எனது நூல்கள்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

இவர்கள் – ஒரு பார்வை.


இவர்கள் – ஒரு பார்வை.


புஷ்பா தங்கத்துரை என்ற பெயரிலும் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் இவரது கதைகளைப் படித்திருக்கிறேன். இரண்டிலும் துல்லியமான மாற்றங்கள் இருக்கும். இதில் மனதைத் தொடும் ஆழமான வகை.

இந்நாவலில் இன்றைக்குக்கூட நாம் பேச அஞ்சும் பெண்களின் காமம் பற்றிய யதார்த்தமான எண்ணங்களைப் பேசி இருக்கிறார். இந்நூல் வெளிவந்த காலம் 1984. ஆனால் இன்றைக்கும் சர்ச்சைக்கு உள்ளாக்கக் கூடிய கதை அமைப்பு இது.

ஒரு நீதிபதி இருமுறை ஒரே கைதியின் வழக்கில் தீர்ப்பு வழங்கியபின் அந்தக் கைதிமேல் இரக்கம் மேலிட ஜெயிலுக்குச் சென்று அவரைச் சந்தித்து அவரது கதையைக் கேட்டறிகிறார். அவர் கூறுவதைப் போல உணர்ச்சிப் பிரவாகங்கள், உணர்ச்சிக் குவியலான மனிதர்களின் கதைகளில் இதுவும் ஒன்று .

தன் நண்பன் நாராயணனின் திருமணத்தில் கலந்துகொள்ளச் செல்கிறார்கள், வசந்தராவ் மற்றும் சில நண்பர்கள். அங்கே அழகி ஒருத்தியைப் பார்த்து ஆன்ம ஈர்ப்புக் கொள்கிறார் வசந்தராவ். 

நாராயணன் திருமணத்துக்கு முதல்நாள் மாலை எதிர்பாராவிபத்தில் சிக்கி காலமாகிவிட அந்தப் பெண் ஸூமானாவை மணக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு ஆட்படுகிறார் வசந்தராவ்.


அவளது வாழ்விழந்த சகோதரிகள் அநிலாவும் ஆர்த்தியும் இதற்குத் துணை நிற்கிறார்கள். மூவருமே பேரழகிகள். வசந்தராவின் வீட்டில் இத்திருமணம் பூகம்பத்தை ஏற்படுத்திவிட அவரது தந்தை வசந்தராவின் அலுவலக வேலைக்கும் வேட்டு வைக்கிறார்.

இதை அறிந்த ஸூமானா/ஸூனா தன்னை மாய்த்துக் கொள்ள முயல அவளுக்கான வைத்தியத்திலும் பொருள் கரைகிறது. அப்போது அவளைப் பார்த்துக்கொள்ள வரும் அநிலாவின் உணர்வுகள் வெளிப்படும் விதம் இன்றைய சினிமாவில் கூட நாம் காண முடியாதது.

“ஊனமுற்றவர்களின் தாபம் அறியாத வெறும் ஜடங்கள்” என்று வசந்தைக் குற்றம் சாட்டி இழந்த தங்கள் வாழ்க்கையத் தங்கள் தங்கையின் வாழ்க்கையின் மூலம் அடையலாம் என்று காத்திருந்ததை உணர்வுபூர்வமாக விளக்குகிறாள். “ இங்கே இருந்தால் தங்கையின் உடம்பு தேறுவதற்குள் ஒரு உள்ளம் நஷ்டப்பட்டுவிடக்கூடும் “ என்று விலகிவிடுகிறாள்.

பல வருடங்கள் கஷ்டப்பட்டு பல்வேறு வேலைகள் பார்க்கும் அவனுக்கு ரகுநாத் என்பவர் மூலம் ஒரு நிரந்தர வேலை கிடைக்கிறது. ஆனால் ஸூனாவோ முன் ஏற்பட்ட உடல் சீர்கேட்டால் இரண்டு மூன்று கருச்சிதைவுக்கு உள்ளாகிறாள்.

