நண்பர் திரு. துரை அறிவழகன் காரைக்குடி மரப்பாச்சி குழுவின் மூலம் அறிமுகமானவர். காரைக்குடி புத்தகத் திருவிழாவில் அவரது ஸ்டாலுக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் “தனபாக்கியத்தோட நவநேரம்” என்ற புத்தகமும் ஒன்று.இது அவர் தொகுத்த நூல். (நான் இன்னும் நூல் விமர்சனம்/அறிமுகம் செய்யவில்லை. இனிமேல்தான் செய்யவேண்டும் :)
குழுமத்தில் அவ்வப்போது அவரின் படைப்புக்களைப் படிப்பதுண்டு. இலங்கையில் பிறந்த இவர் கல்வி கற்றது தமிழகத்தில். “அவர்களுக்காக” ,” சிறகுக் குழந்தைகள்” என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ”ஸ்நோபாப்பாவின் அதிசயக்கடல்”, சிறார் எழுத்தாளர்களின் கதைகளைக் தொகுத்து “ ஒரு ஊர்ல ஒரு நரி” என்னும் தலைப்பில் நூல் கொணர்ந்துள்ளார்.
மனைவி ஜெயசுதா ஆசிரியை, இரு மகன்கள். திரு துரை அறிவழகன் விடாமுயற்சியாளர், வெற்றியாளர். தொடர்ந்து சிறார் இலக்கியத்துக்காக ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். காரைக்குடியில் வசிக்கும் இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்ட போது அருமையான கட்டுரை ஒன்றை அனுப்பினார்.
அரசியல், மதம், ஜாதி பற்றிய இடுகைகள் வேண்டாம் என்று சாட்டர்டே போஸ்டுக்கு எழுதுபவர்களிடம் முன்கூட்டியே சொல்லி விடுவேன். ஆனால் இவரிடம் அதைக் குறிப்பிடவில்லை.
எனக்கு எல்லா மதமும் சம்மதமே. மேலும் கிறிஸ்துவப் பள்ளியில் இஸ்லாமியத் தோழிகளுடன் படித்ததால் அனைவரையும் பிடிக்கும். மன்னார்குடிக்கு யார் வந்தாலும் எட்டுக்குடி, எண்கண், சிக்கல், சுவாமிமலை இவற்றோடு வேளாங்கண்ணியும் நாகூரும் அழைத்துச் சென்று வருவது என் அப்பாவின் பழக்கம்.
எனவே நபிகள் நாயகம் ஒரு தீர்க்கதரிசி என அவர்கள் பற்றி மகாத்மா கூறிய அறிமுக உரையோடு துரை அறிவழகன் சார் எழுதிய அருமையான இந்த இடுகையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். சொல்லப் போனால் அவ்வப்போது ( தினமலர் ) பத்ரிக்கைகளில் ஆங்காங்கே படித்து வந்த இஸ்லாமிய சிந்தனைகளோடு துரை சார் எழுதிய இப்பகிர்வில் நபிகள் (ஸல்) பெருமானார் பற்றி அதிகம் அறிய நேர்ந்தது . நீங்களும் படித்து அறிய வேண்டுகிறேன்.
"அறம் வேரோடிய ஒளி முத்து"
[என் பார்வையில் முஹம்மத் நபி(ஸல்)]
- துரை. அறிவழகன்
"நபிகள் நாயகம் ஒரு தீர்க்கதரிசி" - மகாத்மா காந்தி
"நான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கையைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து" - ஜார்ஜ் பெர்னாட்ஷா
மனித குல வரலாற்றின் மாபெரும் அறிஞர்களாகிய இவ்விருவரின் பொருள் பொதிந்த வரிகள் எனக்குள் கடத்திய உணர்வுகளின் கொந்தளிப்பு அலையோட்டமே என்னை மாபெரும் தலைவர் 'முஹம்மத் நபி (ஸல்)' அவர்களின் வாழ்கை வரலாற்றையும், அவரது ஆன்ம ஒளி கலந்து வெளிப்பட்ட அறம் வேரோடிய கருத்துக்களையும் வாசிக்கத் தூண்டியது. அவற்றின் ஒளி பாய்ச்சலே இக்கட்டுரை வடிவாக்கத்திற்கு அருள்புரிந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றை படித்த போது, எளிமையும், கருணையும் கரைந்த ஒரு மந்திரத்தை என்னால் உணர முடிந்தது. 'மண்ணை அமுதமாக்கும்' மந்திரம் அது.
