எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

வசந்த மாளிகையும் புதிய பறவையும் தனவணிகன் இதழில்..

வசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-

 1972 இலும் 1964 இலும் வந்த இந்த ரெண்டு படங்களையும் பார்க்காதவங்களே இருக்க முடியாது. 750 நாள் எல்லாம் ஓடின படங்கள். இன்னைக்கு தியேட்டருக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லா கல்லா கட்டாம போகாது. 

இந்த இரண்டு படங்கள் மட்டுமில்ல இன்னும் பல படங்கள் பார்த்து சேலை முந்தானையைப் பிழிந்து தொடைச்சுக்குற அளவுக்கு ஒரே அழுகாச்சியா அழுதிருக்கேன். ஆனா இவை இரண்டும் இன்னிக்குப் பார்த்தாலும் ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்கிற ஸ்பெஷல் படங்கள்.

இரண்டுமே காதல் படங்கள். முதல்படத்தில் குடிக்கு ஆட்பட்டவன் காதலனா மாறுவதும், இரண்டாவது படத்தில் யதேச்சையா பழைய காதலி/மனைவியைக் கொலை செய்துட்ட காதலன் இன்னொரு புதிய காதலிக்காகக் குற்றத்தை ஒப்புக்கிட்டுக் கைதாவதும் கதைக்கரு.

இரண்டிலும் சிவாஜிதான் ஹீரோ. அவர் நிஜப் பேர் கணேசன்னாலும் நமக்கு அவர் சிவாஜிதான். வசந்தமாளிகையில் வாணிஸ்ரீயும், புதிய பறவையில் சௌகாரும், சரோஜாதேவியும் ஹீரோயின்ஸ். இரண்டிலும் மையக்கரு காதல்தான். அது படுத்தும் பாடு. இதை சிவாஜியை விட்டா வேற யாராலும் செய்ய முடியாதுங்கிறமாதிரியான படங்கள்.

வசந்தமாளிகையின் சில வசனங்கள் மனப்பாடம். ஆனால் இங்கே எழுதினால் பலரின் திட்டுக்களுக்கு ஆளாக வேண்டிவரும். விமான பணிப்பெண்ணான வாணிஸ்ரீ சிவாஜியின் தனிப்பட்ட செகரட்டரியா இதுல நடிச்சிருப்பாங்க. அவங்க அவரோட வாழ்க்கையில் வந்ததும் பகலில் கூட குடிக்கும் அவர் குடியை நிப்பாட்டிருவாரு. அதுல வர்ற ஒவ்வொரு பாடலும் ரிதமிக்கா இருக்கும். ஒரிரு பாடல்கள் அன்றைய சினிமாவின் குத்துப் பாடல்கள். கொஞ்சம் ஆபாச எல்லையையும் தொட்டிருக்கும்.

ராஜகுடும்பத்தின் அக்கறையின்மை, பணக்கார படாடோபம் , இதெல்லாம் போகட்டும். ஆனால் அதில் ரொம்பப் பிடித்த விஷயம் வாணிஸ்ரீயின் பிடிவாதம்.

அதப் பத்தி அந்தப் படத்தில் ஆனந்தா நடிச்ச சிவாஜி லதாவா நடிச்ச வாணிஸ்ரீயைப் பத்தி ஒரு இடத்துல சொல்வாரு . என்னன்னா “ எனக்குத் தெரியும் அவ வரமாட்டா. ஏன்னா அவ ஒரு பிடிவாதக்காரி. ஆனா எனக்கு அவகிட்டப் பிடிச்சதே அந்தப் பிடிவாதம்தான். “ 

சிவாஜி சந்தேகப்படலாமா என்கிற ஆதங்கம்தான் வாணிஸ்ரீ மனதை ஆட்டுவிக்கும் பூகம்பம். வாணிஸ்ரீயின் சுயகௌரவம் அன்புக்காக மண்டியிடுமே தவிர பணத்துக்கோ ஆணவத்துக்கோ மண்டியிடாதுன்னு புரிய வைச்சது க்ளாசிக்.

