புதன், 9 ஏப்ரல், 2014

காதலா.. காதலா..

1. தனிமைப்பனி மூடிப்
படுத்திருக்கிறேன் பூவாய்.
சூரியனாய் வந்து
துயிலெழுப்பிக்
கதகதப்பாய் அணைக்கிறாய்.

2. எத்தனை முறை
தழுவினாலும் போதவில்லை.
திரும்ப திரும்பத்
தழுவச் சொல்கிறது
ஏறு தழுவுதலாய்..

3. காற்றிசைச் சிணுங்கியாய்
காத்துக் கிடக்கிறேன்.
நீ  காற்றாய்த் தழுவி
சரசரவென முத்தமிட
கலகலத்துச் சிரிக்கிறேன்.


4. நீ யார் நான் யார்
நாம் யார் மறக்கிறோம்
ஒளிரும் மெழுகாய்
ஒளிவிடும் உன் கண்கள் முன்
விட்டிலாகிறது என் கண்கள்.

5. வானவில்லைக் கீறிக் கூடத்
துண்டு போடுகிறோம்
என் துப்பட்டாவில் நாம்
மழைக்காய் ஒதுங்கும்போது
நம் கண் வழி முளைக்கும்
சூரியக் கத்தி கொண்டு.


6. நான் இல்லாத போது
என்னை நினைப்பதே
பழக்கம் உனக்கு
எவ்வளவு புரையேறுகிறது பார்
புரையோடிப் போயிருக்கிறேனோ.

7. எழுத்துக்களில் கசியும் காதலை
தொட்டுணருகிறாய்
ஒட்டிக் கொண்டிருக்கிறேன்
தொட்ட விரல்களில்
ஆசையோடு கைபிடித்து.

8. ரோஜாக்கள் எதற்காம்.
நீ என் கைபிடித்து நடக்க
மனசெல்லாம் பூத்து
விரல்வழி சிதறிக் கொண்டிருக்கிறதே,
சிவப்பான வெட்கத்தோடு.

9. உன் மனசில் நான் இல்லையென
அழுது கொண்டிருந்தேன்.
நீ இமைநீர் துடைக்கும் போது
உணர்ந்தேன் .உன் இதயம்
பாசம் படிந்த குளமாகியிருந்தது.

10. கடவுள் இருக்கிறார்
காதலைக் கொடுத்து
காதலனைக் கொடுத்து
காதலியைக் கொடுத்து
உயிர் சுழற்சியாய்
குழந்தையும் கொடுத்து..

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் ஃபிப் 16 - 28 , 2014 அதீதத்தில் வெளிவந்தவை.


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆறும் எட்டும் ரொம்பவே ரசித்தேன் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...