எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 28 டிசம்பர், 2012

மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். -- சிற்றிதழ்கள் ஒரு பார்வை

இலக்கியச் சிற்றிதழ்கள் பல வருகின்றன. அவற்றுள் மெய்ப்பொருள், கனவு, குலவை, காலம், அகநாழிகை, கணையாழி போன்றவையும் விஞ்ஞான இதழாக துளிரும், வணிகம் சம்பந்தமாக வணிகக் கதிரும் சிறப்பாக இருக்கின்றன.

மாதம் ஒரு முறை வெளியாகும் ”துளிர்” இதழ் குழந்தைகளுக்கான விஞ்ஞானத்தகவல்களைத் தருகிறது. ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்காக நடக்கும் அறிவியல் மாநாடு, மற்ற அறிவியல் செய்திகள், அயோடின் பற்றி, குளிர்காலம் பற்றி, பூதாகாரமாய் வெளிப்படும் கார்பன் பற்றி ( இதில் இந்தியா 7 ஆம் இடத்தில் வருகிறது), உணவுப் பொருளை நன்றாகச் சூடாக்கி காற்றுப்புகாவண்ணம் அடைத்து வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாதது பற்றி, இன்னும் தட்டாரப்பூச்சி, காலண்டர், பூச்சிகளின் பார்வை, புருனோ, இயக்கு சக்தி இயங்கு சக்தி, கோள்களின் நிலை என குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

வியாழன், 27 டிசம்பர், 2012

கிளம்பவேண்டிய நேரம்

காலம் கடந்துவிட்டது
நீங்கள் கிளம்பவேண்டிய
நேரம் வந்துவிட்டது.
நொடிக்கணக்குடன் துல்லியமாய்.

ஒரு புத்தக வாசிப்பு
பாதிப்பக்கங்களில்
சுவாரசியம் தீர்க்காமல்
உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது.

புதன், 26 டிசம்பர், 2012

அசூயை.

பின்னெப்போதும்
இருந்திருக்கவில்லை
அந்த உணர்வு.

புரவி பிடறி சிலிர்க்க
ஓடியபோதும்
வியர்த்திருந்தது.

காணாத ஒன்றைக்
கண்டதாய்
பொய்ப்பித்தது கண்.

சனி, 22 டிசம்பர், 2012

மெல்லினத்திற்கு வயது இரண்டு..!!!

பத்ரிக்கை என்பது போர்வாள் என்றால் அதன் தலையங்கம் அதன்  கூர்முனை போன்றது.மெல்லினத்தின் தலையங்கமும் அதுபோலத்தான். ”பெட்ரோல் அரசியல்”, ”இலங்கையைக் குறிவைக்கும் அமெரிக்க முதலீட்டுப் போர் ”போன்ற தலையங்களைப் படித்து விட்டு என் கணவரும் இதையே வழிமொழிந்தார்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை

புதுவையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியம் 5 நூல்கள் வெளியிட்டுள்ளார். தன் பிள்ளைகள் இளம்பரிதி, அன்பன் ஆகியோரின் பெயரை இணைத்து பரிதியன்பன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். புதுவை அரசால் இவரது புத்தகங்கள் விருதுகள் பெற்றுள்ளன. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவிற்குப் பிறகு நான் இவரின் சிறுவர் பாடல்கள் புத்தகம் படித்து மகிழ்ந்தேன். சிறுவர் பாடல்கள் ”சிட்டுக் குருவி, நடைவண்டி” என இரண்டு புத்தகங்களும். ”அரைக்கீரை விற்கிறான் அம்பானி” என்ற ஒரு துளிப்பா புத்தகமும்., வாழப்பிறந்தோம் மற்றும் வெள்ளைத்திமிர் என்ற இரு சமுதாயக் கவிதைப் புத்தகங்களும் வெளிவந்துள்ளன.

வியாழன், 20 டிசம்பர், 2012

பூவரசி அரையாண்டிதழ். எனது பார்வையில்

புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துச் சென்று புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்தலில் என்ன நன்மையோ, தீமையோ ஆனால் நிறைய பெண் படைப்பாளிகளையும் அது உருவாக்கி இருக்கிறது. தங்களோடு எடுத்து வர முடியாத தாய் மண்ணை தொட்டுணர விரும்பும் ஆசை ஒவ்வொருவர் எழுத்திலும் வெளியாகிறது. பூவரசி காலாண்டிதழ் அந்த மக்களின் புலம் பெயர்தலுக்குக்கும் பின்னான வாழ்வை, போருக்குப் பின்னான ஈழத்தைப் பேசுகிறது.

புதன், 19 டிசம்பர், 2012

சேமிப்பு

”எப்பப் பார்த்தாலும் வாங்கின சம்பளம் பூரா ஏதாவது செலவு பண்ணிடுறே. போன மாசம் 4 செட் ட்ரெஸ், மூணாம் மாசம் காஸ்ட்லி கெடிகாரம்., இந்த மாசம் ஷூ., எப்பத்தான் சேமிப்பே.. பாங்க் அக்கவுண்ட்ல ஒரு சேவிங்ஸும் இல்லை. ”

”சம்பளம் இன்னும் அதிகம் வரட்டும்மா.. எப்பப்பாரு டெபாசிட் போடு அப்பிடிங்கிறீங்க. அப்புறம் எப்பத்தான் லைஃபை என்ஜாய் செய்றது”.

மகன் வேலைக்கு சேர்ந்து முணு மாதமாக வீட்டில் நடக்கும் வாக்குவாதம்தான் இதெல்லாம்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

மகாபலிபுரம்,, உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி. நூல் விமர்சனம்

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” என்ற நூல் படித்தேன். நாம் சாதாரணமாக சென்று அவசரம் அவசரமாக ஒரு சரித்திரச் சின்னத்தைப் பார்த்து வருகிறோம். அதற்கு எல்லாம் இப்படி ஒரு வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே எனத் தோன்றச் செய்த நூல் இது. இது தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடு ( சுபா -- எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணனுடைய பதிப்பகம்). இந்நூலை வடிவமைத்தவர் பா. கணேஷ். மிக அருமையான வடிவமைப்பு.

இந்த மாதிரி ஓவியங்களோடு கூடிய நூல்களுக்கு ஏற்ற அழகிய வடிவமைப்பு செய்துள்ளார் கணேஷ். அட்டையில் கடற்கரைக் கோயிலும் உள்ளே மற்ற ஓவியங்களும் தத்ரூபம் மற்றும் அருமை. எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர். இந்நூலுக்கு முன்னுரை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் சுபா.

திங்கள், 17 டிசம்பர், 2012

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்

நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா... சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம் எப்பிடி இப்படி ஸ்லிம்மா இருக்காங்கன்னு வயித்தெரிச்சலா இருக்கா.. கொஞ்சம் தண்ணீரை குடிச்சு வயித்தெரிச்சலை அணைச்சிட்டு நம்ம தென்னக ரயில்வேயில ஒரு டிக்கெட் ரெண்டு ராத்திரிக்கு புக் பண்ணுங்க போதும்.. என்ன விஷேஷம்னு கேக்குறீங்களா .. அட நீங்க ஸ்லிம் ஆகத்தான். எதுக்கு ரெண்டு..? வீட்டுக்காரர் கூட போகவான்னு கேக்குறீங்க. அட அது ரெண்டுமே உங்களுக்குத்தாங்க.. ஏன்னா ஒரு ஊருக்குப் போயிட்டு திரும்ப வீட்டுக்கு வரணும்ல.. அதான்.

