எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

வயதான பெண்களின் உடல் நலம்.

என் அம்மாவழிப் பாட்டி ( ஆயா) க்கு 87 வயதாகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் கூட குந்தாணியில் உலக்கையால் இடித்து நெல் குத்துவார், மாவு இடிப்பார். என்னால் கூட அப்படி எந்த உடல் உழைப்பும் செய்ய இயலாது. ஏனெனில் நான் யந்திரங்களுக்கு அடிமை ஆகிவிட்டேன். தண்ணீர் இறைத்தல், மாவு ஆட்டுதல், அம்மியில் அரைத்தல் , துணி துவைத்தல் போன்ற எல்லாச் செயல்களும் எனக்காக எந்திரங்கள் செய்கின்றன. இன்னொரு காலத்தில் எனக்காக மூச்சு விடுதலைக் கூட எந்திரங்கள் நீட்டித்துக் கொடுக்கலாம்.


தற்போதைய மருத்துவ முறைகளினால் நம் அனைவரின் வாழ்வும் பாதுகாப்பானதாய் இருக்கிறது. அனைவரின் வாழ்நாளும் அதிகரித்திருக்கிறது.வியாதிகளும் அதிகரித்திருக்கின்றன முன்னெப்போதை விடவும். முதியோர்கள் என எடுத்துக் கொண்டால் அரசு மருத்துவமனைகளிலும் மற்ற பெரிய ஆஸ்பத்ரிகளிலும் ஜீரியாட்ரிக் கேர் ( GERIIATRIC CARE )என்ற யூனிட்டே இருக்கிறது. முதியோர் மருத்துவம் என்று. முதுமைப் பருவத்தில் ஏற்படும் உடல் நலிவுகளுக்கு அளவில்லை. செல்கள் மேலும் வளர்வதில்லை. இருக்கும் செல்களுக்குள்ளும் வலி வேதனை, நோய் நாடி என பலதும் பாதிக்கும் பருவம்.

நம் அனைவரின் வீடுகளிலும் அம்மா, பாட்டி என முதுமைப் பருவத்தை எட்டும் பெண்கள் இருக்கிறார்கள். பொதுவாக பெண்கள் குழந்தைப் பருவம். பதின் பருவத்தில் புஷ்பவதியாதல், குழந்தைப் பேறு. மாதாந்திரத் தொந்தரவுகள் என இருந்தாலும் கிட்டத்தட்ட 45 க்கு மேல் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸை ஒட்டி பல்வேறு உடல் கூறு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

இப்ப இருக்கிற எல்லாருக்குமே இரத்த அழுத்தம், சக்கரை வியாதி, கொழுப்புச் சத்து, தைராய்டு என பலதும் இருக்கிறது. நம்முடைய உணவு மற்றும் வாழ்வியல் முறையில் உள்ள அழுத்தம் அனைவருக்கும் இந்த நோய்களை பரம்பரையாகவோ, ஸ்ட்ரெஸ், ஸ்ரெயின் காரணமாகவோ கடத்தி வருகிறது. இது போக பேரிளம் பெண்களுக்கு என்று உள்ள உடல் நலிவு ப்ரீ மெனோபாஸ் மற்றும் போஸ்ட் மெனோபாஸ். இந்த சமயங்களின் பெண்களுக்கு டென்ஷன், அதிக வியர்வை சுரத்தல், கோப உணர்வு அதிகமாயிருத்தல் என பல இன்னல்கள் அடைவார்கள். IRREGULAR PERIODS எனப்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மலர்ந்த பூ மூடிக் கொள்வது போல இந்த நிகழ்வு நடைபெறும், இரத்தப் போக்கு அதிகரித்தால் சில பெண்களுக்கு கர்ப்பையையும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இந்தக் காலகட்டங்களில் பொதுவாகவே வருடத்துக்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்து கொள்வது நல்லது. நமக்கு எந்த வயது வரை மாதவிடாய் ஏற்படும் என்றும் இன்னும் கர்ப்பப் பை மற்றும் கர்ப்ப வாய் தொடர்பான மற்றும் மார்பகம் தொடர்பான புற்று நோய்களுக்கும் சோதனைகள் செய்துக்கலாம். பொதுவா சுத்தமின்மை காரணமா கர்ப்பப்பை மற்றும் கர்ப்ப வாயில் புற்று ஏற்படுது, மற்றும் மார்பகக் கட்டிகள், நாளமில்லா சுரப்பிகள் மூலமா ம்யூட்டேஷன் ( MUTATION) என்று சொல்லப்படக்கூடிய காரணமற்ற புற்று நோய்களும் ஏற்படுகின்றன. இதை அடையார் இன்ஸ்டிடியூட் சாந்தாமாவும். பழனிஆண்டவர் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற மோகனா சோமசுந்தரம் அம்மாவும் பகிர்ந்துகொண்டார்கள். மேலும் 45 வயதுகுட்பட்ட பெண்கள் புற்று தாக்காமலிருக்கப் போட்டுக் கொள்ளத் தடுப்பூசியும் வந்துள்ளது.

