புதன், 21 பிப்ரவரி, 2018

காதல் வனம் :- பாகம் 14. அழகியை மீட்ட அழகி.


காதல் வனம் :- பாகம் 14. அழகியை மீட்ட அழகி.

”காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும்வரை”  என்று ஜெமினியும் சந்திரபாபுவும் பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகள் செயின்போலக் கோர்த்தும் வரிசையாகவும் தும்பிக்கை பிடித்தும் அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. அழகியின் தந்தை செந்தில்நாதன் முகமலர்ச்சியோடும் சிறிது கவலையோடும் அமர்ந்திருந்தார்.

அவர் கையசைக்கவும் ஹாலில் இருந்த டிவியை ரிமோட் கொண்டு அணைத்துவிட்டுச் சென்றான் பணியாள். அவரது மனைவியும் மகனும் கூட அமர்ந்திருந்தார்கள். அழகி தெளிவில்லாத முகத்தோடு நீரில் நனைந்து கசங்கிய ஒரு பூங்கொத்துப் போல அமர்ந்திருந்தாள். இன்னும் கூட ஹார்மோன்களை இசைபாடத் தூண்டும் அவளது அழகு ஸாமுக்குப் பிரமிப்பூட்டியது. 

கல்யாணகாலம் வரும்வரைதானா காதல்.. என யோசித்தபடி செந்தில்நாதன் அருகில் அமர்ந்திருந்தார் ஸாம். அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. அழகியுடனான காதல் வாழ்வு.. எத்தனை நாள் ஏக்கம். நாள்கடந்து கிடைத்த வரம். அவரை வெறுமையாக்கியதோடு சிறிது அயர்வையும் தந்தது.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

ஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்மலர் - 6.

அப்பனுக்கே அம்மையானவள்.

யார் இந்தப் பெண்.?. பேயுரு எடுத்தாற்போல் தலைகீழாய் கைகளால் கைலாயத்தில் ஏறி வருகிறாளே. பார்க்கவே பீதியூட்டும் நரம்பும் தோலும் எலும்புமான இப்பெண்ணைப் பார்த்துப் பரிவோடும் பாசத்தோடும் முக்காலமும் உணர்ந்த சிவ பெருமான் “அம்மையே வருக “ என்றழைக்கிறாரே. 

ஆதி அந்தம் அற்ற சிவனுக்கும் தாயான இவள் யார். ? சிவபூதகணம் போல் இவள் இப்படி ஆனது எப்படி ?

ஒரு மாங்கனி அவளை இப்படி ஞானப்பெணாக்கியது என்று நம்ப முடியுமா .. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாம் காரைவனம் என்னும் மாநகருக்குச் செல்லவேண்டும்.

காரைமாநகரில் தனதத்தன் தர்மவதி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிவபூசனையில் ஈடுபாடு உள்ள குடும்பம் என்பதால் புனிதவதியும் சிவபக்தையாகவே வளர்ந்தார். உரிய பருவத்தில் அவருக்கும் பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்கள் புனிதவதியின் பெற்றோர்.

தனியே ஒரு இல்லத்தில் புதுமணத் தம்பதிகள் வசித்து வந்தபோது பரமதத்தன் இரு மாங்கனிகளை வாங்கித் தனது இல்லத்துக்குக் கொடுத்தனுப்பினார். அவற்றை வாங்கி வைத்த புனிதவதி சமையலில் ஈடுபட்டார்.

சனி, 17 பிப்ரவரி, 2018

காரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள்.

காரைக்குடி புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அய்க்கண், லயன் வெங்கடாசலம் ஆகியோரின் முன்னெடுப்பில் வருடாவருடம் இத்திருவிழா களைகட்டிவிடுகிறது. இன்னும் சில இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதோடு புத்தகம் வெளியிட கிரியா ஊக்கியாகவும் அமைகிறது.

அரிமழம் வைத்திய சாலையின் ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன் காந்திய காலத்துக்கொரு பாலம் என்ற நூலில் ஆசிரியர். அவர் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களின் போது தன்னார்வலராக புத்தக ஸ்டால்களை நிறுவி இலக்கிய புத்தகங்களை வெகுஜன வாசிப்புக்குக் கொண்டு செல்வது வருடா வருடம் காணும் காட்சி. இந்த வருடம் மரப்பாச்சி என்ற அவருடைய ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன்.

காந்திய நூல்கள் அதிகம்,நவீன இலக்கிய நூல்களின் புது வெளியீடுகளும் அதிகம் உள்ளன. இன்பாவின் வையாசி படித்தீர்களா எனக் கேட்டார். ( பாதி படித்திருக்கிறேன். மீதி படிக்கவேண்டும் என்றேன் . :)

பல்லாண்டுகளுக்கு முன்பே வலைப்பதிவு மூலம் அவர் அறிமுகமாகி இருந்தாலும் ( 2009 ) இன்றுதான் நேரில் சந்தித்தேன். அவரது ஸ்டாலில் எனது புத்தகங்களைக் கொடுத்து விட்டு எனது வாசிப்புக்காக ஹாருகி முரகாமியின் கினோ, மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள், மிரோஸ்லாவ் ஹோலுபின் கவிதைகள், காஃப்காவின் உருமாற்றம், தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ஆகியன வாங்கி வந்தேன். 
எனது அன்னபட்சியை அங்கே வந்தவுடன் எடுத்து உடனே வாசிக்கத் தொடங்கிய ஒரு புத்தகப் பிரியையை அவர் அனுமதியோடு படம் எடுத்தேன் :)

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கண்ணுக்குக் கண் கொடுக்கும் அன்பு. தினமலர் சிறுவர்மலர். - 5.