அதுல சிவாஜியின் மன்னிப்புக் கோரும் பாவனையும் வாணிஸ்ரீயின் தீர்க்கமான கோபமான பார்வையும் ரொம்பப் பிடிக்கும். அதோட இன்னோரு வசனமும் க்ளைமாக்ஸ்ல பிடிக்கும். வாணிஸ்ரீக்காக வசந்த மாளிகை கட்டி அதுல அவளோட பிம்பத்தைக் கண்ணாடிகள்ல பார்க்கச் சொல்லி தன் மனக்கண்ணாடியெங்கும் அவள் பிம்பம்தான்னு உணரவைச்சிருப்பாரு சிவாஜி.. ஆனா ஒற்றைச் சொல்லால எல்லாம் கெட்டது மாதிரி அவரே எல்லாத்தையும் கெடுத்துக்குவாரு.

அதன் பின் வாணிஸ்ரீக்கு இன்னொரு இடத்துல திருமணம் நிச்சயமாகும். அதக் கேட்டு நிலை கொள்ளாமல் வருத்தத்தோடு இருக்கும் சிவாஜி விஷத்தைக் குடிச்சிருவாரு . யாருக்காக என்று அவர் பாடும் பாடலை இன்று நாம விளையாட்டா பாடக்கூட செய்றோம். ஆனா அந்தப் படம் பார்த்தபோது ஏற்பட்ட மனவருத்தம் ரெண்டு நாளைக்கு நீடிச்சிது.

அவர் வசந்தமாளிகைக்குப் போன செய்தி கேட்டு மணமாலையோடு வாணிஸ்ரீ ஓடி வருவாங்க. அப்ப சொல்வாங்க. “ ஆனந்த் நான் வந்திட்டேன்.” என்று சந்தோஷமா. அப்ப சிவாஜி சொல்வாரு “ நீ வந்துக்கிட்டே இருக்கே. நான் போயிக்கிட்டே இருக்கேன் “னு. இத இன்னிக்கு பார்த்தாலும் தன்னையறியாமல் அழுது குமிச்சிருவேன். அவ்ளோ டச்சிங்கான சீனும் படமும். அப்புறம் அவரைக் காப்பாத்தி வழக்கம்போல சுபமா முடிச்சிருவாங்க.


புதிய பறவையின் ஏக்கம்தான் ரொம்பப் பெரிசு. தாங்கவே முடியாதது. ஒருத்தரை நம்பிக்கை துரோகம் செய்றா மாதிரி அந்தக் கதை. சிவாஜி தன் மனைவி சௌகாரை கோபத்தில் அடிப்பாரு. (வெளிநாட்டில் வளர்ந்த அவங்க தினம் க்ளப் , பாட்டு, டான்ஸ், குடின்னு இருப்பாங்க. அதப் பொறுக்காத அவருக்குக் கோபம் வரும். ) இந்தப் படத்தில் இதயம் பலவீனமான அவங்க கீழே விழுந்ததும் இறந்துடுவாங்க.

ஆனா தன் தங்கை மரணத்துல சந்தேகப்படும் அவரது சகோதரர் ராஜு மலேஷியா போலீஸ் உதவியோடு உண்மையைக் கண்டுபிடிக்க நாடகமாடுவாங்க. இந்தக் கதை எல்லாம் நமக்கு வேண்டாம்.

இதுல சௌகாரின் நடிப்பும் சிவாஜியின் நடிப்பும் அட்டகாசம். சௌகார் சிவாஜியைச் சந்தித்ததும் ஒரே டேபிளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். அப்போது  பேரரிடம் இரண்டு விரல்களால் சிட்டி தட்டிப் பரிமாற அழைக்குமிடத்தில் இன்றும் ரசிகர்கள் அவரின் கம்பீரம் பார்த்துக் கைதட்டுவார்கள்.

‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற  அந்தப் பாடல் முழுமைக்குமே வெகு அழகான நடனமாடுவார். புடவையையே வித்யாசமாக அணிவித்திருப்பார்கள். ’அந்த நீல நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம். நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம்  பலகாலம், பழகிவந்தோம் சில காலம் “ ”உந்தன் மனதைக் கேள் அது சொல்லும். நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும். “ என்ற இடத்தில் சிகரெட்டைப் புகைத்தபடி வசீகரமான ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் சிவாஜி, அப்படியே கொள்ளை போய்விடுவோம். J

சிவாஜியின் வீட்டில் எல்லாரும் சேர்ந்து அவரைச் சித்திரவதை செய்வது போன்ற காட்சியமைப்புகள் கோபத்தை உண்டாக்கினாலும் சரோஜாதேவி தன் கோபால் என்ற வார்த்தைகளால் நம்மையும் குளிர்விப்பார். அதிர்ஷ்டவசமாக இதிலும் ஹீரோயின் பெயர் லதா. !

