சரேல்னு கொட்டுற அருவியைப் பார்த்ததும் ”தீம்தனனா தீம்தனனா” அப்பிடீங்கற பாட்டு மனசுல ஓடாட்டி நிச்சயமா சொல்வேன் நீங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க இல்லை.. :)
எங்க ஆயா வீட்டு ஐயாவுக்கு நான் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும்போது ஒரு கடிதம் எழுதி இருந்தேன். வழக்கம் போல ”சென்று சேர்ந்தேன். கல்லூரி & விடுதி பரவாயில்லை.நல்ல ஆசிரியைகள், தோழிகள் கிடைத்திருக்கிறார்கள். வீட்டு சமையல் போல் காரசாரமாக இல்லை சாப்பாடு” என்று கிட்டத்தட்ட 15 இன்லண்ட் கார்டு, அப்பா, அம்மா, ஐயா, ஆயா, தம்பி, என்று இருக்கும் இன்னபிற உறவினருக்கெல்லாம் இன்லாண்ட் லெட்டரும், அது தீர்ந்த காலை மஞ்சள் கடிதாசியும் ( அட மஞ்சள் போஸ்ட் கார்டுப்பா - கமல் பாணியில் படிக்கவும் ). :)
அதுக்கு எல்லாருமே உடனடி ரிப்ளை . மேலும் ஏன் தாமதம் என்று கேட்டு ஒரே திட்டு & சத்தம். அப்போவெல்லாம் கடுதாசிக்கு மறு கடுதாசிதான் நம்ம தொடர்பே. முணுக்குன்னா கடிதம் எழுதிப்போம்.
அதுக்கு என் ஐயா பதில் கடிதம் எழுதிவிட்டார்கள். அப்பத்தா வீட்டு ஐயா என்றால் ஆச்சர்யப்பட வேண்டாம். அவர்கள் எப்போதுமே அன்பான ஆசிகளை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.
இது ஆயா வீட்டு ஐயாவின் கடிதம். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியிலும் புளகத்திலும் கண் எல்லாம் வேர்த்தது. அவர்கள் கையெழுத்திலேயே கடிதம், கடிதாசி. மெயினாக “ அன்புப் பேத்தி தேனம்மைக்கு, நன்கு படிக்கவும். படிக்கிற பிள்ளை சாப்பாட்டை எல்லாம் கருதக் கூடாது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும். படிப்பு முக்கியம் .சுப. வள்ளியப்பன். “இவ்வளவுதான். உணர்ச்சி வயப்பட்டு “ ஐயா உங்கள் கடிதம் கிடைத்தது. அது குற்றால ஓடையிலே குளித்தது போல் இருந்தது “ என்று எல்லாம் எழுதி அனுப்பி விட்டேன்.
அதற்குத் திரும்ப வந்த ஐயாவின் கடிதம் தான் ஹைலைட். “ ரொம்ப சந்தோசம். ஏன் அத்தனை அருவி இருக்கும்போது குற்றாலத்தில் அருவியில் குளிக்காமல் ஓடையில் போய் இறங்கிக் குளித்தாய். அடுத்த முறை ஞாபகமாக அருவியில் குளிக்கவும். “ ஹாஹா இதுதான் ஐயா.
இனி கொஞ்சம் இலக்கியத்துக்குப் போவோம்.
///அம் கண் விசும்பின் அகல்
நிலாப் பாரிக்கும்
திங்களும், தீங்குறுதல்
காண்டுமால்:-பொங்கி
அறைப் பாய் அருவி அணி
மலை நாட!-
உறற்பால யார்க்கும் உறும். ///
-- பழமொழி நானூறு.
கொஞ்சம் கூகுள்ள கடன் வாங்கினது இது. :)
“ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்”
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய 4448 நோய்களுக்கும் அடிப்படை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். இந்நீர் மூலிகைகளின் மீது பட்டு வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும், பயன்படுகின்றன.
-- அப்பிடின்னு சொல்றாங்க. சோ சனி நீராடு மாதிரி கொஞ்சம் அருவி நீராடுங்க. அதுவும் ஹொகனேக்கல்ல. எண்ணெய் தேய்க்க இப்போ அனுமதி இல்ல. ஏன்னா அது நீரை மாசாக்குதாம். எகோ ஃப்ரெண்ட்லி. எனவே எண்ணெய் சிகைக்காய் எடுத்துப் போக வேண்டாம். தங்கியிருக்குற ரூம் இல்லாட்டி சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து தனிக்குளியல் போட்டுக்குங்க சோப்பு ஷாம்புவோட. அதையும் இங்கே எடுத்துட்டுப் போக வேண்டாம்.