எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். மறக்கப்பட்ட மேதைகள் பற்றி திரு. முத்துமணி.

 ஜகர்த்தா, இந்தோனேசியாவில் வசித்து வருகிறார் நண்பர் முத்துமணி. இவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் வான் அவை குழுமத்தில் இவரது கவிதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொரோனாவாகட்டும், சமூக இடைவெளியில்லாத மதுப்பழக்கத்தால் ஏற்படும் அவதி ஆகட்டும், பாரதி நூற்றாண்டாகட்டும், அறிஞர் அண்ணா பற்றியதாகட்டும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற சீற்றமிகு கவிதைகள் படைத்திடுவதில் வல்லவர் இவர்! 


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர். இவர் வணிகவியல் பட்டதாரியாக இருந்தாலும் கணக்கியலிலும்  எழுத்திலும் தன் முத்திரையைப் பதித்துக் கண்ணெனக் காத்து  வருகிறார். கவிதைகள்மேல் இவர் கொண்ட காதலால், பித்தால் கவிக்கிறுக்கனெனவும் அழைக்கப்படுகிறார்!.

வலம்புரி ஜான் அவர்களின் ”தாய்” இதழில் இவரது சில கவிதைகள் வெளியாகி உள்ளன. திருச்சி வானொலியில் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுமலர் ஆசிரியராக 12 வருடங்கள் அரும்பணி ஆற்றி உள்ளார். 

இந்தோனேஷியாவில் தமிழ் வளர்க்கும் அரும்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.கட்டுரைகள், கவிதைகளை முகநூலிலும், காணொலியிலும் வெளியிட்டு வருகிறார். அயராத இவரது தமிழ்ப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித்தரும்படிக் கேட்டபோது மறக்கப்பட்ட மேதைகள் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் வேதா, கவி. கா.மு.ஷெரீஃப், சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் பற்றி எழுதி அனுப்பினார். நீங்களும் படித்து இன்புற, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே தருவதில் பெருமகிழ்வு அடைகிறேன். 

///மறக்கப்பட்ட மேதைகள்


இலக்கியம், இசை,என்றால் எதையும் கொடுக்கும் ஒரே இனம் தமிழினம்.  கவிஞர் பெருமக்களை பரிசில்களால் பாராட்டிய மன்னர்களும், செல்வந்தர்களும்  என்றும் நிறைந்த பூமி.  இலக்கியத்தின்,  இசையின் விற்பன்னர்கள் என்றுமே மிகவும் மதிக்கப்பட்டனர், தமிழ்த் திரைத்துறையிலும், தீந்தமிழையும், தென்றலாய் இசையையுஎம் பொழிந்த மேதைகள் எத்தனையோ….

இருந்த போதிலும், துரதிர்ஷ்ட வசமாக திறமை மிகுந்த பலர் அறியப்படாமலேயே அமிழ்ந்து போய் இருக்கின்றன.  அவர்களுடன் ஒப்பிடும் போது, அவர்களிலும் திறன் குறைந்தவர்கள் அளவுக்குப் போற்றப்பட்டதில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு…

ஒரு சிலரை மட்டும், ஒரு சோற்றுப் பதமாக இங்கே இறக்கி விடுகிறேன்…

இசையமைப்பாளர் வேதா

சி.ஐ.டி.சங்கர், இருவல்லவர்கள், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், சபாஷ் தம்பி, எதிரிகள் ஜாக்கிரதை, யார் நீ, சித்ராங்கி, கொஞ்சும் குமரி, கண்ணாடி

மாளிகை என பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வேதா அவர்களின் தெவிட்டாத இனிய கானங்களில் சில :


அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி......
பழகும் தமிழே பார்த்திபன் மகளே....
கண்ணாலே நான் கண்ட கனவு....
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு......
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு...ஆசையா கோபமா....
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது....
பளிங்கினால் ஒரு மாளிகை....
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை...
மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது.....
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்.....
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல்.....
நானே வருவேன் அங்கும் இங்கும்.....
எனக்கொரு ஆசை இப்போது உனக்கதை சொல்வேன்...
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்.....
தைப்பூசத் திருநாளிலே ராஜா பெண்பார்க்க.....
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன...
நெஞ்சினிலே நினைவு முகம்.....
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா....
வேலோடு விளையாடும் முருகய்யா.....
அன்னநடை சின்ன இடை....
ரோஜாப்பூ கன்னத்திலே...
பொழுது புலர்ந்தது…

கவி.கா. மு. ஷெரீப்



ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…!”

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் ….

விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே” (பணம் பந்தியிலே)

பாட்டும் நானே பாவமும் நானே (திருவிளையாடல்)

தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம்  பட்டையைக்கிளப்பிய இந்தப் பாடல்களின் ஆசிரியரின் பெயர் கவி.கா.மு.ஷெரீப் என்பது பலருக்கும் நினைவில் இல்லாததாகும்.

