சனி, 22 டிசம்பர், 2012

மெல்லினத்திற்கு வயது இரண்டு..!!!

பத்ரிக்கை என்பது போர்வாள் என்றால் அதன் தலையங்கம் அதன்  கூர்முனை போன்றது.மெல்லினத்தின் தலையங்கமும் அதுபோலத்தான். ”பெட்ரோல் அரசியல்”, ”இலங்கையைக் குறிவைக்கும் அமெரிக்க முதலீட்டுப் போர் ”போன்ற தலையங்களைப் படித்து விட்டு என் கணவரும் இதையே வழிமொழிந்தார்.


இரண்டாம் பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறது மெல்லினம். அதன் அங்கமாய் பெருமிதமாயும், சந்தோஷமாயும் இருக்கிறது. இதழ் தொடங்குமுன் அதற்காக சகோ வெங்கடேஷ் மகாதேவன் என்னிடம் பெண்மொழி என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதித்தரக் கேட்டிருந்தார்.

அப்போது சில தமிழ்ப் பத்ரிக்கைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததால்
முடியுமோ என்ற சந்தேகம் இருந்தது. இருந்தும் ஒப்புக் கொண்டேன். அட.. ஒரு வயது பூர்த்தியாகி இரண்டாவது வயதில் அடியெடுத்து வைக்கும் மெல்லினத்தின் 13 வது இதழில் என் இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 13 இதழ்களில் 14 கட்டுரைகளும் ஒரு கவிதையும் இடம் பெற்றுள்ளது. நன்றி மெல்லினம் .!

மெல்ல மெல்லத் தன்னை மெல்லினத்தில் இருந்து வல்லினமாக மாற்றி வருகிறது மெல்லினம். அர்த்தம் மிகுந்த தலையங்கங்கள், அழுத்தம் மிகுந்த கட்டுரைகள், அரசியல் கண்ணோட்டங்கள், பங்குச்சந்தை பயனா பயமா, ஆலோசனைகள்,  கேள்விகள் ஆயிரம், சினிமா செய்திகள், சினிமா பிரபலங்களின் பேட்டிகள், கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள், குறுக்கெழுத்துப் போட்டி, குழந்தைகள் வண்ணம் தீட்டும் பகுதி, சமையல், ஆன்மீகம், திருக்கோயில் உலா, முகநூல் மொழி,  ஆஸ்த்ரேலியத் தமிழர், தமிழ்ச்சங்கங்கள் செயல்பாடுகள் பற்றிய செய்திகள், ஆஸ்த்ரேலிய அரசியல் செய்திகள்,கல்வி முறை,  இராசி பலன், சிறுகதைகள். சினிமா செய்திகள்.. ஆன்மீக வினா விடை என எந்தத் துறையிலும் மிச்சம் வைக்காமல் அனைத்தும் அருமையாய் இருக்கிறது,

சங்கரசுப்பிரமணியனின் சிறுகதைகள், முகங்கள், விழாக்கால பகிர்வுகள், ஆசியாவைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் ( தவிர்க்கமுடியாத வளரும் நாடுகளின் பட்டியலில் சீனாவோடு இந்தியாவும் இருப்பது பெருமையாக இருக்கிறது ) ஆஸ்திரேலியாவின் ஆசிய நூற்றாண்டுக் கொள்கைத் திட்டம் என்ற தலைப்பில் பழனிசாமி அவர்களின் கட்டுரை அருமை.

நான் விரும்பிப் படிக்கும் பகுதி. பாமரன் கேள்வி பதில்கள், செம நச் பகுதி இது.
மெல்போர்ன் அரவிந்தின் கவிதைகள், கலைச்செல்வனின் கிரிக்கெட்/விளையாட்டுக் கட்டுரைகள்,  வெங்கடேஷ் மகாதேவனின் பாடல் தந்த பரவசம், நடிகரும் நண்பருமான டெல்லி கணேஷ்  அவர்களின் அது ஒரு நிலாக்காலம் இவை நெகிழவைக்கும் பதிவுகள்

ரமா அரவிந்தின் புலாவ் இந்த இதழின் ஸ்பெஷல், பூஜ்ஜியனின் சிறுகதை அருமை. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் 64 பக்கங்களில் அட்டைகளைத் தவிர எங்குமே விளம்பரங்கள் இல்லை. !!!அது படிக்கச் சரளமான உணர்வை உண்டு  பண்ணுகிறது .  கலர்ப் பக்கங்களில் வழுவழுத்தாள்களில் பார்க்கவும் படிக்கவும் அருமை

பரமக்குடி கலவரம், தர்மபுரி சாதிப் பிரச்சனை ஆகியனபற்றிய தைரியமான கட்டுரைகளும் என்னைக் கவர்ந்தவை. பரிதி எனப்படும் நடராசா மதீந்திரனின் கொலையும் அதன் பிண்ணனிகளும் பற்றி துரை  எழுதி இருக்கிறார்.  பாம்புக்குழு, வெண்ணிலாக் குழு, முக்காப்பாலா குழு, மின்னல் குழு என கொலை கொள்ளை . வாள்வெட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களைப் பற்றிக்கூறி  ஃப்ரான்ஸ் வாழ்வைப் பற்றிய அதிர்ச்சியைக் கிளப்பியது இது.

