ஆச்சி தந்த சீர்
”ஆச்சி ஆச்சி
“ குரல் கேட்டு இரண்டங்கட்டிலிருந்து வெளியே வந்தாள் வள்ளி.
முகப்பில் நீலவண்ண சுடிதாரில் ஒரு கல்லூரிப் பெண் தன் தாயுடன் நின்றிருந்தாள்.
”இங்கே வள்ளின்னு..
“
”நாந்தான். என்னாத்தா
வேணும் “
“கல்யாணச் சீர்ப்
பலகாரம் கிடைக்கும்னாங்க “
“ஆமாம். வாங்க
வாங்க. எம்புட்டு வேணும். என்னைக்குள்ள வேணும். “ என்று கொண்டையை முடிந்து கொண்டு ”முறுக்குவடை,
மனகோலம், தேன்குழல், மாவுருண்டை, அதிரசம், டயர் முறுக்கு, சீடைக்காய், சீப்புச்சீடை
எல்லாம் இருக்கு.”
”இருநூத்தி ஓரு
முறுக்குவடை, இருபது படி மனகோலம் வேணும்.”
”நல்லாத் தந்திரலாம்.
என்னைக்குள்ள .. இவதான் பொண்ணா..”
”ஆமாச்சி. இன்னும்
ஒரு வாரத்துல.”
கீழ்வாசலில் மிதுக்க
வத்தலும் மாவத்தலும் காய்ந்து மணம் எழுப்பிக் கொண்டிருந்தன.
“இன்னும் என்னென்ன இருக்கு “ என்று கேட்க தேங்குழல் வத்தல், கிள்ளுவத்தல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுக் கொடுத்தாள் வள்ளி. ” பணம்” என்று பெண்ணின் தாய் இழுக்க “இருக்கட்டுமாத்தா அப்புறம் வாங்கிக்கிறேன் “ என வள்ளி சொல்ல வாங்கிக் கொண்டார்கள். பார்த்தாலே ’சத்த எதவானவர்கள்’ என வள்ளி யூகித்திருந்தாள்.
மஞ்சள் பூசி நெற்றி நிறையக் குங்குமத்தோடு இருந்த வள்ளியிடம் “ ஆச்சிட்ட விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்காத்தா “ எனத் தாய் சொல்ல மகள் விழுந்து கும்பிட்டாள். மனம் நெகிழ்ந்த வள்ளி “ ஆத்தாத்தோய் அதெல்லாம் வேண்டாம்.” என ஒதுங்கிநின்று அந்தப் பெண்ணை அணைத்து நெற்றியைச் சுற்றித் திருஷ்டி கழித்தாள். ‘எனக்குப் புள்ள பொறந்திருந்தா இவ வயசுதான் இருக்கும்’ என நினைத்தபடி ”ஆத்தா நல்லா இரு “ என்றாள்.ஆத்தாளும் மகளும்
கிளம்பியதும் வள்ளிக்குத் தன் கல்யாண வாழ்க்கை ஞாபகம் வந்தது. மைனர் போல ஊர் சுற்றிக்
கொண்டிருந்த ஆறுமுகத்துக்கு வாழ்க்கைப் பட்டாள் வள்ளி. நல்ல பெயர்ப் பொருத்தமென்றார்கள். அவன் நண்பன் சோமுவுக்குத்
திருமணமாகி சீர் செனத்தியுடன் செவத்தத் தோலுடன் பெண் வந்ததும் கோபத்தில் குதித்த சொக்கலிங்கம்
“அப்பச்சி சொன்னாகளேன்னு இந்த வாழக்காய் மூஞ்சியைக்
கட்டிக்கினேன். கட்டிக்காட்டிச் சொத்துல தம்பிடி இல்லைங்கிறாரு. ஊருக்குக் கடைசி ஒலகம்பட்டியிலபோய் இந்தப் பேரழகியைப்
பிடிச்சாரு. என் நெறமென்ன இவ நெறமென்ன, கருப்பாயி . இவகூட மனுஷன் வாழ்வானா ” என்று
அவளைத் தள்ளி வைத்தான். எவ்வளவு அனுசரித்துப் போயும் அவளைக் கூட்டிக் கொள்ள அவன் தயாராயில்லை.
”சீதனப் பணத்துக்கு
உண்டி எழுதிக் கொடுத்தவருதானே உங்கப்பச்சி. ஆக்கங்கெட்ட கூவை.. போடி. போய் பணத்தை வாங்கிக்கினு
திரும்பி வா. ” என எகத்தாளம் செய்து ஒரு கட்டத்தில் அவளை வெட்டியே விட்டான். ஆத்தா
வீட்டுக்கு வந்து விட்டாள் வள்ளி. அவனுக்கு இன்னோரு திருமணம் ஆனதாகவும் பிள்ளைகுட்டி
பிறந்ததாகவும் கேள்வி.
’நல்லா இருந்தாச்
சரிதான்’ என்று அப்பவும் அவனை வெறுக்கலை வள்ளி. ’ஆமா அவுக நெறத்துக்கு நான் கம்மிதானே’
எனச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அதன்பின் ஆத்தாளோடு சேர்ந்து வத்தவரளி போடுறது, இடியாப்பமா,உப்புமா திரிக்கிறது எனக் கற்றுக் கொண்டாள். ஃப்ளாட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஊறுகாய், வத்தல் போடுவதற்கெல்லாம் இடவசதி இல்லாததால் இவளிடம் வாங்கத் தொடங்கினார்கள். பொருட்கள் தரமாக இருந்ததால் வாய் வார்த்தையாகவே வெளிநாடுவரைக்கும் வள்ளி ஆச்சி விற்பனையை விரிவுபடுத்தினாள்.
