எனது நூல்கள்.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஓநாய் குலச்சின்னம் - ஒரு பார்வை


ஓநாய் குலச்சின்னம்  - ஒரு பார்வை .


முப்பதாண்டுகள் காலம் ஜியாங் ரோங்கின் சிந்தனையில் கருவுற்றிருந்திருக்கிறது இக்கதை. பன்னெடுங்காலமாக உருக்கிய மனத் தீயை இப்புத்தகத்தில் இறக்கிவைத்து ஆசுவாசம் அடைந்திருக்கிறார். இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் ஆட்பட்டுத் தம்மைத் தவிர வேறு எதையுமே பிரதானமாகக் கருதியிராதவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியது இந்நூல். சீனப் பின்னணியில் இக்கதை திரு. சி. மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் நாம் அருகே காணும் மேய்ச்சல் நிலக் கதைபோல் சரளமாக இருக்கிறது.

எல்லா விலங்குகளிலும் நாம் மிகுதியும் வெறுப்பது ஓநாயாகத்தான் இருந்திருக்கும். பஞ்சதந்திரக் கதைகள் கூட ஓநாய்த் தந்திரத்தைப் பேசி நம்மை வெறுக்கடித்திருக்கின்றன. வயல்களில் பாம்புகளை அதிரடியாக அழிக்கப் புகுந்த போது அவை எலிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கியதோடு எதிர்பாரா அளவில் தானியங்கள் இழப்புக்கும் வழி வகுத்தது எனப் படித்திருக்கிறேன். சுற்றுச்சூழல் காப்பதால் காகத்தை ஆகாயத்தோட்டி என்று குறிப்பிடுவதுபோல் மேய்ச்சல்நில ஆன்மாவாக , மங்கோலியர்களின் குலச்சின்னமாக ஓநாய்கள் இக்கதையில் குறிப்பிடப்படுகின்றன.


ஓலோன்புலாக்கிற்கு பயிற்சிக்காக அனுப்பப்படும் ஹேன் இனத்தவரான நான்கு சீன மாணவர்கள் , அவர்கள் சந்திக்கும் மங்கோலிய மேய்ச்சல் நில வாழ்க்கை, மேய்ச்சல்நில ஆன்மாவான ஓநாய்கள் கற்றுத் தந்திருக்கும் அரசியல் வாழ்விய தந்திரங்கள், கடைசியில் அவற்றின் வீழ்ச்சி இத்துடன் பில்ஜி குடும்பத்தினர் மற்றும் மற்ற மங்கோலிய மேய்ப்பர்கள், சீன விவசாய ஆக்கிரமிப்பாளர்கள், பாழ்படும் மேய்ச்சல் நிலங்கள், அதனால் உருவான மஞ்சள் புழுதிப்புயல் பற்றிப் பேசுகிறது நாவல்.

மனிதர்கள் மட்டுமே மகத்துவமானவர்கள் அல்ல, ஒவ்வொரு உயிரினமும் இயற்கைச் சுழற்சியைப் பாதுகாப்பதில் வகிக்கும் அங்கம் முக்கியமானது. எலிகள், முயல்கள், மர்மோட்டுகள், பொந்து நாய்கள், மான்கள், ஆடுகள், மாடுகள், குதிரைகள், நாய்கள், நரிகள், ஓநாய்கள், கழுகுகள்  என்ற சுழற்சியில் ஒன்றின் அளவு அதிகரிக்கும்போது இன்னொன்று அதை உணவாக்கி இயற்கையைச் சமன் செய்கிறது. இதிலும் மனிதர்கள் இந்தச் சமன்படுத்துதலில் நியாயமாக நடந்துகொள்ளும்போது டெஞ்ஞர் எனப்படும் மங்கோலிய சொர்க்கம்/கடவுள் அதற்கேற்றாற்போல் இயற்கையை வழி நடத்துவதும் நிகழ்கிறது.

குள்ள வாத்துகள், காட்டு வாத்துகள், அன்னங்கள் மட்டுமல்ல நாய்களும், நரிகளும், ஓநாய்களும், மனிதர்களுக்கு உணவாக்கப்படும்போதும் மர்மோட்டுக்கள் தாய், குட்டி, ஆண் என்ற வேறுபாடு இன்றி அழிக்கப்படும்போதும், தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் என்ற நோக்கோடு மனிதன் சர்வாதிகாரியாக சுயநலவாதியாகச் செயல்படும்போது இயற்கை அதற்கும் மேலான சர்வாதிகாரத்தோடு செயல்பட்டு அனைவருக்கும் பாடம் கற்பிக்கிறது.

