எனது புது நாவல்.

திங்கள், 8 அக்டோபர், 2018

பச்சையா பயோ மார்க்கர்ஸா. (அ) பச்சை குத்துவது பண்பாடா இல்லை பயன்பாடு உண்டா.

பச்சையா பயோ மார்க்கர்ஸா. (அ) பச்சை குத்துவது பண்பாடா இல்லை பயன்பாடு உண்டா.
காது வளர்த்துப் பாம்படம் போட்டிருந்த சிகப்பி அக்கா கையில் ஒரு தேள் ஒன்று பச்சை குத்தப்பட்டிருந்தது. வெள்ளை வெளேர் என்றிருந்த கையைப் பிடித்த நான் அந்தத் தேளைப் பார்த்ததும் “ ஐயோ தேள்” எனக் கத்தினேன். சிகப்பி அக்கா கலகலவெனச் சிரித்தார். ”பயந்துப்புட்டியா. இது பச்சைதான் ஆத்தா. தேள் நம்ம அண்டப்புடாதுன்னு சொல்லிக் குத்துனது ” என்றார்.
ஆமாம் உண்மையிலேயே பச்சை குத்துவதால் நன்மை ஏதும் இருக்கா. இது கிட்டத்தட்ட நாலாயிரம் ஐயாயிரம் வருஷத்துக்குமுற்பட்ட தொன்மையான பழக்கம், மேலும் பனி தேசத்து மக்கள் கூடப் பச்சை குத்திக்கிட்டாங்கன்னு தெரிய வருது. மருத்துவரீதியா பார்த்தா இத அக்யுபஞ்சர் முறைன்னு சொல்லலாம். ஆனா பாதரசம் கலந்த நிறங்கள் பயன்படுத்தப்படுவதால் முழுதும் நல்லதுன்னு சொல்ல முடியாது.
பச்சை குத்துதல்னா என்ன. ஊசி முனையில் சிறிது பச்சை வண்ணத்தைத் தொட்டு தோலின் மேற்புறத்தில் துளையிட்டுச் செலுத்துவதுதான் பச்சை குத்துதல். இந்த நிறங்கள் தோலின் இரண்டாவது அடுக்குக்குச் சென்று தங்கி விடுவதால் அவை நிரந்தரமான பச்சை நிறத்தைக் கொடுக்கின்றன. இவற்றைப் போட்டபின்பு காற்றுப் புகாமல் கட்டி வைத்து பசை போல் ஒன்றைத் தடவி ஒரு மாதம் வரை பாதுகாத்தால் பச்சை குத்தியதால் ஏற்பட்ட புண்ணும் வலியும் நீங்கும். பொதுவா பச்சை குத்துவதை விட நீக்குதல் ( லேசர் மூலமாக இருந்தாலும் ) பல மடங்கு செலவும் , உடல் நோவும் கொடுக்கக் கூடியது. குத்திய பச்சையை நீக்க சுமாரா 20 தடவையாவது லேசர் செய்யவேண்டும் என்கிறார்கள்.

