிடாததாத்தா. இன்னொரு நாள் சாப்பிட்டுக்கிட்டாப் போச்சு”

கண்களைக் கசக்கிக் கொண்டே சோமண்ணன் சாப்பாட்டுக் கூடையை எடுத்துச் சென்றார். சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுப்பதிலிருந்து ரீல் மாற்றுவதுவரை எல்லா வேலையும் பார்ப்பார் சோமண்ணன். இருபத்தி ரெண்டு வயதில் ஐயா சொல்லிச் சேர்த்து விட்டதில் இருந்து இன்னைக்கு அறுபத்திரெண்டு வயதுவரை தியேட்டர்தான் அவருக்கு வீடு.


முப்பத்தியைந்து வயதில் ஆத்தா தொல்லைக்காகக் கல்யாணம் செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றதோடு சரி. வாக்கப்பட்டு வந்த அந்த மகராசியும் , சோமண்ணனைப் பெற்ற மகராசியும் ஏதோ ஒரு விஷக் காய்ச்சலில் அடுத்தடுத்துப் போய்ச் சேர்ந்தார்கள்.

அதற்குள் மகள் சமைந்துவிட்டதால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் அவளே தாயாகி சமைத்துப் போட்டுத் தன் அண்ணனையும் தகப்பனையும் பார்த்துக் கொண்டாள். அண்ணனின் நாற்பது வயதில் பிறந்த பெண் என்பதால் ரொம்பச் செல்லம். ஒரு கால் சிறிது குட்டையாக இருந்ததால் கெந்திக் கெந்தி நடப்பாள் சோமண்ணன் மகள் செல்வி. மகன் செதம்பரம் எலக்ட்ரிகல் வேலைகள் செய்து சம்பாதித்து வந்தான். முத்தாளம்மன் கோவில் சரிவில் ஒரு சந்தில் குடியிருந்தார்கள் அவர்கள்.

சோமண்ணன் வேகமாக மிதிக்கச் சரிவில் படுவேகமாக சர்ரென்று இறங்கியது சைக்கிள். கிணற்றடிக் காளியம்மன் கோவிலைத் தாண்டியதும் வளைவில் சரக்கென்று நிறுத்திக் கூடையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார் சோமண்ணன்.

“வாப்பா சோமு.” என வரவேற்றார் அழகப்பண்ணன். ”அண்ணே பசியோட்ட வெகு நேரமாக் காத்துக்கினு இருக்காக. “ என்று கூறவும் “ இதோ வந்துட்டம்ணே. நேத்து தியேட்டர்ல எம்சியார் படம்ல.அதான் தூங்கவே நேரம் கிடைக்கல. ஒமையாப் பொண்ணு சாப்பாடு கட்டிக்கிட்டு இருந்துச்சு. அதான் ஓடியாந்தம்ணே “ என்றார் சோமண்ணன்.

தட்டை எடுத்து வைத்துப் பூரியைப் பரிமாறிக் கிழங்கை மோந்து வைக்கவும், “அழகப்பனுக்கும் பலகாரத்தைக் கொடப்பா” என்றார்கள் அருணாசல அண்ணன். இருவரும் சாப்பிட்டதும் ப்ளாஸ்கிலிருந்த காப்பியை ஊற்றிக் கொடுத்தார் சோமண்ணன்.

“சரி அப்பச்சி. கேரியல்ல சாப்பாடு இருக்கு. சாப்பிடுங்க. நான் நாளைக்கு வர்றேன் அப்பச்சி “ சோமண்ணன் முதல்நாள் சாப்பாடு கொண்டுவந்த கேரியரையும் டிஃபன் டப்பாக்களையும் எடுத்துக் கூடைக்குள்ளே போட்டுக் கொண்டு திரும்பினார்.

“என்னப்பா சோமா. நல்லாயிருக்கியா “ என்று கேட்டுக் கொண்டே ரிக்‌ஷாவில் இருந்து இறங்கினார் மெய்யப்பண்ணன். “ஐயா புண்ணியத்துல நல்லா இருக்கம்ணேன்” என்றபடி விரைந்தார் சோமண்ணன்.

