எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

தாயுமானவர்களும், தந்தையுமானவர்களும் – ஆதலினால் காதல் செய்வீர்.

தாயுமானவர்களும், தந்தையுமானவர்களும் – ஆதலினால் காதல் செய்வீர்.


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்” என்பது திரைப்பாடல்.  ”காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் “ என்கிறார் முண்டாசுக் கவிஞரும். ” கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடிகட்குக் காதல் என்பது மேடையில் காண்பதற்கு இனிப்பு இயல்வாழ்வில் கசப்புத்தான். “

இல்லறவாழ்வின் அறநெறி விழுமியங்களைக் கடைப்பிடித்தல். அதுதான் சிறப்பென்று புறத்திணையில் சுட்டப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே பெண்களின் கல்வி வீரம் புகழ், புலமை ஆகியவற்றோடு இல்லறவாழ்விற்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்ளுதல் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது.

அநேகக் காதல்கள் வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே ஏற்படுகின்றன. காதல் இந்த வயதில்தான் வரும். இன்னாருடன்தான் வரும் என்பதெல்லாம் வரையறுக்க முடியாது. டீச்சரைப் பார்த்துப் பால்ய பருவத்தில் காதலிக்காதவர்களே இல்லை எனலாம். காதல் என்பது இயற்கைச் சுழற்சி, பருவத்தின் கிளர்ச்சி, உயிர்களின் உயிர்ப்பு, ஹார்மோன்களின் ஆர்ப்பரிப்பு.

இலக்கியமும், சினிமாவும், ஆன்மீகமும் வரலாறும் காட்டும் காதல்கள் அநேகம். ஷாஜகான் மும்தாஜ், நெப்போலியன் ஜோஸ்பின், கிளியோபாட்ரா மார்க் ஆண்டனி ரோமியோ ஜூலியட், அனார்கலி சலீம், புரூரவஸ் ஊர்வசி, சகுந்தலை துஷ்யந்தன். இவற்றில் அநேகக் காதல்கள் உண்மையானவை, மனமொத்தவை, ஆனால் நிறைவேறாதவை. அவற்றின் நிறைவேறாத் தன்மையின் சோகச் சுவைக்காகவே சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

காதலிப்பவர்கள் உலகத்தையே காதலிக்கிறார்கள். வெறுத்தால் உலகத்தையே வெறுக்கிறார்கள். காதலைத் தொப்புள்கொடி உறவாகக் கொண்டாடும் அகத்திணைப் பாடல்களும் உண்டு.

பாலை நிலத்தில் தாகத்தோடு அலையும் ஆண்மானும் பெண்மானும் எதிர்ப்படும் ஒரு சிறு சுனையில் நீரருந்தச் செல்கின்றன. அப்போது  ஆண் மான் குடிக்கட்டும் எனப் பெண் மானும் பெண் மான் அருந்தட்டும் என ஆண்மானும் நீரருந்தாமல் அருந்துவதுபோல் பாவனை செய்கின்றன எனப் படித்திருக்கிறேன். இவற்றின் பாசம் நிறைந்த காதலின் முன் எதுதான் நிற்க முடியும்.

வேதாத்திரி மகரிஷி வாழ்க்கையிலேயே அவர் குறிப்பிட்டு இருப்பார். அவர்தம் பெற்றோர் சிறுவயதில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு சிறுவனான தனக்கு மட்டும் உணவு அளித்துவிட்டுத் தாங்கள் பட்டினியாகக் கிடந்ததாக. இந்தப் பாசத்தின் முன் எதுதான் நிற்க முடியும்? இந்தப் பாசமும் காதல்தானே.

தலைவர்களின் பெற்றோர் மேல்கூடப் பாசம் வைக்கும் தொண்டர்கள் தம் நகரைக் கூட அவர்களின் பெற்றோர் பெயரால் அன்னை சத்யா நகர் என்றெல்லாம் வைத்துக் கொள்வது காணக்கூடியது.

உயிரின் அடிப்படை நாதமே அன்புதான். அன்பு வலுவானது. நேர்மறை எண்ணங்களைத் தரக் கூடியது. காதல் என்பது ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் , டோபோமைன், செரடோனின், நோர்பன்பைன் போன்ற சுரப்பிகளின் விளையாட்டுத்தான் எனினும் நெறி பிறழ்ந்த அன்பு துன்பம் தரக்கூடியது, ஒருதலைக் காதல், கைக்கிளை, பெருந்திணை போல.


உணவின் மேல் அன்பு, உணர்வின் மேல் அன்பு, உறவின்மேல் அன்பு, விலங்குகளின் மேல் அன்பு, சுயபால் அன்பு, மதத்தின் மீது அன்பு, ஆன்மீகத்தின் பால் அன்பு, தொழிலின் மேல் கொண்ட அன்பு என்பதெல்லாம் உண்டு.

