எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 ஜனவரி, 2022

சொல்பேச்சுக் கேட்காமல் கழுகானவர்கள்.

சொல்பேச்சுக் கேட்காமல் கழுகானவர்கள்.

ஒருவருக்கு சுயபுத்தி இல்லாவிட்டால் சொல்பேச்சாவது கேட்க வேண்டும். ஆனால் இங்கோ இருவர் தான் கொண்ட கொள்கைதான் சரி என வாதிடுகிறார்கள். எதையும் சமம் என்று கருதும் மனம் இல்லாததால் இருவரும் கழுகானார்கள். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சம்பு புத்தன், மா புத்தன் என்று இருவர் இருந்தார்கள். பதினெட்டுக் கணங்களில் இருவர். சம்பு புத்தனுக்கும் மா புத்தனுக்கும் எதன் பொருட்டாவது விவாதம் வந்து கொண்டே இருக்கும். ஒருவர் சொல்வதை மற்றவர் மறுத்துக் கொண்டே இருப்பார்கள்.
இதில் சம்பு புத்தன் சிவ பக்தன், மா புத்தன் சக்தி பக்தன். ஒரு நாள் வழக்கம்போல் பேசிக் கொண்டிருக்கும்போது சம்பு புத்தன்,” சிவம் பெரிது “ என்றான். மா புத்தனோ உடனே “ சக்திதான் பெரிது “ என்றான். இப்படிப் பேசிப் பேசி இருவருக்குள்ளும் வாக்குவாதம் கை கலப்பு வரைபோனது.

”நான் சொல்கிறேன் , சிவம்தான் பெரிது “ என்றான் சம்பு புத்தன் . ”இல்லை நான் சொல்கிறேன் சக்திதான் பெரிது “ என்றான் மா புத்தன். இருவர் கொள்கையையும் இருவரும் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. உடனே வேதங்கள் பூஜித்த வேதசலமாகிய திருக்கழுக்குன்றம் சென்று இறைவனிடம் முறையிடலாம் எனச் சென்றார்கள்.

வேதாசலம் சென்று இறைவனின் சந்நிதிக்குள் சென்று பணிந்து வணங்கினார்கள். சிவனாரோ இருவரும் வந்த காரணத்தை அறிந்திருந்தாலும் வினவினார் “ சம்பு புத்தா, மா புத்தா இருவரும் இங்கு வந்த காரணம் என்ன ? “
உடனே இருவரும் ஒருவரை ஒருவர் சொல்லவிடாமல் தங்கள் வாக்குவாதத்தை அங்கேயும் ஆரம்பித்தனர். சிவன் இருவரையும் அமைதிப்படுத்தி ஒவ்வொருவராகச் சொல்லச் சொன்னார். “சம்பு புத்தா முதலில் நீ சொல் “
”சிவனாரே நான் சிவம்தான் பெரிது என்று சொன்னேன், இவனோ அதை மறுக்கிறான் “ என்றான் சம்பு புத்தன். உடனே மா புத்தனிடம்,”உன் பக்கத்தை நீ சொல்” என்றார். அவன் சிறிது தயங்கியவாறு “ ஐயனே  சக்திதான் பெரிது என்று நான் சொன்னேன் “ என்றான். இதைத் தொடர்ந்து இருவரும் அங்கேயும் வீராவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே சிவன் இருவரையும் ஆற்றுப் படுத்தினார் , “ சிவ புத்தா, மா புத்தா இருவரும் நான் சொல்வதைக் கேளுங்கள். ஒரு காகிதத்துக்கு இரு பக்கம் உள்ளது. ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் உள்ளது. ஏன் ஒரு பூவையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்தப் பூவுக்கு உருவமும் மணமும் உள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது. இரண்டும் இணைந்திருந்தால்தான் சிறப்பு. அதுபோலத்தான் சக்தி, சிவம் இரண்டும் சேர்ந்திருந்தால்தான் சிறப்பு. “ என்றார்.

சிவனார் கூறியதும் அதை ஒப்புக்கொள்ளும் பாங்கில் இருவரும் மறுத்துப் பேச முடியாமல் “சரி ஐயனே “ என்று கூறிவிட்டு வெளியே வந்தார்கள். கோவில் பிரகாரம் கூடத் தாண்டி இருக்க மாட்டார்கள். திரும்பவும் இருவரும் சிவம்தான் பெரிது, சக்திதான் பெரிது என்று சண்டையிட ஆரம்பித்தார்கள்.
“பார் நாம் நம் வழக்கை சிவனாரிடம்தானே கொண்டு வந்தோம், அவர்தானே தீர்ப்புச் சொன்னார். அதைக் கேட்டுத்தானே நாம் சரி என்று சொல்லி வந்தோம். அதனால் சிவம்தான் பெரிது என்று உணர் “ என்றான் சம்பு புத்தன். உடனே “அந்த சிவனாரே சொல்லிவிட்டாரே சக்தி இல்லையேல் சிவமில்லை என்று , அதனால் சக்திதான் பெரிது “ என்று மா புத்தன் மறுத்துரைத்தான்.

இருவரும் விடாக் கண்டன் கொடாக்கண்டனாக சண்டையிட்டுக் கொண்டே கொடிமரம் நோக்கி வந்தார்கள். சிவனாருக்கோ இந்தச் சச்சரவுகள் கண்டு கோபம் வந்தது.  அவர்கள் எதிரே தோன்றினார். இறைவன் திரும்பத் தோன்றியது கண்டு இருவருக்கும் வெலவெலத்தது. மௌனம் காத்தார்கள்.
“ என்ன விஷயம், ஏன் இன்னும் சத்தம். “ என்று கேட்டார் சிவன். ’சக்திதான் பெரிது, இல்லையில்லை சிவம்தான் பெரிது’ என்று திரும்பவும் இருவரும் கிளிப்பிள்ளைகள் போலச் சொன்னதையே சொன்னார்கள் அவரிடமும்.
“இருவரும் சமம் என்று நான் சொன்னேனே, அது உங்கள் காதில் ஏறவில்லையா.. தான் சொன்னதுதான் சரி என்ற பிடிவாதம் மட்டும்தான் இருக்கிறது உங்களிடம். ஒன்று சுய புத்தி இருக்கவேண்டும். அல்லது சொல்புத்தியாவது கேட்கவேண்டும். நான் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லையே.. எல்லாம் சமம் என்று எண்ணும் புத்தி இல்லாத நீங்கள் இருவரும் கழுகுகளாகப் போவீர்கள் “ என்று கோபத்துடன் சாபமிட்டார்.
சிவனார் சாபம் உடனே பலித்துவிட்டது. அந்தோ. கணங்களான இருவரும் உடனே கழுகளானார்கள். பேசமுடியாததால் அந்தத் திருக்கழுக்குன்றக் கோயிலையே சுற்றி வருகிறார்கள். நீங்கள் என்றைக்குச் சென்றாலும் சம்பு புத்தனும் மா புத்தனும் உணவு நேரத்தில் அந்தத் திருக்கழுக்குன்றக் கோயிலைச் சுற்றிவருவதைக் காண்பீர்கள்.
சுயபுத்தியுடன் செயலாற்றவேண்டும் அல்லது பெரியோர்களின் சொல்பேச்சாவது கேட்க வேண்டும் என்பதை இந்தக் கழுகுகளின் கதை நமக்கு உணர்த்துகிறதுதானே குழந்தைகளே.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...