எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஜனவரி, 2024

தங்கநிறச் சிங்கக்குட்டிகள்

தங்கநிறச் சிங்கக்குட்டிகள்

வள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே. ” இரண்டு நாள் தாடியுடன் சோஃபாவில் கிடந்தான் சாம். வாழ்நாள் பூரா அவன் தேடியது என்ன. பாசம் காதல் , குழந்தைகள் எல்லாம் தேவைக்கதிகமாகவே கிடைத்துவிட்டது. ஒன்றுக்கு மூன்றாகக் காதல், இரண்டாகக் குழந்தைகள். பாசத்தில் மூழ்கடிக்கும் தேவி. அவனுக்கென்ன குறை. 

 

எங்கே சென்றுவிட்டாள் இந்த ராணி ? அவளுக்கென்ன கேடு ? ஏன் சொல்லாமல் போனாள். ’பாதுகாப்பான இடத்துக்குத்தான் போகிறேன். தேடவேண்டாம்’ என்று இரண்டே வரிகள் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பாவி.

 

நந்தன் நந்தினியின் பிறந்தநாள் என்னவோ கோலாகலமாகத்தான் நடந்தது அவர்களைப் பெற்றவள் இல்லாமல். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசியது அவ்வப்போது அவன் காதுகளிலும் விழத்தான் செய்தது. “ இவங்க சரோகேட்ஸ் பேபீஸ் தெரியும்தானே. ! “ “ யெஸ் ஐ கேம் டு நோ இட் ஃப்ரம் செந்தில்நாதன் “


சிட் அவுட்டிலும் சேர்கள் போடப்பட்டிருந்தன. ஸாம் நான் சிங்கம்டா எனக் காண்பிக்க விரும்பினானோ என்னவோ  சிங்கம் தீமில் அமைக்கப்பட்டிருந்தது அந்த பர்த்டே பார்ட்டி. கார்ட்டூன் சிங்கத்தின் உருவங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. உயர்தரமான ஹோட்டலில் இருந்து உணவுகள் தருவிக்கப்பட்டிருந்தன. அவை சிங்க குகைகளில் அடுக்கப்பட்டிருந்தன. வரவேற்புப் பெண்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து வெல்கம் ட்ரிங்க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சீருடைப் பணியாளர்கள் தேவையானவர்களுக்கு தேவையான விகிதத்தில் காக்டெயில் கலந்து  ட்ரேக்களில் வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

 

அமெரிக்கன், காண்டினெண்டல், சைனீஸ், சவுத் இந்தியன் என்று விதம் விதமான உணவுவகைகள் பரப்பப்பட்டிருந்தன. ஸாமும் தேவியும் நந்தனும் நந்தினியும் அணிந்திருந்த உடைகள் பல ஆயிரங்கள் செலவில் தைக்கப்பட்டிருந்தன. தங்க நிற ஃபர் கொண்ட கிளர்ச்சியான ஸாட்டின் வெல்வெட் கலந்த உடையை அணிந்திருந்தார்கள் நால்வரும். ஈவண்ட் மேனேஜர்க்கே பல லகரங்களை செலவிட்டிருந்தான் ஸாம்.

 

குமரன் பக்கபலமாய் இருந்தான். ராணிக்கும் உடைகள் தைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவள் இந்தச் சந்தர்ப்பத்தில் இல்லாததும் பல்வேறு சர்ச்சைகளைத் தவிர்த்தது மட்டுமல்ல. தேவிக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. ஃபங்க்‌ஷனும் திட்டமிட்டபடி சிறப்பாகச் செல்கிறது. அடுத்து ஸாம் வேறு எதையும் சிந்திக்காமல் குழந்தைகளுக்கு வாங்கப்பட்ட ஃபன் தொப்பியை அணிந்து கொண்டான். தேவியும் குழந்தைகளும் அந்தக் கோன் தொப்பி அணிந்திருந்தார்கள். பிறந்தநாள் பாடல் பாடப்பட்டது. ஜிகினாக்களும் குமிழிகளும் கொண்ட நுரைக் கொத்து ஒரு ஃபன் பிஸ்டலில் இருந்து புறப்பட்டு அனைவரையும் நனைத்தது. ஸ்பாட்லைட் சுற்ற அதன் வெளிச்சத்தில் நால்வரும் நிற்க அனைவரும் பர்த்டே பாட்டுப் பாடினார்கள். சிங்கம் வரையப்பட்ட கேக்கைப் பிள்ளைகள் கைப்பிடித்து இருவரும் வெட்டினார்கள்.

