எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களையும் தன்னுடைய துறையில் ஈடுபட்டு ஜெயித்து வானளாவிய அதிகாரத்தோடு திகழும் பெண்களையும் சாதனைப் பெண்கள் எனவும் சக்தி வாய்ந்த பெண்கள் எனவும் சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளைப் பார்த்து இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மட்டுமல்ல சமூகமே அச்சமுறுகிறது என்றே சொல்லலாம். இந்திரா காந்தி,மார்கரெட் தாட்சர் போன்ற சில பெண் தலைவர்களையே நாம் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக அறிந்திருக்கிறோம். இன்னும் பலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஃபோர்ப்ஸ் பத்ரிக்கையில் பெப்சிகோ இந்திரா நூயி, எஸ் பி ஓ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா , ஐசிஐசிஐ சந்தா கோச்சார்  (இவருக்கு ஃபார்ச்சூன் பத்ரிக்கையும் நம்பர் ஒன் பட்டம் அளித்திருக்கிறது. ), சிஸ்கோ சிஸ்டம்ஸ் பத்ம ஸ்ரீவாரியார், பயோகான் கிரண் மஜூம்தார்,, ஆகியோர் மட்டுமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா, கேப் ஜெமினி இந்தியாவின் அருணா ஜெயந்தி, பணக்காரப் பெண்மணிகள் சாவித்ரி ஜிண்டால், இந்து ஜெயின், அனு அகா, ,மீடியா பெண்மணி ஷோபனா பார்த்தியா ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ) , ஜே. கே. லெக்ஷ்மி சிமிண்ட் வினிதா சிங்கானியா, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி திவ்யா சூரி சிங், கிண்டால் புஷ்பா பானர்ஜி இன்னும் பல ப்ரபலங்களும் இருக்காங்க  அந்த லிஸ்ட்ல நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் இருக்காங்க.

என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்ற தைர்யலெக்ஷ்மி ரம்யாதேவி இளவயதில் ஏற்பட்ட தீக்காயங்களுக்காக 45 முறை ப்ளாஸ்டிக் சர்ஜரியை எதிர்கொண்டது மட்டுமல்ல இன்று மென்பொறியியல் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். பழனி கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய மோகனா சோமசுந்தரம் சுயம்புவாய் உருவான பெண். தன்னுடைய கான்சர் நோயை எதிர்த்து மக்களுக்காகத் தொண்டு செய்வதோடு மட்டுமல்ல . கிட்டத்தட்ட 18 சங்கங்களின் தலைவியா இன்றும் சுறுசுறுப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சாஸ்த்ரி பவனில் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை அங்கே பணியாற்றும் தலித் பெண்களுக்காகவும் தனிச்சங்கம் அமைத்துக் ( இப்போது அம்பேத்கார் சிலையையும் நிறுவி இருக்காங்க.) குரல் கொடுத்து வருகிறார்.

எங்கெங்கு மனநிலை சரியில்லாத மனிதர்களையும் ஆதரவற்ற சிறுவர், இளையவர்கள், முதியவர்களைக் கண்டாலும் அவர்களை ஆதரவு இல்லங்களுக்கு பல்வேறு இடர்ப்பாடுகளுடன் கொண்டு சேர்க்கிறார்கள் தென்னக ரயில்வேயில் பணியாற்றும் சாருமதி, தமிழரசி ஆகியோர். அவர்களுக்கு உதவிக் கரம் கொடுப்பவர் சமூக சேவகர் வெங்கடேசன்.

மாங்க்ரோவ் காடுகளைக் காக்கப் போராடி வரும் ஆஸ்வின் ஸ்டான்லி, பல்வேறு நோய்க்கூறுகளாலும் பலமுறை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தும் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வந்து சிறப்புற நடத்தி நல்லாசிரியர் விருது பெற்ற லூர்துராணி, இருளர் இனமக்களுக்காகப் போராடி வரும் வசந்தி, சி ஐ டி யூ வின் மாநிலக் குழு உறுப்பினரும் பெண் ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவியுமான சாந்தி, சிறு வயதிலேயே இதயநோயால் பாதிக்கப்பட்டு. தன்னிடமிருந்தே தன்னை மீட்ட உமா ஹெப்சிபா, பெண்கள் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் திருஷ்காமினி, மீண்டும் ஒளிர்ந்த குழந்தை நட்சத்திரம் லெக்ஷ்மி என் ராவ், 47 வயதுவரை சதை இறுக்க நோயால் அவதியுற்று அந்த ஆராய்ச்சிக்காகத் தன்னுடலையே ஈந்து சென்ற அனுராதா, சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் டைரக்டர் ஜே எஸ் நந்தினி, இளம் பாடலாசிரியர் பத்மாவதி, சாதாரணத் தொழிலாளியாக இருந்து மிகப் பெரும் முதலாளியான மகேஸ்வரி, வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்து தனது 70 வயதிலும் பங்குச் சந்தையில் ஈடுபட்டு வரும் முத்து சபாரெத்தினம் என்று எவ்வளவு பெண்களை நாம் கண்டு வருகிறோம்.

