எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 செப்டம்பர், 2020

சாட்டர்டே போஸ்ட். தென்றல் சாயின் வாசல் பள்ளி.

 காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியின் ஆசிரியையான தென்றல் சாய் இந்தக் கொரோனா தினத்திலும் தன் மாணவர்களை எப்படிச் சந்தித்தார் எனச் சொல்கிறார் . அண்ணஞ்சார் பள்ளி என நூறாண்டுகளுக்கும் மேலாய் காரைக்குடியில் நடத்தப்பட்டு வரும் ( இவரது தாத்தா ஆரம்பித்துத் தந்தையும் நடத்தி வந்த பள்ளி ) கார்த்திகேயன் பள்ளியில் சுவேதா, லெக்ஷ்மி, தென்றல் ஆகிய மூன்று சகோதரிகளும் ஆசிரியப் பணி புரிகிறார்கள். இந்தப் பள்ளியின் தூண்களே இவர்கள்தான் என்றால் மிகையில்லை. 

எழுத்துப் பணியிலும் சக்கைப்போடு போட்டு வரும் இம்மூவரும் சென்ற ஆண்டு ஒரே தினத்தில் நந்தவனம் பதிப்பகம் மூலம் நூல் வெளியிட்டு உள்ளார்கள். இவர்களில் ஸ்வேதா முதல்வராக இப்பள்ளியைக் கட்டிக் காக்கிறார். லெக்ஷ்மி அப்துல் கலாமின் கனவுப் பள்ளிக்கூடத்தை இப்பள்ளியிலேயே நிகழ்த்துகிறார். தென்றலோ ஒருபடி மேலே போய் இந்தக் கொரோனா காலத்திலும் மாணவர்களை அவர்கள் இல்லங்களிலேயே சென்று சந்தித்துப் பாடம் நடத்தி வருகிறார். 

வாட்ஸப்பில் தேவதைக்கூட்டம் என்று ஆரம்பித்த அவர் லாக்டவுன் பின்னும் தொடரவே வாசல் பள்ளி என்று தன் மாணவர்களைச் சந்தித்து அவர்கள் அறிவுக்கண்ணைத் திறந்துள்ளார். எட்டு பத்து மாதங்கள் இவர்கள் வீட்டிலேயே இருந்து விட்டால் கற்றுக்கொள்வதில் இடர்  அவர்களுக்கு மட்டுமல்ல. ஆசிரியர்களுக்கும் அவர்களைப் புரிந்து கொள்ள வைப்பதில் தடை ஏற்பட்டு விடும். எனவே அந்த இடைவெளியைப் போக்க அவர் என்னென்ன செய்தார் எனப் பார்ப்போம் வாங்க. 

//வாசல் பள்ளி

***************

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளில் பட்டாம்பூச்சிகளாய்க் குழந்தைகள் பள்ளியில் கூடியதும் தான் எங்களுக்குப் புதிய கல்வியாண்டும் மகிழ்ச்சியும் பிறக்கும்.
இந்த ஆண்டு கோவிட்19 நோய்த்தொற்று பரவல் காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்
மனம் தவிப்பிற்கு உள்ளானது.

குழந்தைகளைச் சந்திக்க இயலாத கவலை ஒருபுறம் இருக்க, அவர்களின் படிப்பு என்னாவது? என்ற புதிய கலக்கம் ஏற்பட்டது.

அதனால் 2020, ஜூன் 3 ஆந் தேதி முதல் "ஆறாம் வகுப்புப் பறவைகள்" என்னும் வாட்ஸப் குழு‌வைத் தொடங்கி,  சென்ற கல்வியாண்டில் என்னிடம் ஐந்தாம் வகுப்புப் படித்து முடித்த குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். வாய்ஸ் மெசேஜ், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாகக் கற்பித்தல் நிகழ்ந்தது.

பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து, அன்றன்று நடத்தும் பக்கத்தினை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, குழுவில் பகிர்ந்து வந்தேன்.

இந்நிலையில், தமிழ் நாடு அரசு விலையில்லாப் பாடநூல்களை வழங்கியவுடன் வழங்கியவுடன், 
இணைய வழியில் கற்பிக்க இருக்கிறோம் என்று கூறியதும்
மாணவர்களை விடப் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆகஸ்டு 10 முதல் ஜூம் செயலியில் இந்தக் கல்வியாண்டில் என்னிடம் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். 

