வெள்ளி, 1 டிசம்பர், 2017

பராக்கிரமம்மிக்க பாளையக்காரர் பூலித்தேவன்.

பராக்கிரமம்மிக்க பாளையக்காரர் பூலித்தேவன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாளையக்காரர்களுள் முக்கியமானவர், ”வெள்ளையனே வெளியேறு” என்று 1751இலேயே முழங்கியவர், ஆங்கிலேயர்களைக் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் யுத்தபயத்திலேயே வைத்திருந்தவர் நெற்கட்டும்செவ்வலை ஆண்ட பராக்கிரமம்மிக்க பூலித்தேவன் என்ற பாளையக்காரர்தான். 

பாண்டியநாடு 18 மறவர் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டபோது பூழிநாட்டின் தலைநகராக நெற்கட்டாஞ்செவ்வல் அமைந்தது. இந்தப் பாளையத்தை வரகுணராமன் சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவரின் வம்சாவளியினர் ஆண்டுவந்தனர். பூலித்தேவரின் தந்தை இவரது வழியில் வந்த பத்தாம் தலைமுறைமன்னர் சித்திரபுத்திரத் தேவர். இவரது தாயார் சிவஞான நாச்சியார். இவர்களுக்கு பூலித்தேவர் 1 – 9 – 1715 இல் மகனாகப் பிறந்தார். 

இறைஉணர்வும் வீர உணர்வும்மிக்கவரான இவர் சிறுவயதிலேயே சன்மார்க்க நெறி, தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். அதன்பின் குதிரையேற்றம், யானையேற்றம், மல்யுத்தம், வாள் சண்டை, வேலெறிதல், அம்பு எய்தல், சிலம்புப் பயிற்சி, கவண் எறிதல், வல்லயம் எறிதல், சுருள் பட்டா சுழற்றுதல் ஆகிய வீரவிளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். 

இவர் சிறுவயதிலேயே புலிகளுடன் பொருவதிலும், புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் விருப்பமுள்ளவராக விளங்கியதால் இவர் காத்தப்பப் பூலித்தேவர் என்றும் புலித்தேவர் என்றும் அழைக்கப்பட்டார். இவரின் வீர சாகசத்தைக் கண்ட பெற்றோர் இவரது பன்னிரெண்டாவது வயதிலேயே (1726 இல் ) இவருக்குப் பட்டம் சூட்டினர்.  உடனே இவரது தமக்கையின் மகள் கயல்கண்ணி என்ற இலட்சுமி நாச்சியாருடன் திருமணமும் நடைபெற்றது. இவர்களுக்கு கோமதி முத்துத்தலவாச்சி, சித்திர புத்திரத்தேவன், சிவஞானப்பாண்டியன் என்ற மூன்று மகவுகள் பிறந்தனர்.

திருநெல்வேலிச் சீமையை சேர்ந்த அநேகக் கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தும், அணிகலன்கள் வழங்கியும், குளங்களை சீர்படுத்தியும் கொடுத்திருக்கிறார் பூலித்தேவர்.

1750 இல் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இராபர்ட் கிளைவ். திருச்சியில் அனைத்துப் பாளையக்காரர்களும் தன்னைப் பேட்டி காணவேண்டுமென்று கட்டளையிட்டான். அதைக்கேட்டுக் கொந்தளித்த பூலித்தேவன் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றி பெற்றான் என்று ”பூலித்தேவன் சிந்து” என்ற பாடல் கூறுகிறது. 

சாதாரணமாகவே நெற்கட்டும்செவ்வலில் பண்ணையார்களோ, நில அடமானம் பிடித்தவர்களோ அடாவடி வரிவசூல் செய்வதை எதிர்த்து நின்றவர் பூலித்தேவன். இதில் ஆங்கிலேயர்களும் ஈடுபட்டால் சும்மா விடுவாரா ? 1755 இல் கர்னல் அலக்ஸாண்டர் ஹெரோன் கோட்டையை முற்றுகைஇட்டு கப்பம் கட்ட வலியுறுத்தியபோது தம்முடைய சொந்த நாட்டை ஆக்கிரமித்து வரிவசூல் செய்யும் உரிமை அந்நியர் யாருக்குமே கிடையாது என்று வீரமுழக்கம் செய்து அவர்களைப் போரிட்டுத் துரத்தி விரட்டி அடித்தார்.