'பானுவின் கதிரால் இடருறும் காலம்
படர்தரு தருநிழல் எனலாய்
ஈனமும் கொலையும் விளைந்திடும் பவநோய்
இடர்தவிர்த் திடும் அரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய்
குறைஷியின் திலதமே எனலாய்
மானிலந் தனக்கோர்
மணிவிளக்கு எனலாய் நபி பிறந்தனரே'
ஞாயிறு பிறந்ததால் உலகின் இருள் ஒழிந்தது; ஒளி பிறந்தது. நபிகள் பிறந்ததால் அஞ்ஞானமும், துன்பமும் ஒழிந்தன; ஞானமும், இன்பமும் பிறந்தன, எனவும் அஞ்ஞானத்தை நீக்கி அறநெறியை பாய்ச்ச குற்றமில்லாத முழு நிலவாக 'முஹம்மத் நபி(ஸல்)' அவர்கள் பிறந்தார் என்று தனது 'சீறாப்புராணத்தில்' நபிகள் பிறப்பின் பெருமை உயர்வை மனம் கரைந்து அறியப்படுத்துகிறார் 'உமறுப்புலவர்'.
மதபோதகர்கள் பலரும் கடவுள் அவதாரமாகவோ அல்லது அவர்தம் புதல்வராகவோ தங்களை அறிவித்துக் கொள்ளும் இவ்வுலக சூழலில் தன்னை ஒரு ''மனிதர்', இறையுணர்வு கொண்ட 'அடியேன்' என வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர் ஈகையும், மேன்மை குணமும் கொண்ட 'முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். இந்த குணாதிசயத்தின் மேன்மை பொருந்திய ஒளியே பெரும்பான்மை மனித குலத்தை ஈர்த்தது போல் என்னையும் அவர்பால் ஈர்த்தது.
'பிறப்பால் உயர்வு தாழ்வு பேசும் உரிமை ஒருவருக்கும் இல்லை; அனைவரும் ஒத்த உரிமையுடைய சகோதர மக்களே' என அறிவித்த மனித குல மாணிக்கம் நபி அவர்கள். அறவழியை தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய அளவற்ற அருளாளரும், ஈர இதயம் கொண்ட நேசம் மிகுந்தவரும் ஆவார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். அற வேர்களை கொண்டு, கிளை பரப்பி நிற்கும் அந்தக் கருணை மரத்தின் பசுமை கிளைகளில் அமர்ந்து அவரால் கனிந்து நிற்கும் மனிதநேய பழங்களை உண்டு மனம் மலரும் கோடான கோடி ஜீவன்களில் ஒருவனாக என்னை நான் உணர்கிறேன். உலகத்தின் திசைகளில் மனிதநேய ஒளி பாய்ச்சிய நடைமுறைகளையும், அறம் வென்று அரியணை ஏறும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டியவர், ஞானத்தந்தையும், அளப்பெரிய அன்பாளரும், மகோன்னத கருணையாளரும் ஆன 'முஹம்மத் நபி(ஸல்)' அவர்கள். அத்தகைய மகத்தான ஒளி ஓவியத்தின் சாரம்ச, குணாதிசய உருவத்தை தீட்டும் தூரிகை எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை.
உலக அறிஞர்களின் மொழி வழி வெளிப்படும் நபி குறித்த காட்சிப் படிமங்களும் இந்த உண்மையைத்தான் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. அத்தகைய பொன்மொழிகளில் சிலவற்றை பார்ப்போம்:
- "இவ்வுலகின் மதத் தலைவர்களில் மிகச்சிறந்த வெற்றியாளர்" - பிரிட்டானிகா கலைக் களஞ்சியம்.
