செட்டிநாட்டு இல்லங்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் அமைந்திருந்தாலும் இந்தோ இஸ்லாமிய வேலைப்பாடுகளாலும் அழகு பொலிபவை. வீடுகளின் நுழைவாயில்களில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் நிலைவாயில்களிலும் அவர்கள் சிற்பமாய் அரசோச்சுவதும் காட்சிக்கு விருந்தாகும். இப்படியாகப்பட்ட கோட்டைபோன்ற வீடுகளின் இன்றைய நிலை என்ன ?
தமிழ்நாட்டின் மேம்பட்ட நகர்ப்புறக் கட்டிடக்கலைக்கு சாட்சியமாய் எஞ்சி இருப்பது செட்டிநாட்டின் பாரம்பர்ய இல்லங்களே. மற்ற மாவட்டங்களில் உள்ள பாரம்பர்ய இல்லங்கள் பொருளாதாரக் காரணங்களால் நலிவுற்றும் நில விற்பனைக்கு இரையாகியும் வருகின்றன. சொல்லப்போனால் எழுபது ஆண்டுகளுக்கு முன், மியான்மர் மற்றும் மலேயாவின் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டுவிக்கச் சென்ற செட்டிநாட்டினரும் சந்திக்க நேரிட்டது.