”இவன் எப்பலேயிருந்து ஒங்ககிட்ட இருக்கான் ஆனா ரூனா “ என விசாரித்தார் அழகப்பண்ணன். ”இவன் சின்னப் புள்ளையாயிருக்கியிலேருந்தே நமக்கு வேலை பார்க்குறானப்பா” என்றார் அருணாலண்ணன்.

”நாம ரெண்டு பேரும் மொதல்ல நாச்சியப்பண்ணன் வீட்ல சீட்டுப் போடப் போவோம்ல. அப்ப இவன் ஆத்தா எளந்தோசையும் மடக்குப் பணியாரமும் மொளகாய்ச் சட்னியும் போட்டு வித்துக்கினு இருக்கும் மகர்நோன்புப் பொட்டல்ல. அப்பக் கொண்டாரச் சொல்லி வாங்கிச் சாப்பிடுவோம். அருமையா இருக்கும். இப்பவுல்லாம் யாரு அப்பிடி வாயில போட்டாக் கரையிறமாதிரி எளந்தோசை சுடுறா. அப்பயிலேருந்தே இவனத் தெரியும்.”

”இவன் மகளுக்கே இப்பச் சேயிற வயசு இருக்கும். அப்ப முப்பது நாப்பது வருஷமா உங்களுக்கும் வேலை பார்த்துக்கிட்டு வர்றானா. “ என்றார் அழகப்பண்ணன்.

“அடப் போப்பா. அவன் இவுககிட்டக்கயே இருக்கம்னுதான் சொன்னான். ஒனக்கும் புள்ள குட்டி ஆயிப் போச்சு. நான் தர்ற வருமானம் பத்தாது அப்பிடின்னு சொல்லி அண்ணந்தான் தியேட்டர் வைச்சிருக்கிற அவுக ஃப்ரெண்டு முருகப்பன்கிட்டச் சொல்லிச் சேர்த்து விட்டாக.” என்றார் மெய்யப்பண்ணன்.

“இங்கே எங்கிட்ட இருக்கும்போது மூணு வேளையும் வீட்டயிருந்து சாப்பாடு கொண்டாந்து போடுவான். இப்பத் தியேட்டர்ல சேர்த்து விட்டதால ரவைக்கு வர முடியல. எங்க இருந்தாலும் விசுவாசமா இருப்பான். அதான் விடாம இப்பவும் நான் என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிட்டுப் பலகாரம் சாப்பாட்டை வீட்ட இருந்து எடுத்தாந்து தர்றான். எள்ளுன்னா, எண்ணையா நிப்பான். எங்க வீட்ல எந்த அனுவல்னாலும் இவன் இல்லாம நடக்காது. “ என்று சோமுவைச் சிலாகித்தார்கள் அருணாலண்ணன்


மையாளும் தலைகாணியில் சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். ’எனக்கே நாப்பது வயசாகுது. ஸ்லோவாயிட்டேன். இந்த சோமண்ணன் கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்ட மாதிரி இப்பிடிச் சுறுசுறுப்பா அலையுறாகளே. ஆத்தாடி அந்தண்ணனுக்குத் திருஷ்டி சுத்தித்தான் போடணும். ‘

தலைகாணியின் வழுவழுப்பு அவளை அவளுடைய திருமணக் காலத்துக்கு அழைத்துச் சென்றது. வீட்டின் பின்புறம் குடியிருப்பவர் ஒருவர் காலி செய்ய அந்த வீட்டுக்குள் கொண்டுபோய் ஐஞ்சு மெத்தையும் இருபத்தியோரு தலைகாணிக்கும் சோமண்ணன்தான் பஞ்சு அடைத்தார். காலையில் உள்நுழைந்து சாயங்காலம் தலைமுதல் கால்வரை பஞ்சு அப்பி ஸ்நோ மனிதன் மாதிரி வெளியே வந்தார்.

“என்னண்ணே இது. “ என்றதற்கு “ குளிச்சா சரியாயிடும் விடாத்தா.” குளித்துவிட்டு ரத்தினக் கம்பளங்களை மடித்து அடுக்கி, சீர் வைக்கும் பித்தளைச் சாமான்களை மேவீட்டுக்கு ஏற்றப் போய்விட்டார். கல்யாணத்தன்றும் வேவுக் கடகாங்களை வேவு இறக்க சாமி வீட்டிலிருந்து அம்பு போல் உடனுக்குடன் கொண்டு வந்து நடையில் சிலேட்டு விளக்குக்கருகில் வைத்தார். இருபத்தியோரு வேவு !