சிட்டுக்குருவி உன்னை ஒன்று கேட்பேன் பாடல்கள் மனம் வருடும். ஆனால் எங்கே நிம்மதி பாடலில்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே..
இறைவன் கொடியவனே
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே.. ..
பழைய பறவையாக சௌகார் சுற்றிச் சுற்றி வர இருட்டும் கரிய உருவங்களும் மனதைப் பயமுறுத்த புதிய பறவையாக சரோஜாதேவி வந்து விழும் இடம் மனதைத் தொட்ட இடம்.

அதே போல் இதிலும் க்ளைமாக்ஸில் சிவாஜி கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டதும் தான் ஒரு போலீஸ் ஆஃபீசர்  என தன் உண்மை நிலையை சரோஜாதேவி போட்டுடைப்பார். அதைச் சொல்லும் விதம் கூரிய கத்தியை நம் நெஞ்சில் செருகியது போல் இருக்கும். அதாவது சிவாஜி அவரிடம் வந்து ”லதா இதுதான் உண்மை. எல்லாம் உனக்காத்தான் சொன்னேன்.”  என்னும்போது “வாக்குமூலத்தை எழுதி வாங்கிக்கிட்டு கோபாலைக் கைது செய்யுங்கள் ”என்பார்.   

அப்போது சிவாஜியின் வசனம் இன்றும் அளவிட முடியாத துயரம் தருவது. “  லதா என்னைக் கைது செய்ய வேற எந்த வேஷத்தையாவது போட்டிருக்கக் கூடாதா.  பரிதாபத்துக்குரிய என் வாழ்க்கையில படையெடுக்க உன்கைக்குக் கிடைச்சது காதல்ங்கிற அந்தப் புனிதமான பூதானா. அத வச்சா நீ என்னை வீசிட்ட “ என்று பாசத்துக்காக வாழ்க்கை முழுதும் ஏங்கும் ஒரு மனிதனின் குரல் செவிப்பறையில் மட்டுமல்ல மன அறைகளிலும் தேங்கித் தேங்கித் தேம்பிக் கொண்டே இருக்கிறது. ”பூவை வைத்து வாள் வீச முடியுமா” என்று பேதலிக்க வைத்த படம். 


’பெண்மையே நீ வாழ்க. உள்ளமே உனக்கு என் நன்றி. போய் வருகிறேன்”. எனச் செல்வார். ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற இன்றைய உலகில் இரண்டு காதல்கள் இருந்தாலும் உண்மையான காதல் என்றால் என்ன என்று உரத்துச் சொன்னவை இருபடங்களும் என்பதால் இன்றும் என் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. 

20 கருத்துகள்:

 1. வசந்தமாளிகை படத்தில் எனக்கும் சில வசனங்கள் மனப்பாடம்! நீங்கள் சொல்லி இருக்கும் வசனமும், அதற்கு காரணமான "நானும் அதைத்தான் கேட்கிறேன்... லதா... ஏன் அப்படி செஞ்சே?" வசனமும் உண்டு. இது போல நீதி படத்தின் பல வசனங்கள் மனதில் இன்னும் இருக்கிறது. ராஜபார்ட் ரங்கதுரை...

  பதிலளிநீக்கு
 2. /“ நீ வந்துக்கிட்டே இருக்கே. நான் போயிக்கிட்டே இருக்கேன் “னு//


  கூடவே தொடரும் வசனம்..."நீ விஸ்கியைத்தானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே.. விஷத்தை இல்லையே..."

  பதிலளிநீக்கு
 3. முதலில் அந்தப் படத்தில் சிவாஜி செத்து விடுவது போலவே காட்சி இருந்தது. பின்னர் பிழைக்க வைத்தார்கள் என்று நினைவு.

  புதிய பறவை பற்றியும் இதே போல நிறையச் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 4. வசந்த மாளிகை திரைப்படத்தில் மணப்பெண் கோலத்தில் லதா வந்து ஆனந்திடம் பேசும் காட்சி என் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியனவற்றில் ஒன்று.