கண்ணுக்குக்  கண் கொடுக்கும் அன்பு.  


வேடனாய் இருந்தாலென்ன விருத்தனாய் இருந்தாலென்ன. பக்தியால் அவனும் நாயன்மாரில் ஒருவராக ஆகமுடியும் என்பதைக் கூறுவது திண்ணனின் கதை.

அது யார் திண்ணன். ? அவன் உடுப்பூர் என்னும் ஊரிலிருந்த நாகனார் என்ற வேட்டுவரின் மகன். சிவனடியார்களைப்போல சிவனை அகமும் புறமும் தொழுது ஐந்தே நாட்களில் சிவனிடம் ஐக்கியமானவன். அவன் தன் அன்பின் முன் பரம்பொருளையும் மெய்மறக்கச் செய்தவன். பக்தியாலும் பாசத்தாலும் தன் கண்ணையே அகழ்ந்து தந்தவன்.

பிறப்பு சாதி இனம் இவை யாவும் கடவுளுக்கு முன் சமம். அன்பும் ப்ரேமையும் பக்தியுமே அவரை அடையும் யுக்தி என்பதைச் சொல்ல வருகிறது இக்கதை.

காளகஸ்தி என்னும் ஊரில் மலைமேல் ஒரு சிவன் கோவிலிருந்தது. அந்த இறைவன் பெயர் குடுமித்தேவர். சிவகோசாரியார் என்பார் தினம் வந்து ஆகம முறைப்படி திருமஞ்சனம் செய்வித்து, வில்வம் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து, திருவமுது படைத்துச் செல்வார்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன். தினமலர் சிறுவர்மலர் - 4.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்.த்யயுகம் இது. இந்த யுகத்திலும் அசுரர்களும் அவர்களால் தொல்லைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. யாரோ ஒரு அசுரக் குழந்தை என்னை அழைக்கிறது. அசுர நாவில் தெய்வத் திருநாமம்.

”எங்கும் நிறைந்திருக்கும் இறைவா இங்கே காட்சி கொடு” என்கிறது மழலைக் குரல். நானும் அசுரனும் தேவனுமாய், மனிதனும் மிருகமுமாய்க் கிளர்ந்தெழுகிறேன். மெல்ல மெல்ல எனக்குச் சிங்கமுகமும் பதினாறு கரங்களும் முளைக்கின்றன. பிடரி மயிர்கள் சிலிர்த்தெழுகின்றன.,,எல்லாம் ஒரு நொடிக்குள். இந்த அவதாரத்தை நான் தீர்மானிக்கவேயில்லை. கடவுள் பாதி மிருகம் பாதியாய் அது அவனால் நிகழ்ந்துவிட்டது.   

“நாராயணா நாராயணா” என்ற பிஞ்சுக்குரல் என் மனமெங்கும் மோதி என்னைக் கட்டி இழுக்கிறது. வெல்லப்பாகாய் என்னை உருகச் செய்கிறது. யாரோ ஒரு அரக்கன் கோட்டை கொத்தளங்களை உடைக்கிறான்.

“இங்கே இருக்கிறானா.. உன் இறைவன்,?. இங்கே இருக்கிறானா உன் இறைவன்..?” என்று அச்சிறுவனிடம் கேட்டபடி கோட்டையை தன் முரட்டுக் கதாயுதத்தால் உடைத்துச் சிதறடிக்கிறான் அந்த அசுரன்.

“ஆமாம் தந்தையே அவன் தூணிலும் இருப்பான் , அந்தத் துரும்பிலும் இருப்பான் ” என்கிறான்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

கடவுள் நாமம் காப்பாற்றும். தினமலர் சிறுவர்மலர் - 3.

கடவுள் நாமம் காப்பாற்றும்.

ன்னது மகேந்திர பல்லவர் சிவபக்தராகிவிட்டாரா. சைவத்தைத் தழுவிவிட்டாரா. சிவ நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறாரா.சமணரான அவர் எப்படி சைவரானார், இது எங்ஙனம் நிகழ்ந்தது. இதன் சூத்திரதாரி யார் ?  இதுதான் பல்லவ தேசம் முழுவதும் பேச்சாயிருந்தது.

”அவர் சிவன்கோயிலில் ஒரு சாதாரண உழவாரத் தொண்டராம். அப்பர் என்று பெயராம். இறைவனின் திருத்தாண்டகத்தை விருத்தமாகப் பாடியமையால்  திருத்தாண்டகவேந்தர் என்று புகழப்பட்டவராம். “

”சமணனான நம் அரசனை மாற்ற அவர் அப்படி என்ன செய்தார்..?”

