எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 அக்டோபர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக் காட்டுதலும்.

1101.  அதமப்பொருத்தம் - ஜாதகம் பார்க்கும்போது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் 3 பொருத்தங்களுக்கு மேல் இல்லாவிட்டால் அது அதமப் பொருத்தம். மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு வயசு அதிகமாய் இருந்தாலும் அது அதமப் பொருத்தம்.. ரஜ்ஜை தட்டினாலும், பெண் ராட்சச கணமாகவும் ஆண் தேவ அல்லது மனித கணமாக இருந்தாலும் அது அதமப் பொருத்தம். பெண்ணின் ராசி அல்லது நட்சத்திரத்திற்கும் பிறகு ஆணின் ராசி அல்லது நட்சத்திரம் வந்தாலும் அது அதமப் பொருத்தம். இப்படிச் செய்துவைக்கப்படும் மணங்கள் அதிக நாள் நீடிக்காது என்பது நம்பிக்கை.

1102. மாப்பிள்ளை அறிதல் - சொந்தத்தில் இல்லாமல் அந்நியத்தில் செய்யும்போது மாப்பிள்ளை விபரம் கிடைத்தவுடன் அவர்கள் ஊரைச் சார்ந்த பெரியவர்கள் அல்லது உறவினர்களின் மாப்பிள்ளை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுதல். மாப்பிள்ளை வேலை செய்யும் இடத்துக்கோ அல்லது அவர் நண்பர்களுடன் உரையாடியோ மாப்பிள்ளை பற்றி அறிந்து கொள்வார்கள். எங்கள் உறவினர் ஒருவருக்குப் பெண் கொடுக்குமுன் பெண்ணின் உறவினர்கள் எங்கள் உறவினரில் எதிர் வீட்டில் ( வாசலில் இருந்து வீடு முழுதும் தெரியும் ) ஜன்னலோரம் அமர்ந்து காத்திருந்து மாப்பிள்ளை வரும்போது பார்த்தார்களாம். !

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஓநாய் குலச்சின்னம் - ஒரு பார்வை


ஓநாய் குலச்சின்னம்  - ஒரு பார்வை .



இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

திங்கள், 29 அக்டோபர், 2018

கூட்டாஞ்சோறு – அணிந்துரை.


கூட்டாஞ்சோறு – அணிந்துரை.

நிஜமான கூட்டாஞ்சோறு என்றால் இது தான். புதுக்கவிதைகள் மட்டுமல்ல. மரபுக்கவிதைகளும் வெண்பாக்களும் க்ளெரிஹ்யூக்களும் கூட கூட்டாஞ்சோற்றில் இடம் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல், இயற்கை ஆக்கிரமிப்பு, விவசாயம், வான்பொய்த்தல், மழை, தரிசு, வெள்ளாமை, காதல், பாசம், காமம், உறவுகள், மூன்றாம் பாலினத்தவர், கிராமம் எனப் பல்வேறு பாடுபொருட்களுடன் துலங்குகின்றன கவிதைகள். அனைத்துக் கவிதைகளையும் பக்குவமாக ருசியான ஒரே கூட்டாஞ்சோறாக்கிய இம்மாபெரும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

கலக்கல் ட்ரீம்ஸின் வெளியீடான இதில் பதினாறு கவிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். தன சக்தி, சீதா, ஸ்வேதா, கார்த்திக் மணி, ராம் சங்கரி, காயத்ரி அருண்குமார், கிருபாஷினி, மதுவதனி, கரிக்கட்டி கவிராயர், ஸ்ரீபுஷ்பராஜ், தமிழ்த்தென்றல், சாயா சுந்தரம், அனுசரன், கடவுளின் ரசிகன், மதுரை சிக்கந்தர், வைகை ராஜீவ் ஆகியோர்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

ராமனுக்குத் தம்பியான குகன். தினமலர். சிறுவர்மலர் - 41.

ராமனுக்குத் தம்பியான குகன்.

