61 ஆண்டுகளுக்கு முன் , எனது பெரிய மாமாவு( திரு . வ. சுப்பையா அவர்களுக்கு ) க்கு 20 வயது. இன்றைக்கு நடிகர் நடிகையருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அந்த வயதில் அவர்கள் திருக்குறட் கழகத்தை (குறள் ) இலக்குவன் போன்ற நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தார்கள். அந்தக் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவை எனது மூன்றாவது மாமா லயன் வெங்கடாசலம் அவர்கள் பொருளாளராக இருந்து சிறப்புற , களிப்புற, உவப்புற நிறைவேற்றினார்கள். அவ்விழாவினைக் காணும் பாக்கியம் எனக்கும் கிட்டியது. அங்கே கிடைத்த சில திருக்குறளின் பொன் துளிகளை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
நவயுகப் புத்தகாலயம் திரு மெய்யப்பன், திரு முத்துப் பழனியப்பன், திருமதி கற்பகம் இளங்கோ, திரு சுபவீரபாண்டியன், திரு அய்க்கண் ஆகியோர் பங்குபெற்ற இவ்விழாவினை ( மாலை நிகழ்ச்சி ) திருமதி தேவி நாச்சியப்பன் தொகுத்து வழங்கினார்.
திரு பொன்னம்பல அடிகளின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் இருந்து நான் குறிப்பெடுத்தவற்றை இங்கே பகிர்கிறேன். (திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள துறவறத்தின் சிறப்பு பற்றியும் உரையாற்றினார். )
கல்வியின் சிறப்பு பற்றி , இறைவனைப் பற்றி, வான்மழை சிறப்பு பற்றி, துறவறத்தின், துறவிகளின், தவத்தின் சிறப்பு பற்றி, தன்னலம் இல்லாத தொண்டுகள் பற்றி, இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, இல்வாழ்க்கையின் பயன் பற்றி, வாழ்க்கைத் துணையின் நலன் பற்றி, நன் மக்கட்பேறு பற்றி, கற்காலம் தொட்டு கணினிக் காலம் வரை இளைய தலைமுறைக்குத் திருக்குறள் வழிகாட்டுவது பற்றி சிறப்பாகப் பேசினார்.
”தமிழ் வளர்க்கும் இடம், தமிழை சிந்திக்கும் இடம் காரைக்குடி. ஆதியில் இலக்கியங்கள் அரண்மனை வாசத்தில் செழிப்புற்றன. அதன் பின் கோயில்களில் பக்தி இலக்கியமாக உருப்பெற்று சிறந்து விளங்கின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நாட்டு விடுதலையைக் குறித்து வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்தாக இலக்கியம் மாறியது. பாமரருக்கும் எட்டும்படி இலக்கியம் என்னும் வினாக்குறியை வியப்புக்குறி ஆக்கியது தேச விடுதலைப் பாடல்கள்தான்.