எனது பதிமூன்று நூல்கள்

வியாழன், 31 மே, 2018

ஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.

ஏழு தர்வாஜாக்கள் (  ஏழுபக்கம் நுழைவாயில்கள் )  உள்ள கோட்டை பிதார். நுழை வாயில்கள் மட்டுமல்ல. கோட்டையின் உள்ளேயும் ஏகப்பட்ட வாயில்கள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

கோல்கொண்டா, குல்பர்கா, குவாலியர் கோட்டைகளுடன் பிதாரும் மிகச் சிறந்த கோட்டை ஆனால் மிகச் சிதைந்த கோட்டையும் கூட. பஹாமனியர்கள் ஆட்சிக்காலத்தில் பதினாறு தூண் மசூதிகளும் பல்வகையான மஹால்களும் கொண்ட இக்கோட்டையின் மிச்சத்தையும் எச்சத்தையும் பார்க்கலாம் வாங்க.

வரிசையா ஏழு வாயில்களையும், அங்கங்கே சுரங்கப்பாதைகளையும் பார்த்துக்கிட்டே போகலாம். கோட்டைகளின் காதலி நான்.  கால்வலிக்க நடந்து நடந்து நான் காதலித்த கோட்டைகளில் இதுவும் ஒன்று. :)

குல்பர்க்காவிலிருந்து ஹைதை வரும்வழியில் இருக்கிறது இக்கோட்டை. இதன் ட்ரபீசிய வடிவ மதில்கள் கொள்ளை அழகு. மதிலும் அகழியும் கொண்ட நுழைவாயில் இது.


உள்ளே வந்தாச்சு.

பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.


பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன்.

காரிருள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறது. பரிதி தன் குதிரைகளில் ஆரோகணம் செய்து உலாவர ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். விடியப்போகிறது. ஆனால் பதினைந்து வயது பாலகன் ஒருவனை நினைத்து அவனைப் பெற்றவர்கள் பரிதவித்தபடி பரமனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

கங்கையின் மணிகர்ணிகை கட்டம். பிரவகிக்கும் கங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு சிவலிங்கம் ஜொலித்துக் கொண்டிருக்க சின்னஞ்சிறு பாலகன் ஒருவனின் குரல் நம்பிக்கையுடன் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ சிவாய நமக. ஓம் நமச்சிவாய.”

செவ்வாய், 29 மே, 2018

வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயில் ஒரு சிற்பக் கலைக்கூடம். ஃபோட்டோகிராஃபர்ஸ் டிலைட் என்றும் சொல்லலாம். அங்கே தீட்டப்பட்டிருக்கும் இயற்கை வண்ண ஓவியங்களும் ஏ க்ளாஸ். காணக் கண்கோடி வேண்டும்.

சங்குசக்கரத்துடன் மஹாவிஷ்ணுவும்., அர்ஜுனருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்த ஓவியமும். இதன் வரந்தையில் இருக்கும் திரை ஓவியங்களும் விதான வட்ட வடிவ ஓவியங்களும் கூட கண்கவர் அழகு.

நான்கு குதிரைகள் பூட்டிய தேர். குருஷேத்திரப் போர்க்களத்தைக் காட்டும்விதமாக பூமியின் சிவப்பு, அர்ஜுனனின் பவ்யம் கிருஷ்ணரின் உபதேசக்கோலம் எல்லாமே வெகு அழகு. சிந்தனை தெளிவுறுவதுபோல் தூரத்தே மேகம் வெளுப்பதும் கூட.


ஸ்ரீ மீனாக்ஷி திக்விஜயம். கயிலையில் சிவனுடன் பொருதும் தோற்றம். வெகு கம்பீரம். வெகு அழகு.

திங்கள், 28 மே, 2018

கொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.

கொச்சுவெளி பீச்சில் ஒரு அழகான பூந்தோட்டம் இருக்கிறது. அங்கே எடுத்த பல பூக்கள் இங்கே அணிவகுக்கின்றன. கேரளாவிலும் வீடுகளில் நிறைய பூக்கள் வளர்க்கிறார்கள். திருவனந்தபுரம், பாலோடு, பொன்முடி ஆகிய இடங்களில் எடுத்த புகைப்படங்கள் இங்கே அணிவகுக்கின்றன.

ஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.

ஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.

காஃப்காயெஸ்கு என்பதை நான் கசப்பு அதீத தவிர்க்க இயலாத பிறவிக் கசப்பு என்று மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

துயரமுற்றவர்கள், தோற்றோடியவர்களின் பிரச்சனைகளை, அதிலிருந்து மீள கைகொடுக்க யாருமில்லாதவர்களை, ஒரு வட்டத்துக்குள் கட்டப்பட்டவனை நாயகர்களாகக் கொண்டவை காஃப்காவின் கதைகள். ஒருவனின் பிரச்சனையை யாருமே பிரச்சனையாக கருதாதவரை, அது அவனுக்கான ப்ரத்யேகப் பிரச்சனை மட்டுமே என்ற அளவில் அணுகுபவரை அவன் வாழ்க்கை நெடுகச் சந்திப்பான். 

பரிணாமம், வளர்சிதை மாற்றம், என்பதை எல்லாம் வளர்முகப் பாதையிலேயே பார்க்க விரும்பும் நம்முன் சிதைந்த ஒன்றை,  பிரம்மாண்டமானதாக தவிர்க்க இயலாததாகப் பிம்பம் கலைந்த ஓவியமாக முன் வைக்கிறார் காஃப்கா. காஃப்காவின் கதைகள் அனைத்துமே வாசிப்பவரின் முடிவுக்கு விடப்படுபவை.. அநேகம் அவலச்சுவை நிரம்பியவை.
இத்தொகுப்பில் உருமாற்றம் ( மெட்டமார்ஃபாஸிஸ் ), காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம், உருமாற்றம் பற்றி காஃப்காவின் டைரிக் குறிப்புகள், முதல் துயரம், சட்டத்தின் வாயிலில் பட்டினிக் கலைஞன், வாளியில் பயணம் செய்கிறவன், காஃப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும் ஆகிய கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.  

வெள்ளி, 25 மே, 2018

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.
அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வாளில் பயிற்சி பெற்ற இளையர்களின் திறமைக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு போட்டியிலும் யாரோ வென்ற போது கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் அவர்களை ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பிப் பாராட்டினார்கள்.
அர்ஜுனன் முறை வந்தது. அவர் அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பொம்மைக் கிளியின் கண்ணைத் தன் அம்பால் எய்தார். உடனே அவருக்குக் கரகோஷம் எழும்ப கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் மத்தியிலிருந்து சூரியனைப் போலப் ப்ரகாசமான, தேஜசான ஒரு வீரன் எழுந்தான்.
“ இந்தக் கிளியின் ஒரு கண் என்ன , இரு கண்களையும் என்னால் குறிவைத்து அடிக்கமுடியும். “ என்று போட்டி மேடையில் ஏற முயன்றான்.
“நில்.. அரசிளங்குமரர்களுடன் போட்டியிட நீ தகுதியானவந்தானா. எந்த நாட்டு இளவரசன் நீ. ? “ என்று தடுத்து நிறுத்தினார் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணர்.
திகைத்து நின்றான் அந்த வீரன். இழிவரல் கொண்டு இறங்க முற்பட்டான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல். அக்குரலுக்குச் சொந்தக்காரன் துரியோதனன்.

வியாழன், 24 மே, 2018

வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.


வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.

வாழ்க்கை ஒரு பரிசு  படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என்னைக் காட்டாறு போல இழுத்துச் சென்ற ஒரு அற்புதம் எனலாம். நிஜமாகவே படித்து முடித்ததும் வாழ்க்கை ஒரு பரிசு என உணர்கிறேன்.

கில் எட்வர்ட்ஸ்  ஒரு உளவியல் மருத்துவர், ஆன்மீக எழுத்தாளர், லிவிங் மேஜிக்கலி, ஸ்டெப்பிங் இண்டூ த மேஜிக், ப்யூர் ப்லிஸ் & வைல்ட் லவ் போன்ற நூல்களின் ஆசிரியை. தன்னுடைய ஒவ்வொரு கருத்திலும் அவர் நேர்மறை எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல் இதை மொழி பெயர்த்த பி எஸ் வி குமாரசாமியும் அட்சரம் பிசகாமல் அதை எதிரொலிக்கிறார்.

பூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்

மதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள்.

பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி
பூம் பூம் பூம் மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி.
அரிசி போட வெளியில் வந்த பெண்ணைப் பார்த்தாண்டி
அடுத்த மாதம் கல்யாணத்துக்கு சேதி சொன்னாண்டி.

இந்தப் பாடலில் வரும் பூம் பூம் மாடு நாங்கள் சின்னப் பிள்ளையில் பார்த்தது.  பூம் பூம் மாடு, சாட்டையடி சோளகா, கம்பி மேல் நடக்கும் நெருப்பு வளையத்துள் பாயும் கழைக்கூத்தாடிகள், பாம்புப் பிடாரன்கள், குரங்காட்டிகள், போன்ற தெருவோர வித்தைக்காரர்களை அக்காலத்தில் பார்க்கலாம்.

இன்றும் கோவைக்குச் சென்றிருந்தபோது பாலிடெக்னிக் அருகே ஒரு பூம் பூம் மாட்டைப் பார்த்தேன். அது மாட்டுக்காரரின் மேள தாளத்துக்கு ஏற்ப பூம் பூம் என்று தலையாட்டியபடி வந்தது. பலவகையான துணிகளையும் அணிமணிகளையும் அணிந்திருந்த அது கண்ணைக் கவர்ந்தது.

ஆனால் அந்த மாட்டுக்காரரின் அன்றாடப்பாடோ வெகு பாடு.
தோளில் மேளத்தை மாட்டிக் கடை கடையாக நின்று காசு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சொல்லிய நற்பலனுக்கெல்லாம் ஜீவ சாட்சியாய் ஆமோதித்துத் தலையாட்டிக் கொண்டிருந்தது அந்த மாடு.

மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.


மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். 

பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. 

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் ( கி. பி. 630 – 638 ) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

இயற்கையான பாறையைச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர்போல காட்சி அளிப்பதால் அவை இரதம் எனப்படும்.

எழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.

1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள்.

1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்கே ப்ளாக் லிஸ். ஏன் ப்ளாக் பண்ணேன். ?1 ;P

1783. ஆசிஃபா கொந்தளிக்கிறது உள்ளம். :(

1784. அருளை அள்ளித்தரும் அட்சய திருதியை கோவில்கள். திருப்பட்டூர், திருவரங்கம், திருவானைக்கா. :)

1785. இப்பிடி ஆக்கிட்டீங்களே அருப்புக்கோட்டை ப்ரொஃபஸர். :(

புதன், 23 மே, 2018

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசர்.

பாண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாக அந்தக் குடிசையைப் பதம் பார்த்தும் இன்னும் விடுவதாயில்லை. உள்ளே ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். அவள் கரங்களோ அந்தக் குடிசையில் இருக்கும் சொக்கநாதப் பெருமானின் படத்தை வணங்கிக் காத்தருளுமாறு வேண்டுகின்றன.

அன்று ஆவணி மூல நட்சத்திர நாள். தினமும் பிட்டு சுட்டுப் படைக்கும் அவள் சிலநாட்களாகப் பிட்டு சுட்டுப் படைக்கமுடியவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறாள். “ஈசா என்ன நினைத்து என்னைப் படைத்தாய்?. இந்தக் கிழவியின் பிட்டுக்கும் ஏன் தடை விதித்தாய் ? என்று நிற்கும் இம்மழை.? என்று வடியும் இவ்வெள்ளம்.? என்னை அடித்துச் சென்றாலாவது காக்க வருவாயா? “ என்றெல்லாம் அவள் ஈசனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

சாதாரண நாட்களிலேயே சூரியனும் சந்திரனும் கூரை இடுக்குகளின் வழியாக அவள்மேல் தங்கள் கண்களைப் பதிப்பார்கள். அன்றோ காற்றும் தன் பங்குக்குக் குடிசையின் தென்னங்கிடுக்குகளை விசிறித்தள்ளிக் கொண்டிருந்தது. சில கிடுகுகளைப் பெயர்த்தும் போட்டிருந்தது.  பெய்த மழையில் சொதசொதவென்று ஈரமாக இருந்தது அவளது குடிசை.