“இறைவன் பெயரை உச்சரித்தார் அவ்வளவே. அரசன் உண்டாக்கிய எல்லா இன்னல்களையும் எளிதாகக் கடந்தார். அதைக் கண்டு அதிவியப்புக் கொண்ட பல்லவன் அவர் கூறிய சிவநாமத்தின் மகிமையால் சைவனானான் “ 

“நஞ்சுண்ட ஈசனை வணங்கியதால் அரசன் கொடுத்த இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா. “

”அப்படி என்ன இன்னல்கள் கொடுத்தான் அரசன். ?”

மாசி மகம் சிறப்புக் கோலங்கள்.

மாசிமகம் சிறப்புக் கோலங்கள்.

திங்கள், 12 பிப்ரவரி, 2018

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம். - பர்ஸுக்கும் பாதகமில்லை. உடலுக்கும் உபத்திரவமில்லை.

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம்.

வெந்தும் வேகாம அள்ளிப்போட்டுக்கிட்டு வேலைக்கு ஓடுறவங்களே கொஞ்சம் நின்னு நிதானிச்சுக் கவனிங்க. உங்க உணவுல இருக்குற ஊட்டச்சத்துதான் உங்க உடம்புக்கு சக்தி கொடுக்குது. கொழுப்பு, ப்ரோட்டீன், விட்டமின் மினரல்ஸ் நார்ச்சத்து ஆகியவை அடங்கிய சரிவிகித உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரம் இருக்கா. தினப்படி அட்டவணை போட்டு அத காலரீஸ் மூலம் கணக்கிட்டு உண்ண முடியுமா.

சனி, 10 பிப்ரவரி, 2018

வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மன்.


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஜனவரி 3.


பாஞ்சாலங்குறிச்சி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது விடுதலைப் போரும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரும்தான். 1760இல் இருந்து 1799 வரை - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் கப்பம் கட்ட மறுத்து அந்நியருக்குத் தலைவணங்காத வீரத்தால் நம் மனங்களில் முத்திரை பதித்துச் சென்றவர் அவர். 1857இல் சிப்பாய்க்கலகம் ஏற்படுவதற்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னே ஆங்கில அரசை எதிர்த்த பாளையக்காரர்களுள் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 


வீரபாண்டிய கட்டபொம்மன் ஜெகவீர கட்டபொம்மனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் மகனாக ஜனவரி 4, 1760இல் பிறந்தார். இவருக்கு குமாரசாமி, துரைசிங்கம் ( ஊமைத்துரை ) என்று இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு ஆகிய சகோதரிகளும் உண்டு. நிறத்தை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கருத்தையா என்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை சிவத்தையா என்றும் அழைத்து மகிழ்ந்தனர் குடும்பத்தார்.

வியாழன், 25 ஜனவரி, 2018

தவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன். தினமலர் சிறுவர்மலர் - 2

தவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன்.

பளிச் பளிச் என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது வடக்கு வானில் ஒரு நட்சத்திரம். நிலவு, மற்ற நட்சத்திரங்கள் ஒளிர்கின்றனவோ இல்லையோ தினமும் மாலையிலிருந்து காலைவரை இந்த வடக்கு நட்சத்திரம் மட்டும் ஒளிவீச மறப்பதில்லை.

காந்தப் புலத்தின் மைய ஈர்ப்பாய் ஜொலிக்கும் அந்த நட்சத்திரம் யார் ? நட்சத்திர மண்டலத்துக்கும் சப்தரிஷி மண்டலத்துக்கும் தேவாதி தேவர்களுக்கும் அதி தலைவனாக ஆகும் பாக்கியம், யுகம் யுகமாய் கல்பகாலம் வரை ஜொலிக்கும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது ? 

அவன்தான் என்றும் நிலையான துருவன். அவன் யார் ? அவனுக்கு நிலையான இடம் கிடைத்தது எப்படி எனப் பார்க்க நாம் வைகுண்டத்துக்கும் அதற்குமுன் சுவாயம்புவமநுவின் மகன் உத்தானபாதனது அரண்மனைக்கும் போகவேண்டும்.

சோர்ந்த மனதைச் சுறுசுறுப்பாக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எவ்வளவு அழகான எழுத்தோ அவ்வளவு கம்பீரமான பேச்சும் மிடுக்கும் கொண்டவர் சுசீலாம்மா. என்றும் நாங்கள் மயங்கும் எங்கள் துருவ நட்சத்திரம். ஆண்டாளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி அனுமானங்களுக்கு இலக்கியத்தாலேயே நுட்பமான பதிலடி கொடுத்திருக்கிறார். அது தினமணி.காமில் வெளியாகி உள்ளது.இலக்கியச் சுவை மாந்த விரும்புவோர் ஆண்டாளின் பாசுரங்களில் அமிழ விரும்புவோர் இந்த இணைப்பை பார்க்க.

 தீதும் நன்றும்.

என்றென்றும் அவர்களின் மகளாகப் பெருமையுறும் கணம் இந்தக் கடிதங்களையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.திருவாலங்காட்டு சபாபதி தேசிகரின் திருமண வாழ்த்து.