ராமனுக்கு மூன்று தம்பிகள் தானே அது எப்படி சாதாரண படகோட்டியான குகன் மாமன்னனான ராமனுக்கு நான்காவது தம்பியாக ஆனார் என்று யோசிக்கிறீர்கள்தானே குழந்தைகளே. குகன் யார், அவர் எப்படி ராமருக்குத் தம்பியானார் என்று பார்ப்போம்.  
யோத்தி மன்னன் தசரதன் இட்ட கட்டளைப்படி ராமன் இலக்குவனோடும் சீதையோடும் வனவாசம் புகுந்தார்.  மரவுரி பாதுகை தரித்து அவர் வனம் புகுந்த போது கங்கையைக் கடக்க வேண்டி வந்தது.   
சிருங்கிபேரபுரம் என்னும் நாட்டின் தலைவனான நிசாத மன்னன் குகன். அவன் வேடுவ குலத்தைச் சேர்ந்த தீரன். அடர்ந்த கருங்குழல்கள் தொங்கும் நீண்ட தோள்கள் உடையவன். கங்கை ஆற்றில் படகோட்டி திண்மையான புயங்கள் பெற்றிருந்தான். நூலாடை போல் தோலாடை அணிந்தவன்.  அவன் ராம லெக்ஷ்மண சீதாதேவியின் வருகையைக் கேள்வியுற்றான்.
மன்னர்மன்னன் வருகிறாரா. இவரைக்காணத்தானே  அவன் பிறவியென்னும் பெருங்கடலை நீந்தாமல் காத்திருக்கிறான். உடனே தேனும் மீனும். தினைமாவும் எடுத்துக்கொண்டு ராமரைப் பார்க்கச் சென்றான்.

மீ டூ - சில குழப்பங்களும் சில புரிதல்களும்.

சென்ற சில நாட்களாக அதிகம் விவாதிக்கபடும் வார்த்தை - மீ டூ.

இந்த மீ டூ பற்றி - சில பிரபலங்கள் சொன்னால் அது டிவி டிபேட்டுக்கு உரிய விஷயம். அதில் இருக்கும் உண்மையை அவரவர்க்குத் தக்கபடி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. இதில் ரேஸ், ஏஜ், க்ளாஸ் எதுவும் கிடையாது.

சாதாரணர்களுக்கு இல்லையா மீ டூ ப்ராப்ளம். ஏதேனும் ஒரு பருவத்தில் இதைக் கடந்தே இன்றிருக்கும் அனைவரும் வந்திருப்பார்கள். இதில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தோர் பற்றி செய்தி அதிகம் வருகிறது. அதுவும் ஆண் குழந்தைகளை அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களே சீண்டி இருக்கிறார்கள் என்பது அதிர வைத்த விஷயம்.

முகநூலில் பகிரப்படும் பல மீ டூக்கள் வேண்டாத முன்னாள் நண்பரைத் தாக்க ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுகிறது. “டீச்சர் இவன் என் சடையை பிடிச்சு இழுத்துட்டான் “ என்பதாகவே பல மீ டூக்கள் இருக்கின்றன.

உண்மையான மீடூவை சிலரே பகிர்ந்திருக்கிறார்கள். அது மிகப்பெரும் அதிர்ச்சியும் கண்ணீரும் அளித்த சம்பவம். இந்த மாதிரி மீ டூக்களில் அவர்கள் பண பேரத்துக்கு உட்பட்டு இழந்த பல லட்சங்கள் மட்டுமல்ல அடைந்த மனச்சோர்வும் மனச்சிதைவும் பதைக்க வைத்தது. மீண்டு எழுந்தவர்களைப் பார்க்கும்போது பிரமிப்பும் இன்னும் அவர்களுக்கு மனவலிமை பெருகவேண்டும் எனவும் வேண்டத் தோன்றியது.

வியாழன், 25 அக்டோபர், 2018

கணிகண்ணனுடன் சென்ற மணிவண்ணன். தினமலர். சிறுவர்மலர் - 40.

கணிகண்ணனுடன் சென்ற மணிவண்ணன்.

ஆசிரியர் ஊர் மாறிப்போகிறாரே என்று மாணவர்கள் வருந்துவது பழக்கம். ஆனால் இங்கே ஒரு மாணவன் ஊர் விட்டுப் போகிறாரே என்று அவரது குரு வருத்தப்பட்டு அவருடன் செல்கிறார். செல்பவர் சும்மாவா செல்கிறார் அந்த ஊரில் பள்ளி கொண்ட மணிவண்ணனையும் தன் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு பின் வரப் பணிக்கிறார். இதெல்லாம் எங்கே நடந்தது அப்படி தன் குருவையும் தெய்வத்தையும் கவர்ந்த கணிவண்ணன் யார் ? அவனுடன் சென்ற மணிவண்ணன் யார் என்று பார்ப்போம் குழந்தைகளே.
திருமழிசை என்ற ஊரில் பார்க்கவர் என்ற முனிவர் மகப்பேறு வேண்டி யாகம் புரிந்து வந்தார். அதன் பயனாக அவரது மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை வளர்த்தியற்ற குறை உருவாக இருந்ததால் அவரது பெற்றோர் அங்கேயே ஒரு பிரம்புத் தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

புதன், 24 அக்டோபர், 2018

ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில். தினமலர். சிறுவர்மலர் - 39.


ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில்.

உலகிலேயே பிரதிபலன் எதிர்பாராத உன்னதமான உறவுகளில் ஒன்று அண்ணன் தங்கை உறவு. உடன்பிறந்த சகோதரர்களே சகோதரிகளுக்குச் சீர் செய்ய அலுத்துக் கொள்ளும் காலமிது. ஆனால் உடன்பிறவா சகோதரர் ஒருவர் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளுக்கு அக்கார அடிசில் படைத்த கதை ஒன்று உண்டு. தங்கை பாடிச் சென்றதற்காக ஒன்று இரண்டல்ல ஆயிரம் அண்டாக்கள் நிறைய வெண்ணெயும் அக்கார அடிசிலும் படைத்த அந்தப் பாசக்கார அண்ணன் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் விஷ்ணுசித்தர் என்பார் வாழ்ந்து வந்தார். ஒரு திரு ஆடிப்பூரத்தன்று அவரது தோட்டத்தில் இருந்த திருத்துழாய்ச் செடியின் அருகில் ஒரு பெண்குழந்தை கிடைத்தது அவருக்கு. கொள்ளை அழகு கொண்ட அக்குழவிக்குக் கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
கோதை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயிலுக்கு அவள் தந்தை விஷ்ணு சித்தர் தினமும் மலர் கைங்கர்யம் செய்து வந்தார். நந்தியாவந்தனப் பூக்களைத் தொடுத்துக் கெட்டி மாலையாக்கித் தினம் கோயிலுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பது அவர் தொண்டு. அந்த மாலைகளின் அழகைக் கண்ட கோதை விளையாட்டாய்த் தன் கழுத்தில் அணிந்து கண்ணாடியில் அழகு பார்ப்பார்.

திங்கள், 22 அக்டோபர், 2018

நாற்கரச்சாலையும் நீலச்சக்கரமும்.

1921. தான் வரையும் சாலைச் சித்திரத்திற்கு
தானே பூக்காசைச் சுண்டிக்கொண்டிருக்கிறது
பவளமல்லி மரம்.

1922. நிலப் புழுதிக்குள்
குமைந்து நைகின்றன நாற்றுகள்.
நகரமுடியாதவற்றைப் புதைத்து
உருவாகிக் கொண்டிருக்கின்றன
நாற்கரச்சாலைகள்.
ஓடும் ஒவ்வொரு வண்டியின் கீழும்
ஊமைக்கசிவாய் உழுதவன் ரத்தம்
பசுமையிலிருந்து செங்காவிக்கு
உயர்கிறது நீலச் சக்கரம்.

1923. மலைகளை உடைத்து விடலாம்.
மனங்களை கொள்கை பீடிப்பிலிருந்து தகர்த்துவது கடினம்.

1924. கலைஞர்கள் வர்க்கச் சார்பு உடையவர்களா ?

1925. சமூக விழுமியத்துக்குள் வராத ஒழுங்குமுரண்களால் வசீகரிக்கப்படும் காலமிது.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

இவர்கள் – ஒரு பார்வை.


இவர்கள் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

சனி, 20 அக்டோபர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

1081. குருவ அரிசி – குறுவை அரிசி , சிவப்பரிசி, (பாயாசம், பணியாரம், கொழுக்கட்டை செய்யப் பயன்படுவது).

1082. அள்ளுபிடி முள்ளுபிடி – ஒரு பாத்திரத்தில் அரிசி பருப்பு வகையறாக்களை சமையலுக்கு அளந்து போடும் முன்பு முதலில் ஒரு கைப்பிடி அள்ளிப் போட்டுவிட்டு ( வெறும் பாத்திரத்தில் அளக்கக் கூடாதாம் அதனால் )  அதன் பின் தேவையானதை உழக்கில் அளந்து போடுவார்கள். இது அள்ளு பிடி. அளந்து போட்டு முடித்ததும் கடைசியாக ஓரிரு கைப்பிடி போடுவது உண்டு. அல்லது குறைந்த அளவில் மிச்சமிருக்கும் தானியங்களை அதிலேயே போட்டுவிடுவார்கள். அதற்கு முள்ளுபிடி என்று பெயர்.

