வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தியானம் என்பது..

ஆத்மலயம்.. எனது பார்வையில்..:-
******************************************

ஆத்மலயம்..தன்னைத்தானே லயத்தோடு, சுருதியோடு ஒப்புரவாய் ஒழுக்கத்தின்பால் ஒழுகுதலே ஆத்மலயம் சித்திக்கும் கருவி. ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பால் களங்கம் ஏற்படுவதில்லை. உடல்தானே கருவியாகி நன்மைதீமை எல்லாம் அனுபவிக்கிறது.. அது மேற்கொண்ட கர்மவினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்து எல்லாம் அனுபவித்துக் கடந்து துறந்து ஆன்மவலு பெற்றுப் பரம்பொருளை அடைகிறது.


இந்த ஆத்மலயத்தை ரோமானியப் பேரரசன் மார்க்கஸ் அரேலியஸின் ஆன்ம சிந்தனைகளுடன் ஒப்பு நோக்கலாம். நன்னடைத்தையுடன் இருப்பது ஞானிகளைப் போல வாழ்வது.. எல்லா விஷயங்களிலும் விருப்பு வெறுப்பற்று பிரபஞ்சத்தோடான விசாலமான அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்வது என்பதுதான் அது.. இந்தக் காலத்தில் தன் மனத்திற்கு எது வசதியாகப் படுகிறதோ அதன்படி உபவாசம்., தீர்த்த யாத்திரை., தனதானம் ஆகியவற்றைச் செய்து அதையே தர்மம் எனப் பிரஸ்தாபிக்கிறார்கள். கலியுக தர்மம் என்பது இதுதான். என கல்கி அவதாரம் என்ற நூலில் ஸ்ரீ பிரகாஷநாராயண மிச்ர சொல்லி இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். போலியான இந்த சடங்கு., சம்பிரதாயங்கள்., வழிபாட்டு முறைகள்., ஆகியவற்றை நன்கு சாடுகிறார்.

பலமணிநேரம் தனியறையில் அமர்ந்து தியானித்தலால் ஒரு பயனும் இல்லை. நான் இதைச் செய்கிறேன்., அதைச் செய்கிறேன்., பலமணிநேரம் பாடல்கள் பாடுகிறேன்., பல நாட்கள் உபவாசம் இருக்கிறேன். வாழ்நாள் முழுமையும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் ஒரு வெளிப்பாடாக மட்டுமே அமையுமே தவிர உண்மையான ஞானம் சித்திக்கும் வழிமுறை அல்ல என்று சொல்கிறார் இந்த நூலாசிரியர் கந்தராஜா.

மனதை வெறுமையாக வைத்திருப்பவனே தியான வழியிலோ ஆன்மீக வழியிலோ தன்னுடைய குறிக்கோளை எட்டமுடியும். உங்கள் சிந்தனை , சொல் செயல் எல்லாம் அதை நோக்கியே இருக்கட்டும். என்கிறார். வலிமையும் தீரமும் உள்ளவர்களால்தான் ஆன்மாவின் தேடல்கள் தெளிவுபடுத்தப்பட்டு ஆன்மீக பலம் அவர்களுக்குள் உருவாக்கப்படுகிறது என்கிறார். உடலை வருத்துவது போன்ற வெறும் பாவனைகளால் பாசாங்கு செய்பவனுக்கு இந்த ஆன்மத்தேடல் உண்டாக்கும் அதிர்வுகளையும் ஆற்றல்களையும் விளைவுகளையும் தாங்கவோ தெளிவாக உணரவோ முடியாது. பக்தனாக இருக்க விரும்புகிறவன் உண்மையிலேயே உற்சாகம் உடையவனாக இருக்கவேண்டும் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது. இது மகான்களுக்கும் அவதார புருஷர்களுக்குமே சாத்தியம். சாதாரண மனிதனுக்கும் இவ்வழிமுறைகளை அவர்கள் செம்மையுடன் ஆக்கிக் கொடுத்துள்ளனர்.

ஆன்மா தான் சிப்பியைப் போல அலைந்து இறை என்னும் மழைத்துளியை உள்வாங்கி அதை ஆத்மஞானம் என்னும் முத்தாய்ப் பிரசவிப்பதுதான் இந்தப் பயணம். உண்மை., நேர்மை., பிரதிபலனை எதிர்பாராமல் பிறருக்கு நன்மைசெய்தல்., மனம் வாக்கு காயம் போன்றவற்றால் பிறருக்குத்துன்பம் செய்யாதிருத்த., பிறர்பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்., வீண் சிந்தனைகளுக்கு இடம் கொடாதிருத்தல்., பிறர் செய்த துன்பங்களை எண்ணிக் கலங்காதிருத்தல்., போன்ற பண்புகள் இதன்மூலம் தோன்றும்.