முக்கியமா அது ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் அல்லது சேரன் அல்லது ப்ளூ மவுண்டனா கூட இருக்கலாம். கொஞ்சம் இருங்க வெயிட் லாசுக்காக உங்களை மலை எல்லாம் ஏற சொல்லலை. நீலகிரி எக்ஸ்ப்ரஸைத்தான் அப்பிடிச் சொன்னேன். அப்புறம் முக்கியமா. ராத்திரி ட்ரெயினுக்கு புக் பண்ணுங்க.அதுவும் கடைசி சமயத்துலதான் தட்கால்ல புக் பண்ணனும் . அப்பத்தான் நம்ம கோச்சே இருக்கோ இல்லையோன்னு தேடிக்கிட்டே போனாம்னா ஏ1., ஏ2.,ஏ3., ஏ4 இது போல பி1 லேருந்து பி 4 வரை அப்புறம் ஏசி கோச். அப்புறம் எஸ் 1 எஸ் 2 லேருந்து எஸ் 11 வரைக்கும் இருக்கும். ஆனா எஸ் 12 இருக்காது. அதுக்குத்தான் நீங்க டிக்கட் புக் பண்ணி இருப்பீங்க. நீங்க நடந்து நடந்து கடைசியா எஞ்சினே வரபோகுது. ஒரு வேளை பாத யாத்திரையாவே போகப்போறமோன்னு நினைக்கும்போது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் அப்புறம் கொஞ்சம் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் அதுக்கும் அப்புறம் எஞ்சின் பக்கத்துல அப்பாடா உங்க எஸ் 12 வந்திருச்சு. சரி விருவிருன்னு ஏறி உக்காருங்க..அடுத்த ஊருக்க்கே வந்துட்டமோன்னு களைப்பா நடந்து வந்த நேரத்துல ட்ரெயின் கிளம்பிறப்போகுது.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்

என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை எழுதிய எழுத்தாளனுக்கும் உண்மையாய் இருக்க வேண்டும். தன் கருத்து. ஒர் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்பட்டுவிடாமல் காக்க வேண்டும். ஒரு சிருஷ்டிகர்த்தாவை விட கடினமான பணி அதைப் போன்ற குறைவில்லாத உயிர் சிற்பம் செய்வதே. அசலின் எல்லா குணங்களும் நகலிடமும் இருக்கவேண்டும்., எந்தச் செதுக்கலும் இல்லாமல். இதை சிறப்புறச் செய்திருப்பதால் இந்த நூல் பலவருடம் கழித்தும் என் கவனத்தை மிக ஈர்த்தது. இதன் ஆசிரியர் கே.என். மகாலிங்கம். இதற்கு அ. முத்துலிங்கம் கொடுத்துள்ள முன்னுரை ரத்னஹாரத்தில் நடுவில் பதித்த வைரம் போன்றது. .

திங்கள், 10 டிசம்பர், 2012

நம் உரத்தசிந்தனையில் இணையதள ப்லாகர்.

மார்ச் 2012, நம் உரத்தசிந்தனை இலக்கிய இதழில் இணையதள ப்லாகர் என்ற தலைப்பில் திரு. பத்மா மணி அவர்கள் என்னைப் பற்றிய குறிப்புக்கள் கொடுத்துள்ளார்கள். இந்த இதழ் உரத்த சிந்தனை அமைப்பிலிருந்து வெளி வரும் இலக்கிய இதழாகும்.

சனி, 8 டிசம்பர், 2012

MENSES. மாதவிடாய்.

மாதவிடாய் பற்றி என் அன்புத் தங்கையும் தோழியுமான கீதா இளங்கோவன் எடுத்த ஆவணப்படம் இன்று பி. ஏ. ராமசாமி ராஜா ஹால், பாரதீய வித்யா பவன், சென்னையில் வெளியிடப்படுகிறது.

பாலபாரதி, தமிழிசை சௌந்தர்ராஜன், திலகவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

மூளையும் நாவும்.

வார்த்தைகளைக் கோர்த்துச்
சித்திரங்கள் வரைவது
பிடித்தமானது அவளுக்கு.

வரையும்போதே வண்ணங்கள்
சிதறி விழுகின்றன
மண்ணாய் அங்குமிங்கும்.

மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது
மண்டையோட்டுக்கான
வண்ணம் போதாமல்.

வியாழன், 6 டிசம்பர், 2012

குளம்.

பற்களான படிக்கட்டுக்களோடு
பாசம் புதையக் காத்திருந்தது குளம்.

தட்டுச் சுற்றான வேட்டியுடன்
தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன்.

விரால் மீன்களாய் விழுந்து
துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள்.

இரவுக்குள் ஒளிய நினைத்து
கருக்கத் துவங்கியது தண்ணீர்.

புதன், 5 டிசம்பர், 2012

சுத்த மோசம்.

"எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்” ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ்.

“அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா.

“என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ் அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு சினிமா ஸ்டில்லைப் பார்த்து.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

மந்திரப்பூனை. நூல் பார்வை..

பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு நிறைந்து கிடப்பது போல ஒவ்வொரு எழுத்தாளரிலும் ஒவ்வொரு வாழ்க்கைக்கான வரலாறு புதைந்து கிடக்கிறது. அதை எவ்வாறு எந்த அளவு சிறப்போடும் ஈர்ப்போடும் எளிமையோடும் பகிர்கிறாரோ அந்த அளவு அது காப்பியமாக ஆகிறது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட வைக்கம் முகம்மது பஷீரின் மந்திரப் பூனை நாவல் படித்தேன். தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. பலமுறை படித்தும் சுவாரசியம் அடங்கவில்லை. மொழிபெயர்ப்பே இவ்வளவு சுவாரசியம் என்றால் மூலம் எப்படி இருக்கும். மலையாளம் தெரியவில்லையே என்ற ஏக்கம் உண்டானது

வெள்ளி, 30 நவம்பர், 2012

மழை.

புலிக்குட்டிகளாய்
உருண்டு புரள்கிறது
மாநகரச் சாலைப்பள்ளத்தில்
மழைநீர்.

குளித்த எருமைகளாய்
அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில்
கட்டிக்கிடக்கின்றன வண்டிகள்.

சிறிதாய்ப் பெய்த மழையில்
மிதக்கும் நகரம் ஆகிறது
மாநகரம்.

வியாழன், 29 நவம்பர், 2012

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

இன்றைய இந்தியாவின் மிக அத்யாவசியமான தேவை எது என்றால் கழிப்பிடங்கள் என்றுதான் சொல்வேன். ஏனெனில் இந்தியன் ரயில்வேயில் பயணம் செய்யும்போதுதான் தெரியும் எத்தனை பெரிய நீளமான டாய்லெட்டை அரசாங்கம் அமைத்துள்ளது என்று. அது போக சுற்றி இருக்கும் வயல்வெளிகள், கம்மாய்கள் எல்லாமே இயற்கை உபாதையைத் தீர்க்கும் இடமாகவே திகழ்கின்றன.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் செல்லும்போது அங்கே ஒரு செம்மொழி நூலகம் திறக்கப்படக் காத்திருந்தது. இந்த முறை அது திறக்கப்பட்டு செயல்படுவதாகத் தோன்றியது. ஆனால் அடுத்தே ஒரு முகம் சுளிக்கும் காட்சியைக் காண நேர்ந்தது. அதன் பக்கமிருந்த வயல்களில் சிலர் அங்கேயே போய் அதன் பக்கம் தேங்கி இருந்த மழைத்தண்ணீரையே அள்ளிக் கழுவிக் கொண்டிருந்தனர்.

புதன், 28 நவம்பர், 2012

எஸ்டிமேட்..

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..”

”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்திரு.”