சிலர் அளக்கும்போதே உழக்கு அல்லது படியில் கோபுரமாக நன்கு அமுக்கி அதன் பின்னும் அதிகமாக அந்த கோபுரத்தில் தானியத்தை அமுக்கிப் பிடித்து அளந்து போடுவார்கள் . இதற்கு முள்ளுபிடி என்றும் பெயர்.

1083. பெரும்போட்டுப் புள்ள – உடலில் எலும்பு பெரிதாக அமைந்து பார்க்க (ஜைஜாண்டிக்காக ) ஈடு தாடாக இருப்பவர்களை பெரும்போட்டுப் பிள்ளை என்பார்கள். இவர்கள் எவ்வளவு மெலிந்தாலும் மெலிந்தது போல் தெரியாது. சதை குறைவாகவும் உடலில் எலும்பின் அடர்த்தி அதிகமாக அமைந்தும் உள்ளவர்கள்தான் பெரும்போட்டுப் பிள்ளைகள். இவர்கள் அளவில் பெரிதாக இருப்பதால் உண்பதும் அதிகமாக இருக்கும். அதே சமயம் அடுத்தவர்க்குக் கொடுப்பதும் ( ஈதல் )  நன்கு கொடுப்பார்கள். எனவே அவர்களைப் பெரும்போடு என்று சொல்வதுண்டு.

1084. சவலப்புள்ள – ஒரு பிள்ளை கையில் இருக்கும்போதே அடுத்து ஒரு பிள்ளை பிறந்தால் மூத்த பிள்ளை சவலைப் பிள்ளையாகிவிடும். ஏனெனில் இதற்குக் கிடைக்கவேண்டிய கவனிப்புப் பூரா சின்னப் பிள்ளைக்குக் கிடைப்பதால் இது எப்போதும் தாயின் அண்மைக்கும் பாசத்துக்கும் கவனிப்புக்கும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதனால் சவலை தட்டி மெலிந்து போய் என்ன கொடுத்தாலும் தேறாமல் இருக்கும்.  

புதன், 17 அக்டோபர், 2018

பத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.

பெண்மொழி ஒரு பார்வை.

//// பத்ரிக்கையாளர் ப திருமலை நான் மிக மதிக்கும் ஆளுமைகளுள் ஒருவர். இவரது கட்டுரைகளில் இருக்கும் முழுமைத் தன்மையும், நம்பகத்தன்மையும் , எந்த ஒரு தலைப்பிலும்  தகுந்த புள்ளி விவரங்களோடு பிரச்சனைகளை எடுத்துக் காட்டுவதும், ஆள்பவர்களுக்கு அஞ்சாமல் வெளிப்படுத்தும் நேர்மையான கருத்துக்களும் ஆச்சர்யப்பட வைப்பவை. அவர் இந்நூலைப் படித்து அதற்குச் சிறப்பளிக்கும் விதத்தில் விமர்சனம் அனுப்பி இருப்பது குறித்து மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். சிறப்பான விமர்சனத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும் திருமலை சார். ///


பெண்களின் நிலை சற்று மேம்பட்டுள்ள இந்நாளிலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், பாதுகாப்பும் கிடைத்துவிட்டதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டிவரும். காரணம், அன்றாடம் நான் கேள்விப்படும், வாசிக்கும், பார்க்கும் நிகழ்வுகள் அதனை உணர்த்துகின்றன. பெண்களின் வலி, மகிழ்ச்சி, ஆசை, அபிலாஷை என பல்வேறு உணர்வுகளை இந்த சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்வதுமில்லை. அங்கீகரிப்பதுமில்லை. ஆனால், "பெண்களை தெய்வமாகப் போற்றுகிறோம்.. தாயாக மதிக்கிறோம்" என்ற பீற்றலுக்கு மட்டும் குறைவைப்பதில்லை. இந்த சூழலில்தான் கவிதாயினி தேனம்மை லட்சுமணன் எழுதிய பெண்மொழி எனும் கட்டுரை நூலினை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. 

