எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். வல்லி சிம்ஹன். இசையோடும் இசைபடவும் வாழ்தல்.

 முகநூல் வலைத்தள நட்புகளில் அனைவருடனும் நாம் பழகினாலும் சிலர் மட்டுமே சிறப்பிடம் பிடிப்பார்கள். ஏனென்று தெரியாது பார்த்த முதல் நாளே பாசமாகி விடுவோம். அந்த வகையில் எனக்குப் பிடித்தவர் வல்லிம்மா.

வல்லி சிம்ஹன் என்ற பெயரில் என் வலைத்தளத்தில் பின்னூட்டமிட்டிருந்தாலும் முகநூலில் அறிமுகமானபின்தான் அவரோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அன்பு, அறிவு, இன்சொல், பாந்தம், பாசம், பரிவு, கம்பீரம், தாய்மை இவை எல்லாவற்றும் அர்த்தம் கொடுத்தவர். இன்னொரு அம்மா போல எல்லா வலைப்பதிவர்களையும் பாசத்தோடு விளிப்பார். கேட்கும்போதே( படிக்கும்போதே )  மடியில் தலை சாய்ந்து படுக்கும் குழந்தையாகிவிடுவோம். 


சிம்மா அப்பாவைப் பார்க்க இயலாது போய்விட்டது. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது வலையுலக மாநாட்டுக்குப் போய் இருந்தால் பார்த்திருக்கலாம். அப்போது நான் கும்பகோணத்தில் இருந்ததால் செல்ல இயலவில்லை. ஹ்ம்ம். சில விஷயங்களில்  நமக்கு அதிர்ஷ்டம்  வாய்ப்பதில்லை. அதில் இதுவும் ஒன்று. அம்மாவையாவது இனி வரும் சந்தர்ப்பங்களில் பார்க்கப் போக வேண்டும். ( சீனா சார் சொன்ன மூன்றாவது வலையுலக மாநாட்டுக்கு மதுரைக்கு வந்தார்கள் என்றால் போய் அனைவரையும் பார்க்கலாம் என்றிருக்கிறேன். )

அவர்கள் நாச்சியார், புகைப்படப்பயணங்கள் என்ற இரு வலைப்பதிவுகளில் எழுதி வருகின்றார்கள். அதில் நாச்சியாரில் இடுகைகள் தெய்வீகம்/ஆன்மீகம் சார்ந்து பலவும் இயற்கை, வீடு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிப் பலவும் இருக்கும் ஆனால் அநேக இடுகைகளில் ஆங்கிலப் பாடல்கள் இருக்கும். அதுதான் என்னை அதிசயிக்க வைத்த விஷயம்.

முகநூலிலும் இவர்கள் பகிரும் ஆங்கில/ ஹிந்தி/ தமிழ்ப் பாடல்கள்தான் என்னை இக்கேள்வி கேட்கத் தூண்டியவை. எனவே  அம்மாவிடம் இப்படி ஒரு கேள்வி.. :) (அதிலும் ஆங்கிலப் பாடல்கள் பகிர்வு வலைத்தளத்தில் அதிகம்.)

//// ஆங்கிலப் பாடல்கள் விரும்பிக் கேக்குறீங்களே.. உங்களுக்குப் பிடிச்ச ஆங்கிலப் பாடகர் யார். ? பாடல் எது. ? ஏன். ? ///


அன்பு தேன்,
மிக நன்றி.இதோ  என்  எண்ணங்கள்.

//// ஆங்கிலப் பாடல்கள் விரும்பிக் கேக்குறீங்களே.. உங்களுக்குப் பிடிச்ச ஆங்கிலப் பாடகர் யார். ? பாடல் எது. ? ஏன். ? ///