நம்முள் உறைந்திருக்கும் சக்திகள் நம்மால் அறியப்பட்டஎல்லா எல்லைகளுக்கும் அப்பால் சென்று நம் எண்ணங்களை நிறைவேற்றும் வலு படைத்தவை. தமிழில் எண்ணம் போல வாழ்வு என்ற சொலவடை உண்டு. அதுதான் இது. இதன் வீச்சுதான் இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்தஒருவர் பிரதமர் ஆனதும். நம்மால் முடியும் என நேர்மறை எண்ணங்களைப் பயிலவேண்டும். இந்த நிலையை அடைய யோகம்., தியானம் உதவுகின்றன. ராகம்., துவேஷம்., காமம்., குரோதம்., உலோபம்., மோகம்., மதம்., மாச்சர்யம்., இரட்சியம்., அசூயை., இடம்பம்., ஆங்காரம் ஆகிய மனவிகாரங்களை நீக்கி முதலில் மனத்தின்கண் மாசிலன் ஆதல் வேண்டும்.

இப்படி சுத்திகரிக்கப்பட்ட உடம்பின் ஆன்மவலுவானது அபரிமிதமானது. இது அன்னமய கோசம்., பிராணமய கோசம்., மனோமயகோசம்., விஞ்ஞானமயகோசம். எல்லாம் தாண்டி ஆனந்தமயகோசத்துள் தெளிந்த நிலையுள்., ஐம்புலனும் அடங்கி பரம்பொருளைக் கண்டு அனுபவிக்கும் பேரின்ப நிலையை எய்துகிறது. இன்னும் அகிம்சை., சத்தியம்., களவு., பிரம்மச்சரியம்., ஆபரிக்ரகம்., மனத்தூய்மை., சந்தோஷம்., தபசு., தெய்வீகக்கல்வி., பரமாத்மாவை வாழ்த்துதல் ஆகிய ஒழுக்கங்களைக் கைக்கொள்ளவேண்டும்.

முக்கியமாக புத்தபெருமான் சொன்னதுபோல ஆசையை அறுக்கவேண்டும்.., கோபத்தை களைய வேண்டும். கோபம் பாவம் சண்டாளம் எனப்படுகிறது. இது எவ்வளவுதான் ஆன்ம முன்னேற்றம் அடைந்தாலும் அனைத்தையும் பொசுக்கும் தீ போன்றது. இது சாபம் போல பீடிக்கப்பட்டவன் என்ன தியானம் செய்தும் யோகம் புரிந்தும் பலனில்லை. கோபம் மனிதனின் ரத்தத்தைக் கெடுக்கிறது. அது ஒருவித பைத்தியக்காத்தனத்தின் கழுவாய் என்கிறார். அதே போல பய உணர்வும் களையப்படவேண்டும். என் வீடு., என் மனைவி., என் நாடு., என் மக்கள் என்ற ஒரு விதமான ஒருவரது சுயத்தின் எண்ணம் அடுத்தவரது சுயத்தின் எண்ணங்களோடு முரண்படும்போதுதான் வன்முறை., கலவரங்கள், யுத்தங்கள் வெடிக்கின்றன. எல்லாவற்றிலும் தன்னைக் காண்பவர்க்கு எல்லாம் சமரசமே..எனவே மனித மனங்களின் வன்முறையை முதலில் நீக்க வேண்டும்.

நான்., எனது என்ற கட்டுண்ட மனநிலைகளில் இருந்து விடுபட்டு அனைத்தையும் பிரபஞ்சத்தின் பேரருளாகவே காணவேண்டும். நாம் அனைவருமே மகத்தான தூய ஆன்மாவை உடையவர்கள் என்பதை நம்புவோமாக. இன்பமும் துன்பமும் குளிரும் வெப்பமும் போலக் கலந்துதான் இருக்கும். ஆன்ம விடுதலையை அடையவே மதங்கள் உருவாக்கப்பட்டன. நம்மை மீறிய பேரருளை., சக்தியை., பரம்பொருளை கடவுள்., என்றும்., அல்லா என்றூம்., கர்த்தர் என்றும் நாம் அழைக்கிறோம்.