வெள்ளி, சில்வர், பித்தளை, மங்கு, இரும்பு, தகரம், மரச்சாமான்கள், குளுதாடிகள், ஜாடிகள், பிளாஸ்டிக், ரப்பர், மோர்மான் இன்னும் கட்டில் மெத்தை தலையணைகள், அலமாசிகளை எல்லாம் கூட ஓரிருவரை வைத்துக் கொண்டு இங்கே இறக்கி மாமியாரின் சாமான் போடும் மேவீட்டில் ஏற்றி அடுக்கியதுவரை அண்ணனின் கைவண்ணம்தான்.

ஒமையாவீடு ட்ரான்ஸ்ஃபரில் ஊர் மாறும்போதெல்லாம் பழைய வீடு காலி பண்ணிப் புதுவீட்டில் பொருட்களை ஏற்றுவது வரை உதவி செய்ய வந்துவிடுவார். அன்னைக்கு மட்டும் தியேட்டர் மொதலாளியிடம் லீவு கேப்பார். அடுத்தநாளே தியேட்டருக்குப் போயிருவார்.

“அண்ணேன் இதுவரை எத்தனை படம்ணே பார்த்திருப்பீக” எனக் கேட்டாள் ஒமையா ஒருதரம்.

“அது கெடக்காத்தா எம்புட்டோ. எனக்கு இருவது வயசுல ஒங்கையா அங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டாக. இப்ப அறுவது இருக்கும். நாப்பது வருசத்துல வாரத்துக்கு ஒரு படம் மாத்துவாக. நீயே கணக்குப் பண்ணிக்க. அதுபோக எத்தன படம் பார்த்தீகன்னு கேக்கப்புடாது. ஒரு படத்தையே எத்தனை தடவ பார்த்தீகன்னு கேக்கணும்’‘ என்று சொல்லிவிட்டு பொகையிலையைக் கிள்ளிப்போட்டுச் சிரித்துக் கொண்டார் சோமண்ணன்.

”ஒரு வாரத்துக்கு ஒரு படம்னா, வருசத்துக்கு 52 படம். ஒரு நாளைக்கு மூணு அல்லது நாலு ஷோன்னா கொறைஞ்சது வருஷத்துக்கு 200 தரம். நாப்பது வருஷத்துக்கு 8000 தரம். ஆத்தாடியோவ், அண்ணேன் தம்பிப் பய ராமு ஒருதலை ராகத்தைப் பன்னிரெண்டு தரம் பார்த்தேன்னு தம்பட்டம் அடிச்சுக்குவான். நீங்க ஒரு வாரம் முழுசாப் பார்த்தாலும் 28 தரம் பார்த்திருப்பீக போலயே “ என்று வியந்தாள் ஒமையா.

“நல்ல படம்லாம் ஓடுது . கல்யாணத்துக்கு முன்னாடித்தான் வரமாட்டே. இப்பத்தான் புள்ளையு குட்டியும் ஆச்சுல்ல. மாப்பிள்ளை ஒண்ணுஞ் சொல்ல மாட்டாக. நீயும் ஒருதரம் வந்து படம் பார்க்க வாத்தா” என்று அழைத்தார் சோமண்ணன்.

சின்னப் பயலையும் பெரிய பயலையும் கூட்டிக்கொண்டு ஒமையா மூன்றாவது தரம் வந்திருந்த எம்சியார் படத்தைப் பார்க்கப் போனாள். டிக்கட் கவுண்டரில் இருந்த சோமண்ணன் டிக்கட் வாங்கவே விடவில்லை. ஓடி வந்து மூவரையும் கூட்டிப் போய் நல்ல சீட்டில் உட்கார வைத்தார். தியேட்டரே புதுமாதிரி ஆகியிருந்தது. எப்பவோ வந்தது. டிஜிட்டல் சவுண்டாம். அதிர்ந்தது.


“உலகம் உலகம் உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் “ என்று எம்சியார் பாடப் பாட தியேட்டரில் விசில் சத்தமும் பேப்பர் பூக்களும் பெருகின. இண்டர்வெல்லில் வந்து “ஆத்தா ஒமையா கலர் குடி, இந்தாங்க புள்ளைகளா கடலை மிட்டாய், முறுக்கு, கல்கோனா” என்று வாங்கியாந்து கொடுத்தார். “இதெல்லாம் வேணாம்னே “ என்றபோது “ சும்மா சாப்பிடாத்தா. “ என்று போனார்.

