இந்தியாவின் நைட்டிங்கேல்,
பாரதீய கோகிலா என்றெல்லாம் புகழப்பட்டவர் யார் தெரியுமா. நம்ம கவிக்குயில் சரோஜினி
நாயுடு அவர்கள்தான். மிகுந்த தன்னம்பிக்கையும் தைரியமும் ஆளுமைத் தன்மையும் அழகும்
இனிமையும் மன உறுதியும் வாய்ந்த மகத்தான சக்திமிக்க பெண்மணி அவர். நம் நாட்டு விடுதலையில்
பெரும்பங்காற்றிய மாபெரும் பெண் சுதந்திரப் போராளி அவர். காந்தியடிகள் மேல் கொண்ட அபிமானத்தால்
காங்கிரஸில் சேர்ந்து நாட்டு விடுதலைக்குத் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்தவர்.
வங்காள குலின்
ப்ராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பிறந்தது ஹைதராபாத். சாதிக்கட்டுப்பாடு அதிகம்
இருந்த அந்தக் காலத்திலேயே கோவிந்தராஜூலு நாயுடு என்ற மருத்துவரை சாதி மறுப்புத் திருமணம்
செய்து கொண்டவர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. 1879 பிப்ரவரி 13 இல் பிறந்த
சரோஜினி நாயுடு எழுபது ஆண்டுகள் வாழ்ந்து இந்திய விடுதலைவேள்வியில் பங்கேற்றவர். காந்தியடிகள்
மீது கொண்ட அபிமானத்தால் சுதந்திரப் போராட்டத்திலும் சத்யாக்ரகத்திலும் ஈடுபட்டவர்..
அதனால் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், விடுதலை இந்தியாவின் உத்திரப் ப்ரதே
சகவர்னராகவும் ஆட்சி செய்தவர்.
தந்தை அகோர்நாத்
புரட்சிச் சிந்தனையாளர். ஹைதராபாத்தில் நிஜாம் கல்லூரி என்ற ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி
வந்தார். அவரது தாய் பரதசுந்தரி தேவியும் கவி இயற்றுவதில் வல்லவர்.சரோஜினியோடு கூடப்பிறந்தவர்கள்
எண்மர். அவர்களில் ஒரு சகோதரரான வீரேந்திரநாத் புரட்சிக்காரர், இன்னொரு சகோதரரான ஹரீந்திரநாத்
கவிஞர். எனவே சரோஜினியின் ரத்தத்தில் கவிதையும் புரட்சியும் ஊறித்ததும்பியதில் ஆச்சர்யம்
இல்லை.
மெட்ராஸ் யூனிவர்சிட்டி,
கிங் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ், லண்டன் கிரிடன் கல்லூரிகளில் பயின்றவர் சரோஜினி. உருது
, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