- "முஹம்மத் நபி(ஸல்) அவர்களை உண்மையான இறைதூதர் என்பதை ஒவ்வொருவரும் ஏற்பார்கள் என தைரியமாக நான் நம்புகிறேன்" - பெஞ்சமின் போஸ்வெர்த் ஸ்மித்.
- "உலகில் தோன்றியுள்ள எல்லா சீர்திருத்தக்காரர்களுக்கும் 'மூலம்' ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரபு அவனியில் தோன்றிய தீர்க்கதரிசி 'முஹம்மத் நபி(ஸல்)' அவர்களேயன்றி வேறு எவருமில்லை" - சரோஜினி நாயுடு
உலக அரங்கில் சூட்டப்பட்ட இப்புகழ் உரைகளைத் தொடர்ந்து நம் பாரததேசத்தின் பிதா 'மகாத்மா காந்தி' அவர்களின் கூற்றைப் பார்ப்போம்.
"அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஒரு இடத்தை 'இஸ்லாம்' மார்க்கத்திற்கு பெற்றுத்தந்தது 'வாள்' பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நம்புகிறேன். 'நபிகள் நாயகத்தின்' மாறாத எளிமை, தன்னை பணிவானவராகத் தாழ்த்திக் கொள்ளுதல், கொடுத்த வாக்குறுதியை பேணிக் காக்கும் தன்மை, மனித குலத்தின் மீது கொண்ட அபரிதமான அன்பு, அஞ்ஞாமை, ஆகிய உயரிய பண்புகள்தான் நபி அவர்களின் வெற்றிக்குக் காரணம். இத்தகைய பண்புகளே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும், அவரது தோழர்கள் முன்பும் வெற்றி மாலையாகக் கொண்டு வந்து குவித்தன"
இவ்வாறு "Young India" இதழில் பதிவு செய்துள்ளார் 'மகாத்மா காந்தி' அவர்கள்.
அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் தேடல் நம் அகவெளிக்குள் தொடங்கும் போது புனித நூலான 'குர்-ஆன்'னையும், 'முஹம்மத் நபி(ஸல்)’ அவர்களையும் நோக்கி நம் மனம் பயணிப்பது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிடுகிறது.
'அறத்தின் மாற்றமின்மையை, முழுமுதலான நிரந்தர மதிப்பீடுகளை 'குர்-ஆன்' சொல்கிறது; மாபெரும் கருணையால் நிரப்பப்பட்ட நீதிமானின் கையிலுள்ள வாள் அப்புனித நூல். அந்நூல், மானுட சமத்துவத்தின் குரலை முழங்குகிறது; சமத்துவ போதத்தின் அடிப்படையில் அமைந்த நீதியின் குரலை ஒலிக்கச் செய்கிறது'. இவ்வாறு 'குர்-ஆன்' எனும் மறை நூலின் அறப்பெருமைகளை சீமை ஓடுகளை அடுக்குவது போல் அடுக்கிக் கொண்டே செல்லலாம். 'மெய்மை' என்பது வைர ஊசியின் நுனியால் மட்டுமே தொட்டெடுக்கப் படக்கூடிய அளவு நுண்மையான ஒன்று என 'உபநிடதங்கள்' சொல்கின்றன. அறம், மெய்மை ஆகியவைகளின் சாரத்தை 'உணர்ந்து' உள்வாங்கியவர் 'முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். அப்பண்புகளை தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு மனிதகுல மேன்மைக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர்.
தேசப்பிதா சொன்னதையும் பிற உலக அறிஞர்கள் 'நபிகள்' குறித்த மேன்மைகளை சொன்னதையும் பார்த்தோம். இப்பொழுது நவீன மலையாளச் சிந்தனையாளர், 'எம்.கோவிந்தன்' சொல்வதைப் பார்ப்போம்.