படம் விட்டதும் எழுந்து சொல்லிக் கொண்டு செல்லலாம் என  ஆபரேட்டர் ரூம் பக்கம் எட்டிப் பார்த்தாள். ‘உத்தரவின்றி உள்ளே வராதே’ எனப் போட்டிருந்தது. அதற்குள் உள்ளேயிருந்து கையில் பெரிய சைஸில் கம்பி மத்தாப்புப் போல மூன்று நான்கைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தார் சோமண்ணன்.

“ஐ பெரிய கம்பி மத்தாப்பு “ என்று பிடிக்கப் போனார்கள் சின்னவனும் பெரியவனும். “ஆத்தாடி தம்பிப் பயலுகளா. இதைத் தொடப்புடாது. வெலை சாஸ்தி, தொட்டா ஒடைஞ்சு போயிரும். இதுதான்தா கார்பன் குச்சி. இத எரிச்சாத்தான் படம் பார்க்கலாம். இதுக்கு முன்னாடி ரோல் ஓடும். இந்த வெளிச்சத்துல படம் தூரத்துல பெரிசாத் தெரியும்.” அண்ணனின் பக்கத்தில் நின்றாலே அனலடித்தது. அவ்வளவு தூரம் படம் தெரியணும்னா சும்மாவா. அதுவும் 8000 படம் பார்த்திருக்காரே. அண்ணன் அடிக்கடி சிவந்திருந்த கண்ணைக் கசக்கிக் கொண்டு இருந்தார்.  

“என்னண்ணே பண்ணுது”

“கண்ணுல தண்ணியா வடியுதாத்தா. அரிக்குது “

“செவந்து போய்க் கிடக்குண்ணே. நீங்களும் தியேட்டர்ல இருக்கம்ணு ரொம்பப் படம் பார்க்காதீங்கண்ணே. தினம் நாலு ஷோ விடாம பார்த்தா கண்ணு செவக்கத்தானே செய்யும். பார்த்த படத்தையே பார்க்காதீக. டாக்டர்கிட்டக்  காமிச்சீகளா”

“டாக்டரா அதெல்லாம் எதுக்கு. தூங்குனா சரியாப் போயிருமாத்தா”

“அப்பப்ப எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும்ணே. “

“அதெல்லாம் தீவாளிக்குத்தானாத்தா. “ என்று சிரித்தார் சோமண்ணன்.

“சரிண்ணே. வாரோம். தாங்க்ஸ். ரொம்ப நாள் கழிச்சு உங்க புண்ணியத்துல ஒரு படம் பார்த்தோம். “ பயல்கள் கையாட்டினார்கள்.

“ஆத்தாத்தோய் அப்பிடியெல்லாம் சொல்லாதாத்தா. “ என்று பயல்களைப் பிடித்துக் கொஞ்சினார் சோமண்ணன்.

ன்றைக்குப் பிறகு பத்து வருடம் கழித்து மகள் கல்யாணத்துக்கு இன்விடேஷன் வைக்க வந்தார். இப்போது கைலி மாறி வேட்டியாகி இருந்தது. சட்டை முழுக்கைச் சட்டையாகி இருந்தது. மாமனார்க் களை வந்துவிட்டது அண்ணனுக்கு. ”அண்ணேன். வாங்கண்ணேன். நல்லாயிருக்கீகளா. செல்வியும் செதம்பரமும் சௌக்கியமா “ என ஆத்தா வீட்டு ஆளைப் பார்த்ததில் வாயெல்லாம் பல்லானாள் ஒமையா.

“ஐயா மக்க இருக்கமட்டும் எனக்கு என்ன கொறை. நல்லா இருக்கேனாத்தா.”

“மாப்பிள்ளை வீடெல்லாம் எப்பிடின்னே.”

”என் ஒத்தமக நல்லா வாழணுமாத்தா. மாப்பிள்ளை சிக்கனக்காரன்னு கேள்விப்பட்டேன். இவந்தான் எம்மகளை நல்லா வைச்சுக்குவான்னு முடிவு பண்ணிட்டேன்.” தந்தையின் பாசம் பொங்கிக் கிடந்தது அண்ணனின் முகத்தில்.