எனக்கு முதன் முதல் ஆங்கிலப் பாடல்கள் அறிமுகம் ரேடியோ சிலோனின் ஆங்கில பாப் மியூசிக் சானல்தான்.  காலையில் 6 மணிக்கு  இன் த மூட்  என்று பற்பல வாத்திய இசையோடு தொடங்கும் நிகழ்ச்சி.மதியம் நேயர் விருப்பம். மதிய உணவுடன் இசை.  பிறகு  நேயர் விருப்பம். பல பாடகர்கள் அறிமுகமானது இந்த நிகழ்ச்சியில் தான்.ஜிம் ரீவ்ஸ்,ஃப்ரான்க் சினட்ரா,நாட் கிங் கோல்,ரிக்கி நெல்சன்,க்ளிஃப் ரிச்சர்ட்,பாட் பூன்,பெர்ரி கோமோ,டீன் மார்டின்,பிங் க்ராஸ்பி,சந்டானா இன்னும் பலப்பல   இசைப்பாடகர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மனதைக் கவருவார்கள்.    நவரசமும் இருக்கும். 

இது பதின்ம வயதில் ஆரம்பித்தது.  அப்போது வானொலி மட்டுமே   எண்டர்டெயின்மெண்ட்   கொடுக்கும் சாதனம். ஆங்கிலம் முடிந்ததும் தமிழ்  சிலோனுக்குப் போய்விடுவேன். இல்லாவிட்டால் வானொலிக்குக்காக அப்பாவும் அம்மாவும் காத்திருப்பார்கள். அவர்கள் இசை,செய்தி இவைகள் தொடரும். அப்பொழுதாவது நான் என் கல்வியத் தொடரவேண்டுமே.அந்தக் காரணத்துக்காக மனமில்லாமல் நகர்ந்துவிடுவேன்.          

பரீட்சைக்குப் படிக்கும் போது கூட"  மானல்லவோ கண்கள் தந்தது   ""- பாடல் கேட்டுக் கொண்டேதான்   வாசிப்பு தொடரும். பெற்றோருக்கு  ஆங்கில இசை அவ்வளவாக ரசிக்காது. அதனால்   வானொலியின் அருகில் நின்று கொண்டே மெல்லிய சப்தத்தில் கேட்கும் வழக்கம்..ஒருசமயம் பக்கத்துவீட்டில் குடியிருந்த ஆஃபீசர்  ரெகார்ட் ப்ளேயர் வாங்கிவிட்டார்.  அவரிடமிருந்து   நிறைய    இசைக்கருவிகள் பற்றித் தெரிந்துகொண்டேன்,. ஆந்திராவிலிருந்து வந்த பெண்மணி அவர். நானும் என் தம்பியும் அவர் வீட்டில் இசை கேட்க அனுமதிப்பார். ஹடாரி  cinema வந்த புதிது.அரைமணி நேரம் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவோம். அவர் மணமாகாமல்  தனியாக இருந்தவர், நல்ல படிப்பு.நல்லவேலை..என் திருமணம்  முடிந்த சிலநாட்களில் அவர் திருமணமும்  நடந்ததாக  அம்மா எழுதி இருந்தார்.                                               
          

 /// ஜாஸ் , பாப், ராக் இதுல உங்களுக்குப் பிடிச்சது எது.. அதன் தனித்தன்மை என்ன ?//

ஜாஸ் உள்ளத்தை மயக்கும். அப்போது விகடனில் இங்கிலாந்தின் எட்வர்ட் இளவரசரின் கதை ,சாவி எழுதியதா,மணியனா தெரியவில்லை.அதில் ஜாஸ் இசையைப் பற்றி சில வரிகள் வரும்.1961 என்று நினைக்கிறேன். அந்தப் பெயரே என்னக் கவர்ந்தது. மேலும் திண்டுக்கல்லில் ஜாஸுக்கு நான் எங்கே போவேன். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதில் வந்த ஜாஸ் பிடித்தது. பிறகு சென்னைக்குப் படிக்க வந்தபோது மாமாவை நச்சரித்து மவுண்ட் ரோடில் உள்ள ஹெச் எம் வி கடையில் சில ரிகார்டுகள் கேட்டேன்.வாங்க அனுமதி கிடைக்கவில்லை..