திருவாலங்காட்டில் உள்ள சிவன் கோவிலில் பாட்டையா காலத்தில் பசுமடம் அமைத்து கோவில் பூஜைக்குத் தேவையான பால் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின் ஐயா காலத்திலிருந்து அப்பா அதற்காக வருடம் ஒரு தொகையைக் கோயில் தேசிகரிடம்  கொடுத்துவருகிறார்கள். நித்யக் கட்டளையாக பாலாபிஷேகம் நடந்து வருகிறது.  சபாபதி தேசிகர்  எங்கள் திருமணத்தின் போது எழுதி அனுப்பிய வாழ்த்து மடல்.

காரைக்காலம்மையும் காளியும் சபாரெத்தினத்தோடு உறையும் அத்திருவாலங்காட்டுக்கு வருடம் ஒரு முறை முன்பு சென்று வந்தோம்   இப்போது செல்ல இயலவில்லை. அதை நினைவுறுத்தவே இக்கடிதம் கிட்டியதோ என எண்ணுகிறேன். இந்த வருடம் எப்படியும் சென்று  ரத்ன சபையைத் தரிசித்து வரவேண்டும்.

( எங்கள் குடும்பத்தில் பலருக்கு சபாரெத்தினம் என்ற பெயர் இடப்படுவதற்கு   இத்திருத்தல ஈசனின் பெயரே காரணம் ) 

அப்போது எல்லாம் எப்படி நேரம் கிடைத்து இவ்வளவு அழகான மரபு/வாழ்த்துப் பாடல்கள் எழுதி அனுப்பி இருக்கிறார்கள்.இதய நோயாலும் கண் மங்கலானதாலும்  வர இயலாததால் கடிதத்தில் அவர் அனுப்பிய வாழ்த்தில் இன்றும் அவ்வளவு அன்பும்  உயிர்ப்பும் இருக்கிறது.

அருப்புக்கோட்டையிலிருந்து க சி அகமுடை நம்பியின் கடிதங்கள்.

புதிய பார்வை என்றொரு இதழை நடத்தி வந்தார் எங்கள் கல்லூரியில் படித்த ரத்னம் என்ற அக்காவின் உறவினர். அவர் பத்ரிக்கையிலும் நான் அவ்வப்போது எழுதி வந்தேன். !. வேண்டாம் தட்சணைகள், தூது, சாயம் போன வானவில்கள், ஒரு ஊனம் தேவை ஆகிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள் அதில் வெளியாகின.

அதன் ஆசிரியர் பெயர் அகமுடை நம்பி என்ற அறிவுடை நம்பி, அறிவன் என்ற பெயரிலும் எழுதி வந்தார். அருப்புக்கோட்டையில் விவசாயப் பொறியாளராகப் பணிபுரிந்துவந்த அவர் புதியபார்வையில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.  பல்வேறு இக்கட்டுக்களுக்கும் இடையில் கைக்காசைப் போட்டு அவ்விதழை நடத்தி வந்தார்.  அருமைமிக்க  அவரின் கடிதங்களைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

உலகத்திலேயே புகழ்பெற்ற விநாயகருக்குக் கட்டப்பட்ட தனிப்பெரும்கோயில்  பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் கோவில். இது காரைக்குடியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குன்றக்குடி வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த விநாயகர் பிரம்மாண்டமானவர் ஏறக்குறைய இரண்டு மீட்டர் உயரம் , கன கம்பீரம்.

அநேகமாக எல்லா இந்துக்களின் இல்லங்களிலும் கடைகள் , நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இவரது புகைப்படத்தைப் பார்க்கலாம். இளையாற்றங்குடிக் கோயிலில் இருந்து  ( திருவேட்பூருடையார்)  பிள்ளையார் பட்டிக்கோயிலாரும் , இரணிக்கோயிலாரும் பிரிந்து தனிக்கோயில் அமைத்துக் கொண்டார்கள். இருவரும் சகோதரர்கள் என்பதால் இவர்களுக்குள் திருமண பந்தம் கொள்வதில்லை.

குடைவரைக் கோயில், கற்றளிக் கோயில் ஆகியவற்றோடு பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் &  மலையிலேயே உருவான சுயம்பு என்பதோடு இங்கே உறையும்  இறைவனுக்கும் இறைவிக்கும் இரு தெய்வத்திருநாமங்கள் என்பது விசேஷம். அர்ஜுன வனேசர் என்ற திருவீசர்/ மருதீசர், அசோக குஸுமாம்பாள் , சிவகாமவல்லி என்ற வாடா மலர் மங்கை ஆகியன.

 எல்லா நகரத்தார் கோயில்களிலும் ஈசனுக்கும் இறைவிக்கும் மட்டும்தான் முதலிடம், இங்கோ அவர்கள் மைந்தனுக்கு முதலிடம் கொடுத்துத் தனியே அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள். கேட்டதெல்லாம் கொடுப்பதால் இவர் கற்பக விநாயகர்.

