எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 ஏப்ரல், 2014

அனைவருக்கும் கல்வி. ( RIGHT TO EDUCATION ):-

அனைவருக்கும் கல்வி. ( RIGHT TO EDUCATION ):-

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகக் காசு கொடுக்கிறார்கள். எங்கே என்றா கேட்கிறீர்கள். அமெரிக்காவில்தான். ரோலண்ட் ஃப்ரேயர் ஜூனியர் என்ற பொருளாதார நிபுணர்தான் இந்த வித்யாசமான கல்விப் பரிசோதனையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை ”ஏ” என்றும் கொஞ்சம் சுமாராகப் படிக்கும் மாணவர்களை “பி ”என்றும் இருபிரிவாகப் பிரித்து  சுமாராகப் படிக்கும் மாணவர்கள் நன்கு படித்தால் ஊக்கத்தொகை வழங்கிப் பார்த்தார்கள். ஆனால் ரிசல்ட் என்ன வென்றால் ஆரம்பத்தில் சூப்பராகப் படித்த அந்தப் பிள்ளைகள் நாளடைவில் பழையபடிதான் படித்தார்கள்.

இதிலிருந்து காசு கொடுத்துக்  கல்வியை வாங்க முடியாது என்று தெரிகிறது.இயல்பாகப் படிப்பின் மீது தானாக ஆர்வம் வந்தால் ஒழியப் படிக்க வைக்க முடியாது என்பது நிரூபணமாகி இருக்கிறது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி, செயல்முறைக் கற்றல் கல்வி என்று முயன்று பார்க்கிறோம். இது நன்கு பரவலாக செயல்பட்டாலே போதும். அனைவர்க்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும். அதே சமயம் ஒரே மாதிரியான கல்வித் தரமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.



அரசுப் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு சிலபஸ், தனியார் பள்ளிகளில் மெட்ரிக்குலேஷன் கல்வி மற்றும் சென்ட்ரல் போர்டு சிலபஸ் சிஸ்டம், இது தவிர இண்டர்நேஷனல் கல்வி முறை ( STATE BOARD,  METRICULATION, CBSE ( வித்யா மந்திர், கேந்திரீய வித்யாலயா, ) , ICSE,) ஆகியன இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன.

இப்படி இந்த பள்ளிக் கூடங்களையும் கல்வி முறைகளையும் பார்த்தால்  பெருங்குழப்பம்தான் ஏற்படும். மெக்காலே வகுத்த முறைப்படி இன்னும் கல்வி கற்பிக்கப்படுகிறது. தனி மாணவனின் ஐக்யூ, மூளைத் திறன் , ஏற்புத்திறன் கொண்டு கற்பிக்கப்படுவதில்லை.

பெங்களூருவில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி அனைவருக்கும் கல்வி வழங்க அரசுப் பள்ளிகளில் போதிய இடம் இல்லை. எனவே இந்த  இட நெருக்கடியை சமாளிக்க கர்நாடக அரசே தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வித் தொகையை வழங்கிப் படிக்க வைக்கப் போகிறது. இதற்காகக் கல்வி மானியமாக   900 கோடி ரூபாய் வழங்கத் திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு. அதனால் பக்கத்தில் இருந்த பள்ளியில் மூன்று நாட்களாக அதற்கான விண்ணப்படிவம் வாங்கப் பெரும் கூட்டம்.

அரசுப் பள்ளியில் படித்த பிள்ளைகள் அரசாங்கச் செலவில் தனியார் பள்ளிகளில் உயர்ந்த கல்வி பெறலாமல்லவா. இதற்கு ஈடாக அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தையும் உயர்த்த வேண்டும் . படித்ததை எல்லாம் பேப்பரில் வாந்தி எடுக்கும் நிலை மாற வேண்டும்ஒவ்வொன்றையும் . முடிந்தவரை செயல் முறைக் கற்றல் மூலம் கற்பித்தல் நன்று.

