மனத்தின் பேராற்றல் - ஒரு பார்வை.
மனத்தின் பேராற்றல்
தனது
யோக வாழ்க்கையை அடிப்படையாக வைத்து யோகாசார்யா எஸ் ஜனார்த்தனன் என்பவர் எழுதிய
நூல்தான் மனத்தின் பேராற்றல். உடல் நலத்தோடு உள்ள நலனையும் கைக்கொண்டால் மனதின்
பேராற்றலை உணரலாம் அதனை செயல்படுத்தலாம் என்கிறார் இவர். மூன்றில் ஒருபங்கு
மூளையையே நாம் இதுவரை உபயோகித்து வருகிறோம் என்கிறார். மூளையின் முழுமையான
செயல்பாட்டுக்கு இவர் தரும் வழிமுறைகளைப் பார்ப்போம்.
உள்மனம், வெளிமனம், பிரணாயாமம், தியானம், செயல்பாடு என இவர் வடிவமைத்துத் தருகிறார். எல்லாவற்றுக்கு மூல காரணம் உள்மனமே என்பது இவர் கருத்து. அந்த உள்மனத்தின் பேராற்றலை யோகத்தின் மூலம் எப்படி அடையலாம் என்ற கையேடே இந்நூல்.
உள்மனப்
பதிவுகளை மாற்றுவதன் மூலம் பலவற்றை நம்மால் மாற்ற இயலும் எனவும் அதேபோல் உள்மனப்
பதிவினாலே நாம் பல்வேறு விஷயங்களை அவை நல்லவைகளோ கெட்டவைகளோ நாமே வரவழைத்துக்
கொள்கிறோம் என அவர் இந்நூல் சுட்டியிருப்பது சிறப்பு.
எண்பதுக்கும்
மேற்பட்ட தலைப்புகளில் அமைந்த இந்நூலில் மனோ சக்தி, மனித மூளையின் செயல்திறன்,
பிராணவாயு என்னும் உயிர்ச்சக்தி, உடலை இயக்கும் சக்திகள், உள்மனம், வெளிமனம்,
குண்டலினி, யோகநித்ரா, தன் மொழிப் பயிற்சி, ஸம்ஸய முறை, தாழ்வு மனப்பான்மை, ஐம்புலன்களால் மனம் அடையும்
கேடு, மனோசக்தி உருக்குலையக் காரணம், மனநோய், ஜீவகாந்தம், வான் காந்தம், அன்னமய,
பிராணமய, மனோமய கோசம், ஆன்மீக சக்தி, கோவில்களுக்குச் செல்வதால் ஏற்படும் நன்மைகள்,
சிற்சபை பொற்சபை , ஆசனம், தியானம், சமாதி ஆகியவற்றின் பயன் , ஈ எஸ் பி, டெலிபதி, டெலிகினிஸிஸ், வர்மம்,
பஞ்சபூதங்களை வெல்லுதல், நட்சத்திர அறிவு கைவல்யம், மனோ வலிமை நான்கு வழிப்
பிறப்புகள், யோகத்தில் நான்கு நிலைகள்,சோமவட்டம் இவற்றோடு தேரையர் , ரமண மகரிஷி,
விவேகானந்தர், இராமலிங்க அடிகள் ஆகியோரைப் பல்வேறு நிலைகளில் உதாரணமாகக்
காட்டியும் ஊனுடம்பே ஆலயம் என விளக்கியுள்ளார்.
மனதின்
பேராற்றலால்தான் சென்ற நூற்றாண்டில் இல்லாதவைகளையும் இந்த நூற்றாண்டில்
கண்டுபிடித்துள்ளோம் என்கிறார். புஷ்பகவிமானம் ( இராவணன், இராமாயணம்) ,
தொலைக்காட்சிக் கருவி ( சஞ்சயன் , மகாபாரதம் ) என சரித்திர புராண காலங்களையும்
இக்காலத்தோடு ஒப்பு நோக்கி விளக்குகிறார்.
மனதின்
தன்மைகள், ஐம்புலன்களின் தன்மைகள், மனித மூளையின் வடிவமைப்பு, பஞ்ச வாயுக்கள்,
பிரணாயாமத்தின் மூலம் அடையும் பலன், இவற்றை நெறிப்படுத்துவது பற்றி அருமையாக
விளக்குகிறார். அதேபோல் நினைவாற்றலின் சக்தியை, நாம் நமக்குள் விரும்புவதை,
சொல்வதைக் கேட்கும் மனம் செய்யும் மாயம் என்கிறார். மனதின் மூலம் உடலின் ,
சிந்தனையின் போக்குகளைக் கட்டுப்படுத்துவது பற்றியும் கூறுகிறார்.