சீன மாணவர்களில் ஜென் சானும் யாங் கீயும் மென்மனம் கொண்டவர்களாகவும், புதிய விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களாகவும், மரபான விஷயங்களை ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஜென் சென் புரட்சிப் புத்தகங்களை வாசிப்பவனாகவும் இருக்கிறான். தனது தந்தையாகக் கருதும் பில்ஜியின் ஓநாய் மகத்துவக் கதைகளில் மயங்கி ஒரு ஓநாயை எடுத்து வளர்க்கிறான். ”குட்டி ஓநாய் குட்டி ஓநாய்” என்று அவனும் யாங்கீயும் அழைக்கும் இடங்களும் அவர்கள்மேல் ( உணவருந்தும் நேரம் தவிர ) அது காட்டும் பாசமும் கண்கலங்க வைத்தன. வெய்யிலின் கொடுமையிலிருந்தும், கொசுக்கடியிலிருந்தும் தப்பிக்க அது வழி தேடிக் கண்டுபிடிப்பதும், சிறைப்பட்ட வாழ்விலிருந்து விடிவு தேட ஓயாமல் ஓடுவதும், பிற ஓநாய்கள் போல் ஊளையிட முயற்சிப்பதையும் ஜென் சென்னின் பார்வையில் நாமும் கண்டுணர்கிறோம். யாங் கீயோ இயற்கை நேசன். அன்ன ஏரியின் முன் அவன் அமர்ந்து வடிக்கும் மன அவசங்கள் நம்மையும் இம்சைக்குள்ளாக்குகின்றன.

நான்கு பழமைகளை ஆதரிக்கும் மேய்ச்சல் இன மக்களின் வாழ்க்கையைக் கிண்டலடிக்கும் விவசாய இன மக்கள் மேய்ச்சல் பூமியை ஆக்கிரமித்து மேய்ச்சலையும் விவசாயத்தையும் ஒருங்கே பாழடித்து விடுகிறார்கள். இளவேனிற்காலப் புல் , குளிர்காலப் புல், கோடைக்காலப் புல், பனிக்காலப் புல், புல் விதைகள், மிருகங்களின் உள்ளுணர்வுகளை உணர்தல், அவற்றின் உணவுச் சுழற்சிகள், மேய்ச்சல் நிலத் தொன்மக் கதைகள், அதன் மரபான விஷயங்கள், மங்கோலிய ஆண், பெண், குழந்தைகளின் வலிமை & வீரம் மற்றும் நியாய குணம், நிலையற்ற வீடு இல்லாமல் கிடை போடுபவர்போல் ஒவ்வொரு இடமாக அவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பது ஆகியவற்றை பதினோரு ஆண்டுகள் கண்டு, கேட்டு, உணர்ந்து, அவர்களோடு வாழ்ந்து பின்னும் பல ஆண்டுகள் சூலுற்று இக்கதையைப் படைத்திருக்கிறார் ஜியாங்.  

மேய்ச்சல் நில ஆன்மாவாகவும் மேய்ப்பரின் எதிரியாகவும் ஒரே நேரத்தில் விளங்கும் ஓநாய்களின் குகைகளுக்குள் சென்று ஏழு குட்டிகளை வேட்டையாடி அதில் ஒரு குட்டி ஓநாயை மட்டும் வளர்த்துவருகிறான் ஜென் சென். அதன் உணவுக்கான வெறி, உருவ அமைப்பு, வாழ்விடம் மற்றும் சொந்த இனத்தோடு சேர்வதற்கான தவிப்பு, இடம் மாற்றத்தில் அது கைக்கொள்ளும் பிடிவாதம், ஆகியவற்றை அதை வளர்ப்பதன் மூலம் அவற்றின் உணர்வுகளையும் ஊளைகளையும் இனம் பிரித்து உணர்கிறான் ஜென் சென். ஆனால் தந்தைபோல் அதன் மேல் அதீத பாசம் கொண்ட அவன் மனம் அதன் இயற்கைப் போக்கில் அதை வளரவிடத் தடை செய்து விடுகிறது. இராணுவத்தினரிமிருந்தும் மற்ற மேய்ப்பர்களின் வெறுப்பிலிருந்தும் அதைக் காப்பாற்றவும் அதற்குத் தொடர்ந்து உணவளிக்கும் சிந்தனையிலும் அவன் பெரும்பகுதிக் காலம் நகர்கிறது.

கோடை, இளவேனில், வெய்யில், மழை, பனி கொசுக்கள் அதைத் தொடந்து பல்வேறு இக்கட்டுகளுக்கு நடுவிலும் அதைப் பராமரிக்க அவன் படும் பாடும், தன்னைத் தாக்கும் அதன் கோரைப்பற்களை வெட்ட நேர்வதும், இடமாற்றத்தினை ஏற்காமல் அது படும் சிரமங்களையும்,  அதன் முடிவையும் சொல்லுமிடத்தில் கண் கசிந்ததென்னவோ உண்மை.