அப்பாவும் அத்தையும் சோமண்ணன் மகள் கல்யாணத்துக்கு என்று ஆளுக்கொரு பவன்காசு கொடுத்திருந்தார்கள். ”தோடும் மூக்குத்தியும் கொலுசும் தாலியும் பண்ணிட்டேன் ஆத்தா.” என்றார். ”ஐயா மக்க இருக்க வரைக்கும் எனக்கு என்ன கவலை. மொதலாளியும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தாக”

“காப்பி குடிங்கண்ணேன். “

ஒமையா தன் பங்காக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாள். “ கட்டாயம் மாப்பிள்ளையை அழைச்சிக்கினு வந்திரோணுமாத்தா. ” அண்ணனின் கண் வழக்கத்தை விட சிறுத்திருந்தது. கண்ணைக் குறுக்கிக் கொண்டு வேறு பார்த்தார்.


“ஏண்ணே கண்ணைக் குறுக்குறீக.”

“கண்ணுலதான் ஆத்தா பிரச்சனை. தினம் ரெண்டு மூணு சொட்டு மருந்து போடோணுமாம். மாசமானா இதுக்கே நெறைய செலவாகுது. போடாட்டா கண்ணு தெரியாம போயிருமாம். மகர்நோன்புப் பொட்டல்கிட்ட இலவசமா கண் முகாம் போட்டிருந்தாக. அங்கே காமிச்சேன்”

நம்ம குடும்பத்துக்குன்னே ஒழைச்சவரு. ஒமையாளுக்குப் பதறியது. “சொட்டு மருந்தை விடாமப் போடுங்கண்ணேன்.” உள்ளே போய் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து வந்து கொடுத்து ”அண்ணேன் இது உங்க சொட்டு மருந்துக்கு.” ”சரித்தா” என்று சிரித்துக் கொண்டே வாங்கினார் சோமண்ணன்.

ஓரளவு பெரிய கல்யாண மண்டபத்தில் செல்வியின் திருமணம் நடந்தது. இந்தப் பக்கத்து ஆட்களின் திருமணம் போல விருந்திலும் சரி சீர் வரிசையிலும் சரி அண்ணன் அசத்தி இருந்தார். கொடியில் நூத்தியோரு சேலையைப் பாத்து ஆத்தாடியோவ் என்றது வந்திருந்த சனம். இரும்பு ஸ்டாண்டில் சில்வர் சம்புடங்களில் தீஞ்சாமான்களை நிரம்பக் கொட்டி வைத்துக் கொடுத்திருந்தார். மாப்பிள்ளைக்கும் சட்டை பாண்ட், செண்ட், ஃபேன், டேபிள் சேர் என்று பரப்பி இருந்தது. அண்ணனுக்குப் பழக்கமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைப் பரிசளித்திருந்தார்கள். மண்டபத்தின் ஹாலில் பாதி அளவு அவர் பரப்பி இருந்த சாமான்களே அவர் பாசத்தின் சாட்சியாய் இருந்தன.

கேர் செண்டரில் வெகு கூட்டம். நாள் பூரா மக்கள் கல்யாண மண்டபம் போல் நிறைந்து கொண்டிருந்தார்கள். கண்ணுக்கென்றே விதம் விதமான சிகிச்சைகள். ஐந்து வயதுச் சிறுவர்கள், முதியவர்கள் என வயது பேதமில்லாமல் கண் நோயாளிகள் காத்திருந்தார்கள். ஒரு நர்ஸ் வந்து கண்ணில் ஒரு சொட்டு மருந்தை ஊற்றி ”ஒருமணி நேரம் கண்ணைத் திறக்காம இருங்க” என்று கூறிவிட்டுப் போக ஒமையாளும் அவள் கணவரும் பக்கம் பக்கமாய்க் கண்மூடி அமர்ந்திருந்தார்கள். இப்போது ஒமையாளுக்கு ஐம்பந்தியைந்து வயது இருக்கும்.


அதன் பின் டாக்டர் பொராப்டர் மிஷின் மூலம் கண்ணைப் பரிசோதித்தார். 

