வெள்ளி, 30 ஜூன், 2017

மைசூரின் சிங்கம் ஹைதர் அலியும், மைசூரின் புலி திப்பு சுல்தானும்.

மைசூரின் சிங்கம் ஹைதர் அலியும், மைசூரின் புலி திப்பு சுல்தானும்.

ஆங்கிலேயர்களால் வெல்ல முடியாத அரசர்கள் பட்டியலில் ஹைதர் அலிக்குச் சிறப்பிடம் உண்டு. ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் ஆங்கிலேயர்களுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள், முதல் ஏவுகணையை உருவாக்கி வெற்றி கண்டவர்கள் மைசூரின் சிங்கம் ஹைதர் அலியும் அவரது மகன் புலியைப் போலத் தீரம் கொண்ட திப்பு சுல்தானும் ஆவார்கள்.

டிசம்பர் 12, 1720 இல் பிறந்து டிசம்பர் ,1782 வரை வாழ்ந்தவர் ஹைதர் அலி. சூஃபி குடும்பத்தைச் சேர்ந்த இவர் சாதாரண குதிரைப்படை வீரராக இருந்து மன்னரானவர். இவரது தந்தை பஞ்சாபைச் சேர்ந்த பத்தே முகம்மது.  குல்பர்காவிற்குக் குடிபெயர்ந்தபின் பீஜப்பூர் சுல்தானுக்காக ஔரங்கசீப்பை எதிர்த்துப் போர் செய்தவர். அதன் பின் ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகச் சேர்ந்தார். எனவே வீரம் ஹைதர் அலியின் ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.


ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பின் ஆங்கிலேயர்களும் ப்ரெஞ்சுக்காரர்களும் தங்கள் பங்குக்கு நாட்டைத் துண்டாடிக் கொண்டிருந்தார்கள். வங்கக் கடலோரம் வியாபாரத்தை முன்னிறுத்தி தந்திர அரசியல் நடத்திக் கொண்டிருந்தார்கள். மைசூரின் கிருஷ்ணராஜ உடையாரிடம் சாதாரணப் படைவீரராகச் சேர்ந்தார் ஹைதர் அலி. தேவனஹல்லிப் போரில் இவர் காட்டிய வீரமும் தீரமும் மைசூர் மன்னரைக் கவரத் தளபதி ஆனார். 

ஆங்கிலேயர்களுக்கும் ப்ரெஞ்சுக்காரர்களுக்கும் நடைபெற்ற கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரர்களை மைசூர் அரசு ஆதரிக்க அவர்களுக்காகப் போராடினார் ஹைதர் அலி. அப்போது ஆங்கிலேயர்களின் போர் நுட்பங்களையும் ஆயுதங்களின் நுட்பங்களையும் பிரயோகங்களையும் பற்றித் தெரிந்துகொண்டார். அதே சமயம் திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை அமைச்சர் நஞ்சராஜர் அளிக்க அங்கே இராணுவ ஆய்வுக்கூடம் அமைத்து பீரங்கிப் படையை உருவாக்கினார்.

1759 இல் மராட்டியப்படை மைசூரைத் தாக்கியது. இளஞ்சிங்கமாய் இவர் உக்கிரத்துடன் எதிர்த்துப் போரிட்டார். அதனால் மைசூர் மன்னர் மகிழ்ந்து இவருக்கு “பதே ஹைதர் பஹாதூர் “ என்ற பட்டத்தை வழங்கினார். மன்னர் அமைச்சர்களின் பிடியில் இருக்க மக்களின் தேவையை நிறைவேற்றிய ஹைதர் அலி மக்களின் மனம் கவர்ந்தவரானார். 

இவர் புகழ் பெருகுவது கண்ட ஆங்கிலேய அரசு மராட்டியர்களுடனும் ஹைதராபாத் நிஜாமுடனும் சேர்ந்து கூட்டணி அமைத்து இவரை எதிர்த்தது. இவர்களை மடக்க பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டணி வைத்த ஹைதர் அலி யுத்தத்தின் எல்லா யுக்திகளையும் இந்திய வீரர்களுக்கும் பயிற்றுவித்தார். அலியின் பிரதாபம் கண்ட அமைச்சர்கள் அரசருடன் சேர்ந்து அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட அவர்களை ஒடுக்கி 1762 இல் மைசூர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். 


மன்னரானதும் இராணுவத்தைச் சீரமைத்து ஐரோப்பியருக்கும் இடமளித்துப் படைபலத்தைப் பெருக்கினார். முதன் முதலில் மாதச் சம்பளத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஒன்றேமுக்கால் லட்சம் ராணுவவீரருக்கும் முறையாகச் சம்பளம் வழங்கினார். போர் முறையில் முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்கும் முன்னதாக ஏவுகணைகள் பயன்படுத்திப் போரிட்டவர் என்ற பெருமையையும் பெற்றவர் ஹைதர் அலி. உலோகக் குழாய்களில் மூங்கில்கள் கொண்டு மருந்தைக் கிட்டித்து ஏவுகணைகள் உருவாக்கி எய்து ஆங்கிலேயப்படைகளுக்கு அச்சமூட்டினார்.

1767 முதல் 1769 வரை நடந்த முதலாம் மைசூர் போரில் ஆங்கிலேயர், மராத்தியர், ஹைதராபாத் நிஜாம் ஆகியோரை வென்று வெற்றிவாகை சூடினார். எனவே அவர்கள் 23. 2. 1768 இல் ஹைதர் அலியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தாங்கள் பிடித்த பகுதிகளை ஒப்புவித்தனர். இது ”முதல் காலனி ஆதிக்க எதிர்ப்புப் போர் ”எனப் புகழப்படுகின்றது. 

