எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 ஜனவரி, 2024

பயணங்கள் முடிவதில்லை பூர்ணிமா பாக்கியராஜ்

பயணங்கள் முடிவதில்லை பூர்ணிமா பாக்கியராஜ்


“இளைய நிலா பொழிகிறதே, மணி ஓசை கேட்டு எழுந்து, சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும், தோகை இளமயில் ஆடி வருகுது, வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன், முதன் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ” என இனிமையும் சோகமுமான மெலோடீஸ் நிரம்பியது பூர்ணிமா ஜெயராம் நடித்த பயணங்கள் முடிவதில்லை படம். நிறைவேறா ஏக்கமும் கனவுகளுமாக மனதை வருத்தும் காதல் கதை. வழக்கமான பாணிதான்.

”அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது, சின்னச் சின்னக் கண்ணா சேதி சொல்லும் மன்னா” இந்தப் பாடல்களோடு ”விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறலாம் ஓ ஓ ஓ ஓ ஜூலி ஐ லவ் யூ.. லா ஆ லா லலா லலா லலா என்று கல்லூரிப் பருவத்தில் இப்பாடலை ஜூலி என்ற பெயருள்ள பெண்களைப் பார்த்து நாங்கள் பாடிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் எங்கள் அம்மா வீட்டில் வேலை செய்து வந்த அக்கா ஒருவர் அப்போது பிறந்த தன் குழந்தைக்கு ஜூலி என்றே பெயரிட்டார். இத்தனைக்கும் அவர் இந்து. அவ்வளவு தாக்கம் ஏற்படுத்திய பேர் அது. கிளிஞ்சல்கள் (லவ் நெவர் ஃபெயில்ஸ்) என்ற கேப்ஷனோடு வந்த படம்.

ஜாதி வேற்றுமையால் திருமணம் கைகூடாமல் ஜூலி முதலில் இதில் மரிப்பது போல் பயணங்கள் முடிவதில்லையில் காதலன் ரவிக்குக் கான்சர் என்றதும் காதலி ராதா விஷம் குடித்து இறக்கும் கதை. அதிலும் ஜூலி படத்தில் க்ளைமாக்ஸில் இவரைச் சந்திக்க வரும் மோகனை பயில்வான் ரங்கநாதன் புரட்டிப் புரட்டி அடிக்குமிடத்தில் இவர் வீட்டுக்குள் அடைபட்டு, வருந்தி அழுது, ஏதும் செய்ய இயலாமல், ஏசுநாதரின் முன் ஆணியை உள்ளங்கையில் வைத்து அழுத்தி சுத்தியலால் அடிக்குமிடம் பதைபதைக்க வைக்கும். முடிவில் கல்லறைத் தோட்டத்தில் இவரின் முகத்தோடு முகம் வைத்து மோகன் மரிப்பதும் அதிர்ச்சி. அப்போது எடுக்கப்பட்ட மூன்று நான்கு படங்களில் முடிவில் இவர் இறப்பது போலவே இருக்கும்.

சராசரி உயரம். சிறிது பூசிய உடல்வாகு, பளிச்சென்ற நிறம். பரந்த பரவச முகம், கண்கள் மற்றும் புன்னகை ப்ளஸ் பாயிண்ட். ஷிபான், ஜார்ஜெட் சேலைகள் பாந்தமாயிருக்கும். மார்டன் ட்ரெஸ்ஸிலும் கலக்கியவர். அடர்ந்த கூந்தல். இயல்பான வெட்கம், இசைவான நடனம், உணர்வுபூர்வமான நடிப்பு, சிறப்பான வசன உச்சரிப்பு இதுதான் பூர்ணிமா ஜெயராம். இவரது நான்கைந்து படங்களில் மோகன் தான் ஹீரோ. அதிகப் படங்களில் மைக்குடன் பாடுவது போல் தோன்றியதால் அவரை மைக் மோகன் என்று கூட ரசிகர்கள் அழைப்பார்கள்.