ராக் மியூசிக் கணவர் வந்த பிறகு அறிமுகம்.எல்லாம் அந்த நாள் கதை. இப்போதைய ராக் இல்லை. எல்விஸ் ப்ரஸ்லி,ஜெயில் ஹவுஸ் ராக், என்று பலவித வடிவங்களில் ராக் வந்தாலும் மனம் லயிக்கவில்லை,. ராக் இசையிலும் மென்மையாக வரும் சிலபாடகர்களின் பாடல்கள் நன்றாக இருக்கும். பெயரே ராக். அதில் எப்படி மென்மை எதிர்பார்க்கமுடியும் இல்லையா. அது என் வாழ்வில் இரண்டாம் இடம் தான். 

பின் பாப் இசை..இவையே என்னை மிகவும் ஆக்கிரமித்தன. காதல்,மோதல்,பிரிவு எனும் ப்ளூ மியூசிக் இன்னும் பலவகை. எல்லாமே பிடித்து,இவைகளைப் பிடித்த கணவரையும் பிடித்தேன். அவருக்கு ஹார்மோனிகா வாசிக்கத் தெரியும். மும்பையில் வளர்ந்ததால் இந்திப் பாடல்கள் அத்துப்படி. எனக்குத் தெரியாத ஆங்கிலப் பாடகர்களை அறிமுகம் செய்தார் எங்கள் இசை வெள்ளம் பெருகியது. புது வானொலி,புது இசைத்தட்டுகள்,அதைக் கேட்க ரெகார்ட் சேஞ்சர். ஆறு இசைத்தட்டுகளை வைத்துவிட்டு நம் வேலையைப் பார்க்கலாம். அதுவும் எல் பி என்றால் முக்கால் மணி நேரத்துக்கு ஓடும். வீடெங்கும் இசை. குழந்தைகளும் அதைக் கேட்டே வளர்ந்தார்கள்... சிங்கத்துக்கு மென்மையான, கொஞ்சம் சோகம் சாயலடிக்கும் இசை பிடிக்கும்.. எனக்குத் துள்ளி யோடும் இசை மிகவும் பிடிக்கும். இசைத்தட்டின் இருபக்கங்கள் பார்த்திருக்கிறீர்களா. அந்தப் பழையகாலத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். இன்றைய இசை அவ்வளவு ஈர்ப்பதில்லை. செலின் டயான் அவருக்கு மிகவும் பிடிக்கும். ப்ரெட்டி வுமன்,ட்ரீம் லவர்,ரொமான்சிங் த ஸ்டோன், டாக்டர் ஷிவாகோ பாட்டு,காட் ஃபாதர் பாட்டு,ஆண்டி வில்லியம்ஸ்,ஜிம்ரீவ்ஸ் இவர்களெல்லாம் அவருடைய பிடித்தம். இசையோடு வாழ்ந்தோம் இசைபடவும் வாழ்ந்தோம் என்று முடித்துக் கொள்ளட்டுமா.

அன்புடன்,

ரேவதி.நரசிம்ஹன்.

டிஸ்கி:-  மிக்க நன்றி வல்லிம்மா. உங்களோடு ஒரு இசைப்பயணம் சென்று வந்ததுபோலிருந்தது. நல்ல ரசனை, நல்ல சுவை. உங்களுக்கும் சிம்மா அப்பாவுக்கும். எங்கிருந்தாலும்  நீங்கள் பாடல்கள் கேட்கும் நேரம் உங்களுக்கருகே அவரும்  இருந்து கேட்டுக்கொண்டுதான் இருப்பார் அம்மா.

இசையோடும் இசைபடவும் வாழ்ந்த வாழ்வு பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி. 

27 கருத்துகள்:

  1. வல்லிம்மாவைப் பற்றி நீங்கள் எழுதியிருந்த அத்தனையும் மிகமிகச் சரி தேனக்கா. சிங்கம் ஸாருடன் ஒரு முறை பார்த்துப் பேசியிருந்தாலும் லைஃப்லாங் அவரை மறத்தல் இயலாது. அப்படி ஒரு மனிதர். வல்லிம்மாவின் இசை ரசனை நல்லாத் தெரிஞ்ச விஷயம்னாலும் இப்படி சுவாரஸ்யமா இசை அரட்டை அடிக்கறது நல்லாருக்கு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வல்லிம்மா... எட்வர்ட் இளவரசரைப் பற்றிய கதை சாவி ஸார் எழுதியது.