“பணம் பந்தியிலே” என்னும் படத்திலே வரும் “பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே” என்னும் பாடல் இவரின் அற்புத ஆற்றலுக்கு ஒரு உதாரணமாகும்.

ஆரம்ப காலங்களில் இவருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இயக்குனர் ஏ.பி.நாகராஜனும்,  கா.மு.ஷெரீபும் தமிழரசுக் கட்சியின் தீவிர அங்கத்தினர்கள். ஆனால் கவியரசரோ அக்காலகட்டத்தில் தி.மு.க விலே தம்மை முற்றாக ஐக்கியப்படுத்தியிருந்தார்.

இதுவே இவர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

அன்னையைப் பற்றி எத்தனையோ பாடலாசிரியர்கள் எழுதி வைத்துப் போயிருக்கிறார்கள். ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ஆழமாக நம் மனதில் அடிச்சுவட்டை பதிந்திருப்பது “அன்னையின் ஆணை” திரைப்படத்தில் கா.மு.ஷெரீப் எழுதிய “அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை” என்ற பாடல்.

தாயைப்பற்றி எத்தனையோ பாடல்கள் திரைப்பாடல்களாக வடிக்கப்பட்டு இருக்கின்றன.


 ‘தளபதி’ படத்தில் “சின்னத்தாயவள் தந்த ராசாவே ”

‘அடிமைப்பெண்’ படத்தில் “தாயில்லாமல் நானில்லை”,

அதே படத்தில் ஜெயலலிதா பாடிய ‘அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு”

‘உழைப்பாளி’  படத்தில் “அம்மா அம்மா எந்தன் ஆருயிரே”

‘தூங்காதே தம்பி தூங்காதே’  படத்தில் “நானாக நானில்லை தாயே
 ”
‘வியாபாரி’ படத்தில் “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?”

‘மன்னன்’ படத்தில் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே!  அம்மாவை வணங்காது உயர்வில்லையே!”

‘வா ராஜா வா’ என்ற படத்தில்    “தாயிற் சிறந்த கோவிலுமில்லை…………..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘நியூ’ படத்தில் அண்மையில் வெளிவந்த


“காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா – என்
தாய் போல் ஆகிடுமா?”

இத்தனை பாடல்களையும் ஓரங்கட்டி எப்போது கேட்டாலும் உயிரையும் உள்ளத்தையும் உருக்கும் கா.மு.ஷெரீப் அவர்களின் பாடல் இதோ:


பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்”


என்ற தொகையறாவைக் கேட்டதுமே  நம் உள்ளதில் தாய்ப்பாசம் பொங்கி நம்மை ஒருகணம் கண்கசிய வைத்து விடுகிறது

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள்
அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை”

தாயை மறக்கும் சேயை நாயினும் கீழ்மையாய் காட்டுவார்.

துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்


நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்



பாடல்கள் ஒரு சில வரிகளேயானாலும் அது ஒருவரின் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை வருணிக்க இயலாது. ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் உணர்ச்சிகள் பொதிந்திருப்பதை உணர முடிகிறது.


“அன்னையின் ஆணை” என்ற படத்தில் கவி.கா.முஷெரீப் அவர்கள் எழுத, எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைப்பில்  டி.எம். சௌந்தரராஜன் பாடிய இப்பாடல் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அழியாத பாடலாக அன்றலர்ந்த மலராக மணம் வீசும்.


திரைப்படத்தில் பாடலெழுத வாய்ப்பு தேடிவந்தபோது “அம்மி கொத்த சிற்பியை அழைக்காதீர்” என்று மறுத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். திரைப்படப் பாடலில் இரட்டை அர்த்த வரிகளும், ஆபாச வார்த்தைகளும் மலிந்து போனபோது, மனம்வருந்தி “இனி சினிமாவுக்கு பாடல் எழுதவே போவதில்லை” என்று திரையுலகைத் தலைமுழுகியவர் கவி.கா.மு.ஷெரீப்.

சக்தி கிருஷ்ணசாமி



கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை!
வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி!
எங்களோடு வயலுக்கு வந்தாயா?
ஏற்றம் இறைத்தாயா?
நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா?
நாற்று நட்டாயா? களை பறித்தாயா?
கழனிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா?
அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா?
அல்லது மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை?
போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து……
 
தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை!


