முகநூல் நண்பரான ஆவுடையப்ப அண்ணன் கலைமாமணி விருது பெற்றவர்கள். மாபெரும் ஓவியர். தெய்வீகத் திரு உருவங்களைத் தத்ரூபமாக வரைவதில் வல்லவர்கள். தனது குடும்பத்தாரோடு இணைந்து 108 பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்களை க்ளாஸ் பெயிண்டிங்காக ஒரு மாதத்தில் வரைந்து முடித்தவர்கள். இவர்களின் ஓவியப் பணி பற்றி ஒரு புத்தகமே போடலாம்.
இவர்கள் கண்டனூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தந்தை திரு ஆர் எம் எஸ் வி இராமனாதன் செட்டியார் அவர்களும் ஆன்மீகத் தொண்டாக கண்டனூர் மகாதேவா என் ஏ ஆர் கே அவர்கள் குடும்பத்துடன் இணைந்து பட்டினத்தார் திருவிழா நடக்க உதவியாக இருந்தவர்கள். அரசியல் தொண்டும் சமூகத் தொண்டும் ( கை இராட்டை மூலம் நூல் நூற்கும் பயிற்சி அளித்தவர் ) செய்தவர், இவரது தாய் நாச்சம்மை ஆச்சியும் மாதர் சங்கம் அமைத்து பள்ளத்தூர் அ. மு. மு . முருகப்பசெட்டியார் மகள் கண்டனூர் அன்னபூரணி ஆச்சியுடன் இணைந்து பெண்களுக்கான முதியோர் கல்வி திட்டத்தின் மூலம் பல பெண்கள் கல்வியறிவு பெற வழி செய்தவர். மனைவி திருமதி உமையாள் ஆச்சியும் இவர்கள் கலைக்குக் கைகொடுக்கும் கலையரசி. ஒரே மகன் இராமநாதன் தந்தைக்குப் பக்கபலம். இவருக்கும் ஒரே பையன். மகனுக்கும் தந்தை பெயரான ஆவுடையப்பன் என்ற பேரையே இட்டிருக்கின்றார்கள்.
ஆவுடையப்பண்ணன் ”சிலப்பதிகாரக் கதை”யை 30 தஞ்சாவூர் பெயிண்டிங்குகளாக வரைந்தவர்கள். இவர்கள் வரைந்த ”ரிஷபாரூடர் ”கண்டனூர் மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலிலும், ”தசாவதாரம்” போபால் நேஷனல் மியூசியத்திலும், ”மீனாக்ஷி திருக்கல்யாணம்” சென்னை ஸ்பிக்கிலும், ”பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் ”காஞ்சி மடத்திலும், கோலாலம்பூர் தண்டாயுதபாணி மடத்திலும், திருப்பளாத்துறை தருமபுரம் ஆதினத்திலும், நியூதில்லி எஸ். கே பிர்லா ஹவுசிலும் ”விதோபா கிருஷ்ணா” அமெரிக்காவிலும், ”முருகக் கடவுள் ” சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயிலிலும், ”நடராஜர் ” செட்டிநாட்டு அரண்மனையிலும், ”இராமர் பட்டாபிஷேகம் “ காரைக்குடி சுபலெக்ஷ்மி பேலஸிலும், ”திருப்பதி வெங்கடாசலபதி நியூதில்லி கோயாங்கோ ஹவுஸிலும், “ கிருஷ்ணா & ருக்மணி “ அமெரிக்காவிலும் ( தெய்வானை இல்லம் ) வைக்கப்பட்டுள்ள பெருமைக்கு உரியன.