ஒரு வழியாக தத்தெடுக்கச் சம்மதித்து அவர்கள் தத்தெடுக்கும் மகன் ஸூனாவையே உரித்திருக்கிறான். அந்த தினேஷ் வந்ததும் ஸூனாவின் மனநிலையில் மாற்றம். அதுவும் அவளைப் பார்த்துக்கொள்ள வேலைக்கார விசாலம்மாவின் மகள் பிரபா வந்ததும் அவளுக்கும் வசந்துக்குமான இணக்கம் தொடர்வதும் அவளை இம்சிக்கிறது.

வல்சம்மா என்னும் ஆசிரமப் பொறுப்பாளரைச் சந்தித்து வந்தபின் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகக் கருதும் வசந்த், தன்னைச் சந்தேகப்பட்டு வினாக்கணை வீசும் ஸூனாவிடம் கடுமையான முகம் காட்டுகிறான்.

பிரபாவின் நெருக்கமும் அன்பும் அதிகமாகும் நேரம் ஸூனா விலகிக் கொண்டே போகிறாள். முடிவில் அவள் செய்யும் இரு கொலைகளை வசந்த் தான் செய்ததாக ஏற்று ருசு போதாமையால் எட்டாண்டு சிறைவாசம் அனுபவிக்கிறான்.

விடுதலை ஆக இரண்டு மாதம் இருக்கும்போதே தப்பிக்கும் அவன் இன்னும் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் கிடைத்து ஜெயிலில் அடைபட அவனுக்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ( கதை சொல்லி ) அதன் காரணத்தையும்  அவனிடமிருந்து கேட்டறிகிறார்.

பிரபாவின் உணர்வுகள் புரிந்த தனக்கு அநிலா, ஆர்த்தியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலாமல்போனது கொடுமையானது என்று உணரத் தலைப்படுகிறான். அநிலாவும் ஆர்த்தியும் பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். பிரபா வசந்தின் விடுதலைக்காகக் காத்திருக்கக் கதை முடிகிறது. 

புதியதொரு கோணத்தில், புதியதொரு அணுகுமுறையில் பெண்களின் உணர்வுகளை எடுத்தியம்பிய கதை இது. 

இதில் பெண்களின் உணர்வு வெளிப்பாடுகளும் அவர்களின் உடல் தேவைகளுக்கான மெல்லிய ஏக்கங்களும் வெளிப்படுகின்றன. கூட்டுக் குடும்பமாக வாழ விழையும் அவர்களின் எண்ணப்போக்கு 84 களில் படித்தபோதே அதிர்ச்சி ஏற்படுத்தியதுதான். இன்று ( இந்த மாதமே இருமுறை படித்தேன் )  படித்தபோதும் எனக்கு அது நீடித்தது. !

இந்நூலில் நான் ரசித்த வார்த்தைகள் ’ஸ்படிகநிற திரள்கள், ஈர பாஷ்பங்கள் , மலர் மஞ்சரியாக சித்திரப் பெண்கள், யௌவனக் கொத்து, சந்தனத் தழல்கள், மரகத ஒளிகள், நிசி தேவதை, மழலைச் சீவல்கள்.’

ஸ்ரீ வேணுகோபாலனின் வரிகளிலேயே சொல்வதனால் மனித ஆன்மாவைத் தொடும் எழுத்து என்பது இப்படித்தான் வெளிப்படும் ..

அநிலா ”மனதில் குமுறல் வந்தா எழுத உக்காந்துடுவேன். ”

வசந்தராவ் ”நிறையப் படிக்கிறீர்களா..”

அநிலா ”இல்லை நிறைய உணர்கிறேன். ”

நூல் :- இவர்கள்
ஆசிரியர் :- ஸ்ரீவேணுகோபாலன்.
பதிப்பகம் :- சுந்தர நிலைய வெளியீடு.
விலை – 1984 இல் 8 /- ரூபாய்.

2 கருத்துகள் :

R Muthusamy சொன்னது…

ஶ்ரீ வேணுகோபாலனின் இவர்கள் கதை விமர்சனம் சிறப்பு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி முத்துசாமி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...