60 வயது தாண்டிய பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின் எலும்புகள் பலவீனமடைகின்றன. சிலர் கொஞ்சம் குள்ளமானது போலவும் ஆவார்கள். எலும்புத் தேய்மானம் ஆரம்பிப்பது இப்போதுதான். ஆஸ்டியோ போராசிஸ். மற்றும் ஆர்த்தரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோயிலிர்ந்து தப்பிக்க கால்சியம் அதிகம் உள்ள உணவை சேர்ப்பது நல்லது. பால், பால் பொருட்கள், முளைகட்டிய பயறு வகைகள், கீரைகள், முட்டை இவற்றை எடுத்துக்கணும். நம் உடம்புக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளுதோ அதை உண்ண வேண்டும். பொதுவா கொழுப்புச் சத்து நிறைந்த இனிப்பு வகைகள், எண்ணெயில் பொறித்த அசைவ உணவுகள், சிப்ஸ், பேக்கரி ஐட்டங்கள், குளிர்பானங்களை தவிர்ப்பது நலம். கால்சியம் அதிகம் உள்ள ஹார்லிக்ஸ் போன்ற உணவுகள் நல்லது.

கோதுமை உணவுகள் சிறப்பு என்றாலும் நம் தமிழ் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு அது குடலில் உபாதைகளை உண்டு செய்கிறது. எனவே அரிசி உணவுகள், காய்கறிகள், ஓட்ஸ், முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம். நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகள் , போரிட்ஜுகள், கஞ்சி, பிஸ்கட்டுகள், ரஸ்குகள் , பிரெட் எடுத்துக்கலாம். பெரியவர்கள் இருக்கும் வீடுகளிலும் இந்த வகை உணவுகளை வாங்கி வைக்கணும். ஏனெனில் ஒரே வேளையில் அதிகம் உண்ண முடியாது அவர்களால். சிறிது சிறிதாக அவ்வப்போது பசிக்கும்போது எடுத்துக் கொள்வார்கள். பழச்சாறுகள், சூப் வகைகள் மற்றும் அசல் பழத்தில் செய்யப்பட்ட மில்க் ஷேக்குகள் கொடுக்கலாம்.அது அவர்கள் இழந்த எனர்ஜியை ஈடுகட்டும். உணவில் பழவகைகள் , குறிப்பாக தினமும் வாழைப்பழம் இருப்பது நல்லது. மலச்சிக்கலால் அவதி உறும் பெண்கள் அநேகம். அதைப் பழ உணவு நீக்குகிறது.

70 க்கு மேல் உள்ளவர்களுக்கு கண் புரை நோய்கள், காது கேட்பதில் மந்தம், பல் விழுதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். நாம் அலுத்துச் சலித்துக் கொள்ளாமல் அவர்கள் கேட்பதை முடிந்த அளவு புன்னகையோடு செய்து கொடுக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது கூட சிலருக்கு முடியாது கண் சம்பந்தமான நோய்களால். கண்ணில் நீர் வடிதல், அரிப்பு, சொத்தைப் பல் , உணவு உண்ணவோ விழுங்கவோ முடியாமல் அவதி இருக்கலாம். எப்போதும் ஏதாவது அவர்கள் தங்கள் உடல் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். முடிந்த வரை டாக்டரிடம் காண்பித்து அவர்களின் உடல் உபாதைகளைக் களைவது மட்டுமல்ல. தினமும் சில மணித்துளிகளாவது அவர்கள் அருகில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருத்தல் நலம். அதுவே அவர்களின் பாதி நோய்களைப் போக்கி விடும். நேரம் கிடைப்பவர்கள் தங்கள் அம்மா அல்லது பாட்டிக்காக புத்தகங்களை வாசித்துக் காண்பிக்கலாம்.அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப் போதாவது குடும்ப உறவுகள் சூழும் விழாக்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லுதல் வேண்டும். எல்லாருடனும் பழங்கதைகள் பேசி தங்கள் வயதொத்தவர்களைப் பார்த்து அவர்கள் உற்சாகமடைவதே உடலுக்கு டானிக் போலத்தான்.

