கடவுளின் தேசத்தில் இருநாட்கள் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது தண்ணீர் தேசம். நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். அதுபோல் கிட்டே சென்று பார்த்தால் காமிராவின் கண்களுக்கு அழகாக இருக்கும் இடம் கொஞ்சம் கொசமுசதான். தண்ணீர்ப் பறவைகள், மீன்கள், பாம்புகள், தாவரங்கள். ஓரிரு நாட்கள் தங்கலாம். வெய்யில் பிச்சு எரியுது. மீன் சாப்பாடு பரவாயில்லை.
ரப்பர் மரக்காடுகள், பலாமரங்கள், நேந்திரன் வாழைகள், மிளகு, தென்னைகள் சூழ் நீர் உலகு . மலைக்காடு. ஆனால் குளுகுளுப்பெல்லாம் இல்லை.
கொஞ்சம் வரட்சியான முதுமை கொண்ட சீரான உடையணிந்த மகளிர் அநேகம். உழைப்பாளிகள். தளதள கேரளப் பெண்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க சென்னை வந்துவிட்டார்கள். அமயம் சமயத்துக்கு ஒரு சாயா சாப்பிட ஒரு நாயர் கடை கூடக் கிடையாது. எல்லாரும் சினிமாவிலும் எல்லா நயா நுக்கட்களிலும் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பக்தியில் பெருகிய தேசி கேரளவாசிகளும் பெருவாரி நகைக்கடைகளும் ( ஆற்றுக்கால், ஆலாபட், கல்யாண் ) கொண்டதாக இருக்கிறது திருவனந்தபுரம். கொய்லோன் ரொம்ப கிராமப்புறம் மாதிரி இருக்கிறது. கேரள ஆரிய வைத்திய சாலை ஒன்று கூட தட்டுப்படவே இல்லை. கொச்சி துறைமுக நகரம். ஓரளவு புழக்கமா இருக்கு. சென்னை மாதிரி 2 இரயில்வே ஸ்டேஷன் இருக்கு. சரியாகப் பார்த்துச் செல்வது உத்தமம்.
பழம்பொரியும், சக்குவரட்டியும், உண்ணியப்பமும், பழ போண்டாவும், சுக்கு, சீரக வெள்ளமும் கிடைக்கிறது. கப்பு கப்பாகப் பாயாசம் கூட ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் கிடைக்கும் ஆனால் சிங்கிள் கப் சாயா கிடைக்காது. ஏனெனில் அங்கே மாடு என்றாலே பாலுக்கில்லை, கறிக்குத்தான்.
மீனுக்கும் கேரள மட்டையரிசிக்கும், கப்பைக்கிழங்குக்கும் முடையே இல்லை. மீன் வறுவல் சும்மா உங்க காரம் எங்க காரம் இல்லை. இரண்டு நாட்கள் உதட்டிலிருந்து குதம் வரை எரியும் காரம்.
மணிக்கணக்குக்கும் போட் ஹவுஸ் கிடைக்குது. பொதுவா முள் இல்லாமல் மீன் சாப்பிட ஆசைப்படுபவர்கள் (சொல்லப்போனா வஞ்சிரம் மட்டும் தின்னும் பார்ட்டீஸ் ) இந்த ஹொகனேக்கல், கேரளா இங்கெல்லாம் சாப்பிட்டால் மீனை வெறுத்துவிடும் அபாயம் உண்டு. வீட்டில் ஒற்றை முள் கொண்ட வஞ்சிரத்தில் வாழைக்காய் போல் சாத்வீக ஃப்ரை செய்து சாப்பிடலாம்.
எல்லாப் பொருளிலும் உறையும் பரப்பிரம்மம் மாதிரி தேங்காயை எங்கெங்கும் எதிலும் காணலாம். எண்ணெய், பால், கடலக்கறி, அவியல், மிளகூட்டல், துவரன், குழம்பு, தீயல், எரிசேரி, புளிசேரி, நேந்திரன் சிப்ஸ், பலாப்பழ சுக்குவரட்டி , குழியப்பம், அல்வா, போளி, பாயாசம், இலை அடை, பொங்கல், அசைவ உணவுகள், என எங்கெங்கும் தேங்காயின் ஆட்சி. விதம் விதமாய் தேங்காயை சித்திரவதை செய்து சமைப்பது எப்படி என இவங்ககிட்ட கத்துக்கலாம். ஹிஹி.
பேர் தெரியா நீர்ப் பறவைகள் அநேகம். ஆனால் எல்லாம் காகம் போல் கன்னங்கரேல் என்று இருக்கு. காமிராவில் சுடும்முன் எல்லாம் விடுஜூட்தான். பேறு பெற்றோர் பறவையை ( காமிராவில் ) நச்சென்று சுட முடியும்.
கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் நீரை அளந்து ஞானம் பெறலாம். நாளுக்கு 8,000ரூ வாடகை. நான்கு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய். வாங்க. வள்ளத்துல போய் வருவோம்.
அந்த வெய்யிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தது ஒரு வெள்ளைக்காரத்தம்பதி.