பெரியவன் போனில் நண்பனிடம் .,”டேய் எங்க வீட்டுல என் தம்பி ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்களாம். ஒரே மட்டன் சிக்கன்தான். ஆர்ப்பாட்டமா இருக்குடா.. எங்க அம்மாவுக்கு அவன்னா ரொம்ப பிடிக்கும். ”

சின்னவன் நண்பர்களை அழைக்கச் சென்றிருந்தான். எல்லாரும் வந்துவிட ., ”டேய், தம்பி. இன்னும் கொஞ்சம் நேரமாகும். அந்த ஃபாண்டாவை ஊத்திக் கொடு எல்லாருக்கும்.”

செவ்வாய், 27 நவம்பர், 2012

சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்.

இந்தநாள் இனிய நாள் என்ற உற்சாகக் குரலுக்குச் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். எளிமையான வார்த்தைகளில் தினம் ஒரு தகவல் பகிரும் இவரின் புத்தகம் சிறகை விரிப்போம். SIXTH SENSE PUBLICATIONS. வெளியீடு. விலை ரூ 100.

திங்கள், 26 நவம்பர், 2012

குங்குமம் தோழியில் குட்டி ராஜாக்களும் சுட்டி தேவதைகளும்.

1. வளர்ந்து கொண்டே
போகிறாள் மகள்
குழந்தையாகிறேன் நான்.

2. அட்டைப் பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்.
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை.

புதன், 21 நவம்பர், 2012

நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை

ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என கடைசியில் வாகை சூடலாம். சில முடியாமலும் போகும். ”என் மனைவி” என்ற தலைப்பில் ஒரு மாத இதழுக்கான கட்டுரைக்காக ஒரு நடிகரை தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிக்கு பத்ரிக்கையில் வருவது பற்றிய ஆர்வமில்லை என்றார் அவர்.! . இன்னொரு பிரபலத்தை தொடர்பு கொண்டால் அவர் தன் மனைவியைப் பற்றிக் கூறியதை விட அவரின் மனைவி அவரைப்பற்றிக் கூறியதே அதிகம். இன்னும் ஏதேதோ படிக்கும் அவருக்கு மனைவி லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொடுத்து குழந்தையைப் போல பார்த்துக் கொள்வதாக கூறினார் !. மூன்றாவதாக ஒரு சினிமா மற்றும் நாடக நடிகர். இவர் நேரில் வராமல் பேட்டி எல்லாம் கிடையாது என்று மறுத்து விட்டார். இப்படியாக அந்த தலைப்பு கைவிடப்பட்டது.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஐந்தாவது வர்ணத்தின் முன்னேற்றம்..

அம்பேத்கார் மற்றும் பெரியார் இந்த இரு பெயர்கள் இல்லாமல் நாம் பெண்களின் விடுதலை பற்றிப் பேச முடியாது. வர்ணாசிர தர்மங்களை இறுக்கிப் பிடித்திருந்த நம் நாட்டில் (ஐந்தாவது வர்ணமாக குறிப்பிடப்படாவிட்டாலும்) பெண் இனம் என்ற ஒன்றுதான் அந்த ஐந்தாவது வர்ணம் என்று சொல்லலாம்.

மிக முன்னேறிய நாடுகளில் கூட மனைவி அடிமை மாதிரி நடத்தப்படுவதைக் காண்கிறோம். பெண்கள் மீது வன்முறை, பாலியல் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளிகள், கொத்தடிமைகள், பாலியல் தொழிலாளிகள் என்று பலவிதத்திலும் இன்னல்படும் இனம் பெண்ணினம். சொல்லப்போனால் எல்லா வர்ணத்தின் ஆண்களும் தங்களின் கீழானதாகக் கருதும் இனம் பெண்ணினம்தான். அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்கள் கூட தங்கள் மனைவி தங்களுக்கு அடங்கி ஒடுங்கிப் போக வேண்டும் என எண்ணுகிறார்கள். சீதை கண்ணகி, நளாயினி இப்படித்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது சமூகம்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

விடுவிப்பு.

நீங்கள் அவளை அனுப்பத்
தீர்மானித்து விட்டீர்கள்..
முதல்கட்டமாக அவளது
வேலைகளைப் பிடுங்குகிறீர்கள்.

சமைக்கக் கற்கிறீர்கள்..
துலக்கிப் பார்க்கிறீர்கள்.
பெட்டிபோடுபவனை விடவும்
அழகாய்த் துணி மடிக்கிறீர்கள்.

வியாழன், 15 நவம்பர், 2012

மனித நேயர்

தொழுகைத் தொப்பி
புனிதநூல் பிரதி
பேரரசன் உடுப்பிற்கும்
உணவிற்கும்
நெய்தபடி இருந்தார்.

மலை எலிகளை
விரிந்த நாகங்களை
விக்கிரகங்களை உடைத்து
பள்ளிகளை
எழுப்பினார்.

டாரா ஷிக்கோ
புறச்சமயியானான்,
அவனோடு ஷூஜா, முராட்,
சர்மட்டை சிதைத்தார்
வாழும் புனிதர்.

மதமெனும்
மதுவில் மூழ்கியவர்
வீராபாயையும்
இழந்தார் தந்தையின்
அன்பையும்.

புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தினத்தில் பெற்றோரைப் போற்றுவோம்.

இந்தக் குழந்தைகள் தினத்தன்று என்னைக் கவர்ந்த மூன்று பெற்றோரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் முகநூலில் சந்தித்தவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்கள் ஈடுபடும், ஆர்வம் கொள்ளும் துறையில் ஊக்கம் கொடுப்பவர்கள். விடாமுயற்சியோடு செய்யும் கலையை இவர்கள் இவர்களின் பெற்றோரிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எனவே என்னுடைய ராயல் சல்யூட்  இந்த மூன்று பெற்றோருக்கும்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

காதலும் சாதலும்

இன்னிக்கு முளைச்ச 20 வயதுப் பிள்ளைகள்   நேத்திக்கு முளைச்ச 40 களில் இருக்கும் அப்பா அம்மாவையும் மதிப்பதில்லை.  முந்தாநாள் முளைச்ச 60 களில் இருக்கும் தாத்தா பாட்டி சொல்பேச்சும் கேப்பதில்லை.

ஒரு பெண் அப்பா அம்மாவை மதித்திருந்தால் அவர்களின் சம்மதத்தோடு மணப்பதுதான் காதலுக்கு மரியாதை. அதை விட்டு என்னவோ நடக்கட்டும் நாம் பாடு போவோம் எனப் போனதால் இன்று எத்தனை உயிர்கள் பலி. என்ன ஒரு சுயநலம். 20 வயது வரை வளர்த்த தகப்பன் முக்கியமில்லை, தாய் முக்கியமில்லை. சமூகத்தில் அவர்களின் மதிப்பு முக்கியமில்லை தன்னுடைய காதலும் காமமுமே முக்கியம் என்றால் அந்தப் பையனை அழைத்து வந்து  அவனுடைய நல்ல நடத்தைகளையும் குணநலன்களையும் புலப்படுத்தி சம்மதம் வாங்கித்தான் மணந்து கொண்டிருக்க வேண்டும்.

சனி, 10 நவம்பர், 2012

பலகாரம் பதினொண்ணு

சமையலுக்காக ஒரு வலைத்தளம்  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதன் ஐடி    http://thenoos.blogspot.in . இதை க்ளிக் செய்தால் எல்லாப்  பலகாரங்களின் படங்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு பலகாரத் தலைப்பின் கீழும் இணைப்புக் கொடுத்து இருக்கிறேன்.  செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

வெள்ளி, 9 நவம்பர், 2012

வியாபாரி..

மிக உன்னதமான
ஒன்றைப் போன்ற
பாவனைகளுடன்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு வார்த்தைகளும்
மிக எளிமையான
ஒன்றைப் பற்றி.