 

கேக்கை வெட்டிப் பிள்ளைகள் கைவைத்து அமுக்க அதை எடுத்து ஊட்டினார்கள் ஸாமும் தேவியும். அடுத்து ஒரு துண்டு கேக்கை எடுத்து ஸாமின் வாயில் தேவி கொடுக்க “ லயன்ஸ் ஷேரை அவனுக்கே கொடுங்க “ என்று சொல்லிச் சிரித்தார்கள் ஸாமின் நண்பர்கள். குழந்தைகளுக்கு லயன் முகமூடியும் ரிடர்ன் கிஃப்டும் வழங்கப்பட்டது. அனைவரும் உணவருந்தச் சென்றார்கள்.

 

இரு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஸாமின் எண்ணங்களில் வந்து இம்சைப் படுத்தியது. அதனால்தான் ராணி போய்விட்டாளோ.. பிள்ளைகளையும் விட்டுப் போபவள் அல்லவே அவள். அம்மா, மாமியார் என்று யார் வீட்டுக்கு வந்து என்ன சொன்னாலும் காதில் போட்டுக்  கொள்ளவில்லையே அவள். ”சோத்துக்குப் பாரமா அவ ஏன் இங்கே இருக்கா . உன் வாழ்க்கையைப் பறிச்சுக்கப் போறா சீக்கிரம் அனுப்பு ” என்று உறவினர்கள் தேவியைத் தூபம் போட்டபோதும் தேவியும் அவளைப் போகச் சொல்லவில்லை. அவளும் கிளம்புவதாயில்லை.

 

ஆனால் அந்த இரவு. மழை பெய்த அந்த இரவு. அவன் அவளிடம் நடந்து கொண்ட விதம்.. அதை அவனால் மறக்க முடியவில்லை. தங்க நிறச் சிங்கக் குட்டிகள் நடந்து வந்து அப்பாவிடம் இழைந்து கொண்டன. ஹ்ம்ம் ராணியின் வாசம் பிள்ளைகளின் வாசம். அவ்வப்போது அவர்கள் கண்கள் ராணியைத் தேடின.

 

தோட்டத்தில் பவளமல்லி வாசம் பிச்சு வாங்கியது. அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. தனக்குப் பிள்ளை வரமளித்தவளைத் துரத்தி விட்டோமோ. அன்று இரவு நெருப்பு இறங்கி இருந்தது அவன் மீது. அந்த நெருப்பை இறக்கியே ஆகவேண்டும். பலநாள் அக்னியோடு சுற்றிக் கொண்டிருந்தான் அவன். மண்டை கொதித்தது.

 

நீலாக்கா இருநாட்கள் மகள் வீட்டுக்கு விடுப்பெடுத்துச் சென்றிருந்தார். குழந்தைகள் பிறந்தபிறகு ராணியும் தேவியும் தன்னைக் கவனிப்பதே இல்லை என்ற குறை அவனை வாட்டியது. உடலை நெருப்புத் தகித்த அந்த இரவில் அவன் வீடு அடைந்த போது ராணிதான் கதவைத் திறந்துவிட்டாள். குப்பென்று ஷாம்பெயினின் வாசம் தாக்க வேகமாக உள்ளே செல்லத் திரும்பினாள். தேவி குழந்தைகளுடன் தூங்கி இருந்தாள்.

