எனது நூல்கள்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

சீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )
சீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) 

ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தைப் படிக்க நேர்ந்தது. விருத்தப்பாக்களால் ஆன அந்நூலை அதன் சுவை கெடாமல் வசனநடையில் தந்திருப்பவர் பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்கள்.

சுதேசமித்திரனும் ஹிந்துவும் இதற்கு நூல்முகம் கொடுத்திருக்கின்றன. சமண முனிவரான திருத்தகு முனிவர் எனப்படும் திருத்தக்க தேவர் இதன் ஆசிரியர். மொத்தம் 3145 பாடல்களும் 13 இலம்பகங்களும் கொண்ட நூல் சீவகசிந்தாமணி ( ஸ்யமந்தக மணி என்பது போல் ஒலிக்கிறதல்லவா ) 

வேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீகமும் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் இன்ன பிறவும் எழுதிய எழுத்தாளரைப் போலத் துறவியான திருத்தக்க தேவர் எழுதிய அகநூல் இது என்பது வியப்பாகும். கம்பரின் பல பாடல்களுக்கான மூலங்கள் இதிலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை ஐயந்திரிபற நிரூபிக்கிறார் ஆசிரியர் பரமசிவானந்தம் 

சமண முனிவரான திருத்தக்கதேவரைப் பிற புலவர்கள் அகம் பாட முடியாது என்று எள்ள அதைத் தம் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார் . ஆசிரியரே இவருக்கு அகம் பாட அனுமதித்து ஊக்கம் கொடுக்க எட்டுபெண்களைத் திருமணம் செய்து கொண்ட அரசனை நாயகனாக வைத்து மணநூல் எனப்புகழப்படும் இந்நூலைப் படைக்கிறார் திருத்தக்க தேவர்.


தெள்ளிய நீரோடை போலச் செல்லும் தேசத்தின் அழகு, சலசலக்கும் அருவி போல் அங்கே வாழும் இளமகளிரின் அழகு நலம், சரேலென விழும் காட்டாறு போல அரசன் அரசியின் மறைவும் வீழ்ச்சியும், சுடுகாட்டில் பிறக்கும் அரசிளங்குமரன், மடு மலை என ஏறியும் இறங்கியும் செல்லும் அவன் வாழ்வு, எண்திருமணங்கள் புரிந்தாலும் ஆழ்மன விழிப்புணர்வோடு துறவு நாடும் அரசன் என அழகான சித்திரமாய் விளங்குகிறது சீவகன் கதை.

கட்டியங்காரனை நம்பும் அரசன் சச்சந்தன் நாடிழக்க அவன் உருவாக்கிய மயிற்பொறியில் ( அந்தக்கால ஆகாய விமானம்) அரசி விசயை தப்பிச் சென்று தப்பிதமாய் மயானத்தில் இறங்கி அங்கேயே சீவகனைப் பெற்றெடுக்கிறாள். அதன் பின் அவன் சீரும் சிறப்புமாக வளரவேண்டி அவள் மறைய கந்துக்கடன் என்றொரு வணிகன் வளர்த்து வருகிறான். 
சீவகன் வளர்ந்ததும் அச்சணந்தி அடிகள் என்ற ஆசிரியரிடம் கல்வி பயில்கிறான். அவர்மூலம் தன்னைப் பற்றிய பிறப்பு ரகசியத்தை அறிந்தும் காலம் கனியக் காத்திருக்கிறான். அவ்வேளையில் அவன் வாழ்வின் போக்கில் அவன் சந்திக்கும் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எண்மரை மனைவியராய் அடைகிறான். 

அவனது தோழர்கள் சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவத்தத்தன் ஆகியோரோடு கந்துக்கடனின் புதல்வனும் சீவகனின் சகோதரனுமாகிய நந்தட்டன் சீவகனின் அனைத்து முயற்சிகளுக்கும் உதவுகிறான். இதில் ஆசிரியர் உரைப்பது என்னவெனில் தருமத்தையின் செயல்பாடுகள் சீதையை ஒத்தும், சீவகன் ராமனாகவும் நந்தட்டன் லெக்ஷ்மணனாகவும் கம்பராமாயணத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். 

சமண முனிவரே ஆயினும் திருத்தக்க தேவர் எழுதிய பல பாடல்கள் உள்ளம் கிளர்ந்து எழும் வண்ணம் யாக்கப்பட்டுள்ளன. துறவியேயாயினும் மகளிர் உள்ளங்களைப் படித்தவர் போல் அவர்கள் காதலையும் காமத்தையும் விவரித்திருப்பது வியப்புக்குரியது. 

