எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 14 ஜூலை, 2017

டாக்டர் கிருஷ்ணஸ்வாமி – என்னைக் கவர்ந்த முதல் டாக்டர்.



மன்னார்குடி மூன்றாம் தெருவின் முக்கில் உள்ள அந்த வீட்டை மறக்கவே இயலாது. கிராப் வெட்டிய இளைஞன் போல் மாடியில் இருந்து வெட்டிவிடப்பட்ட கொடிகள் முகத்தை மறைக்கக் கம்பீரமாக எழுந்து நிற்கும் அந்த வீட்டுக்கு மாதம் ஒரு முறையாவது நாங்கள் சென்றிருப்போம். ( தசாவதாரத்தில் கமல் மாபெரும் பெருமாள் பக்தரா இருப்பார். அதே போல் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமிக்கு அடுத்தபடியா எனக்குப் பிடிச்சவர் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி. மூன்றாம் தெருவில் க்ளினிக் வைத்திருந்தார். )

உள்ளே நுழைந்ததும் ஒரு நடை அதைத் தட்டியால் தடுத்தபடி ஒரு ஹால். அந்த ஹால் ஆண்களும் குழந்தைகளும் அமர. தடுப்பின் பின்புறம் பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.அது பெண்கள் அமர. டாக்டர் கிருஷ்ணஸ்வாமியின் க்ளினிக் கம் வீடு அது..



சைடில் இருக்கும் ரூமில்  ஒரு விதமான சோம்புக் கஷாயம் போன்ற  கலவையை அங்கே இருக்கும் மேட்ரன் நர்ஸ் கொடுத்ததும்தான் நம்மைப் பீடித்த அஜீரணக் காய்ச்சல் விடும். அதற்கு என்று அவுன்ஸ் கப்புகளும் இருந்தன. அதில் மெஷர் செய்து ஊற்றி வேறு கொடுப்பார்கள். அந்த அவஸ்தையை இன்னும் இரு வேளை வீட்டுக்கும் சென்று தொண்டைக் கமறலோடு குடிக்க வேண்டும். இண்டைஜஷன் ஃபீவர் என்று அதற்கு நாமகரணம் சூட்டி இருந்தார்கள்.

ஒரு முறை காது வலி என்று சென்றபோது காதில் சூடாக எதையோ அலுமினிய ஸ்பூனில் காய்ச்சி ( க்ளிசரினா தெரில ) ஊத்தினார் அந்த நர்ஸ். 

சிலரைப் பற்றி எழுதாவிட்டால் நம்ம ஜென்மமே சாபல்யம் அடையாது. அதில் முக்கியமானவர் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி. கருடனில் பறந்துவரும் கிருஷ்ணஸ்வாமி மாதிரியே எப்போதும் நல்ல பளீர் சிரிப்பும் அழகும் கொண்டவர்.

தொட்டால் ஜில்லென்றிருக்கும் ஸ்டெத் மாட்டி இருப்பார். அவர் சிரித்த முகத்தோடு நம்மைத் தொட்டுப் பார்த்து கையில் நாடி பார்த்ததுமே நம்முடைய காய்ச்சல் எல்லாம் சர்ரென்று இறங்கிவிடும். டாக்டரிடம் ஏதோ மாஜிக் இருக்கோ என நினைத்ததுண்டு. இவங்களுக்கெல்லாம் நோவே வராதான்னு நினைச்சதுண்டு. அவரைப் பார்த்தே நான் டாக்டருக்குப் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டதுண்டு.
அவரது ரூமுக்கு வெளியே தெரியும் ஜன்னலில் அவரது தோட்டம் தட்டுப்படும். விதம் விதமான ரோஜாக்களும் பூக்களும் நறுமணத்தோடு பூத்துக் குலுங்கும் தோட்டம் அது. அந்த ரோஜாக்களில் ஒரு ரோஜா போன்றே அவரது முகமும் செஞ்சிவப்பாக இருக்கும் அது போன்ற தோட்டத்தை எல்லாம் வீடுகளில் அந்தக் காலங்களில் பார்ப்பது அரிது. தோட்டக்காரர் இருந்தால்தான் பராமரிக்க முடியும்.. 

அப்பாவுடன் சைக்கிளில் பின் சீட்டில் அமர்ந்து காமிக்கப் போகும்போது இருக்கும் காய்ச்சல் வரும்வரை இறங்கிவிடக்கூடாது என்ற பதட்டமும் இருக்கும். ஏனெனில் அங்கேயிருந்து ஒத்தைத் தெரு வழியாகத்தான் வீட்டுக்குப் போகணும். அங்கேதானே நான் படித்த கணபதி விலாஸும் இருந்தது. காய்ச்சல் குறைந்தால் அப்பா ஒரு வேளை பள்ளியில் இறக்கிவிட்டுவிடுவாரோ என்ற பயமும்தான் காரணம். 

அம்மாவுக்கு வலதுபக்கமாக இருதயம் இருப்பதை டயக்னோஸிஸ் செய்தவரும் அவர்தான். அப்பாவுக்கு வெயிட் தூக்கி இடுப்பெலும்பு பிசகியதில் ட்ராக்‌ஷன் போட்டதும் அவரிடம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்தான் எங்க குடும்ப டாக்டர். மாதம் ஒரு முறை பில் அனுப்புவார். அப்பா வங்கியில் காசாளராக இருந்ததால் நல்ல பழக்கம். 