    பதிலளிநீக்கு
  3. வல்லிம்மா ஆங்கிலப் பாடல்கள் பலவற்றை ஷேர் செய்து நானும் பார்த்திருக்கிறேன். எனக்கு ஆங்கிலப் பாடல்கள் பரிச்சயமில்லை. ரொம்ப நாட்களுக்கு முன்னால் சுஜாதா கதை படித்து ஜான் லென்னன் அப்புறம் இன்னும் யாரோ ஒரு பெயர் கேட்டு மதுரை ரெகார்டிங் சென்டர்களில் மோதி இருக்கிறேன். அப்போது அறிமுகமாகி இருந்தால் நானும் ஆங்கிலமும் கேட்டிருப்பேனோ என்னமோ.. எனக்குத் தெரிந்த ஆங்கில இசை எல்லாம் ABBA வும் BONY M ம்தான்! :)))

    பதிலளிநீக்கு
  4. பழைய தமிழ்ப் பாடல்கள் பலவும் வல்லிம்மா ஷேர் செய்வார்கள். அதையும் பார்த்திருக்கிறேன். சில பாடல்கள் நான் கேட்டிருக்கக் கூட மாட்டேன். உதாரணமாக மாமியார் மெச்சிய மருமகள்!

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் வல்லிம்மாவைப் பற்றிச் சொன்னது அத்தனையும் நிஜம். ஃபோனில் பேசும்போது இவளவு அன்பாகப் பேச முடியுமா? அதுவும் முதல் முறையே..ஒரு நவராத்திரி சமயம் எனக்கு இவர்களிடமிருந்து ஃபோன் வந்து அவர்கள் என்னை (எங்களை) நவராத்திரிக்கு அழைத்தபோது மறுக்கவேண்டும் என்ற எண்ணமே வராமல் போனதற்கு அந்தக் குரலில் இருந்த அன்பும் பாசமும்தான் காரணம். அப்போதுதான் நான் சிங்கத்தையும் நேரில் பார்த்தேன்.இருவரிடமும் ஆசி பெற்றோம்.

    பதிலளிநீக்கு
  6. அன்பு தேன், அழகாகக் கொடுத்திருக்கிறீர்கள். என் எழுத்துப் பிழைகள் அதிகம். என் எழுத்தே என்னைப் பழைய நாட்களுக்கு அழைத்துப் போய் விட்டது.. இதுவரை என் இசைப் பைத்தியத்தைப் பற்றி எழுதியதே இல்லை இந்த நினைவுகளுக்கு உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். இப்போதும் பாடல்களைப் பதிவது என்னவரைப் பதிவில் இணைக்கத்தான்.பாடல்களை ரசிப்பதும் அவர் அருகில் செல்லத்தான். மிக மிக மிக் மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  7. அன்பு கணேஷ்,நல்ல நினைவுகளில் நீங்களும் இருக்கிறீர்கள். அவரையும் என்னையும் இவ்வளவு உச்சத்தில் வைத்துப் பாராட்டியிருப்பது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதுவும் தேனுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்கிறேன். சாவின்னு சொல்லி சந்தேகத்தைக் களைந்ததற்கு நன்றிமா.

    பதிலளிநீக்கு


  8. இசையோடும் இசைபடவும் வாழ்ந்த வாழ்வு பற்றிய அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  9. இசையோடு வாழ்ந்தோம் இசைபடவும் வாழ்ந்தோம்//
    அருமையாக சொன்னீர்கள் வல்லி அக்கா.

    தேனம்மை , வல்லி அக்கவிடம் ஜாலி கார்னர் மிக அருமை.
    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  10. இசையோடு வாழ்ந்தோம் இசைபடவும் வாழ்ந்தோம்.. வாசிக்கவே ஆனந்தமாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. எனக்கு இது எதுவுமே தெரியாது வல்லி. இதன் மூலம் உங்கள் இன்னொரு முகத்தை அறிமுகம் செய்து வைத்த தேனம்மைக்கு என் நன்றி. படித்துப் பார்த்து அசந்து போனேன். கொஞ்சம் பொறாமையும் வந்தது என்னமோ உண்மை. :)

    பதிலளிநீக்கு
  12. ஹைய்யோ!!!! வல்லியின் ஒவ்வொரு பதிலும் அட்டகாசம்!!!!!