இறைவன்மேல் காதல் கொண்ட பாடல்கள் ஆழ்வார்களின் பாடல்கள். ஆண்டாள், மீரா ஆகியோரின் தெய்வீகக் காதல் பிரசித்தி பெற்றது. பரமாத்மாவுடன் சேரத் துடிக்கும் ஜீவாத்மாவின் உயிர்த்துடிப்பை இவர்களின் பாடல்களில் காணலாம்.

பாரதியாரின் மூன்று காதல்கள் என்றால் நீங்கள் கண்ணன், கண்ணம்மா, செல்லம்மா ஆகியோர் மேல் கொண்ட காதல் என நினைக்கலாம்.ஆனால் அவரின் ஒருமித்த ஆன்மீகக் காதல் சரஸ்வதி லெக்ஷ்மி காளி பற்றியது என்றால் வியப்பாயிருக்கும்.

கிரேக்கத் தத்துவவாதிகள் காதலை நான்கு வகையாகப் பிரித்தனர். குடும்ப உறவுகளின் மேல் காதல், நட்பின் மேல் காதல், பரஸ்பரம் ஆண் பெண் இணையர் காதல் கொள்ளுதல், தெய்வீக அன்பு என்னும் காதல். இதில் அவர்கள் குடும்ப உறவுகளின் மேல் வரும் காதலுக்கே முதலிடம் கொடுத்துள்ளனர்.

நம்மூரில் மன்மதன் மாதிரி க்ரேக்கக் காதல் மன்னன் கியூபிட் அவன் கையில் வில்லும் அம்புமாக எப்போதும் பறந்து கொண்டிருப்பான். அவன் சைக் என்னும் அழகியைப் பார்த்துக் காதல் வயப்படுவதும் அதன்பின் பிரிவதும் பல்வேறு இடையூறுகளைக் கடந்து அவளை அடைவதும் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அங்கேயும் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கியூபிட் காதல் ஆசைக்கு மட்டுமில்ல அன்பிற்கான கடவுளும் கூட. ’கியூபிட்’ என்பவன் அன்பு மற்றும் ஆசையின் வடிவமாக, அவன் காதலிக்கும் ’சைக்’ என்பவள் ஆன்மாவின் வடிவமாக,.அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை ”ப்ளஷர்’ என்பவள் இன்பத்தின் வடிவமாகப் பார்க்கப்படுகிறாள். இம்மூன்றும் சேர்ந்ததே உண்மைக் காதல்.

காமம் ஈர்ப்பு என்பதையும் தாண்டி ஏற்படும் பிணைப்பே ஜெயிக்கிறது. பாரதியாரின் கவிதைகளில் “

காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்தல் வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். ஏன் கண்ணம்மா என் குழந்தை என்றே கூடப் பாடல் எழுதி இருக்கிறார்.

பாசத்துக்காகக் காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இனக்கவர்ச்சி, காதல் என்பதை எல்லாம் மீறித் தம் பெற்றோர் மேல் கொண்ட பாசத்திற்காகவும் காதலாலும் அவர்கள் பாதுகாப்பில் கவனம் கொண்டும் வீட்டின்மேல் அன்பு செலுத்தும் இளையர்களும் பெருகி வருவது நல்ல மாற்றம்.

நான் சென்ற சில மாதங்களாகப் பேட்டி கண்ட சிலர் தன் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றத் தான் கொண்ட கொள்கைகளை விட்டுவிட்டு அவர்களின் பெற்றோர் முன்னர் நடத்தி வந்த பதிப்புத் தொழில்களிலும் புத்தக வெளியீடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு ஆன்ம திருப்தி அளிக்கிறது.  

பெண்குழந்தைகளைத் தந்தைக்குத் தாயுமானவர்களாகவும் ஆண்குழந்தைகளைத் தாய்க்குத் தந்தையுமானவர்களாகவும் காலம் மாற்றி இருக்கிறது. இதுவே காதலுக்கு நேசத்துக்கு மரியாதை. எனவே நாம் நம் குடும்பத்தினரையும் குழந்தைகளையும் பெற்றோரையும் இடையறாது காதல் செய்வோம்.

3 கருத்துகள்:

 1. கருத்துகள் நன்று. நல்ல கட்டுரை சகோதரி

  வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 2. ரசித்தேன். கடைசி பாரா அருமை. ஆமாம் இப்போது குழந்தைகள் தாயுமானவர்களாக காலம் மாறியிருக்கிறதுதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நன்றி துளசி சகோ

  நன்றி கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...