இந்நூலைப் படிக்க ஆரம்பிக்கும்போது இது காமத்தின் கழிவரல் எனத் தோன்றிய ஐயறவு அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டேதான் இருந்தது. ஆனால் எண்திருமணங்களும் முடிந்தபின் தாபதர் பள்ளியில் அடைக்கலமான தாய் விசயை போல் சீவகன் துறவு மேற்கொண்டு செல்வது மனம் கனக்கச் செய்துவிட்டது.  
  
ஓஷோவைப் போல் இன்பத்தின் வழி மெய்ஞ்ஞானம் அடைதல் இதுதானோ என்றும் தோன்றியது. 

பிறப்பும் வளர்ச்சியும், இராசமாபுரத்தே, இயக்கர் நாடு சென்றபின், கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும், உண்மை வெளிப்படுதல், அறம் வென்றது, அறமும் துறவும் ஆகிய ஏழு பிரிவுகளில் இந்நூலைப் பகுத்தாய்ந்து சென்றிருக்கும் பரமசிவானந்தம் அவர்கள் தேவையான இடங்களில் காப்பியத்திலிருந்து ஓரிரு பாடல்களையும் பொருத்தமாகப் பகிர்ந்துள்ளார்.

பாடற்பகுதி, மனப்பாடச்செய்யுற்பகுதி ஆகிய ஒன்றிலும் நாம் இந்நூலைப் படித்திருக்கவே முடியாது. இதை மட்டுமல்ல வளையாபதி குண்டலகேசியையும் அப்படித்தான். ஏனெனில் சமண காப்பியங்களாக இவை ஐந்தும் இருந்தும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவற்றை விட இவற்றில் இன்பத்துப்பாலுக்கான பாடல்கள் அதிகம். கொலை, பொய், காமம், கள்ளுண்ணல், சூதாடல் ஆகியவற்றை இவை மறுத்தாலும் ஏனோ இவை பாடற்பகுதியில் நாம் படிக்கும் காலத்து இடம்பெறவில்லை. 

முடிவு துறவாக இருந்தாலும் காப்பியம் முழுமையும் களியாட்டக் கூறாகவும்,  காலம் இடம் பொருள் பார்க்காமல் ஊர் எழில், மகளிர் எழில், அவர்தம் இன்ப நுகர்ச்சிகள், விழைவுகளே பெரும்பகுதியும் இடம் பெறுகின்றன. க்ளைமேக்ஸிலும் டூயட் பாடும் ஹீரோ போல அவ்வப்போதும், அப்போதும் ஒருகாதல் & ஒரு திருமணம் என்று இதன் நாயகன் சீவகன் கொண்டாடி மகிழ்கிறான். 

தனது பயணத்தில் ஓரிரு இடங்களிலும் யாக்கை நிலையாமை குறித்தும் அருகதேவன் வழிபாடு குறித்தும் சமணர் பள்ளிகளில் தாபதர் பள்ளிகளில் அறிவுறுத்துகிறான் அவ்வளவே. முடிவில் தன்னைச் சேர்ந்தோருக்கு உரியன செய்து அவன் துறவெய்த அவனைச் சார்ந்த அனைவரும் குடும்பமாகவே துறவெய்துகின்றனர் ! மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. !

இதில் அமைச்சர்கள் நீதி அறிவுறுத்தல், நண்பர்கள் உதவி, அரசனின் துறவு மனப்பான்மை, அறம் பிழைக்க எண்ணுதல் ஆகியன கொஞ்சம் சிறப்பானவை. சீவகனின் கதையையும் அவனின் பிறவாப்பெருநிலையையும் அறிய இந்நூலையும் வாசித்துப் பாருங்கள். மூலத்தில் காப்பியமாகப் படிப்பதை விட இது சுவாரசியமாகவும் எளிதாகவும் இருக்கிறது.  

நூல் :- சீவகன் கதை
ஆசிரியர் :- பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம்
பதிப்பகம் :- தமிழ்க்கலைப் பதிப்பகம்.
விலை :- ரூ 2 - 0 - 0
வெளியான ஆண்டு – 1952.

3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல நூலறிமுகம். ஆனால் இப்போதும் கிடைக்கிறதா என்ன...

G.M Balasubramaniam சொன்னது…

பழைய புத்தகங்களை தூசு தட்டிப் படிக்கிறீர்கள் போல் தெரிகிறது

Thenammai Lakshmanan சொன்னது…

therila Venkat sago .

aam Bala sir :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...