    அவருடைய இசை அனுபவத்தை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி தேனே!

    பதிலளிநீக்கு
  13. அன்பு ஸ்ரீராம் ,உங்கள் வயசுக்கு ஏற்ற மாதிரி பானி எம் அப்பா கேட்டிருக்கிறீர்கள். தென் தமிழ்நாட்டில் இருக்கும் வரை சென்னை வாழொலி சரியாக எடுபடாது. திரைப்பாடல்கள் திருச்சி வானொலியில் ஒரு மணி இரண்டு மணிகளுக்கு மேல கேட்கமுடியாது. எனக்கோ புத்தகங்களூம் இசையும் இல்லாமல் இருப்பது கடினம்.அதனால் தான் இந்தப் பலவகை இசைப் பழக்கம். நானும் என் தம்பிகள் எல்லொருமே இசையின் அடிமைகள்தான்.தேனம்மை வழியாக இதைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி இராஜராஜேஸ்வரி. கடவுள் எனக்களித்த சந்தோஷங்களில் பெரும்பகுதி இசையும் என் கணவரும் ,குழந்தைகளும் கொண்டுவந்ததுதான். இங்கு வந்து படித்துக் கருத்திட்டதற்கு மிகவும் நன்றி மா.

    பதிலளிநீக்கு
  15. அன்பு கோமதி, உங்கள் குடும்பமும் இசைக் குடும்பமாச்சே. ஸாரும் நீங்களும் சேர்த்து வைத்திருக்கும் இசைத் தொகுப்புப் பற்றிக் கொஞ்சம் அறிவேன். அனைவரையும் அமைதியாக்குவது இந்த இசை ஒன்றால்தான் முடியும். அது பக்திப் பாடலோ,தாலாட்டோ.உங்கள் கருத்தைப் பகிர்ந்ததிற்கு மிக நன்றிமா.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ரிஷபன் ஜி. உங்கள் கருத்து எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது. நன்றி மா,

    பதிலளிநீக்கு
  17. அன்பு கீதாமா, தேனம்மையின் பல்முகக் கண்ணோட்டத்தில் நான் சிக்கியது ஒரு பெரிய வியப்பு. இசை பற்றிக் கேட்டதும் இன்னும் சந்தோஷம். ஒரு பொன் கொடுத்து ஆடச் சொன்னாளாம். நூறு பொன் கொடுத்து ஓயச் சொன்னாளாம்கிற கதை போல நானும் நிறையப் பக்கம் எழுதாமல் இத்தோடு நிறுத்திக் கொண்டேன் நல்ல வேளையாக. நீங்கள் அறியாத ரேவதியை இதில் கண்டிருப்பீர்கள்.:)) நன்றி மா.

    பதிலளிநீக்கு
  18. எனக்குத் தெரிந்த ஆங்கிலப்பாடல் பி ஓ ஒய் பாய் - பாயின்னா பையன் என்ற பழம் தமிழ் சினிமாப் பாடலும், மை நேம் இஸ் பில்லா பாடலும்தான்! என்னுடைய பையன் பான்வி ஜான்வி என்றெல்லாம் ஏதோ கேட்பான். ஏனோ ஆங்கிலப் பாடல்கள் கேட்கும் அளவுக்கு என்னுடைய ரசனை உயரவில்லை!

    பதிலளிநீக்கு
  19. வல்லிம்மாவின் ஆங்கில இசை ரசனை கண்டு அதிசயித்துப் போயிருக்கிறேன். என்ன அழகாக எழுதியிருக்கிறார். கணவரும் ஒத்த இசை ரசனையோடு அமைந்தது வரம். கடைசி வரிகள் மனத்தை அள்ளிக்கொண்டு போகின்றன. அருமை வல்லிம்மா.