  பதிலளிநீக்கு
 5. >>> லதா... ஏன் அப்படி செஞ்சே?.."... <<<

  இன்னும் காதுகளில் ஈங்காரமிட்டுக் கொண்டிருக்கும் வசனம்..

  அதுதானே.. ஊர் கிடக்கட்டும்.. நீ சந்தேகப்படலாமா?..

  அந்த நீல நதிக்கரையோரம் நீ
  நின்றிருந்தாய் அந்தி நேரம்..
  நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
  நாம் பழகி வந்தோம் சில காலம்...

  - இனி இப்படியெல்லாம்
  வசனம் - பாடல்கள் வடிப்பதற்கு யாரால் இயலும்!?..

  பதிலளிநீக்கு
 6. அன்று கலைத்தாகத்தை தீர்க்க படம் எடுத்தார்கள்.

  இன்று பணமோகத்தை தீர்க்க முடியாமல் படம் எடுக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
 7. இருபடங்களையும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். இரண்டிலும் மையக்கருத்து காதலென்று சொல்லிவிட முடியாது. வசந்த மாளிகை மட்டுமே காதலை மையக்கருத்தாக வைத்தது. புதிய பறவை ஒருவனின் குற்ற உணர்ச்சியை மையமாகக் கொண்டது. முதலில் ஒரு குற்றம்; அறியாமல் செய்துவிட்டு பின்னர் சட்டத்திலிருந்து தன்னை மறைத்து வாழ்வது. நிறைய சிவாஜி படங்க்ளே இக்கருவை வைத்து வந்திருக்கின்றன. இக்கரு சிவாஜிக்கு அல்வா சாப்பிடுவது போல. ஞான ஒளி; எதிரொளி போன்ற படங்கள் நல்ல எடுத்துக்காட்டுகள்.

  புதிய பறவை வெற்றிப்படமன்று. இனிமையான பாடல்கள். தமிழர்கள் புகழும் நடிப்பு. ஆயினும் வெற்றிப்படமில்லை. காரணம் தெரியவில்லை. வசந்த மாளிகை நீங்கள் சொன்னது போல வெற்றிப்படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய பறவை மிகப்பெரிய வெற்றிப்படம்.
   நான் 1985 இல் சென்னையில் பார்த்தபோது கூட ஹவுஸ்புல்ாகத்தான் ஒடியது.

   நீக்கு
  2. மறு மறு வெளியீடுகளிலேயே வசூலில் சக்கை போடு போட்ட படம் முதல் வெளியீட்டில் எப்படி பட்ட வெற்றியை பெற்றிருக்கும் நண்பரே

   நீக்கு
  3. Pudhiya Paravaigal was great hit of the season.It is still flying high in the re-releases.

   நீக்கு
  4. Puthiya Paravai nodoubt is a super hit film. Though it should have run 175 days, due to back to back releases, Puthiya Paravai ran for 133 days in Paragon.

   Chennai, Coimbatore, Madurai, Trichy, Nagercoil - 100 plus days.
   Maximum run 133 days in Chennai Paragon.

   நீக்கு
 8. இன்றும்பழைய நல்ல படங்களை சானல்களில் வந்தால் பார்ப்பதுண்டு

  பதிலளிநீக்கு
 9. இரண்டு படமும் பார்த்ததில்லை... :)
  பார்க்க முயற்சிக்கிறேன் அக்கா.

  பதிலளிநீக்கு
 10. mika azaga ninaivu koornthu solli irukkeengka Sriram !

  unmai Jambu sir.

  sariya soneengka Durai sir.

  aam Killergee sago

  sariyana alasal Vinayagam sir

  tx for the comments Bala sir

  parungka Kumar sago.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 11. நானும் சிறு வயதில் பார்த்தது. கல்லூரிக் காலத்திலும் பார்த்தது என்பதால் வசனங்கள் நினைவில் பளிச். நல்ல இரு படங்கள்.

  கீதா: நானும் சிறு வயதில் பார்த்த நினைவு ஆனால் எதுவும் நினைவில் இல்லை...அதன் பின் பார்த்ததில்லை என்பதால், இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோணிடுச்சு இப்ப நீங்களும் கருத்து சொன்னவர்களும் கூட சொல்லிருக்கறதைப் பார்க்கும் போது.....