 

சுவாதீனமாக ராணியின் அறைக்குள் நுழைந்த அவன் கைகள் அவள் மேல் அத்து மீறின. தடுத்துத் தடுத்துப் பார்த்த அவள் ஒரு கட்டத்தில் அவன் அணைப்புக்குள் மயங்கி விழுந்தாள். விருப்போடு விழுந்தாளா இல்லை மயக்கமா எனத் தெரியாமலே தனது நெருப்பை அவள் மேல் கொட்டினான். எத்தனை நாள் தாகம், எத்தனை நாள் ஆசை, எத்தனை நாள் பட்டினி. பலநாள்பசித்த சிங்கம் பிய்த்துத் தின்ற இரைபோல் கிடந்தாள் ராணி. அவள் மேலேயே அவன் படுத்து உறங்கி விட்டான்.

 

விடியற்பொழுதில் அவள் அவனை எழுப்பி மேலே போய் படுக்கச் சொன்னாள். அப்போது அவளைப் பார்த்தவன் நடுங்கி விட்டான். அவன் கைபட்டு உடலெல்லாம் முகமெல்லாம் கீறல்கள். கன்னிப்போன தடங்கள். தன்னைப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது. இரு கரங்களாலும் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். வேகமாக மாடிக்குச் சென்றுவிட்டான். தேவி வருமுன் எழுந்து குளித்துவிட்டாள் ராணி. கேட்டபோது தோட்டத்தில் எதையோ பறிக்கும்போது கீறிவிட்டதாகவும் உருண்டு விழுந்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

குமரன் அருகே வந்தான். “ கவலைப்படாதே . கண்டுபிடிச்சிடலாம். ப்ரிஸ்கா இரு மேன். எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க.  “ என்று சொல்லிச் சென்றான். அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தவாறு விருந்து உண்ணப் போகும்படிச் சொன்னான் ஸாம். அவன் மெம்பராயிருந்த லயன்ஸ் கிளப் அங்கத்தினர்களும் வந்திருந்தார்கள்.

 

பிரமாதமான விருந்து என்று பாராட்டினார்கள் அனைவரும். ஒருவர்பின் ஒருவராகச் சொல்லிக் கொண்டு சென்றார்கள். அவர்களின் கார்கள் வழுக்கிச் சென்ற ஓசை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்தது. ஓரத்தில் இருந்த பவளமல்லிச் செடியில் ஷாமியானாவில் தேங்கியிருந்த மழை நீர் சொட் சொட் எனச் சொட்டிக் கொண்டிருந்தது. ராணியின் வாசனையோடு பிள்ளைகளின் வாசனையை நுகர்ந்தவன் அவர்களைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

 

நீலாக்கா அனைவரின் திருஷ்டியும் கழியட்டும் என பூசணிக்காய் ஒன்றைச் சுற்றி எடுத்துச் சென்று முச்சந்தியில் உடைத்து வந்தார். நினைத்தாற்போல் நந்தனும் நந்தினியும் மா மா என ராணியைத் தேடிக் கைகாண்பித்து கண் கசக்கத் துவங்கினார்கள். தேவி இருவரையும் தூக்கிச் சென்று தூங்க வைக்க முயற்சித்தாள். கணவனும் மனைவியும் கவலையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ராணியிடம் தான் செய்த தப்பை நினைத்து முதன்முறையாக வருத்தப்பட்டான் ஸாம்.

 

குழந்தைகளின் உடைகளை மாற்றி எளிதான காட்டன் சட்டைகளைப் போட்டு விட்டார் நீலாக்கா.. ம்ம் ம்ம் என்று விரல் சூப்பியபடியே ராணியின் புடவைத்துணி ஒன்றைப் பற்றியபடி உறங்கத் துவங்கினார்கள் நந்தினியும் நந்தனும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...