புரிந்து கொள்ளவும்
உணர்ந்து கொள்ளவும்
அயற்சி ஏற்படுத்தும்
ஒவ்வொரு நிமிடங்களும்
அதன் மதிப்பை
அதிகப்படுத்துகின்றன.

வியாழன், 8 நவம்பர், 2012

அவரோகணம்.

பழக்கப்பட்ட உடல்களைப்
போலிருந்தன அவை
செய்கையும் செய்நேர்த்தியும்
எத்தனை சிற்பியோ..
விரிந்தும் குறுகியும்
அகண்டும் பருத்தும்
ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள்
அறிகுறிகளின் கையெழுத்தோடு.

புதன், 7 நவம்பர், 2012

நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை

நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் சந்திப்பு நிகழ்ந்தது. நம்மையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் ஒரு வசீகர வாசிப்பு அவருக்கே சொந்தம். உலகமே ஒரு நாடக மேடை. அந்த மேடையில்., எல்லையற்ற வெளியில் ”நாடக வெளி” என்ற நாடகக் குழுவை நடத்திவரும் திரு ரங்கராஜன் அவர்களின் புத்தகம் “ நாடகம் நிகழ்வு அழகியல்”.

செவ்வாய், 6 நவம்பர், 2012

வயதான பெண்களின் உடல் நலம்.

என் அம்மாவழிப் பாட்டி ( ஆயா) க்கு 87 வயதாகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் கூட குந்தாணியில் உலக்கையால் இடித்து நெல் குத்துவார், மாவு இடிப்பார். என்னால் கூட அப்படி எந்த உடல் உழைப்பும் செய்ய இயலாது. ஏனெனில் நான் யந்திரங்களுக்கு அடிமை ஆகிவிட்டேன். தண்ணீர் இறைத்தல், மாவு ஆட்டுதல், அம்மியில் அரைத்தல் , துணி துவைத்தல் போன்ற எல்லாச் செயல்களும் எனக்காக எந்திரங்கள் செய்கின்றன. இன்னொரு காலத்தில் எனக்காக மூச்சு விடுதலைக் கூட எந்திரங்கள் நீட்டித்துக் கொடுக்கலாம்.

திங்கள், 5 நவம்பர், 2012

ரஜனி பற்றி இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில்..

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஸ்பெஷல் பதிப்பு ஒன்றை இந்தியா டுடே வெளியிட்டது. அதில் ரஜனி பற்றிய கருத்துக்களைப் பகிரும்படிக் கேட்டிருந்தார்கள். என்னுடைய கருத்து இதோ..


“ ரஜனி என்றால் நம் மனதில் வரும் பிம்பம் என்ன. ஸ்டைல் என்றால் ரஜனி ரஜனி என்றால் ஸ்டைல். என் சகோதரர்கள் முரட்டுக்காளையில் வரும் , ”பொதுவாக என்மனசு தங்கம். ஒரு போட்டி”யின்னு வந்துவிட்டா சிங்கம் என்ற பாடலை பள்ளிப் பருவத்தில் அடிக்கடி பாடி ஆடுவார்கள்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

பூனைகள்..

அலுவலகம் செல்கின்றன.
தொழில் செய்கின்றன.
 கடைகள் நடத்துகின்றன.
சில சமைக்கவும் செய்கின்றன.

முக்கால்வாசி நேரம்
மூலையில் முடங்கிக் கிடந்து
பெரும் வேலை செய்ததாய்
நெட்டி முறிக்கின்றன.

வீட்டுக்காரி அள்ளி வைக்கும்
மீனில் திருப்தியடையும் அவை
வளர்ப்புப் பிராணிகள்தாம்
காவல் காப்பவை அல்ல.

வியாழன், 1 நவம்பர், 2012

REVIEW OF "LOOPER".. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

LOOPER.. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

கோபாலன் சினிமாஸில் லூப்பர் பார்த்தேன். ப்ரூஸ் வில்லிசின் படம். 2074 இல் காலப் பயணம் கண்டுபிடிக்கப்படுகிறது. வழக்கம்போல அது கிரிமினல் கூட்டங்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை அழிக்கப் பயன்படுத்துகிறது. கான்சாஸில் இருக்கும்  மாஃபியா கும்பல்கள் 30 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று தங்களுக்கு எதிரியாக மாறப்போகிறவர்களை வாடகைக் கொலையாளி அதாவது லூப்பர் மூலம் தீர்த்துக் கட்டுகிறது.

வீடழகு.

எனக்கான வீடு
அதென்று மையலுற்றுத்
திரிந்து கொண்டிருந்தேன்.

வெள்ளையடிப்பதும்
சித்திரங்கள் வரைவதுமாய்
கழிந்தது என் பொழுதுகள்.

நீர் வடியும் தாழ்வாரங்கள்
தங்கமாய் ஜொலிக்கும்
பித்தளையின் தகதகப்போடு.

புதன், 31 அக்டோபர், 2012

அதீதத்தின் ருசி இதற்குமுன்பும் இதற்குப் பிறகும்.

அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பிறகும். :- *******************************************************

அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் அதீதத்தின் ருசி.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

மாமியார் மருமகள் உறவுமுறை..

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.

திங்கள், 29 அக்டோபர், 2012

மேக்கப்புக்கு பேக்கப்.- குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்.

குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில் இருந்து மேக்கப் பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நான் கூறிய கருத்துக்கள் :-

“பொதுவா கேட்டா தேவையில்லைன்னுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நம்முடைய நிறமிகளை வெண்க்ரீம்கள் மறைத்து வெண்மையாக்கி காண்பிக்கின்றன. இயற்கைப் பொருட்களான தயிர்., எலுமிச்சை., தக்காளிச்சாறு., முல்தானி மிட்டி., தேன் பழக்கூழ்., பாலாடை, கசகசா., கடலை மாவு, பயத்த மாவு போன்றவை கலந்து குளித்தாலே கலர் கொடுக்கும்.

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கனவுகள்

இரவு கருத்ததும்
கலங்கரை விளக்காய்
ஒளிவிடத் தொடங்குகின்றன
இன்றைக்கான கனவுகள்.

ஒளிர்ந்த விளக்குகள்
பிடறி சிலிர்க்கும்
சவாரிக் குதிரைகளாய்
காற்றில் பறக்கின்றன.

ஆசைக்காற்றில் உப்பி
வண்ண பலூன்களாகி
பருக்கத் தொடங்குகின்றன
கடல் மண்ணிலிருந்து.

வியாழன், 25 அக்டோபர், 2012

சங்கமம்..

நதியாய்ப் பெருகி
கரைகளைப் புணர்ந்து
புற்களையும் விருட்சங்களையும்
பிரசவித்திருந்தாள்.

வரத்து வற்றிய கோடையிலும்
நீர்க்காம்பைச் சப்பியபடி
பருத்துக் கிடந்தன
வெள்ளரிகள் கம்மாய்க்குள்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

காலால் வரையும் சாதனை ஸ்வப்னா..

இந்த வருடம் பெண்கள் தினத்தில் உங்களுக்கு இன்னொரு தன்னம்பிக்கைப் பெண்ணை அறிமுகப்படுத்தப் போகிறேன். இறைவன் அருளால் எல்லா வளமும்., எல்லா நலமும் பெற்றிருக்கும் உங்களில் எத்தனை பேர் அதை உணர்ந்திருக்கிறீர்கள். பிறப்பிலேயே ஏதாவது குறைபாட்டோடு பிறக்கும் பிள்ளைகளுக்கு கடவுள் மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறார். அவர்கள் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ளவும், தங்கள் திறமை என்ன என கண்டுபிடிக்கவும் கூட. இப்படிப்பட்ட ஒருவர்தான் அகஸ்டின் ஸ்வப்னா.

திங்கள், 22 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.

சாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி.  (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)

வெள்ளி, 19 அக்டோபர், 2012

எடைமேடை.

தன்னைத்தானே நீதிமானாகக்
கற்பித்துக் கொள்ளும் ஒருவன்
பார்க்கும் அனைத்தையும்
எடையிட்டுக் கொண்டிருக்கிறான்.

கடந்து செல்லும் ஒரு பெண்ணை
உற்று நோக்குகிறான்.
அவள் திரும்பப் பார்த்தால்
மகிழ்வடைகிறான்.
 பிடித்தமானவள் என்றோ
உத்தமி என்றோ
குறியீடு இடுகிறான்.

வியாழன், 18 அக்டோபர், 2012

சந்திப்பு..

ஒரு உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.

எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்

இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.

புதன், 17 அக்டோபர், 2012

பன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்சுதன்.

வண்ணத்துப் பூச்சியின் மெல்லிய அழகோடு பச்சைக் கிளியின் மொழியோடு ஒரு அழகிய பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அவர்தான் அர்ச்சனா அச்சுதன். தந்தை பெயர் அச்சுதன் . ரோட்டேரியன். தாய் மதுமதி அச்சுதன். தன் புத்திசாலித்தனமன பேச்சுக்களால் அடுத்தவர்களை தன்னுடைய இரண்டு வயதிலேயே மயங்கச் செய்தவர். எந்தக் கேள்விக்கும் பட் பட் என்று பதில் சொல்லும் இந்தப் பைங்கிளிக்கு ஒரு சின்ன குறைபாடு இருப்பதை இவரின் பெற்றோர் கண்டுபிடித்தார்கள். அது செரிப்ரல் பால்ஸி எனப்படும் ஒரு மூளைச் செயல் குறைபாடு நோய்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்..

பெண்கள் தினம் கொண்டாடப்படுவதே உழைக்கும் மகளிரைக் கொண்டாடத்தான். என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணும் இங்கே சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணுக்கு இங்கே நல்ல சம்பளத்தில் காம்பஸ் இண்டர்வியூவில் கிடைத்த வேலை. அவருக்கு அந்த வேலையைத் துறந்துவிட்டு திருமணம் செய்து அமெரிக்கா செல்ல யோசனை. கைநிறைய சம்பாதித்து செலவு செய்தது போக எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்க்கவேண்டுமே என்ற அச்சம். தன்னுடைய தனித்துவம் , பொருளாதார சுதந்திரம் போய்விடுமோ என்ற கவலை.

ஒரு நாள் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன் அவரோடு. அங்கே சென்றபின்னும் அதேபோல வேலை கிடைக்கும் . எனவே திருமணத்துக்கு சம்மதிக்கும்படி சொன்னேன்.இன்று அங்கே சென்று ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். காரியர் என்பது இந்தக் காலத்தில் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது., திருமணம் செய்து கொள்ளக் கூட யோசிக்கும் அளவு.

திங்கள், 15 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்..

திருச்சி தினமலர் பதிப்பில் சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் 2012 மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகி உள்ளது. அதில் சுபா என்பவர் மிக அழகான விமர்சனம் அளித்துள்ளார். அதைப் படித்துத்தான் சிதம்பரம் மகளிர் கல்லூரியில் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டிருந்தார்கள். நான் அப்போது சென்னையில் இருந்ததால் விமர்சனம் வந்தது தெரியவில்லை.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

திரைகடலோடியும் அருந்தமிழ் தேடும் நறும்புனல் வெற்றிவேல்..

சாவி குழுமத்தின் மூலமாக இன்றைய ஆ.வி மாணவர் திட்டத்திற்கு முன்னோடியான மாலனின் திசைகள் வார இதழ் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகம்.. குமுதம் சூர்யகதிர் இதழ்களில் சிறுகதைகளும் இந்தியா டுடே , தினமணி இதழ்களில் கட்டுரையும் வெளிவந்துள்ளது.. பல்வேறு இணைய இதழ்களில் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.. . தீவிர வாசகர்.. சங்க இலக்கியம் முதல் இன்று வலைப்பூக்கள் மூலம் எழுத வந்துள்ள இளம் படைப்பாளிகள் வரை அனைத்தும் படிப்பதில் ஆர்வம்.. இலக்கியம் தவிர அரசியலில் அதிக ஆர்வம்.. திராவிட இயக்கச் சிந்தனைகள் கொண்டவர்..

வெள்ளி, 12 அக்டோபர், 2012

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

வாழுங்கள் வாழ்கையை ..
உணருங்கள் அதன் அற்புதத்தை ..

நல்ல நட்பு காதலாக மாறி இன்று இனிமையான இல்லறம் .. எங்களுடைய நட்பு நம்ம பல்லவன் போக்குவரத்து கழகம் இதில் தான் ஆரம்பித்தது.இது தொடர்ந்து ஒரு ஒன்னரை வருடங்கள் நல்ல நடப்பு பயணித்தது...எனக்கு திருமண பேச்சு ஆரம்பித்த சமயத்தில் எங்களுக்குள் ஒரு மாற்றம் ...இதை ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே பகிர்ந்து கொண்டோம் அப்போது எடுத்த முடிவு தான் எங்கள் திருமணம்..

வியாழன், 11 அக்டோபர், 2012

காதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..

காதலாகி கசிந்துருகி...................

நம்ம ஹீரோவை முதல் முதல்ல சந்திச்சது என் சித்தியின் வீட்டுலதான்............சித்தியின் குடும்ப நண்பர்ங்க என் கணவர்........ பார்த்தோம் பிடிச்சுது பழகினோம் அப்புறமென்ன அப்புறம் கல்யாணம்தான்..............அதிவேக நிகழ்வுங்க.......காதல் பண்ணவும் கல்யாணத்துக்கும் நடுல ஜஸ்ட் நாலே மாசம்தாங்க.... நோ ஃபைட்,நோ டூயட் நோ சேசிங்....... ஆனா அந்த நாலு மாசத்திலயும் ஒரே ரொமான்ஸ்தான்....

புதன், 10 அக்டோபர், 2012

கானாவும் வெண்பாவும் அபுல்கலாம் ஆசாத்தின் எண்ணத்தில்.

///எல்லாரும் எதிலிருந்தாவது விடுதலை பெறவேண்டும் என்னும் நினைப்பில் கொஞ்சமாவது ஆழ்ந்துதான்போகிறோம் என்பது எனது கருத்து. சில தத்துவார்த்தமான பொழுதுகளில் துறவறச் சிந்தனை மேலோங்கி குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்வோமா என்னும் நினைப்பு தோன்றுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன./// இது விடுதலை என்ற தலைப்பில் ஒரு போட்டிக்கு தேன்கூடு .காமுக்கு அனுப்பச் சொன்னபோது நான் ஆசாத்ஜி எனக் குறிப்பிடும் திரு. அபுல் கலாம் ஆசாத் சொல்லியது.

காத்திருக்கிறேன்..

நான் காத்திருக்கிறேன்
என்பது தெரிந்தும்
உணராமலே வீடு சேர்கிறாய்
ஒவ்வொரு நாளும்.

உன் கைபிடித்துக்
கடைவீதி செல்லக் காத்திருக்கிறேன்.
தனியறையில் துய்க்காமல்
தேனிலவென்று சென்று
சுற்ற காத்திருக்கிறேன்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இல்லத்தரசிகள் பற்றிய மனோபாவம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் நீங்க என்னவா இருக்கீங்க என்று கேட்டால் நான் வெறும் ஹவுஸ் வைஃபாதாங்க இருக்கேன். என சொல்லி இருக்கிறேன் . அது என்ன ஹவுஸ் வைஃப். சில வீடுகளில் தற்போது பெண்கள் நல்ல ப்ரொஃபஷனில் இருக்க அவர்கள் துணைவர்கள் எழுத்தாளர்களாகவோ அல்லது திரைத்துறையில் வெற்றி காணும் முயற்சியிலோ ஈடு பட்டு இருக்காங்க. மனைவி அலுவலகம் செல்ல அவங்க துணையா இருக்காங்க இது அவர்களின் சுய தேவையின் பொருட்டே. அவங்க கிட்ட நீங்க என்ன செய்கிறீங்கன்னு கேட்டா நான் தற்போதைக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டா இருக்கேங்க என சொல்வதில்லை. மாறாக என்ன செய்ய அல்லது என்னவாக ஆக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விலாவாரியாக சொல்வார்கள்.