உண்மையான ஆன்மீகம் வெறும் சடங்குகள்,,பழக்க வழக்கங்கள்., மூடநம்பிக்கைகள் கொண்டதாக இருக்காது. இனம்., மொழி., மதம் என்று எதனோடாவது தன்னைப் பிணைத்துக் கொண்டவர்கள் ஆன்மவிடுதலை அடைய முடியாது. எல்லா உயிர்களும் ஒன்று என்று அன்பு செலுத்தப்படவேண்டும்.

காமத்தீயில் உழன்றுகொண்டே ஊருக்கு உபதேசம் செய்வது ., போலியான கட்டுப்பாடுகள்., கடமைகள் விதித்துக் கொள்வது., இப்படி தன்னை சித்ரவதை செய்துகொள்பவன் ஆன்மீகவாதியாகமுடியாது.தீய குணங்களில் இருந்து விடுவித்துக் கொண்டு அகமும் புறமும் எளிமையைக் கடைப்பிடிப்பது, அனைவரிடமும் அன்பாலும் பண்பாலும் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல்., தான் என்ற தலைக்கனமின்றி இருத்தல் இதுவே உண்மையான ஆன்மீகம். இதைக் கடைப்பிடிப்பவன் எந்த சமயத்தையும் சார்ந்திருக்கமாட்டான். அவன் இப்பிரபஞ்சத்திற்கே உரியவன்.

அறிதலும் கற்றலும்., சுய அறிவுப்பார்வையும் இதை உருவாக்குகின்றன. மனிதனின் உள்ளுணர்வும் எண்ணங்களும் எப்படிப் பயிற்றுவிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அவனை சிறப்பாக உருவாக்குகிறது. அவன் சார்ந்த உலகத்தையும் சிறப்பாக்குகிறது. இதற்கு ஆழ்மனமும் கனவும் கூட துணைசெய்கின்றன. தியானம் இந்தப் பிரபஞ்சமே எல்லைக் கோடுகளற்றதாக அவனுக்கு உருமாற்றம் அளிக்கிறது. இது குறுகிய வட்டமாக இல்லாமல் வாழ்க்கையுடன் தழுவிய ஒரு பிரயாணமாகும். தியானம் என்பது வலிந்து செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. அது இயல்பாய் நிகழவேண்டும். தியானமும் சமாதியும் திருமூலர் சொன்ன எட்டு சித்தியும் கிடைக்கச் செய்யும்.

கோபத்தைப் போல துறக்க வேண்டிய இன்னும் சில பயம் மற்றும் கவலைகள். நாம் வாழும் உலகம் போர் மற்றும் வன்முறைகளால் இவற்றைத் தூண்டும்போது இது எதனாலோ உருவாகவி்ல்லை., நம்மைப்போன்ற மனிதர்களின் பயத்தினாலும் அச்சத்தினாலுமே தூண்டப்படுகிறது என உணரவேண்டும். இன்னார் இது இதைச் சார்ந்தவர்கள் என்று பிறப்பிலிருந்து உருவாக்கப்படும் கற்பிதம் இந்த எண்ணங்களை அதிகப்படுத்துகிறது. இதை நம் கருத்துக்களை மாற்றிக் கொள்வதன் மூலமும் எண்ணங்களை அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வதன் மூலமும் உற்வுகளை சீராக்கலாம்.

எண்ணங்கள்று எல்லா ஆன்மாக்களும் ஒரே ஆன்மலயத்தில் செயல்படும்போது ஆனந்தமய கோசமே அங்கு நிலவும்.

* * * * *

பிற்சேர்க்கையாக வரும் சிலம்பு கூறும் சைவமும்., ஞாயிறும்., திங்களும் ., மாமழையையும் போற்றுவதும்., சங்ககாலச் சைவமக்கள் வணங்கிய குறிஞ்சி., முல்லை., மருதம்., நெய்தல்., பாலை நிலத் தெய்வங்கள் இன்றும் வணங்கப்படுவதும் ஒவ்வொருமதமும் போட்டி பொறாமை இன்றி இருந்ததும் இங்கு குறிப்பிடலாம்.

அட்டை வடிவமைப்பு அனந்த பத்மநாபன் . இதை சிறப்பாக சொல்லவேண்டும் . தியானம் செய்யும் மனிதனின் பின்னால் ஸ்ரீசக்ரம் இருப்பது சிறப்பு. ஆதன் பின் அரசமர இலை வரையப்பட்டிருக்கிறது. இது புத்தபெருமானுக்கு கிடைத்த போதிமரத்தை நினைவூட்டுகிறது.

