எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 ஜூன், 2010

ரவிகுல திலகன்..-ஒரு பார்வை..


ரவிகுல திலகன்

வானதி பதிப்பகத்தின் வரலாற்று நூல் இது... அணிந்துரை சுந்தா..

சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..



ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்..

நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்..

இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்..

ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்....

மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்..

குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது...

ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்..

ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது..

வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல்

நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது..

மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை..
பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு ..

கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்... சொல்வீர்கள் கல்கியின் இளவலும் அற்புதமென்று..

டிஸ்கி:..1...- ”முதலிரவன்று மணமகளைச் சட்டபூர்வமான உரிமையுடன் மணமகன் கட்டிப் பிடிப்பது போல் தஞ்சை மாநகரத்தை தன் மகிழ்ச்சிக்காகக் கைப்பற்றினான் விஜயாலயன்என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுவதில் வினோத அழகு தென்படுவதாக எழுதுகிறார் சரித்திரப் பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்த்ரிகள்..(சோழர்கள்)


டிஸ்கி:...2...:- இரண்டு மூன்று நண்பர்களின் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன் .. விரைவில் விமர்சனம் வரும்..:)) இது கம்பர் விழாவுக்குப் போன போது படித்தது.. இப்போதுதான் வெளியிட நேரம் கிடைத்தது.. எனவே மக்காஸ்.. கூடிய சீக்கிரம் எழுதிவிடுவேன்.. கோபிக்காதீங்க..:))

டிஸ்கி..3 ..:- நேற்றிலிருந்து டிஸ்கவரி புக் பேலஸில் கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆழி பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.. ஒரு மாதம் வரை.. பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்காஸ்..:))

23 கருத்துகள்:

  1. சீனர்களை ’மஞ்ச’ அப்படின்னு இதாலதான் குறிப்பிடுறாங்களோ

    மொழிநடைக்காக - படிச்சிருவோம்

    பரிகள் பராமரிப்பு - சுவாரஸ்யம்

    டிஸ்கி1 - வினோதமாத்தான் இருக்கு

    நன்றி பகிர்தலுக்கு

    பதிலளிநீக்கு
  2. அருமையான புத்தகங்களை வாசித்து, எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, அக்கா..

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றிக்கா!!

    பதிலளிநீக்கு
  4. படிப்பதோடு நிறுத்தி விடாமல், படிப்பதை அனுபவித்து எழுதுவது ஒரு கலை. அதை அழகாக, உண்மையாக செய்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
  5. சோழ மண்டபத்தில் உலவியது போல இருந்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அக்கா இதுபோல நல்ல நூல்களை படித்து எங்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி தொடரத்தும் உங்கள் சேவை...
    பாராட்டுகள்..தேனக்கா..

    பதிலளிநீக்கு
  7. இப்போ தான் கொஞ்ச நாள் முன்னாடி படித்து முடித்தேன். பின் அட்டையில் எச்சரித்து இருப்பது போன்று படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க மனமே வரவில்லை. மூன்றே நாளில் படித்து முடித்தேன்.

    இதைக் கூறியது குவளையா அராபியனாக வந்த விஜயாலயனா ?

    பாண்டிய அரசு வரகுண பாண்டியன் எல்லாமும் கூட அழகாக சொல்லப் பட்டு இருந்தது

    ஏக காலத்தில் சோழ பல்லவ பாண்டிய அரசு பற்றிய குறிப்புகள் கதையோடு அழகாக பொருந்தும் வண்ணம் சொல்லப் பட்டது அழகு

    பதிலளிநீக்கு
  8. நல்ல விமர்சனம் அக்கா

    டிஸ்கி-1 நச்சு (எ.கா)

    பதிலளிநீக்கு
  9. இதுபோன்ற நூல்களை வாங்கி வாசிக்கும் வாய்ப்புகள் இல்லையென்றாலும் இதுபோன்று உங்களின் பகிர்வுகளில் அறிந்துகொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் உங்களின் சேவை தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. நல்ல விளக்கங்கள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. மிக நல்ல பகிர்வு தோழி...

    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  12. பகிர்வுக்கு நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஜமால்.,சித்ரா.,ஜோதிஜி., மேனகா., ரமேஷ் ., கருணாகரசு.,கனி., விருட்சம்., ஸாதிகா., செந்தில் குமார்., பனிதுளி சங்கர்., ராம்ஜி.,சசி., கமலேஷ்., ராமமூர்த்தி., டிஸ்கவரி புக் பேலஸ்..

    பதிலளிநீக்கு
  14. வலைப் பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  15. இந்த கதையில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால்.. சைக்காலஜியும் கலந்த சரித்திர நாவல்.. கி.ரா. அவர்களின் ஸ்பெஷாலிட்டி..

    பதிலளிநீக்கு
  16. வாசிப்பது மிகவும் பிடிக்கும் அதிலும் இப்படி உங்களைப்போன்றவர்கள் விமர்சிக்கும் புத்தகங்கள் என்றால் கேட்கவே வேண்டாம் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  17. முதல் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...