ஹவுஸ் வைஃபாக மட்டும் இருப்பது ரொம்ப சுலபமான காரியமா என்ன.?

திங்கள், 8 அக்டோபர், 2012

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி -- சாதனை அரசிகள்

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரியில் இருந்து என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டுக் கடிதம் வந்தது. தினமலர் திருச்சி பதிப்பில் வெளிவந்த சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் பார்த்தபின் புத்தகம் வேண்டி மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

சனி, 6 அக்டோபர், 2012

அலமாரி

குழந்தைகள் வளர வளர
உடுப்புக்கள் வளர்வதுபோல்
அலமாரிகள் வளர்வதில்லை.
 நகைகளும் சில சேர்ந்ததால்
லாக்கருடன் இன்னொரு பீரோதேடி
கணவனும் மனைவியும்
கடைகடையாய் அளந்தார்கள்.

அவன் சாக்லெட் நிறமெனில்
அவள் அது செங்கல் நிறமென்றாள்
அவள் சில்வர் க்ரே எனில்
அவன் அது கல்லறைச்சாம்பலென்றான்.
கறுப்புநிற அலமாரி பார்த்து
அது சாத்தானின் நிறமென்று
தள்ளிப் போகிறார்கள்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

தொலைந்த ஒன்று

தொலைத்தது எங்கே
எனத் தெரியவில்லை
தேடுவது எங்கே எனவும்
பிடிபடாததாக.

இருட்டிலும் வெளிச்சத்திலும்
துழாவிக் கொண்டிருந்தேன்
தொலைத்த இடம் என
நம்பப்பட்ட இடத்தில்..

அது என்னுடையதாகத்தான்
இருந்ததாகத் தோன்றியது
வேறொன்றுடையதாகவும்
இருந்திருக்கலாம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

கருணையாய் ஒரு வாழ்வு...

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல்.

கருணையாய் ஒரு வாழ்வு...:-
*******************************

செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.??

பிங்கி :- கருணைக் கொலை என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்..?

செவிலி :- கொலை என்று சொல்லும் போது அதில் கருணை எங்கே வந்தது.. இந்திய இறையாண்மைப்படியும் வாழும் உரிமைகள் குறித்தே சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கு. கருணைக் கொலை குறித்து ஏதும் சட்டங்கள் இயற்றப்படவில்லை

புதன், 3 அக்டோபர், 2012

அளவுகோல்..

வெளியூர் சென்றுவந்தபின்
உறவினரைப் பார்த்துவந்தபின்
அலுவலகப்பெண்களைப் பார்க்கும்போதும்
அந்நியப்பெண்களைப் பார்க்கும்போதும்
அவர் கையில்
அளவுகோல் முளைத்துவிடுகிறது.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இன்னொரு ஜென்மம்.

பள்ளித் தோழனைப் போல
தோளணைத்துச் செல்ல வேண்டும்.
காக்காய் கடி கடித்து
கமர்கட் சாப்பிட வேண்டும்.
அட்டை வாளால்
விளையாட்டாய் சண்டை
போட்டுக் கொள்ளவேண்டும்.

திங்கள், 1 அக்டோபர், 2012

நட்பு அழைப்பு

கோமாதாக்கள் கூட்டுறவு
சங்கங்களுக்கு பால் கறக்கின்றன.

கோவர்த்தனகிரிகள் கூறாகி
கிரைண்டர் கல்லும்., தரையுமாய்.

யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில்
கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.

சனி, 29 செப்டம்பர், 2012

உயிரற்றும் இருப்பது.

ஒற்றைக் கோப்பையில்
இனிப்புத் திரவம்
வசீகரித்தது.

இதமான சூட்டில்
ஆடை மேலமர்ந்ததும்
கால் வழுக்கியது.

தலைகுப்புற விழுந்ததும்
ஞாபகம் வந்தது
நீச்சல் தெரியாதது.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இடறல்.

ஹாய் செல்லம்
மிஸ்யூடா
அச்சுறுத்துகிறது.,
குறுங்கத்திகளாய்
கண்களைக் குத்துமுன்
மடக்கிக் குப்பையில்
போடும்வரை.

வியாழன், 27 செப்டம்பர், 2012

சகிப்பு

கர்ண குண்டலங்களைப் போல
கனமாக இருந்தாலும்
கழட்டி வைத்துவிட
முடிவதில்லை அவைகளை.

அறுத்தெறிந்தாளாம்
மறத்தமிழச்சி
பால்குடித்தவன்
வீரனில்லை என்பதால்.

புதன், 26 செப்டம்பர், 2012

ஜ்வெல் லோன்.

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி..

“என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?”

“ஆமாம். நீங்க நலமா..”

பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா இருக்கா போல என நினைத்தார்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

”சாதனை அரசிகளு”ம், ”ங்கா”வும் மயிலாடுதுறையில்.

”சாதனை அரசிகள்” மற்றும் ”ங்கா” புத்தகங்கள் நன்கு விற்பனை ஆகி வருகின்றன. சாதனை அரசிகள் புத்தகம் வெளிவரும் முன்பே சகோதரர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அதன் முழு விநியோக உரிமை - டிஸ்கவரி புக் பேலஸ் என்று போட்டு வெளியிடவேண்டுமென்று சொன்னார்.

வள்ளல்.

வேலை செய்பவளுக்கு
முதல் தேதியே சம்பளம்..
பிச்சை கேட்பவனுக்கு
ஒற்றை ரூபாய்.
அநாதை ஆசிரமத்துக்கு
பழைய துணிகள்.
உறவினர் குழந்தையின்
கல்விச் செலவில் ஒரு பங்கு

திங்கள், 24 செப்டம்பர், 2012

வீடும் வீடு சார்ந்த இடமும்..சமுதாய நண்பனில்

அடி பம்பு.,
முக்குச் சந்து.,
மிரட்டும் வண்டிகள்.,
பெட்டிக் கடை,
தண்ணீர் லாரி.,
சிதறிய குப்பைத்தொட்டி.,
வறுபட்ட பஜ்ஜிகள்.,
மழைச்சேறு
மனித முகங்களைச்
சுமந்து கிடந்தது
எனக்கான வீடு..

சங்கடம் . ( ஆனந்தவிகடன் சொல்வனத்தில்..)

வெள்ளையடித்தபின்னும்
மின்னும் க்ரேயான் பொம்மைகள்.
மிச்ச தேதிகளோடு
தொங்கும் நாட்காட்டி
பால்கனிக் கொடியில்
காற்றிலாடும் கிளிப்புகள்.
சுவற்றலமாரியில் கிடக்கும்
பாச்சை உருண்டைகள்
தாளிதத்தின் தெறிப்புகளை
சுமந்திருக்கும் சமையலறை மேடை.