பெரியவர்களின் இன்னொரு மனப்பான்மை எதையும் தங்களை கேட்டுச் செய்ய வேண்டும் என்பது. அதையும் முடிந்தவரை கடைப்பிடித்தல் நலம். நல்ல அம்மாதான் ஒரு நல்ல மருமகளாகவும் இருக்கிறார். இன்னொரு குடும்பத்துப் பெண்ணைத் தன் அன்பாலே நல்ல மருமகளாகவும் ஆக்குகிறார். ஒவ்வொரு செயலையும் பெரியவர்களும் தங்களுக்குப் பிடித்த விதத்திலேயே சின்னவர்கள் கடைப்பிடிக்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற தங்கள் மனோபாவத்தையும் மாற்றிக் கொண்டால் நல்லது.

ஞாபக மறதி ஒரு கொடுமையான நோய். வயதாக வயதாக ஞாபகப் பழுது ஏற்படுகிறது. அதனால் தூக்கத்திலோ அல்லது உடையிலோ சிறுநீர்க்கசிவு ஏற்படலாம். இதைப் பற்றி ராயப்பேட்டை மருத்துவமனையில் பெண்களுக்கான யூராலஜி டாக்டர் ஸ்ரீ கலா ப்ரசாத் சொல்லும் போது வயதான பெண்களுக்கு ஏற்படும் முக்கிய நோயாக இதைக் குறிப்பிட்டார். கர்ப்பப்பை வீக்காக இருப்பதால் நழுவி வெளிவருவதும் சிலருக்கு இருக்கிறது. இதற்கெல்லாம் மருத்துவ முறைகளும். சிறப்பு யோகசனப் பயிற்சிகளும், ரொம்ப அதிகப்படி ஆகி கட்டுப் படுத்த முடியாவிட்டால் அறுவை சிகிச்சை முறைகளும் இருப்பதாக சொன்னார்.

என் அம்மாவுடைய அப்பாவின் அம்மா ( அப்பத்தா) அஷ்டோ கால்சியம் என்ற டானிக்கை தினமும் ஒரு ஸ்பூன் குடிப்பார். மேலும் என் ஆயா ச்யவனப் ப்ரகாச லேகியம் என்ற ஒன்றை ஒரு ஸ்பூன் தினமும் எடுத்துக் கொள்வார். என் அம்மாவின் ஆயா எல்லா வலிகளுக்கும் ஆரெஸ்பதி, டைகர்பாம், கோடாலித் தைலம் தடவிக் கொள்வார். இந்த மருந்துகளின் பலனோ, அவர்களின் நம்பிக்கையின் பலனோ சின்னப் பிள்ளைகளான நாங்கள் ஆஸ்பத்ரிக்கு அலைந்த அளவு அவர்கள் அலைந்ததில்லை. எல்லாம் நன்கு உரமான ( சத்துள்ள )சாப்பாடு மற்றும் ( இரசாயன) உரமற்ற சாப்பாடுதான் காரணம்.

இந்த காலகட்டத்தில் பெரியோர்களும் சின்ன சின்ன நடைப் பயிற்சி ( அதிகம் செய்தால் மூட்டு சவ்வு விலகிப் போகும் அபாயமும் இருக்கிறது) .செய்ய வேண்டும். குதிகால் வலி வராமல் இருக்க இரப்பர் செருப்புகள் அணிவது நலம். குடலுக்கு ஒத்துக் கொள்ளும் மென்மையாக வேகவைக்கப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வதும் அடிக்கடி வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவதும் செரிமானத்தை சீராக்கும். இரத்த அழுத்தம், இனிப்பு நீர், தைராய்டு போன்றவற்றைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும். கொடுக்கப்படும் மருந்துகளை வேளை தவறாமல் உண்ண வேண்டும். பொதுவாக எங்கேயும் நடக்கும்போதும் எச்சரிக்கையாக பார்த்து நடக்க வேண்டும். இளம் பருவத்தில் எலும்பு முறிவேற்பட்டால் சீக்கிரம் இணைந்து விடும்.. வயதான காலத்தில் எலும்புகள் இணைவது ரொம்ப காலம் எடுத்துக் கொள்ளும்.

