எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஆற்றைக் கடப்போம் ...சில புகைப்படங்கள்.

ஆற்றைக் கடப்போம்.! ஆற்றலோடு கடப்போம்.!! ***************************************************

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது.

காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும் நதியை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா.. உங்கள் பாடு என்ன கவலை ஆற்றைப் பேருந்தில் கடந்திருப்பீர்கள் , பரந்து விரிந்த அந்த ஆற்றில் எப்போதோ ஒரு முறை இறங்கி ஒரு முங்கு போட்டிருப்பீர்கள். அல்லது உங்கள் பங்குக்கு கழிவுகளை அதில் கொட்டி விஷமாய் ஆக்கி இருப்பீர்கள். பெண்களையும் அப்படித்தானே கடக்கிறீர்கள். தேவைக்கு உபயோகப்படுத்தி பின் பகடைக் காய்களாக. உடமைப் பொருட்களாக, பல நூற்றாண்டுகளாக.
உங்கள் இறுகிய பார்வையில் அவளை முடக்குகிறீர்கள். அல்லது அன்பால் முடங்க செய்கிறீர்கள். அவளைப் பற்றி வரையறை வைத்திருக்கிறீர்கள். இன்னது செய்யலாம் இன்னது கூடாது.. இப்படி இருக்கலாம் இப்படிக் கூடாது என்று. அதில் உங்கள் தோழிகளுக்கு சில சலுகைகள் இருக்கலாம். மகளுக்கும்கூட ஆனால் மனைவிக்கு அல்ல.இத்தனை உணர்வுகளையும் மேலெழுப்பியது அந்த நாடகம். சீதை.. அவளுக்கு என்னென்ன அடிக்கோடிட்டு வைத்திருக்கிறது இந்த சமூகம் அல்லது நீங்கள்.அவள் தசரதனின் மகள், ராமனின் மனைவி. லவ குசர்களின் தாய். வில்லொடித்த காரணத்துக்காக ராமனுக்கு வாக்கப் பட்டவள். அவன் கானகம் சென்றபோது உடன் செல்லவும் விரும்பியவள். ராவணன் கவர்ந்த பின் மாசு பட்டவளாக தீக்குள் நுழைந்து வரப் பணிக்கப்பட்டவள். பின்னும் யாரோ ஒருவனின் சந்தேகத்துக்காக கானகத்துக்கு கர்ப்பிணியாக இருந்தபோதும் அனுப்பப்பட்டவள்.

ஆண்களின் ராஜ்யம் ராம ராஜ்யம் எனப் புகழப்படவேண்டி ஒரு பெண் இத்தனை சின்னா பின்னங்களுக்குட்படுத்தப்பட்டு. என்ன சொல்வது.
நாடக ஆரம்பத்தில் ஆற்றை எம்ஜியார் ஜானகி கல்லூரி மாணவிகள் உருவகப் படுத்தும் போது அவர்கள் கரங்கள் ஆறு போல உருமாற்றமான அற்புதம் நிகழ்ந்தது. அதில் குழந்தைகள் போல சீதையைப் போல நாமும் முங்கினோம். மூழ்கினோம். ஒரே ஆனந்த வாரிதான். சீதை தன்னை ராமன் கானகம் அனுப்பும் தேரில் வரும்போது கண்ட காட்சிகளை நாமும்கண்டோம்.. அந்த ஆற்றை அதன் கரைகளை. அந்த புற்களை. அதில் நீந்தும் அழகு மீன்களை. தென்றல் காற்றை. சிற்றலைகளோடு மோதும் கரைகளை .. கொஞ்சம் கொஞ்சமாக அவள் தன்னிலை உரைக்கும் போது தெரிந்தது அந்த ஆற்றில் நாம் மேல் காணும் சிற்றலைகளின் பின் உள்ள எரிமலை.. அதன் கொந்தளிப்பு. அந்த ஆற்றை வேண்டுமட்டும் மாசு படுத்திய மனித தேவைகள், அதன் பின் உள்ள அரசியல் எல்லாம் கரைக்க முடியாத ப்ளாஸ்டிக் குப்பைகள் போல மிதந்தபடி.. அங்கங்கே செத்த மனித உடல்களையும் சுமந்தபடி.நீ யார் என கேட்கிறார்கள் அறியாதோர்கள்.. அவள்தான் ஜென்ம ஜென்மமாக பகடைக்காயாக பயணப்பட்டுக் கொண்டிருப்பவள் என தெரியாமல்.. அதற்கு அவள் தான் சீதை என்றவுடன். தசரதன் மகளா, ராமன் மனைவியா, ரவிவர்மா ஓவியத்தில் இருப்பவளா. என.. ஒவ்வொருவருக்கும் ஒருவர் பற்றிய தவறான மதிப்பீடுகள் இருக்கின்றன அவை பிம்பங்கள் வாயிலாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என தோன்றுகிறது.. அவள் சொல்கிறாள் என்னை ஒவ்வொர் வரைமுறைக்குள்ளும் அடக்காதீர்கள் என.