1780 முதல் 1784 வரை நடைபெற்ற உக்கிரமான இரண்டாம் மைசூர் போரில் .இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போரில் இவரது மகன் திப்பு சுல்தான் இவருக்கு உறுதுணையாயிருந்தார். போரின் போது ஹைதர் அலி ”ஆங்கிலேயர்களைப் பன்முகத் தாக்குதல் மூலம் வெல்லவேண்டும்” என ஆற்றிய வீர உரை புகழ் பெற்ற ஒன்று. ஆனால் போரின் நடுவில் முதுகுத் தண்டுவடப் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். மைசூரின் சிங்கம் ஹைதர் அலியின் உடல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அவர் மகன் திப்பு சுல்தானால் அடக்கம் செய்யப்பட்டது. 

ஹைதர் அலியின் மறைவுக்குப் பின் அவர் மகன் ( பிறந்தது நவம்பர் 20, 1750 ஆம் ஆண்டு ) திப்பு சுல்தான் 1782 முதல் 1799 வரை மைசூரை அரசாட்சி செய்தார். ஆங்கிலேயர்களை வெல்ல மாவீரன் நெப்போலியனின் உதவியை நாடியவர். ஆனால் இரண்டாம் மைசூர்ப் போரின் வெற்றிக்குத் தந்தைக்கு உதவியவர், மூன்றாம் மற்றும் நான்காம் மைசூர் போர்களில் பிரிட்டிஷ் படைகளின் கூட்டு சதிகளினால் தோற்கடிக்கப்பட்டார். 

”கிழக்கிந்தியக் கம்பெனிகளின் குலை நடுக்கம்” என ஆங்கிலேயர்களும் பிரிட்டிஷ் பத்ரிக்கைகளும் இவரைக் கண்டு அஞ்சினர். ”ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல இரண்டே நாட்கள் வாழ்ந்து இறக்கலாம்” என முழங்கியவர் திப்பு சுல்தான்.

தந்தையைப் போல நாட்டின் வேளாண்மையிலும் அக்கறை காட்டியவர். கலப்பின விதைகள், உயர் ரகப் பயிற்கள் என்று உருவாக்கி விவசாயத்தில் புதுமை செய்தவர். அன்றே பொது விநியாகத் திட்டம் மூலம் அத்யாவசியப் பொருள் வழங்கி பொதுமக்கள் நலம் காத்தவர். மத நல்லிணக்கம் பேணியவர். 

இவர் தானே முயன்று கண்டுபிடித்த ராக்கெட்டின் தொழில் நுட்பம்தான் மிஸைல் எனப்படும் ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடி. இவர் போரில் பயன்படுத்திய இராணுவ ஏவுகணைகள் லண்டனில் உள்ள ஊல்ரிச் என்னும் நகரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவைதான் உலகின் முதல் இராணுவ ஏவுகணைகள். இவற்றைக் கொண்டு ஆராய்ந்துதான் ஆங்கிலேயர்களே ஏவுகணைத் தொழில் நுட்பத்தை மேம்படுத்திப் போரில் உபயோகித்து வெற்றி கண்டனர். 

நான்காம் மைசூர்ப் போரில் ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி உதவாமல் சூழ்ச்சியின் மூலம் இவரது இருமகன்களையும் பணத்திற்காகப் பணயமாகப் பிடித்து வைத்துக் கொண்டது ஆங்கில அரசு. மகன்களைப் பிரிந்து யுத்தத்தில் தோற்ற திப்புசுல்தான் மே 4, 1799 இல் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் போரில் இறந்தார். 

இவர் போரில் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் ஆறுமில்லியன் பவுண்டுக்கு 2015 ஆம் ஆண்டு லண்டனில் ஏலம் போனது. மைசூரின் சிங்கமும் மைசூரின் புலியும் அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டாலும், வேட்டையாடப்பட்டாலும் அவர்களின் வீரத்தாலும் தீரத்தாலும் நம் உள்ளங்களில் என்றென்றும் நிறைந்திருப்பார்கள். 

மாண்ட்ரீலைச் சேர்ந்த பகவான் எஸ் கித்வானி எழுதிய நாவல் ”திப்புசுல்தானின் வாள்.” ( THE SWORD OF TIPU SULTAN ) இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 44 எடிஷன் மற்றும் இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன நூல். 1990 இல் சஞ்சய்கான் நடிக்க தேசியத் தொலைக்காட்சியிலும் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.

5 கருத்துகள் :

அரபுத்தமிழன் சொன்னது…

அவசியமான பதிவு. மிக அருமை, மிக்க நன்றிகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடி உட்பட அனைத்து தகவலும் அருமை...

நன்றி சகோதரி...

syedabthayar721 சொன்னது…

அருமையான பதிவு வரலாறு அறிய தந்தமைக்கு நன்றி சகோதரி .

G.M Balasubramaniam சொன்னது…

ஒரு நல்ல வரலாற்றுத் தொகுப்பு பாராட்டுகள்

Thenammai Lakshmanan சொன்னது…

NANDRI ARABU THAMIZHAN

NANDRI DD SAGO

NANDRI SYED SAGO

NANDRI BALA SIR


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...