"கடவுளுக்குரியது கடவுளுக்கு; சீசருக்குரியது சீசருக்கு என இரட்டை நிலையை நபி அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இக பரங்களை அம்மகான் இரண்டாகப் பார்க்கவில்லை; நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே கண்டார். அதனால்தான் நபி அவர்களால் ஒரே சமயத்தில் தீர்க்கதரிசியாகவும், ஆட்சியாளராகவும் ஆக முடிந்தது. உலக வரலாற்றில் இப்படி ஒரு இணைவு நிகழ்ந்தது இதுவே முதன்முறை"
இத்தகைய மாண்பும், பெருமையும் பொருந்திய ஒருவர் உலக வரலாற்றில் 'முஹம்மத் நபி(ஸல்)’ அவர்களுக்கு முன்பும் இருந்ததில்லை; பின்பும் இருந்ததில்லை.
நல்ல பண்பை உயர்த்தி, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல் என்று 'அறத்தை' அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்; ஒழுக்கநெறி எனவும் பொருள்படுத்தலாம். ஒருவர் சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள் குறித்த பார்வையையும், நன்மை, தீமை என்ற பிரிவின் அடிப்படையில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்க நெறிகளின் தொகுப்பை குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவும் அறத்தை பொருள் கொள்ளலாம்.
'அறம்' என்பதை 'தர்மம்' மட்டுமே எனக் குறுக்கிப் பார்க்க முடியாது. 'அறம்' என்பது முழுமையான ஒழுக்கநெறிகளை கொண்ட சாரத்தின் இறுதி வடிவமாகும். மனிதகுலம் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட நடத்தைகள்; வாழ்வில் பின்பற்ற வேண்டியவைகள், வேண்டாதவைகள், உறுதியாக கடைபிடித்தே ஆக வேண்டியவைகள் என அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்பே அறம் எனப்படும். பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல், ஆகிய தீய குணங்களுக்கு இடம் கொடாமல் கடிந்து ஒழுகுதலே 'அறம்' என்று திருவள்ளுவர் குறள் வழி சொல்கிறார்.
பழம்பெரும் பொக்கிஷங்களாலும், மூத்த தலைமுறை பெருமக்கள் வாழ்வியல் நெறிகளாலும் வடிக்கப்பட்ட அறத்தின் எல்லைகளை விரிவாக்கி விளக்கியவர் 'முஹம்மத் நபி(ஸல்)' அவர்கள். சகோதரனை பார்த்து புன்னகை செய்வது, நடைபாதையில் உள்ள இடர்களை களைவது, சகோதரனுக்காக தண்ணீர் தருவது, மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவு ஊட்டுவது போன்ற செயல்களும் அறத்தின்பால் பட்டதே என உலகுக்கு அறிவுறுத்தினார் நபி அவர்கள்.
'ஜிப்ரமில்' எனும் வானவர் மூலம் சிறுகச்சிறுக முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு உரைக்கப்பட்ட அறவுரைகளே 'குர் ஆன்' எனும் புனிதநூல் ஆகும்; அறவுரைகள், சட்டதிட்டங்கள், தொன்மங்கள், நீதிசெய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வேதங்களின் தாயாகவும், வழிகாட்டியாகவும், ஞானத் திறவுகோலாகவும் விளங்கிய 'குர் ஆன்' புனித நூலின் ஜீவ ஒளியை தனக்குள் முழுமையாகக் கிரஹித்துக் கொண்டு அம்மறையின் அடிப்படை நெறிகள் சிறிதும் வழுவாது வாழ்ந்து காட்டியவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்.
