எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 அக்டோபர், 2023

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்

 காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்


 


தொடுவதென்ன மலர்களோ தென்றலோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, அனுபவம் புதுமை, மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ..என்ற பாடல்களை அறுபதுகளின் இளைஞர்கள் மறக்க முடியாது. களை சொட்டு முகம், வசீகரப் புன்னகை, துள்ளும் இளமை, துடிப்பான நடனம் இவையே ரவிச்சந்திரன் புகழ்பெறக் காரணம். நெற்றியில் சுருண்டு விழும் முடி, கவரும் காந்தப் பார்வை, கட்டுக்கோப்பான உருவம், சொஃபிஸ்டிகேட்டட் லுக் கொண்டவர்.

 

தன் கல்லூரிப் பருவத்தில் காலேஜைக் கட் அடித்துவிட்டு காதலிக்க நேரமில்லை படத்தைப் பத்து முறை பார்த்ததாகச் சொல்லி என்னை வியக்கவைத்தார் என் பக்கத்து வீட்டுப் புஜ்ஜியம்மா. அவருக்கு ரவிச்சந்திரன் மேல் எவ்வளவு க்ரேஸ் என்றால் தன்னுடைய டிவிடியில் காதலிக்க நேரமில்லை கேஸட்டை வாங்கி வந்து போட்டு என்னைப் பார்க்கவைக்கும் அளவு அவ்வளவு பைத்தியம். அந்தக்காலக் கட்டத்தில் எம் ஜி ஆர் சிவாஜி அளவு அதிக ரசிகைகளைப் பெற்றிருந்தார் ரவிச்சந்திரன்.

 

சினிமாத்துறையில் எப்போதும் உச்ச நட்சத்திரம் இருவருடன் திடீரென உள்ளே புகுந்து தனது இளமையாலும் நடிப்பாலும் பொதுஜனத்தின் பார்வையையும் ஆதரவையும் பெறும் மூன்றாவது நடிகர்களும் உண்டு. எம்ஜியார் சிவாஹிக்கு நடுவே வந்த அந்த வரிசையில் ரவிச்சந்திரன் முக்கியமானவர். தனது முதல் படத்திலேயே இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான ரவிச்சந்திரன் ஜெய்சங்கருடன் இன்னொரு ஆளுமையாகக் கருதப்பட்டார்..டைரக்டர் ஸ்ரீதரின் அறிமுக நடிகர்களிலும் இவர் முக்கியமானவர். இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகங்கள் சோடை போனதில்லை.

 

காதலிக்க நேரமில்லை என்று பாடலில் முத்துராமன், காஞ்சனா, ராஜஸ்ரீ என்று இளமைக் கூட்டணி. இவ்வாறு பாடிய அவர் விமலாவுடனான திருமணத்துக்குப் பின் லாவண்யா,பாலாஜி, ஹம்சவர்த்தன் என்ற குழந்தைகள் இருந்தபோதும் நடிகை ஷீலாவைக் காதலித்து மணந்தார். அவர்களுக்கு ஜார்ஜ் விஷ்ணு என்றொரு மகன் உண்டு. அவரும் நடிகரானார். இவரது மகன் ஹம்சவர்த்தனும் மகள் வயிற்றுப் பேத்தி தான்யாவும் நடிகர்களே. ஆயினும் இவர் அடைந்த வீச்சை எவரும் பெறவில்லை.

 

1942 ஆம் வருடம் மார்ச் 30 ஆம் தேதி மலேஷியாவின் கோலாலம்பூரில் பிறந்தார் ரவிச்சந்திரன் என்று திரைப்பெயரால் குறிக்கப்படும் பி.எஸ். ராமன். இவரது தந்தை பைரோஜி சீனிவாசன், தமிழ் நேசன் என்ற பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்தார். 1951 இல் சகோதரி மற்றும் சகோதரரின் திருமணத்துக்காகத் திருச்சி வந்த அவர் அதன் பின் அங்கேயே வளர்ந்து செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார். டைரக்டர் ஸ்ரீதரின் மோதிரக்கையால் குட்டுப்பட்ட இவர் 1964 முதல் 1979 வரை தமிழ்ப்படங்களில் கதாநாயகனாகக் கோலோச்சினார். அதன் பின் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சில படங்களையும் இயக்கி இருக்கிறார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.

 

கலைஞர் திலகம், புரட்சிக் கலைஞர், நாடக சிகாமணி, கலை உலக இளவரசர், கலை நிலவு, காதல் நாயகன், வெள்ளிவிழா கதை நாயகன், வண்ணப்பட நாயகன், எவர்கிரீன் ஹீரோ, சின்ன எம்ஜியார், ரொமான்ஸ் ஹீரோ எனப் பல பட்டங்களை அவரது ரசிகர்கள், பத்ரிக்கையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சூட்டி மகிழ்ந்துள்ளனர். ஸ்டைல் கிங், ஸ்டண்ட்மேன், பாக்தாத் பேரழகன், கலைச்செல்வன், புதுமைத்திலகம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் 5 மொழிகளில் நடித்துள்ளார். 7 படங்களை இயக்கி உள்ளார். சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.


