தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளின்மேல் நாட்டம் வைத்தால் தனக்கு உரிமையானதையும் இழக்க நேர்ந்துவிடும் , மேலும் கெட்டவர்களோடு இணைந்தால் அழிவு வரும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. கதைக்குள் போவோம் வாருங்கள் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமன் இலக்குவன் சீதை ஆகியோர் பர்ணசாலை அமைத்து தங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார்கள். கானகங்களில் முனிபுங்கவர்களின் வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களின் தொல்லைகளில் இருந்து அவர்களைக் காத்ததால் அகத்தியரிடம் ஆசி பெறுமாறு கூறினார்கள் முனிவர்கள்.
அகத்தியரைச் சந்தித்து வணங்கியதும் அவர் திருமால் தனக்களித்த வில்லையும் அம்பையும் படைக்கலங்களையும் இராமனிடம் கொடுத்து ஆசீர்வதித்தார். பஞ்சவடி சென்ற அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும்போது சூர்ப்பனகை இராமனை மணக்க வேண்டி வந்தாள். அழகான சீதை ராமனின் மனைவி என்று அறிந்ததும் சீதையை அகற்றினால் ராமன் தன்னை மணந்து கொள்வான் என்று சீதையைக் கடத்த வந்தாள் ஒருநாள்
.
.
இராமன் இல்லாத சமயம் அவள் சீதையைக் கடத்த வந்தபோது இலக்குவன் அவளைப் பிடித்து அவள் தகாத செய்கைக்காக மூக்கை அரிந்துவிட்டான். உடனே வலியில் அலறித் துடித்த சூர்ப்பனகை ஜனஸ்தானம் என்னும் இடத்தை ஆட்சி செய்துவந்த தன் சகோதரர்களான கரன், தூஷணன் ஆகிய அரக்கர்களிடம் சென்று முறையிட்டாள்.
தங்கள் தங்கையின் அலங்கோலத்தைக் கண்ட அவர்கள் உடனே ராமனுடன் சண்டையிட பதினான்கு அரக்கர்களை அனுப்பினார்கள். அவர்களை ராமன் தன் வில் பலத்தால் மாய்த்தான். வந்திருப்பவன் மானிடன் ஆனாலும் வலிமையானவன் என்றுணர்ந்த கரன், தூஷணன், திரிசிரா என்னும் தம் தம்பியருடன் பதினான்காயிரம் வீரர் படையைத் திரட்டிப் போர் புரிய அனுப்பினான். அனைவரையும் ராமன் அழித்தான் என்ற செய்தி கேட்டுக் கொந்தளித்தான் கரன்.
அடுத்துத் தானே வந்து போரிட்டு மாய்ந்தான். இதை எல்லாம் கண்ட சூர்ப்பனகை உடனே இலங்கை சென்று தன் தமையனான இராவணனிடம் எல்லாவற்றையும் எடுத்துரைத்தாள். அதிலும் சீதையின் அழகைப் புகழ்ந்து இராவணனுக்கு அவளை மணமுடிக்கக் கேட்கச் சென்றதாகவும் அப்போது ராமனும் இலக்குவனும் அவள் மூக்கை அரிந்து அலங்கோலமாக்கினர் என்றும் சொன்னாள்.
சீதையின் அழகைக் கேட்ட இராவணன் தனக்கு மானிடரால் அழிவு என்பதையும் விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவந்தால் தன் தலை வெடித்துச் சிதறும் என்ற சாபத்தையும் ஞாபகத்தில் கொண்டு தன் தாய்மாமனான மாரீசனிடம் உதவி கேட்க விமானம் ஏறிச் சென்றான்.