சனி, 22 செப்டம்பர், 2012

இணையத் தமிழால் இணைவோம்.. இனிய செயலால் வெல்வோம்..(ஃபெட்னாவுக்காக எழுதியது)

இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழ் இவை அறிவோம். இணையத்தமிழும் இனிமையாக இருக்கிறது.முத்தமிழும் முக்கலையும் மூவேந்தர் காத்த நாட்டில் இணையத்தில் தமிழ் வளர்க்கும் இனிய தமிழர் நாம். உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இயல்பாய் ஆக்கியுள்ளது இணையத்தமிழ் மற்றும் வலைப்பூக்கள் என்றால் மிகையாகாது. இணையத்தமிழர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கேற்றாற்போல இணையத்தமிழ்ப் பகிர்வுகளும் படைப்புக்களும் ஆக்கங்களும் மெருகேற வருகின்றன.

தமிழ் கூறும் நல்லுலகில் பத்ரிக்கைகளால் அறியப்பட்டவர்கள் மட்டுமே படைப்பாளிகளாகக் கருதப்பட்ட காலத்தில் இணையம் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பதிவு செய்ய தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. தமக்கு தாமே ஆசிரியர்கள், தம்முடைய கருத்துக்களைத் தங்கள் வலைத்தளம், வலைப்பூ ஆகியவற்றில் முழுமையாக பகிர்வு செய்து உடனடியாக விமர்சனங்கள் பெற முடிகிறது. தங்கள் கருத்தை ஒட்டிய கருத்தோ அல்லது மறுப்புக் கருத்துக்களோ உடனேயே அறிய முடிகிறது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சிப்பியின் ரேகைகள்..

கால் எவ்விப்
பறக்கும் நாரை
நாங்கள் விளையாடி
ஓடிய திசையில்..

கடலலைகள்
நுரைத்துத் துவைத்திருந்தன
எங்கள் காலடித்
தடங்களை

அதே கடலும்
கடலையும் சுவைத்த
சுவை மொட்டுக்கள்
நாவினுக்குள்

வியாழன், 20 செப்டம்பர், 2012

நல்ல மனம் வாழ்க.

தேனே,நலமா? என்ற கேள்விகளோடுதான் துவங்கும் இவரது கடிதம். முகம் பார்த்ததில்லை. லேடீஸ் ஸ்பெஷல் ப்லாகர் அறிமுகத்துக்காக ( நிஜமாவே பெண்களை மட்டுமே அறிமுகப்படுத்தணும்னு ஆரம்பிக்கட்டது அது. )சுயவிவரப் படம் பார்க்கப் போனால் ஒரு கறுப்புப் பூனைக்குட்டி முகம் மறைத்து மியாவ் என ஒலி எழுப்பியது. யாருடா இந்த அப்சரஸ் என நினைத்தேன் ( ஹாஹாஹா கறுப்பு தேவதை என நினைத்தால் இவர் ஒரு வெண்ணிற தேவதையேதான். )

உரையாடல்..

மீன் சுவாசம் போல்
உள்ளிருந்து வெடிக்கும்
ஒற்றைப் புள்ளியில்தான்
துவங்குகிறது
ஒவ்வொரு உரையாடலும்.

குளக்கரையின் எல்லைவரை
வட்டமிட்டுத் திரும்புகிறது.,
ஆரோகணத்தோடு.

புதன், 19 செப்டம்பர், 2012

மழையாய் பாடுதல்

மழையை உறிஞ்சிச்
சுவைத்துக் கொண்டிருந்தேன்..

நீர்ச்சுவை என் மொட்டுக்களில்
தாமரைத் தண்டாய்.

குழந்தையின் எச்சில் போல
சுவையற்றிருந்தது அது.

நீர்க்கதிரைச் பாய்ச்சி
நிலத்தை உழுது கொண்டிருந்தது.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

என்ன மட்டும் ஏன் கோடீஸ்வரி ஆக்கணும்னு துடிக்கிறீங்க

என்ன மட்டும் ஏன் கோடீஸ்வரி ஆக்கணும்னு துடிக்கிறீங்க.இது நான் பல நாளா ஜி மெயில்ல வந்த ஸ்பாம் மெயில்ஸப் பார்த்துக் கேட்க நினைச்ச கேள்வி.

என்ன மட்டுமில்லாம எல்லாரையும் கோடீஸ்வரர்களா ஆக்கணும்னு நிறைய கோக்கு மாக்கு கம்பெனிகள் முடிவு செய்துட்ட மாதிரி இருக்கு. உங்ககிட்ட ஒரு செல்ஃபோன் இருந்தா போதும். நீங்க கோடீஸ்வரர் ஆக சான்ஸ் எக்கச்சக்கம். இப்பவெல்லாம் அட்வான்ஸ்டா செல்ஃபோனிலேயே உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கிடணும்னு ஏகப்பட்ட பேர் துடிக்கிறாங்க.

1. +************ YOUR GSM NUMBER WON 2.5000,000.00GBP, EQUIVALENT TO 221,963,239.52 INR, FOR PAYMENT EMAIL YOUR BIO-DATA TO UNITED BANK LIMITED VIA:UBLTD@LIVE.COM

வயது ஒரு தடையல்ல..

”மங்களா சிமிண்ட் 100 வாங்கிரு..அப்புறம் கேவீபீ என்ன ஆச்சு.. இன்னைக்கு ஏறுமா.. வைச்சுக்குவோமா வித்திருவோமா..” என்ற குரலுக்குச் சொந்தக்காரர் .. 65 வயதான முத்துக் கருப்பாயி ஆச்சி.. இது பங்குச்சந்தையில் அவர் முதலீடு செய்து ஏறினால் விற்பது.. இறங்கினால் வைத்துக் கொள்வது என்ற பாலிசியில் செய்யும் பங்கு வர்த்தகம்.

எந்த வயதானால் என்ன .. வட்டித்தொழில்., பங்குச்சந்தை என்பது எல்லாம் ரத்தத்திலேயே ஊறி இருக்க வேண்டும்.. இது ரிஸ்கானதாச்சே .. அதை செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்..

திங்கள், 17 செப்டம்பர், 2012

நெல்லை சந்திப்பு. எனது பார்வையில்.

மீரா கிருஷ்ணன், மேகா நாயர், தேவிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், யுவஸ்ரீ என பெண்கள் அனைவரும் நடிப்பில் அசத்தியும் புவனை ஸ்ரீ நடிப்பில் மிரட்டியும் இருக்கும் படம் இது. அதே சமயம் பாபிலோனா கவர்ச்சியில் மிரட்டுகிறார். ரோஹித், பூஷண், தேனப்பன், சரவணன் சுப்பையா, இவர்கள் நடிப்பும் அருமை.

 நெல்லை சந்திப்பில் ஒரு சில முறை ட்ரெயின்கள் வந்து போகின்றனவே தவிர இது நெல்லையில் நடந்த ஒரு தவறான என்கவுண்டரைப் பற்றியும் அதன் பின் விளைவுகள் பற்றியதுமான கதை

மயிலின் சீற்றம். வடிவுக்கரசியின் பேட்டி

மயிலின் சீற்றம் பார்த்திருக்கிறீர்களா.. தன் கொண்டையை அசைத்துக் கொண்டே அது அகவுவதைப் போல அழகாய் இருந்தது திரைப்படம் மற்றும்., தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்., இன்றளவும் வடிவழகியான நடிகை வடிவுக்கரசியின் பேச்சு.. வேறொன்றுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இருவரும் எதிர் எதிர் அணியில் அமர்ந்து பேச வேண்டியதாயிருந்தது. அப்போது நான் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு உண்டான கோபத்தில் இருந்தார் அவர். திரும்ப என் நிலைப்பாடை எடுத்துச் சொல்லி விடாது கருப்பு மாதிரி தொடந்து படையெடுத்து அவரிடம் இந்தப் பேட்டியை வாங்கினேன்..

1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நீங்கள் நடிக்க வந்தது எப்படி.?