 

காதலிக்க நேரமில்லை, இதய கமலம், மோட்டார் சுந்தரம்பிள்ளை, குமரிப் பெண். எங்க பாப்பா, நாம் மூவர், கௌரிகல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, மகராசி, அதே கண்கள், வாலிப விருந்து, மாடி வீட்டு மாப்பிள்ளை, அன்று கண்ட முகம், மூன்றெழுத்து, நான், சிங்கப்பூர் சீமான், நாலும் தெரிந்தவன், உத்தரவின்றி உள்ளே வா, பாக்தாத் பேரழகி, அவளுக்கு நிகர் அவளே, அக்கரை பச்சை, தாய் வீட்டு சீதனம், அவளுக்கு ஆயிரம் கண்கள், ஜானகி சபதம், நீயா, அம்மன் கோவில் கிழக்காலே, புகுந்த வீடு, ஊமை விழிகள், சட்டம் ஒரு விளையாட்டு, குருசிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, சேவகன், என் ராஜாங்கம், கர்ணன், அருணாசலம், பம்மல் கே சம்பந்தம், ரமணா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய மந்திரன் இவர் நடித்த நூறாவது படமுமாகும். கடைசியாக நடித்த படம் ஆடுபுலி ஆட்டம்.

 

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பாடலின் ஆரம்பத்தில் கே ஆர் விஜயாம்மா கிணற்றடியில் குளிக்கும் இவரைப் பிடித்துத் தள்ள இவரோ அதே பிரமையில் தொடுவதென்ன மலர்களோ தென்றலோ என்று கனவில் டூயட் பாடி முடிக்க முடிவில் இவர் அதே கிணற்றடியில் துண்டைப் பிடித்தபடி அப்பாவிப் பார்வையுடனும்  கேள்விப் பார்வையுடன் விஜயாம்மா வீட்டிற்கு உள்ளேயும் எனச் சிரிக்க வைத்த காட்சி. ஜெயாம்மாவுடன் ஒரே காருக்குள் ”போதுமோ இந்த இடம்” என்று ஒரு ரொமான்ஸ் பாடல். ராஜஸ்ரீயுடன் அனுபவம் புதுமை என்ற மயக்கப் பாடல், ”உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா என்று குறும்புப்பாடல், காஞ்சனாவுடன் ”மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேச” என்று கிறக்கப்பாடல், ”ஓஹோ எத்தனை அழகு” என்று துள்ளல் பாடல் என்று இவர் படப் பாடல்களை லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம். ஜாலியும் கேலியும் கிண்டலும் ரசனையுமான பாடல்கள். 


தனக்கு மிகப் பிடித்த நடிகை என்று இவர் கே ஆர் விஜயாவைக் குறிப்பிட்டு இருந்தாலும் காஞ்சனாவுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரியை காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ என்ற பாடலில் கண்டு களிக்கலாம். தரையில் கொடிபோல் படர்ந்திருக்கும் காஞ்சனாவை நுனிவிரல் பிடித்துத் தன்மேல் படரவிடுவதுபோல் எழுப்புவது ரசனையான காட்சி. மனம் லேசாகும்போது உடல் இலகுவாகும்தானே. 


முதல் படத்திலேயே கனவு நாயகன் இமேஜுக்கு உயர்ந்த இதே ஹீரோ ஊமை விழிகள் மூலம் வில்லனாகவும் மிரட்டியுள்ளார். அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் ராதாவின் தந்தையாக, வில்லனாக நடித்தார். அருணாச்சலம், குரு சிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார்.  ஹீரோவாய் இருந்தபோது தன் பார்வையால் மயக்கியவர் வில்லனாய் ஆனதும் தன் குரலால் மிரட்டி இருப்பார். புன்னகை புரிந்த அதே இதழ்கள் லேசாகக் கோணலாகக் கர கர ஒலியுடன் அசைவது அச்சமூட்டும்.

 

மினிமம் கேரண்டி வசூல் நாயகன். ஜெயாம்மாவுடன் நடித்த “நான்”, அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா, இதய கமலம், கௌரி கல்யாணம், வாலிப விருந்து போன்ற இவர் படங்கள் 150 நாட்களையும் தாண்டி ஒடின. 2011 ஜூலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக இறந்தார். மிக உயரத்துக்குப் போகாவிட்டாலும் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திப் பல்வேறு படங்களிலும் சிறப்பாக நடித்துள்ள ரவிச்சந்திரன் நாம் நினைவு கூறத்தக்க சிறந்த நடிகர் என்பது தெளிவு.



டிஸ்கி:- மனத்திரையில் மின்னல் என்ற என்னுடைய கட்டுரையைப் பாராட்டி இருக்கும் குருவிக்கொண்டான்பட்டி திரு எம் எஸ் பி கருப்பையா அவர்களுக்கு நன்றி

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...