அது என்ன பெண்மொழி...உங்கள் தாய்மொழியை எப்படி கற்றுக்கொண்டீர்கள்? சின்னக் குழந்தையிலிருந்தே வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் பேசுவதைக் கேட்டுக் கேட்டு கற்றுக்கொண்டேன் என்பீர்கள். காதால் கேட்டும் வாயால் பேசியுமே நாம் பெரும்பாலும் மொழியைக் கற்றுக்கொள்கிறோம். மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பட்டுள்ளதை அடையாளப் படுத்துகிறது. அதே போன்று அறிவு நிலையின் மூலம் மொழியும் அடையாளப்படுகிறது. எத்தனையோ மொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அல்லது அறிந்திருப்பீர்கள். ஆனால், "பெண்மொழி" குறித்து அறிந்திருக்கிறீர்களா..? இது வரிவடிவமோ ஒலி வடிவமோ இல்லாத வருத்த வடிவம் கொண்ட மொழி.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.

மதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பிதழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல வழுவழுவென்ற தாள்களில் வண்ணப்பக்கங்களில் மதுரையின் அழகு விகசிக்கிறது. விலை 20 ரூபாய்தான். பிழையே இல்லாமல் படிக்க வெகு சரளம். அழகான லே அவுட்கள். கண்ணைக் கவரும் புகைப்படங்கள்.

இதில் அட்டைப்படங்களாக திருப்பரங்குன்றம், பதினெட்டாம்படிக் கருப்பர், காந்தி ம்யூசியம் என வியக்க வைக்கின்றன. நமது வலைப்பதிவ நண்பர் எஸ் பி  செந்தில்குமார் அவர்களின் பல்வேறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

இப்பத்திரிக்கையை வெளியிட்டு  வருபவர் ரமேஷ்குமார் என்பவர். அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

அவர் முகநூலில் தொடர்பு கொண்டு கிட்டூர் வீராங்கனை ராணி சென்னம்மாவின் கட்டுரையை என் வலைப்பதிவில் இருந்து எடுத்து நூலில் கையாள அனுமதி கேட்டிருந்தார். மிகுந்த சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டேன்.  கட்டுரையுடன் பேர் போட்டு இதோ பத்ரிக்கையும் அனுப்பி விட்டார். நன்றி ரமேஷ். ஹலோ மதுரை இன்னும் பல சிறப்புகள் காண வாழ்த்துகள்.


நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர்.  அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.

திங்கள், 15 அக்டோபர், 2018

காரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்.

சென்றவாரம் முழுவதும் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகில் உள்ள சுபலெக்ஷ்மி பேலஸ் ஹோட்டலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.



அதில் மரப்பாச்சி புத்தகாலயம் அரங்கில் எனது நூல்களும் தோழி ராமலெக்ஷ்மி நூல்களும் இடம் பெற்றன. சில விற்பனை ஆனதாகவும் கேள்வி. :)

புதினம் - கதிரேசன்,  சாகித்ய அகாடமி விருது புகழ் எழுத்தாளர் காரைக்குடியைச் சார்ந்த மருத்துவர் சுனில் ஏற்பாடு செய்திருந்த மரப்பாச்சி அரங்கின் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தார்.

புதன், 10 அக்டோபர், 2018

கண்களும் கண்மணிகளும் - ஒரு பார்வை.

கண்களும் கண்மணிகளும் - ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

சனி, 6 அக்டோபர், 2018

ஃபேஸ்புக்கரும் குக்கரும்.

1901. ஜியோ கிடைக்காத இடங்களிலும் ஏர்டெல் நெட் கிடைப்பது வரம் .

1902. முகநூல் சண்டை சச்சரவுகளைப் பாக்கும்போது ஹைபர்நேஷனிலேயே இருந்து விடலாமா என்று இருக்கு. எதையும் போஸ்ட் செய்ய பயமா இருக்கு. டெரர் ..

1903. இரு இனிமைகளும் அழகு, ஒன்று போதவிழ்ந்த தமிழினிமை, இன்னொன்று சுயம் விரிந்த அக இனிமை.

1904. பிரிவோம்.. சந்திப்போம்.

1905. பிள்ளையாரை வச்சு ஆட்டம் பாட்டம்னு தினம் வாழ்க்கையைக் கொண்டாடிட்டு இருக்காய்ங்க. #க்ரேஸி_பஸவங்குடியன்ஸ்

1906. தொடுவதென்ன தென்றலோ..

வெள்ளி, 5 அக்டோபர், 2018

அபிதா. – ஒரு பார்வை.


அபிதா. – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 3 அக்டோபர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.