    இப்படியொரு கேள்வியைக் கேட்டு அவர்களுடைய இசை ரசனை பற்றி நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  20. வரணும் துளசிமா.நாம் எல்லோரும் புத்தகமும் ட்ரான்ஸிஸ்டருமாகத் தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன். வாழ்வின் பக்கங்கள் அட்டகாசமாக அமைகின்றன.

    பதிலளிநீக்கு
  21. அது எங்களுக்கும் பிடித்த பாட்டுதான். தங்கவேலுவுக்காகப் பார்ப்போம் கௌதமன் ஜி. ஆங்கிலப்பாடல்கள் பாடாவிட்டால் உங்கள் குடும்பமே கர்நாடக இசையில் மூழ்கி முத்தெடுக்குமே.எனக்கு பட்டம்மாள் ,எமெல்வி,எம் எஸ் அம்மா இவர்கள் பாடல்களும் கற்றுக் கொடுக்கப் பட்டன என் பாட்டியால். அம்மாவுக்கும் இசை ஆர்வமும் பாடும் வழக்கமும் உண்டு.

    பதிலளிநீக்கு
  22. ஆம். அன்பு கீதா மதி. எனக்காக எங்கே நல்ல இசைத்தட்டு கிடைத்தாலும் வாங்கி வந்துவிடுவார்.நான் தான் செலவு செய்யாதீர்கள் என்று தடுப்பேன். புத்தகங்கள் வகையும் அப்படித்தான். சொல்லாமலே புரிந்து கொள்ளும் சக்தி இருவருக்கும் இசை ஏற்படுத்திக் கொடுத்தது. மிக நன்றி கீதா மதிம்மா.

    பதிலளிநீக்கு
  23. //முகநூல் வலைத்தள நட்புகளில் அனைவருடனும் நாம் பழகினாலும் சிலர் மட்டுமே சிறப்பிடம் பிடிப்பார்கள். ஏனென்று தெரியாது பார்த்த முதல் நாளே பாசமாகி விடுவோம். அந்த வகையில் எனக்குப் பிடித்தவர் வல்லிம்மா.//
    அதே அதே !!! அப்படியே தான் எனக்கும் !


    அழகான பதிவு அக்கா அன்பான வல்லிம்மாக்கு !
    அவர்கள் பகிரும் அனைத்து பாடல்களும் ரொம்ப காதுக்கு இனிமை ப்ளஸ் இதமானவை !!

    பதிலளிநீக்கு
  24. நன்றி கணேஷ் சகோ.

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி வல்லிம்மா

    நன்றி ராஜி

    நன்றி கோமதி மேம்

    நன்றி ரிஷபன்

    நன்றி கீதா

    நன்றி துளசி.

    வல்லிம்மா உங்கள் ரசனைகள் பற்றி இன்னும் பல பதிவுகள் போடக் காத்திருக்கிறேன். இவங்களும் படிக்கக்காத்திருக்காங்க..

    உங்க இடுகைக்கு மட்டும் கூகுள் ப்ளஸில் 11 அல்லது 12 . இதுவரை எனக்கு அதிகமா 10 தான் கிடைத்திருக்கு அதுவும் பெண் சிசுக்கொலைபற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைக்காக. சந்தோஷமாக இருக்கும்மா. இன்னும் சொல்லுங்க கேக்குறோம். :)

    பதிலளிநீக்கு
  25. கௌதமன் சார்.. ஹஹஹஹஹா உங்க பாணியில் பதில் . நீங்க எழுதிய பதிலைப்பார்த்ததும் அந்தப் பாட்டைப் பாடிப்பார்த்தேன். :)

    ஸ்ரீராம் சொன்ன பாடல்களும் தான். :) ஸ்ரீராம் 4 கமெண்ட்ஸா.. :) :) :)

    பதிலளிநீக்கு
  26. நன்றி கீதா

    நன்றி ஏஞ்சல்.

    அனைவரும் அன்பான விமர்சனங்களால் என் வலைத்தளத்தைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள். அனைவருக்கும் நன்றி. வல்லிம்மாவுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் :)

    பதிலளிநீக்கு
  27. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...