இங்கே விநாயகர் மலையுடன் அமைந்த சுயம்பு மூர்த்தி என்பதால் தோமாலையாக அணிவிக்கப்படும் மாலை வெகு விசேஷம். முன்புறம் ஒன்பது தொங்கு  விளக்குகள், இரு குத்து விளக்குகள்,முன்புறம் ஒரு மெகா விளக்கு வரிசை ஜொலிக்க நடக்கும் அபிஷேகமும் அலங்காரமும் காணக் கண் கோடி வேண்டும். இடது கையைத் தொடையில் வைத்து வலது கையில் மோதகம் தாங்கி அமர்ந்திருக்கும் கம்பீரத் திருக்கோலம் அவசியம் காணவேண்டிய ஒன்று.


இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 2

மழலைகள் என்றால் எந்த வயதினருக்கும் விருப்பமே. அதிலும் பதின்பருவத்தில் பார்க்கும் மழலைகளை எல்லாம் எடுத்துக் கொஞ்சுவோம் விளையாட விரும்புவோம். அப்போ நம்ம நெஞ்சைக் கொள்ளை கொண்ட குட்டீஸ் கலெக்‌ஷன் இது. துரு துரு திரு திருவென விழிக்கும் அழகுப் பாப்பாக்கள் அணிவகுக்கிறார்கள்.

சேட்டைக்காரக்குட்டிக :)

செவ்வாய், 23 ஜனவரி, 2018

மதுமிதாவின் மலாய் பாடலும் வள்ளல் அழகப்பர் பற்றிய வில்லுப்பாட்டும்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் நவம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசியான் இந்திய கவிஞர்கள் சந்திப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 28 ஆம் தேதி  மாலையில் நடைபெற்றன.

இதில் ஹைலைட்டாக ( பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும்) தமிழகக் கவிஞர் மதுமிதா & மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரி பார்க்கியின் பாடல் பரிமாற்றத்தைச் சொல்லலாம்.

மதுமிதாவின் கவிதைஒன்று மலாயில் இசைக்கப்பட, மலாய்க் கவிதை ஒன்றை மதுமிதாவும் சாஸ்த்ரி பார்க்கியும் பாடியது அற்புதம். (மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரியின் பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் பாடினர். மதுமிதா எழுதிய தமிழ்ப்பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் இணைந்து பாடினர். )

பாரதியின் கூற்றுக்கேற்ப மிகச் சிறந்த கலாச்சாரப் பரிமாற்றமாக அது திகழ்ந்தது.
மாலையில் முதல் நிகழ்ச்சியாகப் பெண்களின் கோலாட்டம், கும்மி ஆட்டம், கரகம், ஆகிய நாட்டுப்புற நடனங்களின் அணிவகுப்பு. காரைக்குடியைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவ மாணாக்கியர் மிக ஆர்வமாகப் பங்கேற்றுக் களிப்பித்தனர்.

வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

துலாபாரம் கொடுக்கப்படும் சிறப்புக் கோயில்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்றாக காரைக்குடியின் அருகில் இருக்கும் வைரவன்பட்டியில் இருக்கும் வைரவன் கோயில் திகழ்கின்றது. இதற்கு வைரவர் துலாபாரம் என்று பெயர்.

காரைக்குடியில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இக்கோயில். குன்றக்குடி , பிள்ளையார் பட்டி வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் சிறிது பிரிந்து செல்லும் உட்சாலையில் அமைந்துள்ளது. ( வழியில், நேமங்கோயில்,  இரணிக்கோயிலுக்குச் செல்லும் சாலையைச் சந்திக்கலாம். )
இக்கோயில் நகரத்தார் கோயில்களுள் ஒன்று. இக்கோயிலின் புஷ்கரணி மிகவும் அழகானது. அந்தக்காலத்திலேயே நீர் சேகரிப்பு முறைப்படி வாய்க்கால் , கால்வாய்களின் மூலம் நீர் வரத்து எப்போதும் இருக்கிறது.

திங்கள், 22 ஜனவரி, 2018

திரும்பவும் குழந்தைப் பருவத்துக்கு. MY CHILDREN ALBUM.

போட்டோ வாக்கியப் போட்டி போல குழந்தைப் படங்களை வெட்டி ஒட்டி ஃபோட்டோ கமெண்ட்ஸ் எழுதி வைச்சிருக்கேன் ஒரு காலத்துல. அத இங்கே பகிர்ந்திருக்கேன். ஃபோட்டோவோட கமெண்ட்ஸையும் பாருங்க :)

பேப்பர் கட்டிங்கோ, வாழ்த்து அட்டையோ,நானே வரைஞ்சதோ ( அந்த இம்சை பின்னாடி இடுகைகள்ல வரும்ம்ம்ம்ம்ம் ) என்பதைச் சொல்லிக்கொண்டு இன்னிக்கு ஒரு இடுகை தேத்தியாச்சு என்ற சந்தோஷத்துடன்... :)

சனி, 20 ஜனவரி, 2018

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.

தினமணி -  எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் எனது வாடாமலர் மங்கை என்ற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
நன்றி தினமணி.  எழுத்தாளர் சிவசங்கரி & மாலன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் மனமார்ந்த  நன்றி.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

வியாழன், 18 ஜனவரி, 2018

அன்புப் பரிசு அரசாளும் - தினமலர் சிறுவர்மலர் - 1

அன்புப் பரிசு அரசாளும்

மிக உயர்ந்த ஜாதி மரத்துண்டு அது. மித்ரபந்து தன் மனைவியுடன் நான்கைந்து நாட்களாக அதைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.