இன்னும் சம்பூர்ணா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும்- செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்ட அர்ச்சனா அச்சுதன், பிறக்கும்போது கைகள் இல்லாமல் பிறந்து காலால் அழகான ஓவியங்கள் வரைந்து தள்ளும் சாதனை ஸ்வப்னா என்று எத்தனை எத்தனை போராட்டக்காரர்களும் சாதனையாளர்களும் நம் முன்னே.


57 வயதாகும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அருந்ததி பட்டாச்சார்யாதான் ஃபார்ச்சூன் பத்ரிக்கை வெளியிட்ட 500 பேர் கொண்ட கம்பெனி உயர் அதிகாரிகள் லிஸ்டில் ஒரே பெண் (வங்கி) சேர்மன். 200 வருடப் பாரம்பர்யமிக்க வங்கியின் முதல் பெண் சேர்மனான அவர் பெரும் பொறுப்புடன் தான் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட 7 துணை வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கும் பெரும் பொறுப்பு அவர் வசம் இருக்கிறது.  அதல்ல நாம் இங்கே சொல்ல வந்தது. அவர் அங்கே பணிபுரியும் பெண்களுக்கு வழங்கி இருக்கும் சலுகை பற்றி. கடுமையான உழைப்பும் நேர்மையான அணுகுமுறையும் மட்டுமல்ல அவர் அங்கே பணிபுரியும் பெண்கள் கர்ப்பமானால் பேறுகால விடுமுறையாக ஆறு ஆண்டுகள் வரை விடுப்பு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதுதான் ஹைலைட். ஆகவேதான் மிகப்பிடித்தமானவராகிறார்.
..
67 வயதில் உலக பொருளாதாரத்தைச் சீர்திருத்தப் போகிறவர் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் பெண் சேர்மன் ஜேனட் லூயிஸ் யேலன். நோபல் பரிசு பெற்ற கணவர் ஜார்ஜ் ஏகர்லோஃபுடன் சேர்ந்து 30 வருடங்கள் நிதி, பொருளாதாரம் பற்றி ஆய்ந்திருக்கிறார்கள்.  இவர் முனைவர் பட்டம் பெற்று ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இவரின் முடிவெடுக்கும் திறமை மீது ஒபாமா இவரை இப்பதவியில் நியமித்திருக்கிறார்.


வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்து 82 வயதில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் டியர் லைஃப் என்ற புத்தகத்துக்காக ஆலிஸ் மன்றோ. என்ற எழுத்தாளர். இவர் ஆண்டன் செக்காவின் மகள். ஜெர்மனியின் முதல் சான்ஸலர் ஏஞ்சல் மெர்கல், ஹிலாரி க்ளிண்டன், ப்ரேசில் பிரதமர் ( புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் சிறப்பாக நாட்டை வழிநடத்தும் ) டில்மா ரூஸ்ஸெப், ஃபேஸ்புக்கின் சீஃப் ஆபரேடிங் ஆஃபீசர் ஸ்ரேயல் சாண்ட்பெர்க், மைக்ரோ சாஃப்ட் மெலிண்டா பில்கேட்ஸ், எனப் பலரும் தங்களுக்கெனத் தனிப்பாதை வகுத்து வெற்றி நடை போடுகிறார்கள்.