பாரலிடிக் அட்டாக், மற்றும் இதய நோயும் சிலருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொதுவாக அசைவ உணவுகளை எப்போது உண்டாலும் நன்கு சூடுபடுத்தியபின்னரே உண்ண வேண்டும். இதய நோய் மெனோபாஸ் கடந்த சில பெண்களுக்கும் வருகிறது. எனவே இவை பரம்பரை காரணம் தவிர மற்ற டென்ஷன் போன்ற சூழலியல் காரணங்களால் ஏற்படுத்திக் கொள்ளாமலிருப்பதே அனைவருக்கும் நலம் பயக்கும்.

சின்னப் பிள்ளைகளில் அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி போன்றோர் நமக்காக பெரும் பங்கு உழைத்திருக்கிறார்கள். சின்ன வயதில் நீதி நெறிக் கதைகள், சரித்திர புராணக் கதைகள் சொல்லி ஒழுக்கக் கோட்பாடு உள்ள பிள்ளைகளாக நன்னெறியில் வளர்த்திருக்கிறார்கள். நம் உடல் உபாதைகளின் போதெல்லாம் கண்விழித்து சிஷுருஷை செய்து, கோயில் கோயிலாக வேண்டி நம்மைப் புனர் நிர்மாணம் செய்திருக்கிறார்கள். நாம் சோர்வுறும் போதெல்லாம் தோள் கொடுக்கும் நம்பிக்கைத் தூண்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்காக நாமும் நம்முடைய கவனிப்பையும் நேரத்தையும் வழங்குதல்தான் நியாயம். தன்னைத் தேய்த்து நம்மை இவ்வளவு தூரம் வாழ்வித்த தேவதைகளுக்கும் நாம் நம் அன்பு மற்றும் கவனிப்பு என்னும் நன்றிக் கடனைத் திரும்பச் செலுத்துவோம்.


8 கருத்துகள்:

 1. வயதாக ஆக... மன அழுத்தமும் பயமும் கவ்வுவதை தவிர்க்க....

  மெனோபாஸ் நேரத்தில் டென்ஷன் ஏற்படுவதை தவிர்க்க....

  உணவுமுறை பழக்கத்தை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்றும்...

  45 வயதுக்கு முன்னாடி புற்றுநோய் தாக்காமல் இருக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்பதையும்...

  வருடத்திற்கொருமுறை ஜெனரல் செக்கப் செய்துக்கொள்ளவேண்டும் என்பதையும்...

  வயதானவர்கள் நம் வீட்டில் இருந்தால் அவர்களை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும்...

  அவர்கள் ஆரோக்கியத்தில் நம் கவனம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும்...

  அவர்கள் மனம் புண்படாமல் இருக்கவும் அவர்கள் மனம் சந்தோஷமாக இருக்கவும் அவர்களுடன் உட்கார்ந்து பேசவும் கதைகள் படித்து காண்பிக்கவும் சொல்லும்போதும்....

  சத்தான ஆகாரங்கள் அதே சமயம் நமக்கு ஒவ்வாததை தவிர்க்கவேண்டும் என்பதையும்...

  உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்யவேண்டும் ஆனால் அதிகமாக நடந்தால் மூட்டுச்சவ்வு விலகிடும் தேய்மானம் ஏற்படும் என்பதில் கவனம் இருக்கவேண்டும் என்றும்....

  பொக்கிஷம்பா தேனம்மை இத்தனையும்.....

  அன்பு பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் தேனம்மை.. எல்லோருக்குமே பயனுள்ள பொக்கிஷ வரிகள் இவை....

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு.

  இனிய பாராட்டுகள் தேனே!

  பதிலளிநீக்கு
 3. பொக்கிஷமான கருத்துகள் தேனக்கா. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள பகிர்வு. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
 6. நன்றி மஞ்சுபாஷிணி

  நன்றி துளசி

  நன்றி சாரல்

  நன்றி சரண்சக்தி

  நன்றி ராஜி

  நன்றி கோவை2திலி

  நன்றி மணவாளன்

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...