அது என்ன சிலையா இல்லையில்லை.. சிற்பம் போல உருவான ஒரு ஜோடி பாதரட்சை. காலில் அணியும் மரச்செருப்பு. அதைச் செய்தபின் அதன் அழகில் மயங்கி நின்றார் மித்ரபந்து. மிக மிக அழகான வடிவான இது யார் காலை அலங்கரிக்கப் போகிறது ?

யோத்தி அன்று மணக்கோலம் பூண்டிருந்தது. நகரமெங்கும் விருந்தின் வாசனை, நறுமணத் திரவியங்கள் பூசிய ஆடவர்களும், அணிகலன்கள் அணிந்து கலகலவெனச் சிரித்தோடிய இளம்பெண்களுமாக நகரம் களைகட்டியிருந்தது. முதியோர்களும் சிறார்களும் கூட சந்தோஷமாக உரையாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வியாழன், 11 ஜனவரி, 2018

ஆண்டாள் உலா.

ப்ளஸ்டூ பருவம். மார்கழிக் காலை, பாமா அக்காவின் வீடு. ஊதுபத்தி, துளசி மணம், மெல்லிய பனி பெய்யும் காலை, வாசலை அடைத்துக் கோலம் பூசணிப்பூ, கை நிறைய கலர் கலராக டிசம்பர் பூக்கள்.

கொஞ்சம் சாமந்திகளும் நிவேதிக்க முந்திரி நிரடும் நெய் ஏல வாசனையில் சர்க்கரைப் பொங்கலோ, வாசத்திலேயே நெய்யும் மிளகும் உறைக்கும் வெண்பொங்கலோ கதகதப்போடிருக்க,  இரண்டடி அகல குழலூதும் கிருஷ்ணன் படத்தை வைத்துச் சுற்றியபடி

“ நீளா துங்கஸ் தனகரி “

“ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு.” ( மனதில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற வரியைச் சொல்லியபடி )

”அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வளர்த்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கு மட்பாஞ்ச சன்யமும் பல்லாண்டே”.

என ஆரம்பிக்கும் எங்கள் பாடல்கள்.,

செவ்வாய், 9 ஜனவரி, 2018

நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

காரைக்குடியில் இருந்து நேமங்கோவில் 13 கிமீ தூரத்தில் உள்ளது. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, வைரவன் பட்டிவழியாகச் செல்லலாம். குன்றக்குடியின் வடக்குப் பாதை வழியாகவும் செல்லலாம். இது கொஞ்சம் கிட்டப்பாதை.

சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலையும் கூறலாம். பிரகாரத்தில் அலங்கரிப்பது  எல்லாமே உக்கிர தெய்வங்கள்.

ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கோவில் இது. நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்று.

இக்கோவிலின் புஷ்கரணியின்பெயர் சோழ தீர்த்தம். மிக அழகான தாமரைத்தடாகம் அது. இக்கோயிலின் எதிரே சத்திரம் உள்ளது. இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்வோர் உண்டு.

இக்கோவிலில் விநாயகர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
சந்நிதிக்குச் செல்லும் முன் வாயிலின்  விதானத்தில் ரிஷபாரூடர், மீனாக்ஷி திருக்கல்யாணம், நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக காலபைரவரைச் சுற்றி இருக்கும் காட்சி., சனகாதி முனிவர்களுடன்  கல்லாலின் புடை அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி. என அழகு ஓவியங்கள்.

திங்கள், 8 ஜனவரி, 2018

வாடாமலர்கள். MY FLOWER ALBUM - 2.

அடடா திரும்ப பழைய ஆல்பம் கையில கிடைச்சிருச்சு போலயே. ஒரே பூவா எடுத்துப் போட ஆரம்பிச்சிட்டியா என திட்டமுடியாதபடி நான் வரைந்த சில ஓவியப் பூக்களையும் போட்டிருக்கிறேன் :)
டேலியா & கினியா.

காரைக்குடிச் சொல்வழக்கு. லெக்ஷ்மி குழம்பும் பொருமா மிளகுபொடியும்.

911. முறுக்கிக்கிறது. - ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேனெனப் பிடிவாதம் பிடித்தல். அல்லது அதில் விருப்பம் காட்டாதிருத்தல். தனக்கு அந்த விஷயம் அற்பமானது சமமானதில்லை எனக் கருதுவது.

912. எகனைக்கு மொகனை - ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொள்ளுதல். (பாட்டில்  எதுகை மோனை என்பது போல் )

913. லெக்ஷ்மி குழம்பு - சும்மா குழம்பு என்று ஒரு குழம்பு வைப்பார்கள். சின்னவெங்காயம் ஐந்தாறை நறுக்கிப் போட்டு கடுகு வெந்தயம் தாளித்து உப்புப் புளி கரைத்து சாம்பார் பொடி அல்லது மிளகாய்ப் பொடி போட்டு உடனடியாக வைப்பார்கள். இது சோற்றுக்கும் இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள ஆகும். காய் இல்லாமல் வைப்பதால் சும்மா குழம்பு. ஆனால் அதை சும்மா என்று சொல்லக்கூடாது என்று லெக்ஷ்மி குழம்பு என்பார்கள்.