சர்ச்சைக்குள்ளானாலும் இந்தியப் பெண் அரசியல்வாதிகளின் பங்கும் வளர்ச்சியும் கவனிக்கப்படத் தக்கது. டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், ஜம்மு காஷ்மீரின் மெஹ்மூபா முப்டி, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராஜஸ்தானின் முதல்வர் ( பி ஜே பி யின்)  வசுந்தரா ராஜே சிந்தியா, கம்யூனிஸ்ட் கட்சியின் ப்ருந்தா காரத், பாரதீய ஜனசக்தியின் உமா பாரதி, உ பி யின் முதல்வர் மாயாவதி,, திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, ஆகியோரின் வெற்றியும் போராட்டங்கள் நிறைந்ததே.  

சமீபத்திய அதிர்ச்சி என்னவென்றால் சக்தி வாய்ந்தவர் ப்ரதமர் ஆகும் தகுதி கொண்டவர் என்று பெரும்பாலான மக்கள் கூட்டத்தால் நம்பப்பட்ட ஒரு தலைவி தன்னைச் சேர்ந்தவர்களின் ஒரு சில நடவடிக்கைகளால் பதவி இழந்தது எதிர்பாராத விஷயம். நண்பர்கள் சேர்க்கையும் கண்காணிக்கப்படவேண்டிய ஒன்று.

சோதனைகளும் வேதனைகளும் இல்லாமல் சாதனைகள் இல்லை. ப்ரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் துணிவும், போராடும் தெளிவும் கொண்டவர்கள் சாதிக்கவே செய்கிறார்கள்.   

அரசியலில் ஈடுபடும் பெண்கள் இரும்புக்கரம் கொண்டு ப்ரச்சனைகளை அடக்கவும், தங்கள் மேல் மாசுபடாமல் காப்பாற்றிக்கொள்ளவும் வேண்டியதிருக்கிறது.  வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மிகப் பெரும் சவால்கள் எதிர்கொள்ளவும் துணிந்து செயலாற்றவும் வேண்டியதிருக்கிறது.

உழைக்கத் தயங்காத பெண்களுக்கும், தைர்யமாக முடிவெடுத்து செயல்படுத்தத் தெரிந்த பெண்களுக்கும் தோல்வி என்பதே இல்லை. கம்பீரமாக எழுச்சியுடன் நிமிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கைப் பெண்களை உலகமே ( சிறிது அச்சத்தோடு ) வியந்து பார்த்ததுடன் அவர்களுடன் கரம் கோர்த்தும் சென்றிருக்கிறது.

குடும்ப வணிகமானாலும் மாபெரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்பானாலும், மிகப்பெரும் அரசியல் கட்சிகளின் தலைப் பொறுப்பில் இருந்தாலும் ஆண் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் பெண்ணும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. இங்கே வணிகம், அரசியல் சாராமல் பொது நலனுக்காகவும் தனி வாழ்விலும் தனது சமூக மக்களுக்காகவும், தான் சார்ந்த தொழிற்சங்கங்களுக்காகவும் பெண்கள் சுயநல சார்பற்று பால் வேறுபாடு இல்லாமல் பணியாற்ற வேண்டியதாக இருக்கிறது.

எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொண்டு தன்னை மீறி, தன் உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாமல் வெளிவருவதும், அந்த நிலையினூடே பொது நலத் தொண்டு செய்வதுமாக நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் சக்தி மிக்க செயல்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் நாம் யாராக ஆக விரும்புகிறோமோ அவ்வாறே ஆகமுடியும் என்பதற்கு  மேலே கூறப்பட்ட இந்தப் பெண்மணிகள் எல்லாம் உதாரணம். ஆகவே தம்மைச் சிற்பம் போல செதுக்கிக்கொண்ட சாதனைப் பெண்கள் எல்லாருமே சக்தி வாய்ந்த பெண்மணிகள்தான். 

டிஸ்கி :- இந்தக் கட்டுரை 2014, ஐப்பசி மாத மெல்லினத்தில் வெளிவந்தது. 

3 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 2. அசந்து போனேன்... என்னவொரு மன உறுதி...!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. //ஆகவே தம்மைச் சிற்பம் போல செதுக்கிக்கொண்ட சாதனைப் பெண்கள் எல்லாருமே சக்தி வாய்ந்த பெண்மணிகள்தான். //

  :) சக்தி மிக்க வரிகளுக்குப் பாராட்டுகள்.

  //இந்தக் கட்டுரை 2014, ஐப்பசி மாத மெல்லினத்தில் வெளிவந்தது. //

  மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...