எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 மே, 2016

சாட்டர்டே போஸ்ட். ஆணென்ன பெண்ணென்ன , கார்ப்பரேட் யுகம் பற்றிக் கருணாகரன்.

பெ. கருணாகரன் 
புதிய தலைமுறையின் இணையாசிரியர், அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின என்ற நூலின் ஆசிரியர், இன்னும் சில கவிதை, கதை , கட்டுரை நூல்கள் எழுதியவர் , பல்வேறு இலக்கிய விருதுகள்  வாங்கியவர் என்பதையெல்லாம் விட முகநூலில் எனது மதிப்பிற்குரிய நண்பர் கருணாகரன்.  இவரது தினப்படி போஸ்டையும் கர்ணாவின்  ( மழைக் கவிதை ரொம்ப ஸ்பெஷல் ) கவிதைகளையும் அவ்வப்போது படிப்பதுண்டு. சினிமாப்பாடல் மெட்டுகளில் உடனடியாகப் பாடல் இயற்றும் இன்ஸ்டண்ட் கவிஞர் !

சிரியஸ் மற்றும் சீரியஸான விஷயங்களையும் அநாயாசமாகத் தொட்டுச் செல்லும் இவரது எழுத்து. பதின் பருவப் பிள்ளைகளின் பிரச்சனையாகட்டும், இணைய உலகப் பயன்பாடாகட்டும் இயற்கைப் பேரிடராகவோ, அரசியல் அக்கப்போராகவோ இருக்கட்டும் இன்னும் பலப்பல விஷயங்களையும் தன்னுடைய பாணியில் தருவதில் தனித்துவமிக்கவர்.  மிக எளிமையானவர், மிக இனிமையான எழுத்துக்கும் சொந்தக்காரர்.  நேர்பட உரைப்பதில் சிறந்தவர்.

இவரிடம் நமது வலைத்தளத்துக்காக சாட்டர்டே போஸ்ட் ஒன்று எழுதித்தரும்படிக் கேட்டவும் அரசியல் நிலவரங்களால் அரக்கப் பரக்க வேலை செய்து கொண்டிருக்கும் இந்நிலையிலும் நட்புக்காக இதை எழுதிக் கொடுத்துள்ளார். மிகச் சீரிய சிந்தனை ஆனால் முடிவில் எனது கருத்தையும் சொல்கிறேன் கருணா.

/// கருணா, இன்று உங்கள் சிந்தனையில் இருக்கும் ஒரு விஷயத்தை முகநூலில் பதிவிடாமல் எனக்காக என் வலைத்தள சாட்டர்டே போஸ்டுக்குத் தாருங்கள். இப்பவே. :) ///

நாலு பாரா போதும் ப்ளீஸ் எனக் கேட்டுக் கொண்டவுடன் எட்டுப் பாராவே எழுதி அனுப்பி விட்டார். நன்றி கருணா.மாறுதல் வரட்டும்! 

ஆண் என்பதில் கர்வம் கொள்ள என்ன இருக்கு? 

ஆணாய்ப் பிறந்ததில் அந்த ஆணின் முயற்சிகள் ஏதும் இல்லை. அது குரோமோசோம் வித்தை. ஓர் ஆணை உருவாக்கிய உயிரணுவானாலும் பெண்ணை உருவாக்கியதானாலும் இரண்டுமே வீரியமுள்ளவைதான். அந்த வீரியத்தால்தான் சக போட்டியாளர்களை அனாயசமாய் வென்று பெண்ணாய் உயிர் தரித்தது அந்த உயிரணு. சுயமுயற்சியால், உழைப்பால் இங்கு யாரும் ஆணாய் பிறந்து விடவில்லை. அதனால், ஆணென்று கர்வம் கொள்வதில் அர்த்தமில்லை. அந்த கர்வம் ஒரு தீண்டாமை போன்றது. மனிதாபிமானமற்றது. இங்கு ஆண், பெண் உடல் பேதங்கள் இனவிருத்திக்காக இயற்கை ஏற்படுத்திய ஏற்பாடு மட்டுமே. ஆனால், அதற்கு மாறாக பெண்ணடிமைத்தனம் என்னும் பிற்போக்கு கருத்தாக்கத்தின் பின்னணியில் ஊறிக் கிடக்கிறது ஆணாதிக்க அரசியல். 