தனியே தவவாழ்வு வாழ்ந்து வந்தான் மாரீசன். “ ராவணா . என்னது என்னைக் காண வந்திருக்கிறாய் ? “
“மாமா. உங்களுக்கு விபரம் தெரியாதல்லவா, உங்கள் மருமகன்களான கரன், தூஷணன், திரிசிரா ஆகியோரை ஒரு மானிடன் அழித்துவிட்டான் “
”என்னது வலிமைமிக்க என் மருமகன்களை ஒரு மானிடன் அழித்தானா ? “
“ஆம் அவர்கள் என் தங்கை, உங்கள் மருமகள் சூர்ப்பனகையின் மூக்கையும் அரிந்து அலங்கோலப்படுத்தி விட்டார்கள் “
“அப்படியானால் அவள் செய்த தவறென்ன.. “
“ சீதை என்னும் பெண்ணை எனக்கு மணம்முடிக்கக் கேட்கப் போய் அவளுக்கு இந்த அவலம் நிகழ்ந்தது”
”உண்மையைச் சொல் ராவணா. அப்பெண் ஏற்கனவே மணமானவள்தானே. இன்னொருவர் உடைமை மேல் ஆசைப்படுவது தவறு. அவள் கெட்ட நேரம் அவளை மூளை கெட்டுப் போகச் செய்துவிட்டது ”
“மாமா நிறுத்துங்கள் நீங்கள் எனக்கு உதவ முடியுமா முடியாதா “
“நான் அக்கிரமத்துக்குத் துணை போக மாட்டேன் இராவணா . நீ இதுகாறும் உன் வீரத்தால், அறத்தால் புகழ்பெற்றாய். அதை உன் அறமற்ற செயலால் போக்கிக் கொள்ளாதே “
“மாமா கரன், தூடணன், திரிசிரா மட்டுமல்ல , உங்கள் தாய் தாடகை, உங்கள் தம்பி சுபாகு ஆகியோரையும் அழித்தவன் இந்த இராமன்தான். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரத்தம் துடிக்கவில்லையா?"
“அவர்கள் செய்த அறமற்றசெயல் அது. அதனால் அழிந்தார்கள். என் ரத்தம் துடிக்கத்தான் செய்கிறது. மானுடன் ஆனாலும் நீதியே வெல்லுமல்லவா ?”
”மாமா முடிவாக ஒரு வார்த்தை . எனக்காகப் பொன்மானாக மாறி சீதையைக் கவர வேண்டும். அத்தருணத்தில் சிக்காமலும் ஓட வேண்டும். உம்மைத் தேடி ராமனும் இலக்குவனும் வரும்போது நான் சீதையைக் கவர்ந்து சென்றுவிடுவேன் “
“இந்த அறமற்ற செயலுக்கு நான் உடன்பட முடியாது இராவணா “
“அப்படியென்றால் உம்மைக் கொல்வது தவிர வேறு வழியில்லை எனக்கு “ இராவணன் மாரீசனின் கழுத்தை நெருக்கத் தொடங்கினான்.
“விடு ராவணா. நன்மையும் தீமையும் உணராமல் நாசமாகப் போகிறாய். எனக்கும் வேறு வழியில்லை “ என்று கூறியவாறு மாயப் பொன்மானாக உருமாறி பஞ்சவடியில் ராமனின் பர்ணசாலை முன்பு சென்று உலவினான்.
பொன்னிற உடலும் மாணிக்கநிறக் கால்கள், செவிகள், வாலுடனும் திரிந்த அந்த மாயமான் இராமனையும் சீதையையும் ஈர்த்தது. அவள் இராமனிடம் தனக்கு அந்த மானை விளையாடப் பிடித்துத் தருமாறு வேண்டினாள். இலக்குவன் அந்த மானின் வித்யாச நிறத்தைக் கண்டு தடுத்தபோதும் இராமன் சீதைக்காக அம்மானைப் பிடிக்க துரத்தி ஓடினான்.
பலகாத தூரம் சென்றது அம்மான். ராமனிடமிருந்து தப்பிக்க முடியாது என்று உணர்ந்து ஓய்ந்தபோது இராமனின் அம்பு அம்மானின் உடலில் பாய்ந்து கொன்றது. இறக்கும்போதும் அந்த மாரீசன் இராவணனுக்காய் இராமனின் குரலில் அலறி இறந்தான். அதைக்கேட்டு சீதை இலக்குவனைப் பார்த்துவரும்படிப் பணிக்க அவன் சென்றவுடன் இராவணன் வந்து சீதையைக் கவர்ந்து சென்றான்.
ஆகாவரி ஆசையால் தனக்கு உரிய நல்வாழ்வை இழந்தார்கள் சூர்ப்பனகையும் ராவணனும். அதேபோல் தனக்கு உரிமையில்லாத பொருளின்மேல் ஆசை வைத்ததால் சீதை மட்டுமல்ல இராமனும் இலக்குவனும் படாதபாடு பட்டார்கள்.
எனவே நமக்கு உரிமையில்லாத பொருளின் மேல் ஏற்படும் நாட்டம் வைக்காமலிருப்போம் குழந்தைகளே
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!