”கண் அரிக்குது. அடிக்கடி நீர் வடியுது. புக் படிச்சா கண் வலிக்குது, தலையும் வலிக்குது  “ என்று அவள் டாக்டரிடம் சொல்ல ”எதுக்கும் சுகர் டெஸ்ட் எடுத்துடுங்க” என்றார். ”சாதாரண ரீடிங் க்ளாஸஸ் போடக்கூடாது. உங்களுக்கு ஒரு கண்ணுக்கு இன்னொரு கண் விஷன் ப்ராப்ளம் இருக்கு. ரெண்டுக்கும் ரீடிங் பவர் வேற. ஆக்ஸிஸ் டிஃபரன்ஸ் இருக்கு. இத டெஸ்ட் பண்ணித்தான் கண்ணாடி போடணும். அதுனாலதான் கண் வலி, தலைவலி  “ என்றார் உமையாளிடம்.

”உங்களுக்கு ஐ ப்ரஷர் இருக்கு. அது போக இந்த ட்ராப்ஸை விடாமப் போடணும். இல்லாட்டி க்ளாக்கோமா வர சான்ஸஸ் இருக்கு “ என்றார் ஒமையாளின் கணவரிடம்.

இருவரும் அதன்பின் கண்ணாடி  செக்‌ஷனுக்கு வந்தார்கள். கணவருக்கு பைஃபோகல் லென்ஸும் அவளுக்கு வெள்ளெழுத்துக் கண்ணாடியும் இருபத்தி எட்டாயிரத்தைத் தாண்டிவிட்டது.

வெளியே வந்து ஹோட்டலில் சாப்பிட்டார்கள். “ க்ளாக்கோமாவா. அப்பிடின்னா ” என்றாள் ஒமையா. “

“நாளாக நாளாகக் கண்ணு தெரியாமப் போயிரும் “ என்றார் ஒமையாளின் கணவர். “ஏங்கிறேன் இப்பிடிப் பேசுறீங்க. அந்தச் சொட்டு மருந்து வாங்கிட்டீகளா. தெனம் காலையிலயும் இராத்திரிலயும் ரெண்டுதரம் போட்டாச் சரியாயிரும்னாரே டாக்டர். “

”ஏன் நீ எனக்குக் கண்ணா இருக்க மாட்டியா “

“நல்லா இருப்பேன் நான் இருக்குறவரைக்கும். ஆனா ஒங்க கண்ணு நல்லா இருக்கணும்ல. அதுதானே முக்கியம்.”

”அந்தச் சொட்டு மருந்து வெலை ஜாஸ்தி. ரெண்டு வாங்கினா மூணு தராங்க”

“வீட்டுல இருந்தா நான் போட்டு விட்டுருவேன். டூர்லயே இருக்கீகள்ல. தெனம் மறக்காமப் போட்டுக்கின்றோணும். “

“தெனம் காலையிலயும் இராத்திரிலயும் ஃபோன் பண்ணு. கண்ணு மருந்து போட்டுக்கிட்டனான்னு கேட்டீன்னா மறந்தன்னாக் கூடப் போட்டுக்கின்றுவேன்” 

“எம்புட்டுக் காசு இருந்தென்ன. கண்ணுதானே முக்கியம். கடைசி வரைக்கும் யாரையும் செரமப்படுத்தாமக் கை காலோட கண்ணோட்ட இருந்துட்டுப் போய்ச் சேரோணும். கண்ணாத்தாளுக்கு மாவெளக்கு வைக்கிறேன்னு வேண்டிக்கினு இருக்கேன் “

“ ஏங்கிறேன். உங்களுக்குச் சோமண்ணன் ஞாபகம் இருக்குல்ல. “

“ஆமாம் ஒங்காத்தா வீட்டுல எல்லா விசேஷத்துக்கும் வந்து வேலை பார்ப்பாரே. நமக்குக் கூட வீடு மாத்தவெல்லாம் வந்துக்கிட்டு இருந்தாரே. அவருக்கென்ன. “