ஓநாய் மூதாதையர்களின் வலிமை கொண்டு செங்கிஸ்கான் போன்றோர் உலகை ஆண்ட கதைகளும் எந்நேரமும் விழிப்பில் இருக்கவேண்டிய மேய்ச்சல் நில மங்கோலிய வலிமைக்கு முன் எப்போதும் பாதுகாப்பாக வாழும் சீனர்களின் விவசாய வலிமை நலிவுபட்டதுதான் என்றும் ஆனால் அவ்விவசாய வலிமை இயற்கையைப் பாழ்படுத்தவே உதவியதையும் தைரியத்தோடு நிறுவி இருக்கிறார். 

தலைமை ஓநாய்கள், பொலி காளைகள், ஆண் மர்மோட்டுகள், வயல் எலிகளின் குளிர்கால சேமிப்பு, ஆடுகளின் மந்தைத்தனம், மான்களின் அவதானிப்பு இவை எல்லாவற்றையும் விட மேய்ச்சல் நிலத்தின் பேருயிரான புல்லின் மகத்துவம் ஆகியவை அடங்கிய தகவல் பொக்கிஷமாகத் திகழ்கிறது இந்நூல். இயற்கையைச் சீரழிக்கும் அதன் கண்ணியை அறுக்கும் மனிதன் அக்கண்ணிக்குள்ளே தன்னை மாட்டிப் பலியாகிறான். மனிதர்களின் வெறுக்கத்தக்க சுயநலத்தால் பத்தாண்டுகளுக்குள்ளே பசுமை பாலையாகிறது. மேய்ச்சல் நிலம் மஞ்சள் மணலும் பாறையுமாகிறது. மஞ்சள் புயல் உருக்கொண்டு சீரழிக்கிறது.

மங்கோலிய மேய்ச்சல் நிலம் விட்டு சீனா வந்து பல்லாண்டுகள் கழித்தும் ஜென் சென்னும் யாங்கீயும் தங்களால் இறந்துபட்ட குட்டி ஓநாயை எடுத்த குகை முன் சென்று இந்நூலைச் சமர்ப்பணம் செய்திருப்பதும் மனம் நெகிழச் செய்தது. மனிதர்களும் ஓநாய்களும் ஒருங்கே வாழ இயலாதுதான். ஆனால் ஜென் சென்னின் கனவுகளிலும் அந்த ஓநாய் அவனுடைய தொடுதலுக்காக வயிற்றைக் காட்டிக் கிடப்பதும் நாவால் நக்கிக் கொஞ்சி மகிழ்வதும் கோதுதலுக்காகக் காதை நீட்டிக் கொண்டிருப்பதும் முட்டி விளையாடுவதும் வெகு அழகு.

மேய்ச்சல் நில ஓநாய்கள் அவர்களின் குலச்சின்னம் மட்டுமல்ல. ஆன்மீக சக்தியும் கூட. இயற்கை சுழற்சி பாழ்படாமலிருக்க டெஞ்ஞ்சர் அனுப்பிய உயிரினத்தில் உயர்ந்த ஒன்று. ஓநாய்கள் உணவையும் உயிர்த்தலையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை அல்ல. யாரிடமும் சரணடையாதவை., எதையும் பின் தொடராதவை, எவருக்கும் அடிபணியா சுதந்திரமும், சுய நிர்ணயமும், கௌரவமும் கொண்டவை என்பது ஓநாயிடம் வெகுவாகக் கவர்ந்த விஷயங்கள். வெறுக்கத்தக்கதாக இருந்த ஒன்றை இந்நூல் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து விருப்பத்துக்குரியதாகவும் வணக்கத்துக்குரியதாகவும் மாற்றியிருக்கிறது என்பது மிகையில்லை. இவ்வரிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்த திரு. சி. மோகன் அவர்களுக்கும் அதிர்வு பதிப்பகத்தாருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். 
  
நூல் :- ஓநாய் குலச்சின்னம் ( சீன நாவல் )
ஆசிரியர் :- ஜியாங் ரோங்

தமிழில் :- சி. மோகன்.
பதிப்பகம் :- அதிர்வு.
பக்கம் :- 672.
விலை :- ரூ. 500/- 

3 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம்....

rajasundararajan சொன்னது…

அறியப்படாத தகவல்களை நமக்குத் தரும் அருமையான நாவல். சி.மோகனின் தமிழோட்டமும் மிக அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ

நன்றி ராஜன் சார் :) உண்மைதான் சி மோகன் சாரின் தமிழோட்டமும் உண்மை.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...