பெண்ணின் அடங்கி நடக்கும் மனோபாவங்கள் ஏற்படுத்தப்பட்டவை. அது பல தலைமுறைகளாக அவளது மரபணுக்களில் குறியீடுகளாக வலியுடன் வலிந்து பதியப்பட்டவை. சம்பாத்தியம் ஆண்களுக்கென்றும் வீட்டு நிர்வாகம் பெண்களுக்கென்றும் பிரிக்கப்பட்ட ஓரவஞ்சனை பாகப் பிரிவினை அது. அந்த ‘மூலப் பத்திரத்தை’ வைத்துக் கொண்டே காலத்துக்குப் பொருந்தாமல் இன்னும் பாத்தியதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் இனவிருத்தி உயிரினம் மட்டுமே என்று பத்திரம் எழுதி வைத்தது நிலவுடமைச் சமுதாயம்.

தன் சொத்து, தன் உயிரணுக்குப் பிறந்த சொந்த வாரிசையே சேர வேண்டும் என்கிற ஆண்களின் சுயநல அரசியலின் ஆயுதமாகவே கற்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் துணை ஆயுதங்களாக நால்வகைக் குணங்களும் சேர்க்கப்பட்டன. பெண்கள் வீட்டு வேலை, பாலுறவு, குழந்தை வளர்ப்பு என்கிற சிறிய சட்டகத்துக்குள் அடைக்கப்பட்டனர். அவர்களது கல்வியுரிமை மற்றும் வெளியுலகத் தொடர்புகள் பறிக்கப்பட்டன. கற்புணர்வு பெண்களின் பெருமை என்றும் அவள் தெய்வம் என்றும் போதிக்கப்பட்டன. பொய்யாய்ப் புகழப்பட்டன. 

ஒரு பெண்ணை இனவிருத்தி இயந்திரமாக உருவாக்கும் பொறுப்பு அவளது அம்மாவிடமே விடப்பட்டது. அதில் பிசகு ஏற்பட்டால் ‘என்ன பெண்ணைப் பெத்து வைச்சிருக்கே? இதுதான் பெண்புள்ளையை வளர்க்கிற லட்சணமா?’ என்று அந்தத் தாயே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டாள். அந்த அவச்சொல்லுக்கு அஞ்சியே தன் மகளையும் ஒருதாய் சமூகத்துக்கு அஞ்சி, அச்சில் வார்க்கப்படும் பொம்மையாக வளர்க்க வேண்டிய அவல நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஒரு பெண் புத்திசாலித்தனமாகப் பேசி விட்டால், ஒரு பெண்பிள்ளை பேசும் பேச்சா இது என்று அவள் அடக்கப்பட்டாள். இது கடந்த கால பெண்ணடிமைத்தனத்தின் சூட்சும வரலாற்றின் சுருக்கம். 

இன்று காலம் மாறிவிட்டது. என்னதான் வளர்ந்து விட்டோம் முன்னேறிவிட்டோம் என்று கூறிக் கொண்டாலும் இன்னும் பெண் சமத்துவத்தில் பல படிகள் நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்பதே வேதனை நிஜம். இன்று நிலவுடைமைச் சமுதாய அமைப்பு மாறிவிட்டது. கார்ப்பரேட் யுகம் காலூன்றி விட்டது. சகலத் துறைகளிலும் பெண்களும் பணிபுரியத் தொடங்கிவிட்டனர். அவர்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் பழைய ஏற்பாடுகள் சமூகத்தின் பல இடங்களிலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பெண் சம்பாதித்தாலும் பல இடங்களிலும் அதைச் செலவழிக்கும் முழு உரிமையும் ஆண்களுக்கே. ஏன் இந்த நிலை? இதற்குக் காரணம் யார்? நாமேதான். சமூகம் என்னும் பொதுப்புத்திப் பார்வைக்குப் பழகி குழந்தை வளர்ப்பில் நாமும் கடிவாளம் பூட்டப்பட்ட குதிரைகளாகவே ஓடப் பழகிவிட்டோம். 

பெண்ணடிமைத்தனம் என்பது வெளியிலிருந்து வருவதில்லை. அது வீட்டிலிருந்தே தொடங்குகிறது. அது குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் என்கிற பேதம் காட்டுவதிலிருந்தே வேர் பிடிக்கிறது. ஆண் குழந்தைக்கு ஓர் அணுகுமுறை. பெண் குழந்தை என்றால் இரண்டாம்பட்சமான அணுகுமுறை. பெரும்பாலான இடங்களில் உணவு, உடை போன்ற பல விஷயங்களில் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தப் பாகுபாட்டிலேயே வளர்கிறது இளைய தலைமுறை ஆண் குழந்தைகளின் மனதில் பெண் குறித்த மலிவான எண்ணம். தன் சகோதரியை பெற்றோர் நடத்தும் விதத்திலிருந்தே ஒரு பெண் அடக்கியாளப்பட வேண்டியவள் என்கிற முடிவுக்கு வருகிறான் ஓர் இளைஞன். ஒரு பெண் தனக்குக் கீழேதான் என்கிற அதிகாரச் சவுக்கை அப்போதுதான் அவன் கைகொள்கிறான். 