முஸ்லீம் குழந்தைகள்தான் கர்நாடகாவில் பள்ளிக் கல்வி அதிகம் பெறுவதில்லை என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வருடத்திலும் கிட்டத்தட்ட 50, 000 மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறுகிறார்கள். இத்தனைக்கும் இங்கே உருது மீடியமும் கன்னட மீடியமும் இருக்கிறது. இதற்காகக் கர்நாடக அரசு பெரும் முயற்சி எடுக்க  இப்போது அது குறைந்து இன்னும் அதிக முஸ்லீம் குழந்தைகள் கல்வி பெறுகிறார்கள்.

ஆசிரியர்களின் பற்றாக்குறையும் ஒரு காரணம். இதை நீக்க இன்னொரு ஆச்சர்யகரமான விஷயம் என்னன்னா ஜேபி மோர்கன், ஹெச்டிஎஃப்சி போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய இளம் தலைமுறையினர் வேலையை விட்டு விட்டு ஆசிரியப் பணிக்கு வந்திருக்கிறார்கள். அது தம்மைப் புதுப்பித்து இருப்பதாகக் கூறுகிறார் இது போன்ற உயர் சம்பளம் வரும் வேலையை விட்டு விட்டு மும்பைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி புரியும் சௌம்யா சுரேஷ்.

குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளின் கனத்தைக் குறைப்பதற்காக என் ஜி ஓ ஒன்று லைட் வெயிட் பாக்குகள் வழங்க முடிவெடுத்துள்ளது. மேலும் ஒவ்வொரு பருவத்துக்கும் உள்ள புத்தகங்களைப் பிரித்து வெளியிட வேண்டுமென்றும், மேலும் அதிக புத்தகங்களை சுமந்து வரச் சொல்லும் கல்வி நிறுவனங்களுக்கு ஃபைன் விதிக்க வேண்டுமென்றும் கோருகின்றன. சுத்தமான தண்ணீரைப் பள்ளியில் வழங்குவதன் மூலம் அதைக் குழந்தைகள் சுமக்க நேர்வதைத் தடுக்கலாம் என்று கூறுகின்றன.

மதிய உணவுத் திட்டங்கள், உடைகள், பள்ளி நோட்டுக்கள் வழங்குவதன் மூலமும், கல்வி மானியம் வழங்குவதன் மூலமும் குழந்தைகளைப் படிக்க வைக்க அரசுகள் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இதன் ஒரு படியாக மாணவர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்திய சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுவழங்கி கௌரவித்து வருகிறார்கள். டீச்சர்ஸ் டே அன்று டீச்சர்ஸ் எக்ஸலன்ஸுக்காக ( TAFET - TEACHERS AWARD FOR EXCELLENCE IN TEACHING)  இண்டராக்ட் கவர்னர் ஹெச் ஆர் பரத்வாஜ் பெங்களூரு பேலஸில் ஆசிரியைகளுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

ஆசிரியைகள் அனைவரும் நெகிழ்ந்து கூறியது குழந்தைகளுக்குக் கற்பிப்பது போன்ற இன்பமான செயல் வேறேதுமில்லை என்றும், நான் டீச்சராக நேர்ந்தது ஒரு வாய்ப்பு, குழந்தைகளுக்கு படிப்பை மட்டுமல்ல வாழ்க்கையைப் பற்றியும் போதிக்க முடிகிறது. அவர்கள் முகத்தைத் தினம் பார்க்கும்போது  நாம் ஒரு குழந்தையின் வாழ்வை உருவாக்குகிறோம் என்ற மனத் திருப்தி ஏற்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ரோபாடிக் கல்வி, கம்ப்யூட்டர் கல்வி போன்றவற்றைக் கொண்டுவருவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி ரோனக் ஜெயின், க்ளென் இம்மானுவேல், ஸ்மிர்னா இவாஞ்சலின் என்ற மூன்று மாணவர்களுக்கு இரண்டு வருடங்களாக ரோபாட்டிக்ஸ் கற்பிக்கப்பட்டு இப்போது  அவர்கள் சென்சார் மூலம் இயங்கும் காற்று ஆலை விசிறியை இயக்கியுள்ளார்கள். இன்னும் நான்கு ரோபோக்களையும் வயர்லெஸ் மூலம் மடிக்கணினியில் ஆணையிட்டு இயக்கும் திறம் பெற்றிருக்கிறார்கள்.