“இல்லை அவருக்குக் கண்ணு எப்பவும் செவந்து போய்க் கெடக்கும். கண்ணுல பிரச்சனைன்னு சொன்னாரு, மக கல்யாணத்துக்கு வந்திருந்தப்ப. நான் கூட ஐநூறு ரூபா கொடுத்து கண்ணுக்குச் சொட்டு மருந்து போட்டுக்கச் சொன்னேன். அந்த மருந்தைப் போட்டுக்காட்டிக் கண் தெரியாமப் போயிரும்னாரு. அப்ப அது பத்தி ரொம்பத் தெரியல. நாம டெல்லி வந்து பத்து வருஷம் ஆச்சு. அப்பப்ப அப்பாகிட்டக் கேட்பேன், இப்ப ரெண்டு வருஷமா தாக்கல் ஒண்ணும் தெரியல. “

செல்ஃபோனை எடுத்து அப்பாவுக்குப் போனைப் போட்டாள். “ அப்பா நல்லா இருக்கீகளா. “


”நல்லா இருக்கோம்தா. நீயும் மாப்பிள்ளையும் பிள்ளைகளும் நல்லா இருக்கீங்களா. “

”நல்லா இருக்கோம்பா. நம்ம சோமண்ணன் இருக்குல்ல. அவுக எப்பிடிப்பா இருக்காக”

“சோமன் போய் ஆறுமாசம் ஆச்சேத்தா. “

“என்னப்பா சொல்றீக..சோமண்ணன் இல்லையா” ஒமையாளுக்குப் படபடப்பாயிருந்தது. கணவர் அவள் கையைப் பிடித்து அமைதிப்படுத்தினார்.

“ஆமாத்தா. நீங்க ஒங்க புள்ளைக வீட்டுக்கு வெளிநாட்டுக்குப் போயிருந்தபோது சோமன் செத்துப் போயிட்டான். தெரிஞ்சா நீ ரொம்ப வருத்தப்படுவியேன்னு ஃபோன்ல சொல்லல. பாவம் கடைசிக் காலத்துல கண்ணு தெரியாமப் போயிருச்சு. கண்ணுல ரெட்டை ரெட்டையாத் தெரியுதும்பான். கொச கொசன்னு தெரியுதுன்னான். நான் டாக்டர்கிட்டக் காமிடான்னு சொல்லி அப்பப்பப் பணம் கொடுப்பேன். கண்ணு பிரச்சனையினால தியேட்டர்லேருந்தும் நின்னுட்டான். வேற வருமானம் ஒண்ணுமில்ல. ‘

”மகளும் மகனும் பார்க்கலியாப்பா”

“இவன் சரியா வைத்தியம் பண்ணிக்காம விட்டுப்புட்டான். ஏதோ ரெண்டு மூணு சொட்டு மருந்து தெனம் போடணுமாம். வெலை அதிகம்னு வாங்காமப் போட்டுக்காம இருந்திருக்கான். மகனுக்கும் மகளுக்கும் கொட்டிக் கொடுத்தான். அதுகளுக்கும் முன்னாடியே தெரிஞ்சாப் பார்த்திருக்குங்க “

”என்னப்பா இப்பிடி ஆச்சு” கண்ணும் குரலும் கரகரவெனக் கரைந்து வந்தது ஒமையாளுக்கு. மனுஷன் வாழ்வே அம்புட்டுத்தானா. கண் இல்லாமல் அந்த ஓட்டு வீட்டில் சோமண்ணன் எப்பிடி இருந்துச்சோ. மகனும் மகளும் வேறு வீட்டில் இருக்கத் தனியாக எப்பிடிக் காலத்தைப் போக்குச்சோ. ஹோட்டலில் இருக்கிறோம் என்ற நினைவில்லாமல் தடதடவெனக் கண்ணில் நீர் வழிந்தது ஒமையாளுக்கு.

’இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கேட்டிருக்கலாமோ. எங்கிருந்தோ வந்து கண்ணன் போல உதவிய அண்ணனிடம் சொட்டு மருந்துக்கு என்று மாதா மாதம் ஐநூறு ரூபாயைக்  கொடுத்திருக்கலாமோ’ என்று வயிற்றைப் பிசைந்தது ஒமையாளுக்கு. வீடு திரும்புகையில் சாலையெங்கும் குல்மோஹரின் பூக்கள் ரத்தச் சிவப்பில் கொட்டிக்கிடந்தன சோமண்ணனின் கண்களைப் போல.

டிஸ்கி:- இந்தக் கதை அக்டோபர் 16 - 31 சுவடு  மின் இதழில் வெளியாகி உள்ளது. நன்றி சுவடு.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...