எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 நவம்பர், 2014

ஒற்றைச்சூரியனாய்...

1.ஒற்றைச்சூரியனாய்
நீ பிறந்தாய்.
சந்தோஷ மழையில்
வீடே வானவில்லானது. 

2. முத்துக்களைப் போல
உருள்கிறது உன் புன்னகை
பார்வையால் கோர்த்து
ரசிக்கிறேன் நான்.

3. என்னைத்தவிர நீ
யாருக்கும் கொடுப்பதில்லை
உன் எச்சிலிட்ட முத்தம்.

4. சாமானைப் பரப்பி
ஜலதரங்கம் செய்வாய்
கூசும் காதுகளோடு ரசிப்பேன் நான்.

5. கடவுள் நம்பிக்கை
இல்லாதிருந்தேன்
மகளெனும் தேவதையைப்
பார்க்கும்வரை.



6. பத்துவிரல் புள்ளியில்
பூத்தெழுந்த
கோலம் நீ.

8. லட்டு பிடிக்கும்போது
உன் கன்னமும்
திராக்ஷை பதிக்கும்போது
உன் கண்களும்
நினைவில் இனிக்கிறது
எனக்கு.

9. உன் பூப்பாதம் பட்டு
நடையழகில் சொக்கிச்
சிவந்து கிடக்கிறது மண்.

10. உன் சுவாசம் நெஞ்சுரச
மேல் கிடக்கிறாய்.
உன் வாசமா
அது என் சுவாசமா.

11. நான் அவள் மகளாகவும்
அவள் என் தாயாகவும்
கடவுளிடம் பிறவிதோறும்
விண்ணப்பம் இடுகிறோம்.

12. கண்ணழகா
கன்னக்குழியழகா
கண்கசக்கிப் பார்க்கிறது.
லேசான தூறலோடு
நீ குடைபிடித்திருக்கும்
கருமேகம்.

13. சிரிக்கிறாய் செல்லமே.
உன் புன்னகை
பூக்களாய் உதிர்ந்து
பட்டாம்பூச்சிகளாய்
பறக்கிறது என்னைச் சுற்றி.

14. நான் சிரித்தால் சிரித்து
நான் அழுதால் அழுது
என் முகம் பார்க்கும்
கண்ணாடி நீ.

15. வாய் முளைத்த
வண்ணத்துப் பூச்சியாய்
வார்த்தை நிறங்களை
அப்பிச் செல்கிறது
பேசக்கற்ற குழந்தை.

16. நீ பஞ்சு மிட்டாயோ
பஞ்சு பொம்மையோ
சுமக்கச் சுமக்க
அலுக்காமல் ருசிக்கிறது.

17. கீ கொடுத்தால்
கத்தித் தீர்க்கும்
பொம்மைகள் நடுவில்
கீ கொடுத்தபடி
கத்தும் நீ.

18.முளைவிட்ட அரிசிப்பல்லால்
விரல்பிடித்துக் கடிக்கிறாய்.
வலியுடன் ரசிக்கிறேன்.

19. பேரன்புக்காரிகளிடம்
செல்ல பொம்மைகளாகிறார்கள்
அம்மாக்களும் அப்பாக்களும்
தாத்தாக்களும் பாட்டிகளும்.

20. குறும்புக்காய்
அடி வாங்குவாய்
அடிக்கும்போதே
வலிக்கும் எனக்கும்.

21. நீ ஓட்டி ஓட்டி
ஆகாய விமானம் தினம்
தரை விமானமாகிறது.

22. புடவையை இழுத்துநீ
முகம் நோக்கும் குறும்புக்காய்
பொய்யாக அழுகிறேன்.

23. கட்டியணைத்துக் கண்பொத்தும்
உன் கை பிடித்து ஒரு செல்லக்கடி
அட.. ! உப்புச் சுவையில்
ஒரு சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

24. பாட்டியின் கண்ணாடி
தாத்தாவின் பல்செட்
அப்பாவின் செல்ஃபோன்
உன் விளையாட்டுப் பொருளாகிறது.
வெளியூர் செல்லும்போது.

25. மெல்ல வருடுகிறேன்.
காற்று தொட்ட
காற்றிசைச் சிணுங்கியாய்க்
கலகலத்துக் கொண்டிருக்கிறாய்.

26. தூங்கும் உன்
வயிற்றின் மேல்
உயிர்பெற்று அசைகிறது
கால்பரத்திக்கிடக்கும்
கரடி பொம்மை.

27. விளையாட்டாய்
நீ உடைத்த பொருளெல்லாம்
நினைவுச் சின்னமாகிறது எனக்கு.

28. அலுவலகம் செல்ல ஏலாமல்
கட்டிக்கிடக்கிறார் தந்தை.
குட்டி மகளின் அன்புக்கட்டில்.

29. அம்மாக்களும் பிள்ளைகளும்
பொம்மைகளும் தனி உலகில்
அகராதி அற்ற மொழியில்
கதைத்தபடி.

30. திடீரென அழுகிறாய்
பொம்மைகாட்டியும்
அடங்காத அழுகை
அம்மா காட்டியதும்
அடங்குகிறது.

31. ப்ரபஞ்சத்தின் பெருவெளியில்
உன் சிரிப்பே தினமும்
சந்தோஷ  உணவாக

நீடூழி வாழ்க  கண்மணி. !!!


6 கருத்துகள்:

  1. நீடுழிவாழ நானும் வாழ்த்துகிறேன் கண்மணி

    பதிலளிநீக்கு
  2. பேரன்புக்காரிகளிடம்
    செல்ல பொம்மைகளாகிறார்கள்
    அம்மாக்களும் அப்பாக்களும்
    தாத்தாக்களும் பாட்டிகளும்.//

    அருமை! அருமை.

    பேரன்புக்காரி, நீடூழி வாழ்க கண்மணி. !!!



    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆத்மா

    நன்றி கோமதி மேம்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தாமோதர் சந்துரு அண்ணா

    நன்றி கலா. :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...