உலகளாவிய கல்வி முறையில் ஆசிய மாணவர்கள்தான் கற்றுக் கொள்வதில் முன்னணியில் இருக்கிறார்களாம். சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், சௌத் கொரியா, ஜப்பான் ஸ்விச்சர்லாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்தான் கணித அறிவில் முதலிடங்களில் இருக்கிறார்கள்.

அமெரிக்கச் குழந்தைகளை விட இந்தியச் குழந்தைகள்தான்  உலகளாவிய அறிவிலும் சிறந்து விளங்குகிறார்கள். யதார்த்த வாழ்க்கையையும் எளிதாக அணுகுகிறார்கள். பத்தில் ஒன்பது பெற்றோர்களுக்குத் தன் பிள்ளையின் கல்வி பற்றியும் எதிர்காலம் பற்றியும் பாசிட்டிவான கண்ணோட்டம் இருக்கிறது. படித்தால்தான் முன்னேறலாம் என்பதைப் பிறப்பிலிருந்தே சொல்லிக் கொடுத்து விடுகிறோமே. பிறந்தவுடனே பெயரை கேஜெட்டில் பதிந்தவுடன்  நல்ல பள்ளிக் கூடங்களில் அப்ளிக்கேஷன் பார்ம் வாங்குவதுதானே  இந்திய மிடில் க்ளாஸ் குடும்பத் தலைவன் செய்யும் அடுத்த செயல்  .

குழந்தைகளைத் தானாகக் கற்க ஊக்குவிக்க வேண்டும் என பையோகான் இண்டியா நிறுவனத்தின் சேர்மன்  கிரண் மஜூம்தார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் NIE  (NEWS PAPER IN EDUCATION ) யில் பேசும்போது  கூறி இருக்கிறார்.  ப்ரொஃபசர் ஈன்ஸ்கிராஃப்ட் அறிவியலைக் கற்கும் விதம் பற்றிக் கூறுகையில்  மிகக் கடினமான பௌதீகத்தைக் கார்ட்டூன் மூலம் கற்பிக்கலாம் எனக் கூறி இருக்கிறார்.

நன்கு படிக்கும் குழந்தைகள் தன்னுடைய வகுப்பில் உள்ள மற்ற பிள்ளைகளுக்குப் புரியும்படி செமினார் வகுப்புகள் எடுப்பதன் மூலம் தன்னையும் செழுமைப்படுத்திக் கொள்ள முடிகிறது, மற்றவர்களுக்கும் கற்பிக்க முடிகிறது. ஓவியம் வரைதல், ஸ்போர்ட்ஸ், கவிதை, கட்டுரை, எழுதும் போட்டி, யோகா, மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியவற்றைக் கற்பிப்பதன் மூலமும் அதற்கான போட்டிகள் வைப்பதன் மூலமும் குழந்தைகளின் படிப்புத் தவிர மற்ற ஆர்வங்களைத் தெரிந்துகொண்டு ஊக்குவிக்கலாம்.

வாழ்க்கைக் கல்வி மூலமும், பாரம்பரியத் திருவிழாக்களை அதன் பாரம்பர்யச் புராணச் சுவைகெடாமல் நிகழ்த்துவதன் மூலமும் பள்ளிகள் குழந்தைகளுக்கு நம் பாரம்பர்யத்தைப் போதிக்கின்றன. மற்ற மதத்தினரின் வழிபாட்டையும் இறை நம்பிக்கையையும் மதிக்கக் கற்பிக்கின்றன.