மற்ற பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் பிள்ளைகளைப் பார்த்து இவர்கள் ஏங்கிப் போயிருப்பது தெரிந்தது. தங்களுக்கும் வீடியோவில் 
வகுப்பு என்றதும் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
அழகாக வீட்டுப் பாடம் கூட எழுதி அனுப்புகின்றனர்.

ஆனாலும்,
" மிஸ், உங்க குரல் விட்டு விட்டுக் கேக்குது", 

"நீங்க வீடியோல தெரியலை", 

"புவனேஷ் மட்டும் பதில் சொல்றான்.
எங்களப் பேச விட மாட்டேங்கிறான்",

"மிஸ், நா பதில் சொல்லிட்டுதான் இருக்கேன்.
உங்களுக்கு தான் கேக்கல"

இப்படி ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் இணைய வகுப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால்
இணைய வசதி இல்லாத குழந்தைகளின் கற்றல் என்னாவது? என்று சிந்திக்கத் தொடங்கியதும் இரண்டே நாட்களில் விடை கிடைத்தது.
அவர்கள் தான் பள்ளிக்கு வர இயலாது.
நான் அவர்களின் இடத்திற்குச் செல்லலாமே என்று தோன்றியது.
உடனே செயலில் இறங்கி விட்டேன்.

குழந்தைகளின் வீட்டு வாசலில் மாலை நேரத்திலும்,
அவர்களின் வீட்டிற்கு அருகில் அல்லது எதிரில் இருக்கும் கடையின் வாசலில் - கடை பூட்டப்பட்டிருக்கும் மதிய நேரத்திலும் நான் அங்கேயே சென்று பாடம் நடத்துவது என்று முடிவு செய்தேன். அப்படியே நாங்கள் படிக்கிறோம்.

நகரில் இருக்கும் பள்ளி என்பதால்
தினமும் ஒரு ஏரியா என்று ஆறு நாள்களுக்கும் முறையே காளவாய்ப்பொட்டல், சந்தைப்பேட்டை, பனந்தோப்பு, இடையர் தெரு, கணேசபுரம் மற்றும் சிவன் கோவில் என அட்டவணை போட்டுத் தினமும்
சென்று வருகிறேன்.

மொழிப் பாடங்களிலும், கணக்கிலும் அடிப்படைத் திறன்களை வளர்க்கவே முக்கியத்துவம் தருகிறேன்.
அவ்வப்போது பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் எனக் கலவையான செயல்பாடுகளுடன் வாசல் பள்ளி நடைபெறுவதால் குழந்தைகள் குதூகலமாக வருகை புரிகின்றனர்.
தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் ஒர் அலகில் சிறிதளவே
கற்பிப்பதால், குழந்தைகள் சுமையின்றிக் கற்கின்றனர்.
பெற்றோர்கள் நிம்மதியாகவும்
குழந்தைகள் மகிழ்ச்சியாகவும்
இருக்கிறார்கள்.
நேரடி வகுப்பறைக்கு மாற்று கிடையாது என்பதை உணரும் தருணமிது என்றே கருதுகிறேன்.

டிஸ்கி:- என்னதான் ஆன்லைன் மூலமும், நேரிலும் சென்று சொல்லிக் கொடுத்தாலும் நேரடி வகுப்பறைக்கு மாற்றுக் கிடையாது என்பதைத் தென்றல் தெளிவு படுத்தி இருக்கிறார். இருந்தாலும் மாற்று ஏற்பாடாக குழந்தைகளின் இல்லத்திற்கே சென்று கல்வி போதிக்கும் உங்கள் கடமை உணர்வு போற்றத் தக்கது தென்றல். உங்களைப் போன்ற ஆசிரியர்களால்தான் கல்வி வாழ்கிறது. வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும். வாழ்க வளமுடன். :) 

4 கருத்துகள்:

 1. கார்த்திகேயன் பள்ளியை குறித்தும், தென்றல் அவர்களின் பணி குறித்தும் முழுமையான சிறப்பு மிக்க பதிவு.

  பதிலளிநீக்கு
 2. அவர்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 3. மிகவும் சிறப்பான பதிவு.
  அண்ணஞ்சார் தாத்தா, அப்பா, சகோதரிகள் என அனைவரையும் குறிப்பிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
  பேரன்பும் நன்றியும் அக்கா.

  பதிலளிநீக்கு
 4. நன்றி துரை அறிவழகன் சார்

  நன்றி பாலா சார்

  நன்றி தென்றல்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...