இத்தகைய குணநலன்கள் வோரோடியவராக வாழ்ந்ததால்தான், "அறம் செய்வது எப்படி என்பதைப்பற்றி திட்டவட்டமாக வரையறுத்துக் கூறியவர் நபி அவர்கள்" என்று புகழ்கிறார் அறிஞர் 'கிப்மன்' அவர்கள்; கண்மூடித்தனமான பழக்கங்களை கைவிடுமாறு செய்து மக்களை உயர்ந்த சமுதாயமாக மாற்றி, நெருக்கடியான நேரங்களிலும் இலட்சியங்களை நிறைவேற்றத் தவறாத கடமை வீரர் என்று புகழாரம் சூட்டுகிறார் தமிழகத்தின் கண்ணியம், கடமை, கட்டுப்பாடு என வாழ்ந்த தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர் 'பேரறிஞர் அண்ணா' அவர்கள்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், "கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும், அழியாத நம்பிக்கையும் கொண்டவர்; எடுத்த காரியம் யாவிலும் வெற்றி, எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி கண்டவர். நடுப்பாலைவனத்தில் ஒட்டகத்தில் ஏறி தனியொருவராக பயணிக்கும் நெஞ்சுரம் கொண்டவர். ஞானத்தாலும், கேள்வியாலும், நெடுங்காலத்து பக்தியாலும், பக்குவப்பட்ட நபி அவர்களின் ஹிருதயம், அப்படிப்பட்ட பாலை வெளியில் 'அல்லாஹ்'வை நாடுகிறது. அங்கு ஞான ஒளி வீசுகிறது. நபி அவர்கள் 'அல்லாஹ்வை' கண்டார்" என்று இறையருளுக்குள் கரைந்த ஜோதியாக 'முஹம்மத் நபி(ஸல்)' அவர்களைக் காண்கிறார் 'மகாகவி பாரதியார்' அவர்கள்.
"ஈரமான ஈரலுடைய எந்த ஓர் உயிருக்கும் சேவை செய்தால் நன்மை கிடைக்கும்' என்று உரைக்கிறார் பேரன்பின் திருவுரு 'நபி' அவர்கள். பசித்தவருக்கு உணவளிப்பது, தாகித்திருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது மற்றும் இன்றியமையாத தேவைகளை சக மனிதர்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பது சிறந்த செயல்களாகும். அவ்வாறு செய்வதன் வழி ஒரு மனிதன் அபரீதமான நன்மைகளை அடைவான்" என அறிவுறுத்துகிறார். மேலும், "ஒரு மனிதன் தன் சக மனிதனுக்கு ஏற்படுத்துகிற சந்தோஷமும், மகிழ்ச்சியுமே அம்மனிதன் மீது இறைவனுக்கு நேசத்தை ஏற்படுத்தும்" என்று உரைக்கிறார் 'நபி' அவர்கள்.
இறைநேசப் பெண்மணி 'ராபியத்துல் அதவியா', தன்னைச் சந்தித்த அறிஞர்களிடம் கூறுகிறார் : "நீங்கள் விளக்காக விளங்க வேண்டும்; ஊசியாக உதவ வேண்டும்". இதன் பொருள், விளக்கு தன்னை எரித்துக் கொண்டு மண்ணிலுள்ள மக்களுக்கு ஒளி தருகிறது. அதுபோல் தன்னலம் அறுத்து பிறர் நலம் பேணி மனித நேயத்தோடு மக்களுக்கு ஒளிதரும் விளக்காக விளங்க வேண்டும். கிழிந்த ஆடைகளை தைத்து மக்கள் மானம் காக்க உதவுகிறது ஊசி. அதுபோல் மக்களின் குறைகளை மறைத்து அவர்கள் கண்ணியமாக வாழ உதவுவதே மனித நேயமாகும். இறையச்சத்தையும், மனித நேயத்தையும் அப்பெண்மனிக்குள் பதிய வைத்து அவரது மனதை மலரச் செய்தவர் ஞான குரு 'முஹம்மத் நபி(ஸல்) அவர்களே.