முதன் முதலில் அவரது வீட்டில்தான் 78 இல் தொலைக்காட்சி வந்தது. ஒரு முறை வேறு யாரோ ஒருவருக்கு உடல் நிலையைக் காண்பிக்கச் சென்றபோது டிவி விஷயம் கேள்விப்பட்டு நான் பார்க்க ஆசைப்பட உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார்கள். அரை மணி நேரம் முதன் முதலாக அன்று தொலைக்காட்சியில் நான் ஆண்டெனா கிழித்த கோடுகளுடன் ஆர்வமடங்காமல் பார்த்த விஷயம் பொதிகையின் வயலும் வாழ்வும். J

கல்லூரி வந்ததும் ஊருக்குச் சென்றிருக்கும்போது ஒரு முறை உடல்நலக்குறைவு ஏற்பட டாக்டர் வீடு சென்றால் அங்கே டாக்டரின் மகன் இருந்தார். டாக்டர் அளவு கரிஷ்மா இல்லை என்றாலும் இவரும் ஓரளவு நன்றாகவே பார்த்தார்.. ஃபேர் & லவ்லி போட்ட விளம்பர இளைஞன் மாதிரி தோற்றம். அமைதியான சுபாவம். ஆனால் கிருஷ்ணஸ்வாமி டாக்டரைப் பார்க்காதது என்னவோ போல்தான் இருந்தது. இப்போதெல்லாம் இவர்தான் பார்க்கிறார் என்றார்கள். அவரிடம் காண்பித்து மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் தணிந்தது. மருந்து யார் கொடுத்தாலும் ஒன்றுதானே. மனம்தான் அது டாக்டரின் கைராசி என நினைக்கிறது J
 




அதன்பின் நான் அந்தத் தெருவுக்கே போகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கல்லூரிக்காக மதுரை, அதன்பின் திருமணமாகி கோவை, மற்ற பல ஊர்கள் , காரைக்குடி என சுத்தி சுத்தி வந்தாலும் மன்னை செல்லும் வாய்ப்புக் கிட்டவேயில்லை.

இதில் நடுவில் நக்கீரனோ, ஜூனியர் விகடனிலோ டாக்டரின் மகன் மருமகள் பேத்தியின் இறப்பு பற்றி வந்த விஷயங்கள் மனதைச் சுழற்றி அடித்தன. என்ன ஆச்சு ஏன்னு புரில. டாக்டர்ஸுக்கும் மனச்சிதைவு வரக்கூடுமா. இதுக்கெல்லாம் படிப்பின்போதே பயிற்சி ஏதும் இல்லையா தெரில. இதில் இண்டைஜஷன் விஷயம் என்னன்னா டாக்டர் கிருஷ்ணஸ்வாமியின் இறப்பும், அவர் மகன் மற்றும் மருமகள், பேத்தியின் மர்மமான இறப்புகளும்தான்.

டாக்டரின் மகன் அரசாங்க மருத்துவமனையில் மருத்துவராக வேலைபார்த்து வந்த தனது மனைவியையும் குட்டி மகளையும் கொன்றுவிட்டு பூங்கொத்து வைத்து அஞ்சலியும் செய்துவிட்டுத் தன்னையும் மாய்த்துக் கொண்டிருந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சிச் செய்தி.

என்ன சொல்றதுன்னு புரில. ஆனாலும் ஆயிரம் இருந்தும் என்னன்னே தெரியாது டாக்டர்ஸைப் பிடிக்கும். அவர் மட்டுமல்ல அவர் போன்ற பல டாக்டர்கள் ஏற்படுத்திய இம்பாக்ட் அதிகம். என்ன ஆனாலும் நம்மளக் காப்பாத்திடுவாய்ங்கய்யா என்ற நம்பிக்கை. மனித உருவில் ரட்சகர்கள். 

அதன் பின்னும் பல டாக்டர்களை சில சர்ஜரிகள், சில உடல்நலக் குறைவுகள், சில பேட்டிகளுக்காகச் சந்தித்திருக்கிறேன். சில டாக்டர்கள் முகநூலில் நண்பர்களாகவும் இருக்காங்க.

என் குடும்பத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் டாக்டர்களாக இருக்குறாங்க. சிலர் டாக்டர்கள் ஆகவும் போறாங்க.  சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு டாக்டரையும் பிடிக்குது. ஏன்னா பேசிக்கலி ஐ லவ் டாக்டர்ஸ். அதுக்குக் காரணம் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி என்ற மாஜிக் மனிதர்தான்.  


5 கருத்துகள்:

  1. காரைக்குடி.செக்காலை மருத்துவர் திருமதி சுகுமாரி அவர்கள் நினைவில் வந்தாரர்கள்

    பதிலளிநீக்கு
  2. என் தாய் மாமா ஒரு டாக்டர் அந்தக்காலத்து எல் எம் பி . டாகடர் அவர் நினைவு வந்தது அந்தக் காலடாக்டர்கள் நண்பர்கள்போல் பாவிப்பார்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு. மருத்துவர் இறப்பு பற்றிய செய்தி அதிர்ச்சி தந்தது.

    பதிலளிநீக்கு
  4. AAM DD SAGO

    ENAKKUM PALANICHAMY SIR. AVAR PATRI THANI POST PODALAM

    AAM BALA SIR

    AAM VENKAT SAGO


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...