அந்தக் காலத்துல எல்லாம் திருமணமானா பெண்கள் பச்சை குத்திக்கணும்னு நடைமுறை இருந்திருக்கு. சிலர் முகத்துல கூட பச்சை குத்தி இருக்காங்க. ஆனா அந்தக் காலத்துல குறிப்பிட்ட இன மக்கள் இத முழுதும் ஹெர்பலா செய்துட்டு வந்தாங்க. மஞ்சள் பொடியுடன் அகத்திக்கீரை சேர்த்து அரைத்துத் துணியில் கட்டி அதை தீயிலிட்டு எரித்துக் கரியாக்கி நீர் கலந்து பசையாக்கி அதை ஒரு கூர்மையான ஊசி மூலம் தொட்டு எடுத்துப் பச்சை குத்துகிறார்கள்.
இனக்குழுக்கள், இரகசியக் குழுக்கள், சிறைக்கைதிகள் ஆகியோர் பச்சை குத்திக்கிட்டாங்களாம். சமய நம்பிக்கை உடையவர்கள் தங்கள் சமயத்தையும் காதல் கொண்டோர் – காதலர் பெயரையோ உருவத்தையோ பச்சை குத்தி -  காதலைத் தெரிவிக்கவும் கூட பச்சை குத்துதல் பயன்பட்டிருக்கு. சமூக அந்தஸ்தைக் குறிக்க , சாதனைகளைக் குறிக்க, தனது கூட்டத்தைக் குறிக்க பச்சை குத்தியிருக்காங்க. ஏன் போரில் முதன் முதலா எதிரியின் தலையைத் துண்டித்த போர் வீரனுக்கு தலையில் பச்சை குத்தி கௌரவிப்பது ஆப்ரிக்கப் பழங்குடி இன மக்களின் பழக்கமா கூட இருந்திருக்கு !.  
இந்தக் காலத்துல நடிகர் நடிகைகள், உலக குத்துச்சண்டை வீரர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் அழகு, அடையாளம், ஃபேஷன், சும்மா ஃபன்னுக்காக, தனித்துத் தெரிய, தங்களைத் தனித்துவப்படுத்திக் காட்டிக்கொள்ள என்று பச்சை குத்திக் கொள்கிறார்கள். இவங்க குத்தும் பச்சையில் அநேகம் டாட்டூஸ் எனப்படும் சலூனில் வரையப்படும் கலர் பச்சை குத்துதலைச் சேர்ந்தது. இதை குத்த சிறப்பு ஊசிகள் மின் உபகரணங்கள், வண்ண நிறமியிலான இங்குகள் உள்ளன.
அரசியல் தலைவர்கள், தெய்வ உருவங்கள், தங்களுக்குப் பிடித்த ஹீரோ ஹீரோயின்கள், கோலங்கள், பாம்பு, தேள் போன்றவை பாரம்பரிய பச்சை குத்துதலில் இடம் பெறுகிறது. டைனோசர் , ட்ராகன், பட்டர்ஃப்ளை, பறவைகள், விநோத உருவங்கள், பூக்கள் போன்றவை வண்ணப் பச்சை குத்துதலில் நடைபெறுகிறது.
உடல் முழுதும் இஞ்ச் விடாமல் பச்சை குத்தியவர்களும் உண்டு. ஆனால் இப்படிச் செய்வதன் மூலம் உடம்பில் ஸ்கேன் போன்றவை செய்ய நேரிடும்போது இவை மறைப்பதால் உடம்பின் உள்ளே நிகழும் நிலவரம் தெரியாமல் போய்விடுமாம். மேலும் ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்தும் போது வைரஸ் பாக்டீரியா போன்றவற்றால் நோய்த் தொற்று ஏற்படலாம். மேலும் ஹெச் ஐ வி, ஹெபடைடிஸ் பி ( மஞ்சள் காமாலை ) போன்றவை வரலாமாம்.  மிக அரிதாக கான்சர் கூட வர வாய்ப்புள்ளதாம்.
நிரந்தரமாகக் குத்திக் கொள்ளும் பச்சைதான் அவஸ்தை என்பதால் பலர் டெம்பரரி பச்சை குத்திக் கொள்கிறார்கள். இது மருதாணி போல் சில காலம் கழித்து மறையும். உடலுக்கும் அவ்வளவு பாதிப்பு இல்லை. இன்னும் ஒரு முறையும் இருக்கு . டாட்டூஸ் ஸ்டிக்கர்ஸ். இதில் மிக்கி மவுஸில் இருந்து போகேமான் வரைக்கும் டாட்டூஸ் ஸ்டிக்கர்கள் விற்கப்படுது. இவற்றை வாங்கி உடம்பில் அந்த ஒட்டும் பகுதியை அழுத்தி ஒட்டிவிட்டு கண்ணாடித் தாளைப் பிய்த்து எடுத்தால் உடம்பில் வண்ண உருவங்கள் பச்சை குத்தியது போல் ஒட்டிக் கொண்டு கவர்ச்சி தரும்.இதுக்கும் காலக்கெடு உண்டு. தண்ணீர் படப் பட இது அழியத்துவங்கும்.
சரி முடிவா பச்சையால பயன் உண்டான்னு கேக்குறீங்களா. அந்தக்  காலப் பச்சை சுகாதார முறைப்படி போடப்பட்டா அது அக்யுபஞ்சர் மாதிரி செயல்படுதுன்னு சொல்லலாம். இதே பச்சை குத்துதலையும் நவீன மருத்துவத்தையும் பயன்படுத்தி டெர்மல் அபைஸ் ( DERMAL ABYSS ) என்ற பெயரில் ஹார்வேர்டு மற்றும் எம் ஐ டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூட்டு யோசனைப்படி இந்த வண்ண ’மை’களை உயிருள்ள செல்களில் போட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
இவை செல் திரவங்களோடு வினை புரிய முடிவதால் செல்லுக்குள் இருக்கும் அமிலத்தன்மை, குளுக்கோஸ், சோடியம் ஆகியவற்றின் அளவைக் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டு விடலாமாம். இப்படி உடலுக்குள் இருக்கும் பொருட்களின் செறிவு மாற்றத்தைக் கொண்டு நிறம் மாறும் பொருட்களுக்கு உயிர் – மை ( BIO – MARKERS ) என்று பெயராம். !  இதுவரை பன்றிக்கும் இன்னும் சில விலங்குகளுக்கும் இத போட்டு ஆராய்ச்சி செய்து வெற்றி அடைஞ்சிருக்காங்க. 

மனிதர்களுக்கு உயிர் – மை போட்டு பச்சை குத்தி அவ்வப்போது ரத்த டெஸ்ட் எடுக்காமலே நம்மோட பச்சையின் நிறம் வைச்சே கண்டுபிடிக்கலாம். அப்பிடி ஒரு காலம் வந்தா நாம் எல்லாரும் நம் முன்னோர்கள் போல கையில் விதம் விதமான பச்சையோட உலாவலாம். அதுவரை பச்சை குத்தும் முன் ஒரு முறைக்குப் பலமுறை யோசிப்பது நல்லது. 

3 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பத்தை குத்துதல் பற்றி விவரமாக அறிந்தேன், அரிய செய்திகளோடு.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி ஜம்பு சார் !

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...