914. மொட்டட்டின்னு போட்டுட்டாக. - அக்கறை இல்லாமல் ஒரு விஷயத்தைக் கைவிடுவது. ஒன்றும் இல்லை என்று கருதுவது.

915. வெள்ளமா வைச்சாக - சீர் செனத்தி அதிகம் வைப்பதைக் குறிப்பது.  தாய்வீட்டில் பெண்ணுக்கு அதிகமாக சீர் செனத்தி வைப்பதைக் குறிப்பது. வசதி படைத்தோர் ஊசியிலிருந்து கப்பல்வரை சீர் பரப்புவார்கள்.

சனி, 6 ஜனவரி, 2018

குடிசையும் தேர்நிலையும் . மை க்ளிக்ஸ், MY CLICKS.

வானளாவிய கட்டிடங்கள் இருக்கும் மெட்ரோ நகர் சென்னையின் இதயப்பகுதியான கே கே நகரில் ஒரு குடிசை புனர் நிர்மாணம் செய்யப்பட்டபோது எடுத்தது.

வெய்யில்காலத்தில் அநேகமாக அது ஒரு தைமாதத்தில் முடையப்பட்டது. பர்ஃபெக்ட் ரெடி ஆயிடுச்சு. கூல் ஹோம்.
குன்றக்குடி தேர்நிலை.
இது சென்னையின் க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள பில்டிங். அலுவலகங்கள்.

வெள்ளி, 5 ஜனவரி, 2018

சம்பளத்துக்கு "சாலரி" என்று பெயர் வந்தது எப்படி ?

உப்பைப் பற்றிய கற்பிதங்களைத் தவிர்ப்போம்.


"உங்க பேஸ்டில் உப்பு இருக்கிறதா.." விளம்பரத்தில் பளிச்சென வந்து கேள்வி கேட்கும் நடிகையின் முகம் உங்கள் ஞாபகத்தில் இருக்கும்.  "இது தேசத்தின் உப்பு" என்ற வார்த்தை உங்கள் காதுகளில் ரீகாரமிட்டுக்கொண்டிருக்கும். "உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்கமாட்டேன்ட என்ற பாடல் வரி உங்கள் முணுமுணுப்பிலிருந்து தப்பியிருக்காது. இப்படியெல்லாம் உப்புக்கு விளம்பரமா..? வியக்கவேண்டாம். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்தை வீழ வைத்தது காந்திஜியின் உப்பு சத்தியாகிரமல்லவா?

வியாழன், 4 ஜனவரி, 2018

நலந்தாவின் கருத்துப் பேழையில் தென்றல் சாயின் தனித்தமிழ் கட்டுரை.

தென்றல் சாய் காரைக்குடியில் தனது பெற்றோர் நடத்தி வந்த கார்த்திகேயன் பள்ளியைத் தனது சகோதரியுடன் நடத்தி கல்விச் சேவை ஆற்றி வருகிறார். மிகச் சிறந்த் ஆளுமை மிக்க பெண் அவர். அவரது எழுத்துக்களும் செறிவானவை. நந்தவனம் என்ற பத்ரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகள் படைத்து வருகிறார் . காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் பங்களிப்புச் செய்துள்ளார்.

தென்றலின் பார்வையில் தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்திய ஆசிய கவிஞர்கள் சந்திப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட  36 நூல்களில் எனது நூலும் ஒன்று.
காரைக்குடியில் கார்த்திகேயன் பள்ளியை நடத்திவரும் தென்றல் சாய் அவர்களும் அங்கே கட்டுரை வாசித்தார்கள். தங்கம் மூர்த்தி கவிதைகளையும் சிலாகித்தார்கள். எங்களுக்கு அங்கே அறிமுகமானவுடனேயே எங்கள் நூல்களை வாங்கி உடன் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
சுறுசுறுப்பின் மறுபெயர் தென்றல் சாய். உடனடியாகப் பாராட்டி அதை முகநூலிலும் எழுதிவிட்டார்கள். டிசம்பர் 14 அன்று அவர்கள் எழுதியதை இன்றுதான் பார்த்தேன். அவ்வளவு சுறுசுறுப்பு நாம :)
உன் கருத்துக்களுக்கு  அன்பும் நன்றியும் தங்கையே. 

புதன், 3 ஜனவரி, 2018

அறுபத்திமூவர் மடத்தில் திருமுறைத் தேனமுது.

காரைக்குடி அறுபத்திமூவர் மடத்தில் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. ஐந்து திருமுறைகளில் இருந்து 500 பாடல்கள் பாடப்பட்டன. சமயக்குரவர்கள் நால்வர் பாடிய பன்னிரு திருமுறைகளில் இருந்து இப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. காரைக்கால் அம்மையாரின் பாடல்களும் இருந்தன.