பசி பட்டினியால் வாடுவோர், ஆடை இல்லாது அவதிப்படுவோர், உடல் நலிவுற்றவர் ஆகியோர்களுக்கு, சாதி, மதம், இனம், நாடு, மொழி, எனும் வேறுபாடுகளைக் கடந்து அவர்களின் பிணி துடைத்தலே 'மனிதநேயம்' என அறிவுறுத்தியவர் 'முஹம்மத் நபி(ஸல்)' அவர்கள்; மனிதர்களிடம், அன்பு, பரிவு, இரக்கம், ஈகை, வாய்மை, சகிப்புத்தன்மை, எளியோரை மதிக்கும் மனோபாவம், சரிநிகராக சக மனிதர்களை மதிக்கும் பாங்கு முதலான மேன்மைமிகு பண்புகளின் கலப்பே மனிதநேயமாகும். இத்தகைய மனிதநேயப் பண்பே 'புனித வாழ்வின்' அடையாளம் என இந்த சமூகம் நோக்கி உரக்கச் சொன்ன 'அற முத்து', 'முஹம்மத் நபி(ஸல்)' அவர்கள்.
"கல் கொண்டு எறியும் மனிதர்களுக்கு கனி கொடுக்கிறது மரம். வெயிலில் தவிப்போருக்கு நிழலையும், காற்றையும் கொடுக்கிறது. நீங்களும் துன்பம் தருவோருக்கு நன்மை எனும் நற்கனியைக் கொடுங்கள்", என மக்கள் மனதில் அறவுணர்வை விழிப்புறச் செய்தவர் 'நபி' பெருமானார்.
ஏழைகளின் குறைகளைக் கேட்பதற்கு நபிகள் அவர்களின் காதுகள் தாழ்ந்திருந்தன; எளியவர்களின் இன்னல்களைக் கண்டு உருகும் கனிந்த இதயத்தைக் கொண்டிருந்தார். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கவும், அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், உயிரோட்டமும், வல்லமையும் நிரம்பிய இயக்கம் ஒன்றினை தன் இளம் வயதில் உருவாக்கி வெற்றிகரமாக வழி நடத்தியவர் 'முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்.
அடிமைகள் உங்கள் உடன் பிறந்தவர்கள்; நீங்கள் உண்ணும் உணவைப் போலவே அவர்களுக்கும் அளியுங்கள்! நீங்கள் உடுத்தும் உடையைப் போலவே அவர்களுக்கும் உடுத்துங்கள்! அவர்கள் செய்யும் குற்றங்களை நாளொன்றுக்கு எழுபது முறை மன்னியுங்கள்" என்கிறார் அளவற்ற அருளாளரும், நிகரற்ற அன்பாளருமான ஒளி ஜோதி 'முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்.
எல்லா காலங்களிலும் நீரருவி ஓடிக்கொண்டிருக்கும்,திராட்சை, பேரீட்சை மரங்கள் சூழ்ந்த ஒரு சோலைவனம் போன்றது நபிகள் இவ்வுலகிற்கு அருளிய அற மொழிகள். அந்த அற மொழியின் ஒலியை செவிமடுப்பவர் செவிக்குள் புகுந்து, அவர்களின் உள்ளத்துள் ஊடுருவி உள்ளின் உள்ளேயும் தன் ஒளி பிரவாகத்தால் ஆட்கொள்ளக் கூடியவைகள் அவைகள். தான் அருளிய அறத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டி எழுப்பி, நீதிமிக்க ஆட்சி அமைக்கும் அருட்பேறு கிடைக்கப் பெற்றவர் நபிகள் அவர்கள். இச்சீர்மிகு சாதனையை 23 ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டியவர் அண்ணல் நபி அவர்கள்.
உறுதி, ஊக்கம், பொறுமை, நிலைகுலையாமை, தலைமைத்துவம், வழிகாட்டல், இறைஉணர்வு, அறவுணர்வு, அடிபணிதல் என பன்முக பரிமாண உன்னதப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்தவர் அண்ணல் நபி அவர்கள். பேரன்பும், மரியாதையும் கலந்த பண்புகளின் சாரத்தைக் கொண்ட கீழ்படிதல் குணமே மனித இனத்தின் வெற்றிக்கும், ஈடேற்றத்துக்கும் அடித்தளமாகும் என வழியுறுத்தியவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்.