இந்த பிம்பங்களுக்குள் எல்லாம் அடங்காதவளும் நான்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எல்லாமும் நான்தான். அது மட்டுமல்ல ராமனால் அவமானப்பட்ட தாடகையும் நான்தான். அவனது அம்புக்கு இரையான தவளையும் நான்தான். நான் நான் மட்டுமல்ல நான்தான் நீங்கள் என அவள் தான் யாரெனக் கூறும் கட்டத்தில் ஒரு விதிர்ப்பு ஏற்பட்டது.இன்றைய நாமும் அவள்தான் .. அவளும் நாம்தான். என்ன சுதந்திரம் பெற்றோம். ஒன்று அராஜகமாய் அடக்கப்படுவது அல்லது அன்பால் அடக்கப்படுவது. இப்படி இருந்தால் போதும் என புகட்டப்படுவது . நம் வரையரைகளை நாமே வரைந்து நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்வது , நம்மால் இது மட்டும்தான் முடியும். இப்படித்தான் இருக்க வேண்டும் . அப்போதுதான் இந்த சமூகம் நமக்கு மதிப்பளிக்கும் என நாம் நேர்மையாகச் செய்ய விரும்பிய காரியங்களை கூட சமூகத்துக்காகவும். குடும்பத்துக்காகவும் முடக்கிப் போடும் மன நிலைக்கு வந்திருக்கிறோம். நாம் என்ன பகடைக் காய்களா. நம் சுதந்திரத்தை நேர்மையான வழியில் நாம் பயன்படுத்தி முன்னேறி நாம் யார் என நிரூபிக்கமுடியாதா.
நிச்சயம் முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாடகம் உணர்த்தியது. எம்ஜியார் ஜானகி கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகள் தங்கள் நாடகத்துறை ஆசிரியை மற்றும் வெளி ரங்கராஜன் அவர்கள் இயக்கத்தில் இந்த நாடகத்தை நிகழ்த்திய போது அம்பையின் ஆற்றல் மிக்க சீதையை வெளிக்கொணர்ந்த கோடி சூர்யப் பிரகாசம் அவர்கள் கண்களில் மின்னியது. அதை நமக்கும் வழங்கினார்கள் அவர்கள்.. கைகளைக் கோர்த்தபடி சொன்னார்கள் ஆற்றைக் கடப்போம் என.. பெண்ணைப் பெண்ணே உணர வைத்த அரிய முயற்சி இது. அன்பு பாசம் தாய்மை எல்லாவற்றுக்கும் உரியவள் பெண். அவளுக்கும் சில நேர்மையான ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் உண்டு.ஆம் நானும் சொல்ல விழைகிறேன். நம் நேர்மையான முயற்சிகளோடு கடமைகள் செய்தபடியும் நம் உரிமைகளுக்காக நாமும் விடாது பாடுபட்டுப் பெறுவோம். அந்த ஆறு என்பது நம் முன்னே இருக்கும் தடை அல்ல.. அது நாம் தான் .. நம் எண்ணங்கள்தான். நம்மால் முடியாது என்ற எண்ணங்கள்தான். நம் எண்ண ஆற்றிலே எவ்வளவு புனிதமோ அவ்வளவு குப்பைகளையும் இந்த சமூகம் சேர்க்கிறது. அதை எல்லாம் விலக்கி நாமும் நம் ஆற்றைக் கடப்போம்.! .. அதுவும் ஆற்றலோடு கடப்போம்..!!டிஸ்கி:- இன்றைய நன்றிகள்.. என் படைப்புக்களை வெளியிட்ட பத்ரிக்கைகளுக்கு. " குமுதம், விகடன், குங்குமம், கல்கி, அவள் விகடன், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சூரியக் கதிர், நம் தோழி, குங்குமம் தோழி, தேவதை, மல்லிகை மகள், யுகமாயினி, புதிய 'ழ', பூவரசி, சமுதாய நண்பன், இன் அண்ட் அவுட் சென்னை, ஆஸ்த்ரேலியத் தமிழ் நண்பன்  "மெல்லினம்". குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் , இந்தியா டுடே".


ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு குழந்தை இருக்கிறாள். அப்பா சொல்லைக் கேட்பவள். சகோதரி இருக்கிறாள் சகோதரன்களின் நலனுக்காக பிரார்த்திப்பவள், ஒரு மனைவி இருக்கிறாள் மாங்கல்ய பலனுக்காக விரதம் இருப்பவள், ஒரு தாய் இருக்கிறாள். குழந்தைகளின் நலம் வேண்டி அல்லும் பகலும் அனவரதமும் தன்னைத் தொலைப்பவள். இன்னும் மாமியாராகியும் விட்டுக் கொடுப்பவள் என..


-- மீள் பதிவு.


4 கருத்துகள்:

 1. கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
  ஆற்றைக் கடப்போம் ஆற்றலோடு கடப்போம்
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான பகிர்வு. நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...