பூர்ணிமா மும்பையில் 1960 ஆம் வருடம் பிறந்தவர். தந்தை ஜெயராம். 1980 முதல் 1984 வரை நான்கே வருடங்களில் 60 படங்களில் நடித்தவர்.. பூர்ணிமாவும் பாக்கியராஜும் எம்ஜியாரின் முன்னிலையில் மணந்து கொண்டனர்., சாந்தனு, சரண்யா என்று இரு குழந்தைகள். இருவருமே திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவரது மருமகள் கீர்த்தி எனப்படு கிகி விஜயும் ஒரு நடிகை. சொல்லப் போனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் கெமிஸ்ட்ரி பயங்கரமாய் ஒர்க் அவுட் ஆகி இவர்கள் இருவரும் எப்போதும் இணைபிரியாத் தோழிகள் போல் இருக்கிறார்கள்.  

தற்போது எக்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வரும் பூர்ணிமாவின் தன்னம்பிக்கை அளவிட இயலாதது. துணிகளில் டிசைனிங் செய்வது தனக்குப் பிடித்தமானது என்பதால் அது சம்பந்தமாகத் தன் தொழிலை அமைத்துக் கொண்டார். திருமணத்துப் பின் நடிக்கவே கூடாது. அது திருமண வாழ்க்கையின் இறையாண்மையைப் பாதிக்கும் எனக் கருதிய அவர் தன் திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட 29ஆண்டுகள் நடிக்கவே இல்லை. தன் மகன் கூறியதற்காக 2013 இல் ஜில்லாவில் நடித்தார்.

இவரது எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு ஒரு பேட்டிக்காகச் சென்றிருந்தேன். அதே ரோஸ் நிறம். வெண்ணிற பைஜாமா, ரோஸ் நிற சல்வாரில் அன்றலர்ந்த பூப்போல் இருந்தார். அவரது அலுவலக அறையில் சுவரோரமாக சோபாக்களும் சுவரின் எல்லாப் பக்கங்களிலும் எம் ஜி யாருடன் பாக்கியராஜ் சாரும் அவரும் திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட எண்ணற்ற புகைப்படங்களுமே அலங்கரித்தன. தங்கள் காதல் திருமணம் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.


முந்தானை முடிச்சில் பூர்ணிமா பாக்கியராஜின் முதல் மனைவியாக நடித்திருப்பார். பிரவீணாவின் மரணத்துக்குப் பின்பு பூர்ணிமாவுடனான திருமணத்துக்கு முன்னால் இப்படம் எடுக்கப்பட்டதால் இந்த முன்னாள் மனைவி கேரக்டர் ப்ரவீணாவை ஞாபகப்படுத்தும் வண்ணம் இருந்தது. இதில் அவர் தங்கள் குழந்தையை எந்தத் தருணத்திலும் கைவிட்டுவிடக் கூடாது என்று பாக்கியராஜிடம் கண்ணீரோடு கேட்டுக் கொள்வார். இரண்டாம் தாரம் வந்தால் தன் குழந்தை அநாதையாகிவிடும், மாற்றாந்தாய் அதை எப்படியும் கொடுமைப்படுத்துவாள் என்று எண்ணி பாக்கியராஜ் தன்னை மணக்க விரும்பும் ஊர்வசியை மறுப்பார். அவ்வப்போது முதல் மனைவியின் குரல் காதுக்குள் கேட்டு பாக்கியராஜை இன்னும் சங்கடப்படுத்தும். இதில் பூர்ணிமாவின் நடிப்பு சிறப்பாக இருக்கும். இவரது படங்களில் பொதுவாகத் தொய்வு இல்லாத சரளத்தன்மை இருக்கும்

தங்க மகன் இவரது சிறந்த படங்களில் ஒன்று. ”வா வா பக்கம் வா, ராத்திரியில் பூத்திருக்கும், பூமாலை ஒரு பாவையானது.” இந்த மூன்றும் நடனப் பாடல்கள். அதிலும் சுவரில் விழும் பூர்ணிமாவின் நிழலுக்கு ரஜனி முத்தமிடும் பூமாலை பாடல் ரசிகர்களின் எவர் ஃபேவரைட். விதி பூர்ணிமா மற்றும் சுஜாதாவின் நடிப்பினால் அமோக வெற்றியடைந்து 500 நாட்கள் ஓடிய படம். இதில் பாக்கியராஜ் ஒரு சிறு பாத்திரத்தில் தோன்றி இருப்பார். ஒரு பெண் தன்னைக் காதலித்துக் கர்ப்பமாக்கி ஏமாற்றியவனுக்குச் சட்டத்தின் மூலம் புத்தி புகட்டும் படம்.

கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தில் நந்தனாரின் கதையை பாலே நடனமாக ஆட முயற்சிப்பார் அருந்ததி என்னும் பாத்திரத்தில் நடித்த பூர்ணிமா. தாய் மூகாம்பிக்கை, நெஞ்சில் ஒரு முள், தீராத விளையாட்டுப் பிள்ளை, நன்றி மீண்டும் வருக, மாமியாரா மருமகளா, சஷ்டி விரதம், நெஞ்சமெல்லாம் நீயே, என் ஆசை உன்னோடுதான், தம்பதிகள் என்று இன்னும் பல படங்கள் நடித்துள்ளார்.

ஷார்ட் ஃபிலிம் டெலி சீரியல் , டிவி ஷோக்களில் தோன்றியுள்ளார். தமிழ் தவிர ஹிந்தி தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மஞ்சில் விரிஞ்ச பூக்களில் ஆரம்பித்துத் தீர்க்கதரிசி வரை 35 க்கும் மேற்பட்ட மலையாளப் படங்கள், 33 தமிழ்ப் படங்கள் செய்துள்ளார். ஆராரோ ஆரிராரோ, வேட்டிய மடிச்சுக் கட்டு, சுந்தரகாண்டம், அம்மா வந்தாச்சு ஆகியவை இவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள். 1982 இல் வெளியான பயணங்கள் முடிவதில்லைக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார்.     

”டார்லிங் டார்லிங் டார்லிங், அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே, ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்” இது இவரது ரியல் ஜோடி பாக்கியராஜுடன் நடித்த படம். மாடர்ன் கேர்ள் ராதாவை இதில் எஸ்டேட் வாட்ச்மேன் மகனான ராஜா காதலிப்பார். கடைசியில் அவரது உண்மைக் காதல் வெற்றி பெறும். உண்மை வாழ்விலும் பழனிச்சாமி என்னும் பாக்கியராஜ் தன் காதலில் வெற்றி பெற்றுப் பூர்ணிமாவைக் கைப்பிடித்தார். அன்றைக்குப் பிடித்த தன் கணவரின் கரத்தை விடாமல் பூர்ணிமாவும் இறுக்கப் பற்றியபடி தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். 

திருமண வாழ்வின் இறையாண்மையைப் பாதுகாக்க விட்டுக் கொடுத்தலும் அன்பும் இன்றியமையாதன. அப்படித் தன் நடிப்புக் கேரியரையே துச்சமாய்த் துறந்து விட்டுத் தன் காதல் வாழ்க்கைக்காக அர்ப்பணிப்புடன் பூர்ணிமா பாக்கியராஜுடன் மேற்கொண்ட காதல் பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உண்மைதான் இப்படிப்பட்ட அன்பின் பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை. பயணம் இன்னும் இனிமையாய்த் தொடர வாழ்த்துக்கள் பூர்ணிமா பாக்கியராஜ்



டிஸ்கி:- எனது 24, 25 ஆவது நூல்களான சோகிசிவாவும், செட்டிநாட்டுப் பெண்களின் கதைகளும் ஜெர்மனியின் கொலோன்  பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறையில் இடம்பெற்றுள்ளது. துறைத்தலைவர் திரு. ஸ்வென் வேர்ட்மேனிடம் எனது கணவரும் நானும் நூல்களை வழங்கினோம். இந்தத் தகவல் டிசம்பர் மாத தனவணிகனில் நகரத்தார் செய்திகளில் வெளியாகி உள்ளது. நன்றி தனவணிகன்.




1 கருத்து:

  1. பூர்ணிமா பற்றிய வர்ணனை ( நான்காவது பாரா )அருமை.  நல்லதொரு தொகுப்பு.  ஜெர்மனியில் உங்கள் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...