1061.குடைக்கொசுவலை/தொட்டிக் கொசுவலை - குழந்தைகளைப் படுக்கையில் தூங்கவைக்கும்போது குடைக்கொசுவலை போட்டு வைப்பதுண்டு. தொட்டிலைச் சுற்றிக் கட்டவும் கொசுவலையை உயரமான பாவாடை போல் தைத்து உபயோகிப்பார்கள்.  

1062. கைப்பண்டம் கருணைக்கிழங்கு - கஞ்சம்பிடித்தவர் கையில் இருந்து ஒரு பொருளையும் வாங்க முடியாது. அவர்களின் கைப்பண்டத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க யோசிப்பார்கள். ஆனால் அடுத்தவர்களை தானம் செய்யும்படி வலியுறுத்துவார்கள். அப்படிப்பட்டவரைக் குறிப்பிடும்போது அவர்களின் கைப்பண்டம் கருணைக்கிழங்கு என்று சொல்வதுண்டு 

1063. அப்புராணி - அப்பாவி, ஒன்றும் அறியாதவர் , பழிபாவம் தெரியதவர், வெள்ளந்தி, வெகுளி, குற்றமற்றவர். 

1064. உக்கிராணம் - ஒரு விசேஷம் என்றால் அதற்குத் தேவையான மளிகை, அரிசி, பருப்பு பயறு வகைகள், காய்கறி , கனி, பால், தொன்னைகள், பாக்குமட்டைத்தட்டுகள், வாழை இலை, பழக் கப்புகள், முந்திரி, பாதாம், நெய், பழ டின்கள்,  போன்ற பொருட்களை ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சேர்த்து வைப்பார்கள். அதற்கு மொத்தமாக உக்கிராணம் என்று பெயர். இதை சமையல் ஆள் அல்லாத ஒருவரிடம் ஒப்படைத்து விடுவார்கள். அவர் அந்த விசேசத்தின் போது சமையலுக்குத் தேவையான பொருட்களை உக்கிராணத்தில் இருந்து அளந்து எடுத்துக் கொடுப்பார். இதைப் பொதுவாக பெண்கள் மேற்பார்த்துக் கொள்வதால் அவருக்கு உக்கிராணக்காரக்கா என்று பெயர்.

1065. ஊவுதி, உவ்வூதி, துண்ணூரு, விவூதி, திருநீறு, திருநீர் - நெற்றியில் மூன்று பட்டையாக இடும் சைவச் சின்னம், சிவச்சின்னம், விபூதி. 

திங்கள், 1 அக்டோபர், 2018

கர்வம் அழிந்த இந்திரன். தினமலர். சிறுவர்மலர் - 38.


கர்வம் அழிந்த இந்திரன்.

பதவி என்பது எப்பேர்ப்பட்டவரையும் ஆணவம் கொண்டவராக்கிவிடும் தன்மை வாய்ந்தது. சாதரண பதவி கிடைத்தவர்களே இப்படி என்றால் அமரர்களுக்கெல்லாம் தலைவனாகும் பதவி கிடைத்த இந்திரனுக்கு ஏற்பட்ட கர்வமும் அது எப்படி நீங்கியது என்பதையும் பார்ப்போம் குழந்தைகளே.

அமராவதிபட்டிணத்தை ஆண்டுவந்த இந்திரனுக்குத் தான் எல்லாரினும் மேம்பட்ட பதவி வகிப்பவன், தேவலோகத்தின் அதிபதி என்ற மண்டைக்கர்வம் ஏற்பட்டது. அதனால் அனைவரையும் உதாசீனப்படுத்திவந்தான். அமிர்தம் அருந்தியதால் தான் இறப்பற்றவன், ஈரேழு பதினான்கு லோகத்திலும் அதிகமான சம்பத்துக்களை உடையவன் என்ற இறுமாப்பில் இருந்தான்.

இந்திரசபையில் அவனுக்குக் கீழ்தான் அனைத்து தேவர்களும் கிரகங்களும் அமர்ந்திருப்பார்கள். ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, அப்ஸரஸ் கன்னிகளும் ததாஸ்து தேவதைகளும் அவனது கையசைவுக்குக் காத்திருப்பார்கள். கலா நிகழ்ச்சிகளும் கேளிக்கை கொண்டாட்டங்களும் அவன் விருப்பப்படிதான் நடந்துவந்தன. இப்படி இருக்கும்போது அவன் தன்னை விண்ணளவு அதிகாரம் கொண்டவனாக நினைத்துக் கர்வம் கொண்டான்.
Related Posts Plugin for WordPress, Blogger...