எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

அரியநாச்சி – ஒரு பார்வை.


அரியநாச்சி – ஒரு பார்வை.

அரியநாச்சி

குற்றப் பரம்பரை, பட்டத்து யானை தந்த ஆசிரியரின் இன்னொரு படைப்பு அரியநாச்சி. ஆனால் குற்றப்பரம்பரை தந்த ஆச்சர்ய வீச்சை பட்டத்து யானையும் அரியநாச்சியும் தரவில்லை.

கதை என்னவோ விறுவிறுப்புத்தான். மதியம் எடுத்து மாலையில் படித்து முடித்ததும்தான் வைத்தேன். ஆனால் ஒரு குறுநாவல் படித்த பாதிப்புத்தான் இருக்கிறது. அரியநாச்சி பற்றி பொதுப்படையான விவரணைகள் தவிர ஒரு கதாநாயகியாகப் படைக்கத் தேவையான பெறுமதியான விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

கால்காசு பெறாத விஷயத்துக்கெல்லாம் வெட்டிக்கொண்டு இறப்பவர்கள் பற்றி முன்னுரையிலேயே கடுமையாகச் சாடுகிறார் ஆசிரியர். சாலைகளில், கம்மாய்க்கரைகளில், சாவடிகளில், தெறித்துவிழும் இரத்தமும் அறுந்து கிடக்கும் சதையும் பற்றியதுதான் கதை.

கோபத்தால் அழிந்தவர்களைப் பற்றிய கிராமத்து இதிகாசம்தான் அரியநாச்சி. இருபதே அத்யாயங்கள்தான். இதிலும் ஆதிமுதல் அரியநாச்சியை ஆசிரியரே தெய்வம்போல் தொழுது படைத்துள்ளார். மற்றவர்கள் எல்லாம் கோபத்தில் அழிந்தார்கள் என்றால் அரியநாச்சி உக்கிரத்தால் அழிக்கிறாள்.

கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை வெட்டும் குத்தும் சிறைச்சாலையும்தான். இடையிடையே கிராமத்து வாழ்வு. ஒரு எளிய குடும்பத்தில் தாய் இறந்து தந்தை ஒரு கொலைக்கேஸில் மாட்டிச் சிறை சென்றுவிட தமக்கையாய் சகோதர சகோதரியுடன் இருக்கிறாள் அரியநாச்சி. தங்கையை வளர்த்தெடுத்திருக்கிறாள் தாயாய். ( அப்பா சிறை சென்றபோது இவள் திருமணம் நடந்ததா அதற்கு முன்னா இல்லை நடுவிலா என்ற விவரணைகள் இல்லை. ) பல்லாண்டுகள் கழித்துத் தாய்மை அடைந்திருக்கிறாள்.

அரியநாச்சியையும் அவள் கணவன் சக்கரைத் தேவனையும் நல்லவர்களென்ற பின்னணியில் ஊரே கொண்டாடுகிறது. காலங்கடந்து தாய்மை சுமந்திருக்கும் அவள் தன் தங்கையைத் தன் மைத்துனனுக்கே மணம் முடித்துத் தர எண்ண அவள் தாயின் பொம்சொத்து ( தாயின் சொத்து முழுதும் பெண்களுக்குத்தான் என்ற வழக்கப்படி ) மகள்களுக்கு, அதுவும் ஒரே வீட்டுக்கே போய்ச் சேரும் என தம்பியின் மனைவி குமராயி போர்க்கொடி தூக்குகிறாள். கணவனைத் தூண்டிவிட்டு அவன் சகோதரியைத் தன் சகோதரனுக்கே மணம் முடித்துக் கொள்ள எண்ணுகிறாள். இதனால் ஏற்படும் இடர்களே கதையாகி உள்ளன.

கருப்பையாவை மாயழகியும் விரும்புகிறாள் என்பது அவளின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் நமக்கும் புலனாகிறது. ஆனால் அரியநாச்சியின் மைத்துனன் சோலை முடிவில் தேவையில்லாத சொற்களை உதிர்க்க நான்கு இறப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பிள்ளை பெற்ற அரியநாச்சியின் உக்கிரம் வெருட்டுகிறது. ஆனால் எந்தப் பகையும் கோபமும் இல்லாமல் ( வெள்ளாங்குளத்து வம்சம் அழிந்து போனதற்காக வெள்ளையத்தேவன் வம்சத்தைக் காவு வாங்கி )  வள்ளி அத்தை ஏன் தன் அண்ணன் மகனான பாண்டியைக் கொல்ல வேண்டும் ?. 

தன் இரு மகள்களும் தாலி அறுத்தது தெரியாமல் வருகிறார் வெள்ளையத்தேவன். அவர் மருமகளுக்கும் இதுதானே நேர்ந்தது, அதைக் குறிப்பிடவில்லையே ஆசிரியர் கதையில். இதுபோல் தீராத முடிச்சுகள் கதை எங்கும் ஏராளம்.  

பெண்களை மையக் கதாபாத்திரமாக்கி இருப்பது மட்டுமல்ல . துணைக்காகக் காவு வாங்கும் பெண் கதாபாத்திரம், தெய்வப் பெண்களும் அந்த ஊர் ஆண்கள் போலவே சினத்தை வேரறுக்க முடியாதவர்கள்தான் எனக் காட்டியிருப்பது சிந்திக்கத்தக்கது.

நூல் :- அரியநாச்சி
ஆசிரியர் :- வேல. இராமமூர்த்தி
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
விலை:-ரூ 150/-

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...