யுத்த சூழ்நிலைகளைத்தாண்டி புலம்பெயர்ந்த தமிழரான கங்கைமகன் கந்தராஜா அவர்கள் ஆத்மலயத்தில் ஆன்மநிலைகள் பற்றி எளிமையான முறையில் விளக்கி தொகுத்தளித்திருப்பது பாராட்டிற்குரியது.

நூல் - ஆத்மலயம்.

ஆசிரியர் - கங்கைமகன் கந்தராஜா.( நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம். லண்டன் ( U. K).

பதிப்பகம். - தகிதா. ( மணிவண்ணன்)

டிஸ்கி :- இந்தக் கட்டுரை வியாழக்கிழமை 29.செப். 2011 .பூவரசியில் வெளிவந்துள்ளது.

10 கருத்துகள் :

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

யாருடைய ப்லாகும் படிக்க முடிந்தாலும் கமெண்ட் போட முடியவில்லை.. எல்லாருக்கும் இந்த பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை.

முழு சிஸ்டமே ஸ்டக் ஆகிறது. திரும்ப ரிஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கிறது.

எனி ரெமெடி? ப்ளீஸ் சஜஸ்ட்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//தீய குணங்களில் இருந்து விடுவித்துக் கொண்டு அகமும் புறமும் எளிமையைக் கடைப்பிடிப்பது, அனைவரிடமும் அன்பாலும் பண்பாலும் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல்., தான் என்ற தலைக்கனமின்றி இருத்தல் இதுவே உண்மையான ஆன்மீகம். இதைக் கடைப்பிடிப்பவன் எந்த சமயத்தையும் சார்ந்திருக்கமாட்டான். அவன் இப்பிரபஞ்சத்திற்கே உரியவன்.//

நல்லதொரு அருமையான பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

//எனி ரெமெடி? ப்ளீஸ் சஜஸ்ட்.//

பார்க்கவே முடிவதில்லையே என்று இப்போத்தான் ஏழுத நினைத்’தேன்’!.

அதற்குள் நீங்களே இப்படி முந்திக்கொண்டு விட்டீர்களே!!

எப்போதும் நீங்க நீங்க தான்!!!
vgk

Rathnavel சொன்னது…

வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

மனதின் வெறுமையே பிரபஞ்சத்தோடு கலக்கும் யுக்தி... தியானம்மே அதற்கு ஒரே வழி... பிறருடன் அன்பும் வளரவும் பகைமையும் தீரவும் ! தியானம் மூலமே அடியமுடியும் ! பாடுவதும் ஆடுவதும் கூட ஒருவித தியானமே

sury சொன்னது…

பதிவின் ஒவ்வொரு சொல்லும்
பாலும் தெளி தேனும்
பாகும் கலந்து எமக்குப்
பாய‌சமாக தித்தித்தது, இந்த
நவராத்திரி நன்னாளில் .

சுப்பு ரத்தினம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனதை வெறுமையாக வைத்திருப்பவனே தியான வழியிலோ ஆன்மீக வழியிலோ தன்னுடைய குறிக்கோளை எட்டமுடியும்./

அருமையான பகிர்வு!

முழு சிஸ்டமே ஸ்டக் ஆகிறது. திரும்ப ரிஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கிறது.

எனி ரெமெடி? ப்ளீஸ் சஜஸ்ட்./

இங்கும அப்படித்தான ஸ்டக் ஆகிறது.

J.P Josephine Baba சொன்னது…

புத்தகத்தை பற்றிய உங்கள் கருத்துரை புத்தகத்தை வாசிக்க தூண்டுகின்றது. வாழ்த்துக்கள் சகோதரிக்கு!

சே.குமார் சொன்னது…

அருமையான பகிர்வு.

எனக்கும் இதே நிலைதான். ஒரு சிலருக்கு பின்னூட்டம் இட முடியவில்லை. இதற்கு தீர்வாக AIM ID ஒன்றை தயார் பண்ணி பின்னூட்டம் இட்டேன். இப்போ அதுவும் குக்கீஸ் பிழை என்று வருகிறது, என்னவென்று தெரியவில்லை.

இன்ட்லி ஓட்டளிப்புப் பட்டை நீண்ட நாட்களாக வரவில்லை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி விஜிகே சார்

நன்றி ரத்னவேல் சார்

நன்றி பெயரில்லா

நன்றி சூரி

நன்றி ராஜி

நன்றி ஜோசபின்

நன்றி குமார்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...