புறமனம்
சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே தூக்கம் வரவேண்டிச் செய்யவேண்டிய யோக நித்ரா
பயிற்சி மிக அற்புதம். தெய்வீகப் பேராற்றல் கொண்ட அகமனதை தியானத்தின் மூலம் அந்தக்
குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி , , தன்னையறியாமல் பழக்க தோஷத்தில்
உறக்கத்திலும் செயல்படும் முறையான சோம்னாபுலிசம், உள்மனதின் வலிமை, குணநலன், அதை
தியானம் மூலம் ஒருமுகப்படுத்தி நமக்கு வேண்டியனவற்றைப் பெறும் விதம் என
விவேகானந்தர் பற்றிய ஒரு நிகழ்வைச் சொல்லி விளக்குகிறார்.
தாழ்வு
மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். ஐம்புலன்களால் அடையும் கேடுதான் மனோ சக்தி உருக்குலையக்
காரணமாகிறது. மனநோய், அதன் அறிகுறிகள், உள்மன உணர்வுகள் , உடல் வலிமை மனவலிமை
பெற்றால் ஏற்படும் உடலின் ஜீவகாந்தம், சூரியனில் இருந்து பெறப்படும் வான்காந்தம்
பற்றியும் விளக்குகிறார். பிரணாயாமத்தினால் பிராணவாயு அதிகரிக்கும்போது உடலில்
தூய்மையும் இந்த காந்த சக்திகளும் பொங்கிப் பெருகுகின்றன என்கிறார்.
உணவால்,
பிராணவாயுவால், மனதால் ஏற்படும் கோசங்கள்தான் அன்னமய பிராணமய மனோமய கோசங்கள். இந்த
விஷயங்களால் சீர் கெட்டவர்களை எண்ணத்தால், பார்வையால், சுவாசத்தால் ஸ்பரிசத்தால்,
தொட்டுத்தடவுவதால் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும். இதையே ஞானிகளும்
ரிஷிகளும் செய்துவருகிறார்கள். ஆன்மீக மையங்களுக்குச் சென்று ஆன்மீக வாதிகளைத்
தரிசிப்பதன்மூலம் ஆன்மீக சிகிச்சி பெறலாம் அதேபோல் கோவிலுக்குச் சென்றாலும்
மனசிகிச்சையின் மூலமும் பல்வேறு நன்மைகள் அடையலாம் என்கிறார்.
யோக
வாழ்க்கை, இராஜயோகம், அட்டாங்க சித்திகள், ஆசனங்களின் பயன்கள், பிரணாயாமம்,
தியானம் ( செய்யும் முறை), சமாதியின் வகைகள், ஈஎஸ்பி, டெலிபதி, வர்மம், பசியை
வெல்லுதல்,பஞ்சபூதங்களை வெல்லுதல், கைவல்யம், ஜாக்கிரதை, கனவு, தூக்கம், துரியம்,
துரியாதீதம், சிற்சபை ( பெருமூளை),
பொற்சபை ( சிறுமூளை), உச்சிப்பாகம் (ஞான சபை ) = ஒலி ஒளி, வெளி என இவர் கொடுக்கும்
விளக்கங்கள் அசத்தல் ரகம்.
பய
உணர்ச்சி, காமவிகாரத்தைக் களைதல்
முச்சை சீர்படுத்துவதாலும், உள்மனப் பதிவுகளைத் திருத்துவதாலும் பெறலாம். இவ்வாறு
மனதை உள்முகப்படுத்தி ஒருமுகப்படுத்துவதன்மூலம் நினைக்கும் அனைத்தையும்
பெறமுடியும் என்கிறார்.
மனமது
செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். என அகத்தியர் சொன்னதுபோல் நாம் நம்
மனதையே தெய்வமாகக் கருதி நம் குற்றங்களைக் களைந்து சரியை கிரியை ஞானம் யோகம்
ஆகியற்றில் ஒழுக வேண்டும். ஊனுடம்பே ஆலயம் எனவும் சோமவட்டத்தை அடைவது பற்றியும்
கூறி இருக்கிறார்.
தான்
நினைத்ததை அடையத் தன்மொழிப் பயிற்சி இன்றியமையாதது. இலக்கை அடைய எண்ணங்களைக்
குவிப்பதன் மூலமும் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் தன்னம்பிக்கை வார்த்தைகளின்
மூலமும் அதுவும் உள் மனதுக்குச் சொல்வதால் கட்டாயம் அடையலாம் என்கிறார்.
நூல்
:- மனத்தின் பேராற்றல்
ஆசிரியர் :- யோகரத்னா, யோகேந்திரா, யோகாசார்யா எஸ். ஜனார்த்தனன்
பதிப்பகம் :- அம்மன் பதிப்பகம். ( 1991 ஆம் ஆண்டு வெளியீடு )
விலை :- ரூ.15/-

மிக நல்ல கருத்துகள்! ஆனால் புத்தகத்தின் விலை!!!!!! புத்தகம் வெளியான ஆண்டில் அந்த விலையாக இருக்கலாமோ!!
பதிலளிநீக்குகீதா
ஆம் கீத்ஸ். !
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!