1755இலேயே மாபூஸ்கான், ஆற்காடு நவாபின் சகோதரர் ஆகியோரையும் தோற்கடித்தார்.. 1760 இல் நெற்கட்டும்செவ்வலைத் தாக்கிய யூசுஃப்கானையும், 1766 இல் வாசுதேவநல்லூர்க்கோட்டையைத் தாக்கிய கேப்டன் பௌட்சனையும் தோற்கடித்தார். பாளையக்காரர்களை ஒன்றுபடுத்திக் கப்பம் கட்டுவதை நிறுத்தச் சொன்னார். இதனால் நவாபுகள் ஆங்கிலேயர் உதவியை நாட கர்னல் ஹெரான்,மாபூஸ்கான் மற்றும் கான்சாகிப் தலைமையில் பாளையக்காரர்களைத் தாக்கப் படை ஒன்றுகூடியதால்  பாளையக்காரர்களின் ஒற்றுமை சிதறியது.

வெடிமருந்து, துப்பாக்கி, பீரங்கி கொண்டும் கூட பூலித்தேவரின் கோட்டையில் ஆங்கிலப் படைகளால் ஒரு விரிசலைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. 1755 முதல் 1767 வரை பன்னிரண்டு ஆண்டுகள் பல போர்கள் நிகழ்ந்தன. கொடூர தளபதி கான்சாகிப்புடன் நடைபெற்ற கடைசிப்போரில் பேய்வாய் பீரங்கிகளால் கோட்டை உடைபட பூலித்தேவர் கடலாடிக்குத் தப்பிச்சென்றார். அதன்பின் படைசேர்த்துப் பாளையத்தை மீட்ட அவரைப் பிடிக்க பெரும்படையுடன் வந்தது ஆங்கிலப்படை. 

1767 இல் டொனால்ட் காம்பெல் தலைமையில் மேஜர் ப்ளிண்ட் ,காப்டன் ஹார்பர் தாக்கினர். கோட்டையில் பீரங்கிகளாலும் குண்டுகளாலும் ஏற்பட்ட ஓட்டைகளை தத்தம் உடல்களைக் கொண்டும் அடைத்துக் காத்தனராம் பூலித்தேவரின் மாவீரர்கள். போரின் முடிவில் கோட்டை  ஆங்கிலேயர் கையகப்பட மன்னர் மேற்குத் தொடர்ச்சி மலைக்குத் தப்பிச் சென்றாராம்.

இவரது மறைவு குறித்து சரிவரத் தெரியவில்லை. ஆரணிக்கோட்டைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்றும் சங்கரன் கோவிலின் இறைவனை வழிபட்டபோது புகைமண்டலம் சூழ சோதியில் கலந்தார் என்றும் கருத்து நிலவுகிறது. இன்னொரு கருத்து இவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் என்றும் இதை மக்கள் அறிந்தால் கிளர்ச்சி செய்வார்கள் என்று மறைத்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது. 

இவர் வீரத்தைப் புகழ்ந்து பாடப்படும் பல நாட்டுப்புறப்பாடல்கள் இவரின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. இவர் ஆறடி உயரம் உடையவர் என்றும் பிரகாசமான முகவடிவும், திண்மையான தோள்களும் மார்பும் உடையவர் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம் “ ஆனார் என்றும் நாட்டுப்புறப்பாடல்கள் கூறுகின்றன. 

நெற்கட்டும்செவ்வலில் இம்மாவீரர் வாழ்ந்த இடத்தில் நினைவுமாளிகை எழுப்பி, உருவச்சிலை அமைத்து அவர் பயன்படுத்திய ஆயுதங்களையும் காட்சிப்படுத்திக் கௌரவித்துள்ளது அரசு. பராக்கிரமம்மிக்க பாளையக்காரரான பூலித்தேவனின் நெஞ்சுரத்தையும் நேர்மைத் திறத்தையும் நினைக்குங் கணந்தோறும் நெஞ்சம் நெகிழ்ச்சியால் நிரம்புகிறது.

டிஸ்கி:- பழசி ராஜா கட்டுரையைப் பாராட்டிய கோகுலம் வாசகர் ஸ்ரீரங்கம், சி. பிரசன்ன வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி. அக்கடிதத்தை வெளியிட்ட கோகுலத்துக்கும் நன்றி.  

3 கருத்துகள் :

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

அறிந்துகொள்ளவேண்டிய வரலாறு. கோகுலத்தில் வெளியானதறிந்து மகிழ்ச்சி. பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்த வரலாறு முன்பு படித்த நினைவு ஆனால் தங்கள் பதிவு மேலும் பல அறியத் தந்தது. கோகுலத்தில் வெளிவருவதற்கும் வாழ்த்துகள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி துளசி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...