"வாழ்க்கைக்குரிய சட்டங்கள், இறைவனுடைய ஒருமை, உரிமைகளின் வரம்புகள், குற்றங்களுக்கான தண்டனை விவரங்கள், சமுதாய அமைப்பு, நீதியின் நிலை, ஆகிய அனைத்தும் 'திருக்குர்-ஆன்' நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன", என்கிறார் 'ஹங்கேரிய அறிஞர் தேஹாவெனஸ்த்தே'.
மெக்காவில் செல்வம், செல்வாக்குடன் வாழ்ந்த மக்கள் மதீனாவுக்கு அகதிகளாய் குடிபெயர்ந்து, குந்துவதற்கு குச்சியுமின்றியும், அணிவதற்கு மாற்றுடையின்றியும் பரிதவித்ததைக் கண்டு இதயம் கசங்க கண்ணீர் வடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்தவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். மேலும், நாகரீக முற்போக்கு அரசுகள் என தங்களைக் கூறிக் கொண்ட பேரரசுகள் சாதிக்க இயலாத மதுவிலக்கை தன் கட்டுப்பாடான நெறிமுறை அறிவுறுத்தல் மூலம் தன்னைத் தொடர்ந்த மக்களிடம் சாதித்துக் காட்டியவர் அவர்.
அகத்தை மலர வைக்கும் பண்புகளின் சாரத்தை அறிவுறுத்தியதுடன் நின்றுவிடாமல், மதுவிலக்கு, மாதர் மறுமணம், மாதர் சொத்துரிமை என சீர்திருத்த கருத்துக்களையும் சமூக மேம்பாட்டிற்காக அறிவுறுத்தியவர் 'முகம்மத் நபி(ஸல்)' அவர்கள். இதோடு மட்டுமல்லாமல் ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டே செல்லாமலும், செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகிக் கொண்டே செல்லாமலும், உலகில் சமதர்மத்தை புகுத்தி செயல்வெற்றி கண்டவர்; இயற்கை குறித்த கருத்தோவியங்கள், அன்பு, அருள் மற்றும் இன்ன பிற மனிதப் பண்புகள் குறித்த அறவுரைகள் வழங்கி, மனிதகுலம் மெய்யறிவையும், விழிப்பு நிலையையும் அடைய உதவியவர். மனிதனின் முழு அம்சத்தையும், உள்ளும் - புறமும், ஆன்மாவும் - சரீரமும், ஆன்மீகமும் - லோகாயாதமும், அவனது சமுதாய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த தன்மையுடன் செயல்படுமாறு மாற்றியமைத்து சீர்செய்தவர். இத்தனை சிறப்புகளை கொண்டவர் 'முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்.
பிளேட்டோ, சாக்ரடீஸ், மக்கியாவெல்லி, மார்க்ஸ், புரூத் போன்ற சமூக மேதைகளுக்கு இணையாகவும், அவர்களுக்கு மேலாகவும் வைத்துப் பார்க்கத்தக்கவர் 'முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்; உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றிகள் இவை மூன்றும்தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் கருவி என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த ஒருவரையும் இவருடன் ஒப்பிட்டுக் கூற முடியாது.
"விண்மீன்கள், நிலவு, சூரியன் என வான்வெளியில் காட்சி தரும் அற்புதங்கள், நியதி தவறாது இரவைப் பின் தொடரும் பகல், ஆழ்கடலில் அசைந்து நகரும் மரக்கலங்கள், ஆகாய வெளியில் பல்வேறு சித்திர வடிவம் காட்டி சிறகடித்துப் பறக்கும் பல வண்ணப் பறவைகள், வீசும் தென்றல், விரைந்தோடும் கார்முகில் கூட்டம், இனிய நீர்ப்பெருக்கு, பெண்மையின் குளிர் நோக்கு, பச்சிளங் குழந்தையின் கள்ளமற்ற பரவசச் சிரிப்பு, கனிந்து தொங்கும் பழக்குலைகளைச் சுமந்து நிற்கும் ஈச்ச மரங்கள்.... நம்பிக்கை கொண்ட மனிதர்களே! 'அல்லாஹ்வின்' வல்லமையை உணர்ந்து கொள்ள இவை இணையற்ற சான்றுகளன்றோ" என்று கவித்துவ மொழியில் இந்த சமூகத்தைப் பார்த்து உரத்துக் கேட்கிறார் பிரேஞ்சு இலக்கிய ஆசிரியர் 'ஜார்ஜ் ரோக்ராண்டு' அவர்கள்.
"அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்" அவரது கட்டளைகளின் சாரத்தை உள்வாங்கி, தன் வாழ்வின் வழிகாட்டலாக உறுதி கொண்டு வாழ்ந்தவர் 'அண்ணல் நபி' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் "முஹம்மத் நபி (ஸல்)" அவர்கள்.
"கனன்று எரிகின்ற வாழ்கையில் இருந்து மீட்சி பெற இறைவன் அளித்த அபயகரமும் அருட்கொடையும் ஆவார் "முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்; பேரன்பின் வண்ணமும், காவிய அலங்காரமும், சூர்யப்பூக்கள் வழிவந்த அழகு தரிசனமும் அவர். நன்னீர் எனும் புனித நூலான "குர்-ஆனை" உள்வாங்கி, இணையற்ற அருளாளராகவும், குறைவற்ற அன்பாளராகவும் வாழ்ந்தவர்; அறப்பண்புகளைத் தன் வேர்களாகக் கொண்ட "முஹம்மத் நபி(ஸல்)" அவர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.
மத அடையாளங்களைக் களைந்து மத நூல்களின் அறநெறிகளுக்குள் கரைவதே காலத்தின் இன்றைய தேவை.’’
டிஸ்கி:- முழுவதும் படித்து நெகிழ்ந்து போனேன் துரை அறிவழகன் சார்!!!
நபிகள் (ஸல்) பெருமானார் அவர்களைப் பற்றி மகாந்த்மாகாந்தி, ஜார்ஜ் பெர்னாட்ஷா, சீறாப்புறாணம் - உமறுப் புலவர், பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம், பெஞ்சமின் போஸ்வெர்த் ஸ்மித், சரோஜினி நாயுடு, எம். கோவிந்தன், குர்-ஆன், கிப்மன், அண்ணா, பாரதியார், தேஹாவெனஸ்தே, ஜார்ஜ் ரோக்ராண்டு ஆகியோரின் கூற்றிலிருந்தும் பெருமானாரின் சிறப்புகளை உங்கள் தேர்ந்த வார்த்தைகளில் கூறியது அற்புதம்.
சாமான்யர்களும் அறிந்து கொள்ளும் அளவில் மதுவிலக்கு, மாதர் மறுமணம், மாதர் சொத்துரிமை பற்றிய அவருடைய சீர்திருத்தக் கருத்துக்களைத் தெளிவாக அளித்துள்ளீர்கள்.
சாட்டர்டே போஸ்டுக்காக ”அறம் வேரோடிய ஒளிமுத்து” பற்றிய சிறப்பான தகவலைக் கொடுத்தமைக்கு நன்றி.
அருமையாகச் சொன்னீர்கள், ”மத அடையாளங்களைக் களைந்து மத நூல்களின் அறநெறிகளுக்குள் கரைவதே காலத்தின் இன்றையத் தேவை” என்று. நாங்களும் வழிமொழிகிறோம்.
அறிமுகமும், கட்டுரை குறித்த தொகுப்புரையும் சிறப்பு. பெயர் தான் '
பதிலளிநீக்கு"சும்மா":பதிவுகள் அனைத்தும் தொன்ம வேரோடியவைகள். வாழ்த்துக்கள், செயல் சிறப்புடன் தொடரட்டும்.
நன்றி திரு. துரை அறிவழகன் சார்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!