பெண் குழந்தைகளைப் பெற்றோர் ஓர் உயிராக இல்லாமல் தங்கள் உடைமையாகவே பார்க்கின்றனர். தான் உடுத்தும் உடையிலிருந்து திருமணம் செய்து கொள்ளும் கணவன்வரை பெற்றோரே தீர்மானிக்கும் நிலைக்கு நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறாள். அவளுக்கு எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் உரிமை இல்லை. அவள் உடல் அவளுடையதில்லை. அவள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா விஷயங்களும் ஆண்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தங்கள் வீட்டில் தன் சகோதரிக்கு கொடுக்கப்படும் இரண்டாம்பட்ச அணுகுமுறைதான் வளரும் ஆண்களின் மனோபாவத்தில் படிகிறது. வெளியில் பெண்களைக் காணும்போது அவர்களை மதிக்காத போக்கும் பெண் அடக்கியாள வேண்டியவள் என்கிற மமதையும் அவர்களுள் உருவாகிறது. இந்த மனோபாவம் தான் சமூகத்தில் பலாத்காரக் குற்றங்கள் நிகழவும் காரணமாகிறது. 

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களின் மனோபாவம் பெண்களை மதிக்காததன் உளவியல் சிக்கலாலேயே நிகழ்கிறது. பெண்களை மதிக்கும் மனோபாவம் உள்ளவன் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதில்லை. எனவே குழந்தை வளர்ப்பிலும் அணுகுமுறையிலும் பெரிய அளவில் இங்கே மாறுதல் தேவை. அக்கம் பக்கத்துக் குழந்தையாக இருந்தாலும் நம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் என்கிற பாகுபாடு இல்லாமல் குழந்தைகளை சமமாக அணுகுவோம். அதுதான் வளரும் ஆண் குழந்தைகளின் மனதில் பெண்களைப் பற்றிய உயர் எண்ணங்களைத் தோற்றுவிக்கும். அதுவே பெண்கள் மீதான ஓர் ஆரோக்கிய பார்வையை உருவாக்கி அடுத்த தலைமுறையின் மனோபாவங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தும்.


டிஸ்கி:- மிக அருமையாகச் சொன்னீர்கள் கருணா. இப்போது எதற்கும் முடிவெடுக்கும் விஷயம் ஆண் வசமுமில்லை. குடும்பத்தார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆணும் சமூகக் கட்டமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றான். இன்றைய பேதைகள் அவர்கள்தான்.

ஆனால் நாணயத்துக்கே இரண்டு பக்கம் இருக்கும்போது இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் இதன் இரண்டாம் படி நிலையையும் நாம் காணவேண்டும். பெரும்பாலான கணவர்களின் கையில்தான் மனைவியரின்  ஏடிஎம் கார்டு இருக்கிறது. ஆனால் ஒரு சில கணவர்கள் மனைவிகளின் சம்பளத்தை எதிர்பார்ப்பதில்லை. பூரண சுதந்திரம் அளித்தாலும் ஓரிரு விஷயங்களில் கூட விட்டுக் கொடுத்துப் போகாத மனோபாவம் பெண்களிடம் பெருகி வருகிறது. 

ஆணாதிக்கம் வேண்டாம் ஆனால் பெண்ணாதிக்கமும் வேண்டாம்தானே. கார்ப்பரேட் யுகத்தில் இதன் அடுத்த கட்டங்களையும் தெளிவுடன் கடக்க இருவருக்கும் ஆண்டவர் அருள் புரிவாராக :)

மிக்க நன்றி கருணா பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாகக் குரல் கொடுத்தமைக்கு. நம் சமூகக் கட்டமைப்பு தாண்டி சகல விதமாகவும் பெண்ணைத் தன்னைவிட உயர்வாக மதித்தாலும் பெண்ணியம் பேசாமலே பாதிக்கும் - சம்பாதிக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சார்பாகவும் குரல் எழுப்பும் நாள் விரைவில் வரும் என்று தோன்றுகிறது. !!!

4 கருத்துகள்:

 1. ஆணாதிக்கம் வேண்டாம் ஆனால் பெண்ணாதிக்கமும் வேண்டாம்தானே. கார்ப்பரேட் யுகத்தில் இதன் அடுத்த கட்டங்களையும் தெளிவுடன் கடக்க இருவருக்கும் ஆண்டவர் அருள் புரிவாராக :) - முத்தாய்ப்பான சொற்றொடர்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் அறிமுகம் அமர்க்களம். ரசனையோடு வெளியிட்டுள்ளீர்கள். நன்றி...

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி பெ. கருணா. :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...