நமக்கு மிகவும் பரிச்சயமான பாடல்கள் அநேகம். திருமூலரின் பாடல்கள் பலவும் கூட இடம் பெற்றிருந்தன. திருமுறைத் தேனமுதைச் சுவைத்து மகிழ்ந்தேன். இதற்கு ஆயிரம் ஜன்னல் வீட்டு நா. நா. நா.அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி வீட்டார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும், மந்திரமாவது நீறு, கூற்றாயினவாறு விலக்கலீர், அப்பனை நந்தியை ஆரா அமுதினை., சொற்றுணை வேதியன்  இவற்றோடு

திருவாசகமும் “ தொல்லை  இரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி அல்லலறுத்து ஆனந்தமயமாக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசமென்னும் தேன் “ஆகியனவும் பாடப்பட்டன.

ஒவ்வொரு பாட்டுக்கும் உரிய ராகத்தில் அவற்றைப் பாடினார்கள், இந்த பன்னிரு திருமுறைப் பாராயண குழுமத்தார். நாமும் பின் தொடர்ந்தோம்.
திருப்பொன்னூஞ்சல் என்னும் பாடல் பாடப்படும்போது இந்த ஊஞ்சலை ஆட்டியபடி பாடினோம்.

இதில் ஈசனும் இறைவியும் குழந்தையாகக் காட்சி தந்ததுபோல்  இரு சிறு மாலைகளும், ஒரு கழுத்தணியும் ஒரு குழையும் காட்சி அளித்தது.

ஆனந்த மாலை பாடும்போது மிகப் பரவசமாக இருந்தது.
இந்த மடம் காரைக்குடி நகரச் சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தில் உள்ள சாலையில் உள்ளது. இதில் அனுகூல விநாயகர் கோவில் கொண்டிருக்கிறார்.

செவ்வாய், 2 ஜனவரி, 2018

தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.

தேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

இக்கோயில் அம்மன் திருவக்கரை வக்ர காளி அமைப்பில் என் கண்ணுக்குத் தென்பட்டது. கூகுள் குழுமத்தில் தேமொழி என்பவர்

//ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரிய நாயகி அம்மன் கோயில் தேவகோட்டையில் உள்ளது. 

நடனமாட இவ்வூருக்கு வந்த பெண் தனியாக வெளியே தனித்து சென்றிருந்ததை சந்தேகித்து 
அப்பெண் மேல் அவதூறு பேச அதனை தாங்க இயலாது அப்பெண் தற்கொலை செய்து கொள்கின்றாள். 
அப்பெண்ணுக்கு எழுப்பப்பட்ட ஆலயம் இது. அடிப்படையில் ஐயனார் தெய்வத்துக்கான கோயில் இது. 
ஏனைய பல நாட்டார் தெய்வங்களுக்கான தனி சன்னிதிகளும் இங்கே உள்ளன.
மனிதர்கள் தெய்வங்களாக உருமாற்றம் அடையும் உதாரணங்களில் இக்கோயிலும் ஒன்று.
இக்கோயிலை இன்று பதிவுசெய்திருக்கின்றேன்.///
என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதைத் தவிர வேறு பதிவுகள் இல்லை. கோயில் பற்றிய விபரங்கள் கொண்ட ஆய்வேட்டில் இப்பெயர் உள்ளது. 
மிக அழகான கோயில் இது. அம்மனைப் பார்த்தால் நமக்கும் ஆவேசம் வருவது உறுதி. அவ்வளவு அருள் பொங்குகிறது.

உசுலாவுடைய அய்யனார் அம்மனின் கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கிறார். ஒரு பெரிய கருவறையின் உள்ளே இரு கருவறைகள். ஒன்று கிழக்கு பார்த்த சன்னிதி இதில் உசுலாவுடைய ஐயனாரும், தெற்கு நோக்கிய சன்னிதியில் முத்துப் பெரியநாயகி அம்மனும் கோயில் கொண்டுள்ளார்கள்.

வைரவன்பட்டியில் ஒரு வண்ணமயமான சதாபிஷேகம்.

காரைக்குடி அருகே குன்றக்குடி பிள்ளையார்பட்டி தாண்டி இருக்கும் நகர வைரவன்பட்டியில் ஸ்ரீ வைரவர் கோயில் உள்ளது. இங்கே பெரும்பகுதி மக்கள் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியன கொண்டாடுகிறார்கள்.

இக்கோயில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். சங்கு ஊதிக் கருப்பர், ஏறு அழிஞ்சில் மரம், தன ஆகர்ஷண பைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மை, துலாபாரம், கோபுரங்களில் அறுமுகன், நான்முகன், ஏன் வீணை மீட்டும் பத்துத்தலை ராவணன் கூட இடம் பெற்றிருக்கிறார்கள். கோபுரம் கட்டாயம் காணவேண்டிய பேரழகு உடையது. அதே போல் மழை நீர் சேகரிப்பும் கண்மாய் நீர்ப் போக்குவத்தும் கொண்ட வைரவ தீர்த்தம் காணற்கரியது
வளரொளி நாதர் , வடிவுடையம்மை. 
அக்கோயிலில் இன்று எனது முகநூல் நண்பரும், மனிதநேயமிக்க மனிதருமான திரு தேனப்பன் செல்லம் ( செல்லம் மனைவி பெயர் அதையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ள இனிமையான மனிதர் இவர் ), அவர்களின் சதாபிஷேக விழா நடந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...