  பதிலளிநீக்கு
 12. காலத்தால் அழியாத காதல் காவியங்களை படைக்கும் வல்லமை பெற்ற ஒரே கலைஞனின் அற்புத காவியங்கள் ,
  வசந்த மாளிகை , புதிய பறவை
  மறு மறு வெளியீடுகளிலும் வசூலை வாரிக் குவிக்கும் இப்படங்கள ,
  முதல் வெளியீட்டில் பெற்ற பெரு வெற்றி எப்படியாயிருக்கும்
  தமிழ் கலையின் அடையாளம் வாழ்க நின் புகழ்

  பதிலளிநீக்கு
 13. கோழையா இருக்கறவன் தான் வாழ்க்கையை காதலிப்பான். ஆனா இதயமுள்ளவன் காதலை தான் நேசிப்பான்.அந்த காதலுக்காக உயிரையும் கொடுக்க தயங்க மாட்டான்.

  பதிலளிநீக்கு
 14. Puthiya Paravai is an anti-woman film. நான் மீண்டும் பார்த்த போது எனக்கு இப்படிப்பட்ட நினைப்புதான் வந்தது. ஒருவன் தன் முதல் காதலியை இழந்தவுடன் (கொல்லப்பட்டு) அக்காதலை மறக்கமுடியாமலும் அக்கொலை தந்த குற்றவுணர்வினாலும் தவித்துக்கொண்டிருக்கும்போது, அவன் மனதில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப ஒருத்தி வந்தவுடன் இவன் தொபுக்கடீரென்று விழுந்து அவளைக் காதலிக்கிறான். ஒருவேளை அவளும் போயிவிட்டால் இன்னொரு வெற்றிடம் தோன்ற அதை மூட இவனுக்கு இன்னொரு காதலி வேண்டும். ஆக, இதுதான் தீம். இப்படியோரு செயற்கையை, பெண்ணை ஒரு கருவியாக பயன்படுத்தும் படமாக இருக்கிறதே? என்று நான் நினைத்ததை உறுதி செய்கிறது விக்கிபீடியா. புதிய பறவை பற்றிய பதிவில் விக்கிப்பீடியா சொல்வது இது:

  படம் இறுதிக்காட்சி (க்ளைமாக்ஸை) இயக்குனர் தாதாமிராசி எடுத்துவிட்டார். திடீரென வசனகருத்தா ஆரூர்தாஸ் மிராசிடம் ஓடிவந்து, காட்சியை மாற்றுங்கள். படமே பெண் வர்க்கத்தைஇழிவுபடுத்திவிடுமோ என பார்ப்பவர்கள் நினைப்பார்கள் போல எனக்குத் தோன்றுகிறது. எனவே கணேசன் சிறைக்குச் செல்லும் முன் - //பெண்மையே நீ வாழ்க! பெண்ணே உனக்கு என் நன்றி// என்ற வசனத்தை பேச வைப்போம். கணேசன் ஏன் அப்படி பேச வேண்டுமென கேட்க ஆருர்தாஸ், சரோஜா தேவியின் காதலைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையென்றால் பார்ப்பவர் உங்கள் பாத்திரத்தை வெறுப்பார்கள் என விளக்க இறுதிக்காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. https://en.wikipedia.org/wiki/Puthiya_Paravai.

  எனக்கு இப்படத்தின் கதைதான் பிடிக்கவில்லை. மற்றபடி ஓகே. ஆணுக்காககவே பெண் என்ற கொள்கை வெறுக்கப்படவேண்டியது. அக்கொளகையையே தமிழ்த்திரைப்படங்கள் எடுத்தியம்பினாலும், இப்படம் அதை மிகையாகக் காட்டுகிறது. நல்லவேளை பாடல்கள் நடிப்பு ஒளி ஒலியமைப்பு இந்நச்சுக்கருத்தைப் பின் தள்ளி விடுகின்றன.

  பதிலளிநீக்கு
 15. கருத்துக்கு நன்றி பாலகுமார்

  நன்றி துளசி சகோ & பார்த்தீங்களா கீத்ஸ்.

  கருத்துக்கு நன்றி சிவாஜி வெறியன்

  நன்றி கலை அரசன்.

  நன்றி சுவாமி துரை வேலு

  நன்றி சுப்ரமணியன்

  வித்யாசமான பார்வை விநாயகம் சார்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...