அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்
பரம வைணவக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரனே பரமென்று சொல்ல முடியுமா. அப்படிச் சொல்ல மட்டுமல்ல அது உண்மை என்றும் நிரூபித்தார் ஒருவர். அவர்தான் சுதர்சனர் என்னும் அரதத்தர். சிவனே அவருக்கு அரதத்தர் என்னும் இப்பெயரைச் சூட்டினார் என்பதெல்லாம் இறைச் செயல்தானே.
கஞ்சனூர் என்னும் ஊரில் பதினான்கு கோத்திரத்தில் உதித்த வைணவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுக்குத் திருமாலே முழு முதல் தெய்வம். எனவே மாற்று சமயமான சைவத்தை நிந்தித்து வந்தார்கள். அவர்களுள் காசியப கோத்திரத்தைச் சேர்ந்த வாசுதேவர் என்ற பஞ்சாத்திர வைணவரும் இருந்தார். அவரது மகனாகப் பிறந்தவர்தான் சுதர்சனர்.
முன்பொரு சமயம் நடந்த தேவாசுர யுத்தத்தில் விஷ்ணுவின் சக்ராயுதம் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மனைவி சுகீர்த்தியையும் வீழ்த்தியது. அப்போது அங்கு வந்த சுக்ராச்சாரியார் அமிர்தசஞ்சீவினி மந்திரத்தை ஜெபித்து மனைவியை உயிர்ப்பித்ததோடு தன் மனைவியைக் கொன்ற விஷ்ணு பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும் படி சபித்தார். அதனால்தான் விஷ்ணுவின் அம்சமான சுதர்சனர் வாசுதேவரின் மகனாகப் பிறந்தார்.