எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 ஜனவரி, 2015

காரைக்குடி திருக்குறட்கழகத்தின் 61 ஆம் ஆண்டு குறள் விழா.

காரைக்குடி திருக்குறட்கழகத்தின் 61 ஆம் ஆண்டு குறள் விழா.:-
.


சென்ற சில மாதங்களுக்குமுன் காரைக்குடி சென்றிருந்த போது திருக்குறள் கழகத்தின் 61 ஆம் ஆண்டுவிழாவுக்கான அழைப்பிதழை என் அன்பிற்குரிய மாமா திரு லயன் வெங்கடாசலம் அளித்தார்கள்.

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது. அந்தச் சமயத்தில் அங்கேயே இருந்தாலும் ( ஞாயிறு முழுக்க நிகழ்ச்சிகள் ) மாலைதான் கலந்து கொள்ள இயன்றது. மாபெரும் அறிஞர்கள் நிரம்பிய அவையில் நானும் என் கணவரும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தமிழின்பக்கடலில் மூழ்கி எங்களையே மறந்தோம்.
மாலை ஐந்தரை மணிக்குமேல் சென்றதால் திரு பொன்னம்பலம் அடிகளார், திரு சுப வீர பாண்டியன், திரு மேலை பழனியப்பன் ஆகியோரின் அரும் உரைகள் கேட்டேன். ( அவற்றை அடுத்தடுத்த இடுகைகளில் பகிர்வேன் ) . விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக குறள் இலக்குவன் அவர்களின் திரு உருவப்படமும் திறந்துவைக்கப்பட்டது. குறள் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர் , மாணாக்கியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. செவிக்குணவு இல்லாதபோது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. :)

காரைக்குடி திருக்குறள் கழகத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவர் என் மூத்த மாமா தெய்வத்திரு வ.சுப்பையா அவர்கள்.மற்றையோர் சுபவீ & டைரக்டர் எஸ்பி முத்துராமன் ஆகியோரின் தந்தை ராம சுப்பையா, நா. பெத்த பெருமாள், நவயுகப் புத்தகாலயம் மெய்யப்பன், குறள் இலக்குவன், பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் வெ தெ மாணிக்கம் மற்றும் பலர்.

இக்கழகத்தின் ஆரம்பகால விழாக்களில் உரையாற்றிய பெருமக்கள் அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், திருக்குறளார் முனுசாமி, தேவர் திருமகன் ஆகியோர்.

 காரைக்குடி குறள் விழாவில் எனது அபிமானத்துக்குரிய மாமா திரு .லயன் வெங்கடாசலம் அவர்கள் பொருளாளராகப் பொறுப்பேற்று  இந்த விழாவைச் செம்மையுற நிகழ்த்தினார்கள். 

பொன்னம்பல அடிகள், மேலை பழனியப்பன், சுபவீ ஆகியோரின் தமிழ் வெள்ளத்தில் ஆனந்தமாக நனைந்தது காரைக்குடி கண்ணதாசன் மண்டபம். கற்றலில் கேட்டல் இனிது என்று தோன்றியது.

 மதிப்பிற்குரிய எனது இரு அம்மான்கள் பங்குபெற்ற விழாவில் பார்வையாளராக நானும் கலந்து கொண்டதில் பெரு மகிழ்வு அடைகிறேன்.

நன்றி வாழ்வியல் நெறிகளை அழகுறத் தந்த திருக்குறள் கழகத்துக்கும் , எனது மாமா லயன் வெங்கடாசலம் அவர்களுக்கும். ( வருடந்தோறும் காரைக்குடிப் புத்தகத் திருவிழாவையும் இவர்கள்  சிறப்புற நடத்துகிறார்கள். )

திருக்குறள் தமிழர்களின் வேதம். வாழ்க தமிழ்! வளர்க திருக்குறளின் புகழ் !
 

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...