இந்த திரை வசனம் ஒலிக்காத ஊரே தமிழகத்தில் இல்லை,,,,இந்த வசனத்தை பேச முயற்சிக்காத நடிகரே இல்லை என்ற அளவுக்கு தமிழ் உணர்வை ஊட்டிய, வீரம் கூட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிம்மக்குரலில் நடிகர் திலகம் கர்ஜிக்கும் இந்த அனல் பறக்கும் வசனத்தைத் தீட்டியவர் சக்தி கிருஷ்ணசாமி ஆவார்.  இந்தக் காவியத்தில் வரும் ஒவ்வொரு காட்சியின் உரையாடலும் தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணந்த காதல், வீரம், மானம் என்னும் தன்னிகரில்லாத் தமிழினத்தின் தனித்தன்மைதனை வெளிக்காட்டுவதாகும்.

எழுத்தாளரான கிருஷ்ணசாமி, நாடகங்களுக்கு கதை வசனம் எழுதினார்.  சக்தி நாடகசபா எனும் நாடகக்கம்பெனியை நடத்தி வந்ததால், “சக்தி” கிருஷ்ணசாமி என்று பெயர் பெற்றார். நடிகர் திலகம், V.K.  ராமசாமி மற்றும்   M.N. நம்பியார் ஆகியோர் இவரது நாடகக்குழுவில் பணி புரிந்தனர்.  1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார்.


இருபது ஆண்டுகளுக்கு பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கிருஷ்ணசாமி. அவற்றுள் குறிப்பிட்டுச்  சொல்ல வேண்டிய படங்கள்:


கர்ணன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பெரிய இடத்துப் பெண்
படகோட்டி
எங்கவீட்டுப் பிள்ளை
பறக்கும் பாவை
பணம் படைத்தவன்
தங்கச் சுரங்கம்
பணக்காரக் குடும்பம்
பொன்னூஞ்சல்

ஆதங்கத்துடன்… கவிக்கிறுக்கன் தேவகோட்டை முத்துமணி, ஜகார்தா, இந்தோனேசியாவில் இருந்து……

டிஸ்கி:- இசையமைப்பாளர் வேதா அவர்களின் பாடல் என்று தெரியாமலேயே இத்தனை பாடல்களையும் கேட்டு வந்துள்ளேன். அறியத்தந்தமைக்கு நன்றி முத்துமணி சார். அபாரம் உங்கள் தொகுப்பு. படிக்கும்போதே பாடிக்கொண்டே வந்தேன் என்றால் மிகையில்லை. அவ்வளவு இனிமையான மனம் தொட்ட பாடல்கள் அனைத்தும். இசையமைப்பாளர் வேதாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

கவிஞர் கா. மு. ஷெரீப்பின் அன்னை பற்றிய பாடலை தாய் பற்றி வந்த அனைத்துப் பாடல்களோடும் ஒப்புமை கூறி விளக்கிய விதம் அருமை. அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை காலத்தால் அழியாத பொற்சித்திரம். சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். அவருக்கும் என் வந்தனங்கள்.

சக்தி கிருஷ்ணசாமி  பற்றி நீங்கள் எழுதியது படித்துப் பிரமித்தேன். எழுச்சி மிகு வீரபாண்டிய கட்டபொம்மனை இன்றளவும் சிவாஜியின் உருவில், வசனத்தில் உருவாக்கி உலவ விட்டிருப்பவர் இவர் என  இன்றையத் தலைமுறை அறியத்தந்தது சிறப்பு. சாதாரணமாகக்கூட நாம் எப்போதாவது யாரிடமாவது இந்த வசனத்தைப் பிரயோகித்திருப்போம். பள்ளிகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லாமல் சுதந்திரதின மாறுவேடப் போட்டியைப் பார்ப்பது அரிது. சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் வசனம் எழுதிய பெரும்பாலான படங்களையும் பார்த்திருக்கிறேன். அவருக்கும் என் வணக்கங்கள். 

இவ்வாறு மறக்கப்பட்ட மேதைகள் பற்றி நீங்கள் ஒரு நூலே கொண்டு வரலாம். அவர்களைப் பற்றி மட்டும் கூறாமல் அவர்களோடு தொடர்புடைய மற்றைய பிரபலங்களின் கூற்றுக்களையும் ஆவணப்படுத்துகிறீர்கள். இது நூலாக்கம் பெற்றால் அனைவருக்கும் பயன் தரும். 

ஒரு இசையமைப்பாளர், ஒரு பாடலாசிரியர், ஒரு வசனகர்த்தா என மறக்கப்பட்ட மேதைகளைத் தொகுத்து சாட்டர்டே போஸ்டுக்காக அளித்திருப்பது சிறப்பு. சிறந்த மூவரை இன்றையத் தலைமுறைக்கு உங்கள் மூலமாக அறிமுகப்படுத்த முடிந்ததில் எனக்கும் பெருமகிழ்வு. உங்கள் கவிப்பணி தொடரட்டும் என வாழ்த்துக் கூறுகிறேன். சும்மாவின் வாசகர்கள் சார்பாக அன்பும் நன்றியும் வாழ்த்தும். 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...