என்னுடைய பெண்மொழிக் கட்டுரைக்கு சிட்னியைச் சேர்ந்த ஜெயலெட்சுமி குமாரசெல்வத்தின்  கடிதம் ஊக்கமூட்டுவதாய், உரமூட்டுவதாய் இருந்தது.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இயங்கும் அயல்நாட்டுக் கல்வித்துறையில் “அயலக இதழ்கள் “ என்ற தலைப்பில் செல்வி மகேஸ்வரி என்னும் மாணவி முனைவர் பட்டத்திற்காக பேராசியசிரியர் முனைவர் கே. வெற்றிச்செல்வனின் வழிகாட்டுதலின்படி  ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும்  நம் “ மெல்லினம்”  மாத இதழ் ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தகவலை தஞ்சாவூர்  அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையைச் சேர்ந்த தி. இராஜராஜேஸ்வரி என்ற ஆய்வியல் நிறைஞர் மாணவி பகிர்ந்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் உள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தமிழ்த்துறை சார்பாக வைக்கப்பட்ட காட்சிப் பொருளில் இக்கால சிற்றிதழ்கள் தலைப்பில் மெல்லினத்தின் எட்டு இதழ்கள் வைக்கப்பட்டு  கிட்டத்தட்ட 2000 மாணவர்களாலும் பொதுமக்களாலும்  புரட்டிப் பார்க்கப்பட்டது என்ற செய்தியை வலிவலத்தைச் சேர்ந்த முதுகலைத் தமிழாசிரியர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்

ஆஸ்திரேலியாவில் 1200 சந்தாதாரர்களைப், ( விக்டோரியா, நியூசவுத்வேல்ஸ் , குயின்ஸ்லாந்து, டார்வின், சௌத் ஆஸ்திரேலியா, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா)  பெற்றுள்ளது. விக்டோரியா மாநிலத்தின் இந்திய தூதரகத்தின் அங்கீகாரம் பெற்ற “பத்ரிக்கையாளர் ஒருங்கிணைந்த அமைப்பி” ல்  ( IMOA) உறுப்பினராகவும்,  தஞ்சைத் தமிழ்ப் பலகலைக் கழகத்தில் “வெளிநாடுகளில் பதிப்பிக்கப்படும் தரமான தமிழ்ப் பத்திரிக்கைகள் “ என்ற ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் உள்ளது.  இந்தியாவில் சிறப்பு சந்தாதாரராக பதிவு செய்தவர்கள் 150 பேர்.

தரமான இந்த இதழைத் தருவதில் தங்களது பணிக்கிடையிலும் அயல்நாட்டு
வாழ்வியல் முறைகளுக்குட்பட்டும், நேரம் ஒதுக்கி செயல்படும் ஆசிரியர் குழுவினர் -- மெல்போர்ன் அரவிந்த், பாண்டிமாதேவி பழனிச்சாமி, வெங்கடேஷ், சிவகங்கா சகாதேவன், கலைசெல்வன், குமாரசெல்வம், புகைப்படக் கலைஞர் ஏ.பி. குருசாமி ( இவரது புகைப்படங்கள் அற்புதம். புத்தகத்தின் பக்கங்களுக்கு அழகூட்டுவதில் இவற்றின் பங்கும் நிறைய ) மணிமாறமன் ஆகியோருக்கு என் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள்.

“யாமார்க்கும் குடியல்லோம்” என தனது பாணியில் அஞ்சாமல் தலையங்களும் கட்டுரைகளும் பகிர்ந்து வரும் மெல்லினம் வல்லினம் ஆனது உண்மைதானே. தமிழர்க்கு பணியே தலையாய பணி என இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்  இந்த நல்லினம் இன்னும் பல நூற்றாண்டுகள் தமிழர்க்குச் சேவை செய்ய வாழ்த்துக்கள். !!!

4 கருத்துகள் :

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

இரண்டாம் வருடம் முடிந்து மூன்றாம் வருடத்தில் அடியெடுக்கும் மெல்லினத்துக்கு வாழ்த்துக்கள்

Ranjani Narayanan சொன்னது…

இரண்டாவது ஆண்டு நிறைவை காணும் 'மெல்லினம்' இதழுக்கும், அதன் வளரிச்சியில் சீரிய பங்கு கொண்டிருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கண்ணதாசன்

நன்றி ரஞ்சனி மேடம்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...