எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சித்திரை.( மலைகள் இதழ் )

குறும்பாட்டைக் கவ்விப்
போடுகிறது புலிவேஷம்.
மயானக் கொள்ளையில்
சப்பரத்தில் அங்காளம்மனும்
பேச்சியம்மனும் பாவாடை ராயனும்.
வியர்வையும் வெண்ணையும் வழிய
திருமாலோடு திரும்புகிறது பல்லாக்கு.
சூர்யப் பிரபையும் சந்திரப் பிரபையும்
வாணவேடிக்கையாய்ப் பொரிகின்றன.
கொடுக்காப் புளியும் குமுட்டிப் பழமும்
குவிந்து கிடக்கிறது சந்தையில்.
யானைக்கால் மண்டபத்தில்
பட்டைசாத விநியோகம்..
கட்டிக் கிடக்கின்றன வாகனங்கள்
வேளை வரும்போது
சாமியுடன்  சபையேற..
பதநீரும் இளநீரும் ஆவியாகிறது
தண்ணீர்ப்பந்தலின் நீர்மோருடன்.
வேண்டுதலுக்காக வாள் வீசிச்
சிந்துகிறார்கள்  ரத்தத்தை.
சாமி வேஷமிட்டுச் சுற்றி வருகிறார்கள்
பலூன்பிடித்து குச்சி ஐஸ் தின்னும்
குட்டிச் சாமிகள்.
விஷக்கடியிலிருந்து தப்ப
நட்டுவாக்கிளி, தேள்,
பாம்பு  பொம்மைகளைக்
கோயிலுக்குக் காணிக்கையாக்குகிறாள் பாட்டி.
செதுக்கிய கை, கால் கண் உருப்படிகளால்
நிரம்பிக் கிடக்கிறது உண்டியல்.
கல்கூட்டிப் பொங்கலிட்டுக்
குலவையோடு புகையடிக்கிறார்கள் பெண்கள்.
வாளெடுத்து வீசி வாழை வெட்டுகிறாள்
கரஹ மஹா ராணி.
போருக்குப் போகாமல் வருடா வருடம்
அழிந்தும் பெருகியும் கொண்டிருக்கின்றன
தயார் நிலையில் மண்புரவிகள்.
மதுக்குடம் , முளைப்பாரி, பாளைகள்
சுற்றிச் சுழன்றாடுகின்றன
அம்மனுக்கு ஆராட்டாய்.
பூத்தட்டுக்கள் வண்டி வண்டியாய்
பால் குடங்கள் மதகுகளாய்..
சதிராடும் தேரில் சுற்றுலா வருகிறாள்
என்றைக்கும் மூப்பில்லாத முத்துமாரி.
அக்கினி நட்சத்திர வெய்யில் தாளாமல்
ஆற்றில் இறங்குகிறார் அழகர்.
சித்திரையுடன் ஊர் ஞாபகத்தையும் கொண்டாட
விடுப்பெடுத்து ஊர் செல்கிறார்கள்
நினைவுகளைப் புதுப்பிக்கும் நகரமக்கள்.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 7. 2014, மலைகள் இதழில் வெளியானது. 


7 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. கவிதையை மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    // இந்தக் கவிதை ஏப்ரல் 7. 2014, மலைகள் இதழில் வெளியானது. //

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம் ஊரெண்ணங்கள் பல நினைவில் நிழலாடியன! இப்போது போவது கூட முடியாமல் ஆகிவிடுகின்றது....ஒன்ஸ் அப்பான் எ டைம் என்று சொல்லும்படி ஆகிவிட்டது!

    அருமையான வரிகள்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி கோபால் சார் :)

    ஆம் சித்திரை என்றாலே கோடை விடுமுறை பாட்டி வீடு திருவிழாக்கள் கிராமம் எல்லாம் ஞாபகம் வருமே டிடி சகோ :)

    ஆம் துளசி சகோ எல்லாம் ஒன்ஸ் அப்பான் எ டைம்தான். :) நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா திருவிழாவை கண் முன் கொண்டு வந்த கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...