ஆனாலும் பத்து சதவித மக்களே கல்லூரி வரை சென்று பயில்வதாக அதிலும் டெக்னிக்கல் கோர்ஸுகளில் சேர்வதாக சர்வேக்கள் கூறுகின்றன. இதிலும் ட்ரைபல்ஸ், தலித்துகள், ஆகியோர் 1.8 சதவிகிதம்தான் உயர் கல்வி பெறுவதாகவும், முஸ்லீம்களில் 2.1 சதவிகிதத்தினரே உயர் கல்வி பெறுவதாகவும் இன்னும் கிராம மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேரே உயர் கல்வி வாய்ப்புப் பெறுவதாகவும் சர்வேக்கள் சொல்கின்றன.

IB  கல்வி முறை ( INTERNATIONAL BACCALAUREATE)  பற்றி  நகரமெங்கும் பேசப்படுகிறது. இது பற்றி சரியான விழிப்புணர்வு இல்லை என்றே கூறுகிறார்கள். ஒரு ஆசிரியை 15 பிள்ளைகளை மட்டுமே கவனிக்க இயலும் என்பதும் அதன்படியே வகுப்பில் மாணவர்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்பதும் முக்கியம். இதன் கல்வி முறை சுற்றுச் சூழலைப்பொறுத்தும் கற்றுக் கொள்ளும் திறன் பொறுத்தும் கற்பிக்கப்படுகிறது என்பதும் இதற்கு இண்டர்நேஷனல் அங்கீகாரம் இருப்பதும் சிறப்பு.

குழந்தைகளின் கற்கும் திறன் எப்படி இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கில் கலந்து கொண்டு பெற்றோர் குழந்தைகள் மீதான அக்கறையைக் காண்பிக்க வேண்டும். அவ்வப்போது பள்ளி டைரியைப் பார்த்து வீட்டுப்பாடங்களை முடிக்கக் கற்பிப்பதும் எளிதாகக் கற்றுக்கொள்வதற்கான வழி. எழுத ஊக்குவிக்க வேண்டும். அமர் ஜோதி பள்ளியில் எழுதிப் பழகி கரும்பலகையில் எழுதி விளக்கிக் கற்பிக்க மாணவர்களுக்கும் போதிக்கப்படுவதால் நிறைய முன்னேற்றம் இருப்பதாகக் கூறுகிறார்கள். இப்படிக் கற்பிப்பதால்  எழுத்தும் செம்மைப்படுவதோடு தாங்கள் நினைக்கும் விஷயத்தைப் பற்றியும் காணும் விஷயத்தைப் பற்றியும் அறிவை வளர்த்துக் கொள்வதோடு அதை சிறப்பாக மொழியில் வெளிப்படுத்தவும் முடிகிறது. இது பல புதிய விஷயங்களைத் தெளிவு படுத்த உதவுகிறது.

 இப்போது இணையக் கல்வியும் பெருகிவிட்டது. தெரியாத விஷயங்களுக்கு இணையத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளச் சொல்லலாம். பாதுகாப்பான இணைய இணைப்பை ஏற்படுத்தித் தருவதும்முக்கியம்.

அதி முக்கிய விஷயம் என்னவென்றால் எல்லாருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமென்பதில் அரசாங்கங்களே முயற்சி எடுத்தால் போதாது. கல்விக் கூடங்களுக்கும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது.  இந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் அனைவருக்கும் கல்வி, ஒரே தரமான கல்வி சாத்யப்படும்.


4 கருத்துகள்:

  1. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சரியாக.... மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோதரி...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை அம்மா! அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) இந்தியா முழுதும் செயல் படுத்தப் பட்ட போதிலும் தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப் பட்ட பிள்ளைகளுக்கு கட்டாயம் இடம் வழங்கவேண்டும். தற்போது இது பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. உண்மையில் வழங்குகிறதா என்பது தீவிரமாக ஆய்வு செய்யப் படுகிறது.
    இது தொடர்பாக விரிவாக எழுத இருக்கிறேன்.
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ராஜி

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி முரளி சார். எழுதினால் எங்களுக்கும் பகிருங்கள். .. சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...