ய்ன வும் ம்ட வும்.
இதென்ன ய்ன ம்ட என்கின்றீர்களா. இது
ஒரு பாஷை. வாலைக்குமரிப் பருவத்தில் இருந்தபோது அறிமுகமானது. இதை உருவாக்கியவர் யார்னு
தெரியாது. ஆனா நானும் முத்தாச்சியும் ( பெரியம்மா பெண் ) முகப்பின் ஜன்னலில் அமர்ந்துகொண்டு
கதைபேசும்போது உபயோகமான மொழி.
வெளியில் வெய்யில் தங்கவண்ணம் பூச சிவன்
கோயில் கோபுரம் ஜொலிக்கும். எதிரில் முனியன் ஆசாரி வீட்டிலிருக்கும் தூங்குமூஞ்சி மரமும்
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும். சத்யா பொட்டலுக்கு சந்தைக்குக் குறுக்கு
வழியாகச் செல்பவர்கள், சிவன் கோயில் ஊரணியில் குளித்துவிட்டு ஈரச் சேலையைச் சுற்றித்
தோளிலேயே ஈரத்துணிகளைப் போட்டுக்கொண்டு போபவர்கள், தெருப் பைப்பில் தண்ணீர் பிடிப்பவர்கள்,
சைக்கிள் பெல்லை ஏர் ஹாரன் போல அடித்து ஓட்டும் வாண்டுகள் என களை கட்டி இருக்கும் தெருவைப்
பார்த்தபடி ஜன்னல் கம்பி பற்றி ஒஞ்சரித்து அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்.