எனக்கு சொந்த ஊர் வேலூர் இராணிப்பேட்டை. எட்டாவது வரை அங்கே படித்தேன். பின் ஒன்பதாவது படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன். வாலாஜா காலேஜில் பி யூ சி படித்தபின் அடையாரில் ஹோட்டல் மானேஜ்மெண்ட். அப்புறம் கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தேன்.

சனி, 15 செப்டம்பர், 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1980 இல் விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 20,000 உறுப்பினர்கள் கொண்டது. 4000 க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியுள்ளது.

மூடநம்பிக்கைகளை ஒழித்திட அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பிரச்சாரமும் செய்து வருகிறது இந்த இயக்கம். மேலும் கணக்கும் இனிக்கும், அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி காகிதக்கலை, அறிவியல் பாடங்கள், விளையாட்டுக்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

விழுதுகள்.. ( 9 குறுங்கவிதைகள்..)

மரக்கிளைகளின் வழி
வெளிச்ச விழுதாய்த்
தொங்குகிறது சூரியன்...

 ****************************************

வெளிச்ச விழுதுகளில்
குருவிகளாய் ஊஞ்சலாடியபடி
இறங்குகின்றன இலைகள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

போபால், சிவகாசி மற்றும் கூடங்குளம்.

போபால் விஷவாயுவில் எந்தப் பெண்ணும் சாகவில்லை என சகோதரன் நியோ ஒரு இடுகையிட்டிருந்தார். அது பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருந்தேன்.

தற்போது சமூக அக்கறை இல்லாமல் சுயதம்பட்டம் மட்டும் அடிக்கும் பணக்காரப் பதிவர்களால் சமூகத்துக்கு என்ன பயன் என்று ஒரு சகோதரர் ( நிருபர்) முகநூலில் வினவி இருந்தார்.

சமூக அக்கறை என்பது என்ன.? சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி அக்கறை கொண்டு கருத்துப் பதிவு செய்வது. அது முகநூலாயினும் சரி, வலைத்தளமாயினும் சரி. உங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள் செய்திகளைக் கொண்டு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறீர்கள். அடுத்தவர் அவருக்குக் கிடைத்ததைக் கொண்டு பதிவிடுகிறார்.

பிறந்தநாள் பொம்மைகள்..

பிறந்தநாள் குழந்தைக்கு
அணிவகுத்து வருகின்றன
கரடி பொம்மைகள்..
கலர் சாக்குகளில்
பொட்டலமாய் முடியிட்ட
முடிச்சைப் பிடித்து
கைபோன திசையெல்லாம்
அசைக்கிறது குழந்தை.

புதன், 12 செப்டம்பர், 2012

மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்.

ஜாதிமதங்களைப் பாரோம் என்று எழுதிய பாரதியே கலந்து கொண்ட விழா என்றால் அது 9.11.1919 இல் காரைக்குடியில் நடைபெற்ற ஹிந்து மதாபிமான சங்கத்தின் விழாதான். இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அ.மு.க.கருப்பன் செட்டியார், தமிழ்க்கடல் ராய.சொ. , மகாகவி பாரதியார், சொ.முருகப்பன் செட்டியார், ரெங்கநாதன் செட்டியார்.

மலர்மன்னன் திண்ணையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

/// தேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற பெயரில் ஒரு பொது நலப் பணிக்கான அமைப்பைத் தோற்றுவித்திருந்தனர்.

நதிகளில் நீந்தும் நகரங்கள்

தொங்கும் தோட்டங்கள்.,
மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்.,
நதிகளில் நீந்தும் நகரங்கள்
இவற்றில் சேகரமாகிறது ஆசை.

புகைப்படங்களில்., திரைப்படங்களில்
தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும்.
பசிய., கனிய தோட்டங்களும்
தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும்
நகரங்களையும் காண சேர்கிறது விழைவு

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஆச்சியும் அய்த்தானும்

வழக்கமான தங்கமணி ரங்கமணி கதைதான். ஒரு உப்பு சப்பில்லாத கதைன்னு நீங்க சொல்லிடக் கூடாதுல்ல.. அதுனால ஒரு ஒட்டுதலா செம ஆய்லியான கதைங்க.

ஒண்ணுமில்லங்க.. ஆச்சி சமையல் எக்ஸ்பர்ட். ஒரு நாள் ஆச்சி எலுமிச்சம்பழச் சாதம் பண்ணுனாங்க. சாதத்த குக்கர்ல வச்சிட்டு ஒரு கப்புல கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,கொஞ்சம் வெந்தயம், வர மிளகாயும், இன்னொரு கப்புல பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சியும், இன்னொரு கப்புல உப்பு, மஞ்சப் பொடி போட்டு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு வைச்சிருந்தாங்க.

இந்த சாதத்துக்கு தாளிக்கிற நேரத்துலயா வரணும் சோதனை. ஒண்ணுவிட்ட பெரியத்தாவோ, ரெண்டு விட்ட சித்தப்பாவோ, பள்ளிக்கோடம் படிச்ச சிநேகிதியோ, இல்ல செல்லப் புள்ளங்களோ தெரியல., யாரோ ஃபோனைப் போட்டுருக்காங்க ஆச்சிக்கு. ஆச்சியும் செல்லங்கொஞ்சிக்கிட்டே இருப்புச் சட்டியில சாதம் தாளிக்க எண்ணெய் ஊத்துறப்ப சும்மா நாலு ஸ்பூன் ஊத்தாம ஜார்லதான் எண்ணெய் கம்மியா இருக்கது போல இருக்கேன்னு எண்ணெய் ஜாரை கவித்துட்டாங்க.

மல்லிகை மகள் குழந்தைக்கவிதைகள்

வெளியேறும் நேரம் வந்தும்
வெளியேறவில்லை நீ
வெட்டித்தான் பிரித்தார்கள்
உன்னையும் என்னையும்.
******************************

எத்தனை விளம்பரங்கள்
எத்தனை உடைகள் கண்டாலும்
அத்தனையிலும்
உன்னைப் பொருத்தி
அழகுபடுத்தி ரசிக்கிறது மனது.

திங்கள், 10 செப்டம்பர், 2012

மல்லிகை மகளில் உலா வரும் முத்தம்..

காலையில் அலுவலகம்
செல்லுமுன்
வாயிலின் பின்புறம்
கணவன் ஒரு முத்தத்தை
மனைவிக்குப் பரிசளித்துச் செல்கிறார்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

புழுவா.. புலியா.:

செங்கற்கள் வீடு கட்ட அடுத்த காம்பவுண்டில் வேலியற்று அடுக்கப்பட்டிருந்தன. வருடக்கணக்காய் பாழடைந்து கொண்டிருந்த அந்தச் செங்கல்கள் திடீரென ஒரு நாள் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டு இடம் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. செங்கல்கள் குவிக்கப்படுவதும் அடுக்கப்படுவதுமான சத்தத்தில் அது அடுக்கப்பட்டிருந்த பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்த அம்மா தன் இரு பெண்களுடன் வந்து எங்கள் பக்கப் படிக்கட்டுக்களில் அமர்ந்து அந்தச் சித்தாள்களிடம் ஒரே விசாரணை. பூச்சி பொட்டெல்லாம் எங்க வீட்டுக்குள் வந்துடப் போகுது . பார்த்துப் பிரிங்கண்ணா என்று.

சனி, 8 செப்டம்பர், 2012

சன்ஷைன் ப்லாகர் விருது.

திரு கோபால் சார் அவர்கள் கொடுத்த விருது.

உரத்த சிந்தனை அமைப்பில் கடந்த வருடம் விருது வாங்கியவர். தமிழ் மணம் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது சுமார் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு கதை வீதம் 27 கதை எழுதி அமர்க்களப்படுத்தியவர்.
Related Posts Plugin for WordPress, Blogger...