தீபாவளிக்கு அதிரசமாவு தயார் செய்யும்போதெல்லாம்
வேலை செய்வோரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வாள்.” பக்குவம் சரியா இருக்கட்டும். எம்
மக்களுக்குப் போகுது இதெல்லாம் “
“ஒலகம்பூரா உங்களுக்குப்
பிள்ளைகள்தான் ஆச்சி “ என அவர்களும் தலையாட்டிச் சிரிப்பார்கள்.
அடுத்தவாரம் பலகாரம்
வாங்க ஆர்டர் கொடுத்த தாயும் பெண்ணும் வரவில்லை. மறுநாள் கல்யாணம்னாகளே. வள்ளி ஆச்சி
அவுக கொடுத்த ஃபோன் நம்பரில் கூப்பிட்டாள். ஃபோனை எடுக்கவேயில்லை யாரும்.
ஒருவேளை உடம்பு
கிடம்பு சரியில்லையோ. விலாசத்தைப் பார்த்தாள். பக்கத்து ஊரில் உள்ள திருமண மண்டபம்தான்.
எப்போதும் பலகாரம் எடுக்கவரும் ஆட்டோக்காரரை அழைத்துப் பலகாரத்தை ஏற்றித் திருமண மண்டபத்துக்குப்
போகச் சொன்னாள்.
கல்யாணக் கலகலப்பே
இல்லை. கொழுமி மேளம் வாசிக்க வந்திருந்த வாத்தியக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். உள்ளே
போனாள். மணமகள் அறையில் பெண்ணும் தாயாரும் கலங்கிய கண்களோடு உட்கார்ந்திருந்தார்கள்.
நெருங்கிய சொந்தமாய்ச் சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள்.
இவளைப் பார்த்ததும்
பெண்ணின் தாயார், “ஆச்சி ஒரு எடத்துல பணம் கேட்டிருந்தோம். கையை விரிச்சிட்டாக. கல்யாணம்
நடக்குமான்னே தெரியல. அதான் பலகாரத்தை எடுக்க வரல. இவ அப்பாவும் பணத்துக்கு அலையா அலைஞ்சிட்டு
வெறுங்கையோட்ட வந்திட்டாக” என வாசலைக் காட்டியதோடு கையசைத்துக் கணவரை அழைத்தாள்.
குனிந்த தலையோடு
மணமகள் அறைக்குள் வந்த பெண்ணின் தகப்பனைப் பார்த்துத் திகைத்துப் போனாள் வள்ளி . அவன் இவளைக் கட்டி
வெட்டிவிட்ட ஆறுமுகமேதான். தலை நரைத்து, முதுமை தட்டி, வெளுத்துச் சவுத்துத் துணி
போலிருந்தான்.
சட்டெனத் திரும்பி ”ஆத்தா எம்புட்டு
தேவைப்படுது?” எனப் பெண்ணின் தாயாரைப் பார்த்துக் கம்பீரமாகக் கேட்டாள்
வள்ளி.
“ஆச்சி மத்ததெல்லாம்
சரி பண்ணிக்கலாம். சீதனப் பணம் ஒரு லட்சம் கொடுக்குறதாப் பேசி இருக்கு. அதைத்தான் ரெடி
பண்ணோணும்” என்றாள் பெண்ணின் தாய்.
இரண்டு மூன்று
பேருக்கு ஃபோனைப் போட்டாள் வள்ளி ஆச்சி. அடுத்த அரைமணி நேரத்தில் முப்பதாயிரம், நாப்பதாயிரம்,
முப்பதாயிரமாக மூவர் கொண்டு வந்து கொடுக்க ஒரு லட்ச ரூபாயைப் பெண்ணின் தாய் கையில் திணித்தாள்.
அதை வாங்க மறுத்துப் பதறிய பெண்ணின் தாய் “ஆச்சி இதைத் திருப்பித்தர
முடியுமா தெரியல. பல இடத்திலும் கடன். “என்றாள் ஈனஸ்வரத்தில்.
”இருக்கட்டுமாத்தா
வைச்சிக்க. உனக்கு ஆச்சி இருந்தாக் கொடுக்க மாட்டாளா. பலகாரக்கார ஆச்சி வள்ளி ஒம்மகளுக்குக்
கொடுத்த சீரா இருக்கட்டும்”.
மணப்பெண்ணைக் கட்டித்
தழுவி ”நல்லா நடக்குமாத்தா “ என ஆசீர்வதித்துவிட்டு வெளியேறிய வள்ளி ஆச்சி ஆட்டோவில் அமர்ந்தாள். தன்னையறியாமல் ஆட்டோவைப் பார்த்து ஆறுமுகம் கைகூப்பி வணங்கியதை வள்ளி பார்க்கத் தவறவில்லை. மண்டபத்துக்குள் திரும்பி வந்த அவள் கணவன் ஆறுமுகத்தின் முன்னால் அவள் இறக்கிவிட்டுச் சென்ற கல்யாணச் சீர்ப் பைகளில் ’வள்ளி ஆச்சி ஸ்நாக்ஸ்’ என்ற பெயர் ஜொலித்துக் கொண்டிருந்தது.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!