செவ்வாய், 22 மே, 2018

காலம் செய்த கோலமடி :-

காலம் செய்த கோலமடி :-


முன்னுரை:-  பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ, தஞ்சை பிரகாஷ் கதையோ உண்டாக்கும் அதிர்ச்சி கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் . ஏனெனில் அது உறவுச்சிக்கலை அதி வித்யாசமான கோணத்தில் காட்டுவதால்தான். அதேபோல்தான் தில்லையகத்து துளசிதரனின் கதையான காலம் செய்த கோலமடியும் சிறிய கலாச்சார அதிர்ச்சியை உருவாக்கியது.

சனி, 19 மே, 2018

பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.


பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.

ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார். சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.

அவருக்கு வயது 60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார். 
  
வானம் இன்னும் மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம். என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.

அது சரி இந்த ஜடாயு யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?

பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண் விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான். ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக மூடுகின்றன.

சனி, 12 மே, 2018

ஆச்சியும் ஆட்சியும்.

”யாகாவாராயினும் நா காக்க” என்ற திருக்குறளை நினைவுபடுத்துகிறது அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் டிவி பேட்டி.

நடிகர் ரஜனிகாந்த் அவர்கள்  தென்னிந்திய நதிநீர் இணைப்பைக் கொண்டுவருவதுதான் தன்  வாழ்நாள் கனவு என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதற்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம் ?

வார்த்தை விளையாட்டு என்பது விபரீதமாகிவிடக்கூடாது. விவேக் ஒரு படத்தில்  காரைக்குடிப் பக்கம் (ஆச்சியைப் பிடித்தார் என்று ஒரு பெண் தொகுப்பாளர் உச்சரிக்கும்போது ) சொன்னால் கலவரம் வந்துவிடும் என்பார். அதை விட அதிகமாகக் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடைபெற்றது. ( தொடர் பயணங்களால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நான் கலந்து கொள்ளவில்லை. ) அனைவருமே கொந்தளித்துப் போய் உள்ளார்கள்.

காரைக்குடி மட்டுமல்ல 72 நகரத்தார் ஊர்களிலும் பெண்களை ஆச்சி என்றே அழைக்கிறார்கள். திருநெல்வேலிப் பக்கத்திலும் முதிய பெண்களை ஆச்சி என்றே அழைக்கிறார்கள். காரைக்குடியில் வயதில் மூத்த பெண்களையும், மூத்த சகோதரிகளையும் அக்கா என்ற பதத்தில் ஆச்சி என்றும் , திருமணமான பெண்களையும் ஆச்சி என்றும் அழைப்பதுண்டு.

வாய்க்கு வந்ததை காமெடி என்று நினைத்து சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி விளக்கம் கொடுத்தால் சரியாகிவிடுமா என்றே நேற்றைய அவரின் பேட்டிகள் பார்த்துத் தோன்றியது. ஆச்சியாயினும் பெண்கள்தானே. அனைத்துப் பெண்களையும் இப்படிக் கிண்டலடித்துவிட்டு இருந்துவிட முடியுமா.

திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

திருத்தணியில் கத்திரி வெய்யில் கொளுத்துகிறது. கத்தி வத்தல் அல்ல . அதை எண்ணெயில் இட்டுப் பொரித்ததுபோல் மேலெல்லாம் அக்கினிப் பிரவேசம். ஈரப்பசை என்பது மருந்துக்கும் இல்லை. வெப்ப அனல் அலை வீசுகிறது. மயக்கம் வராத குறை. இந்த வெய்யிலில் மக்கள் அங்கே எப்படி வசிக்கிறார்களோ. தமிழ்நாட்டிலே அதிக வெப்பம் உள்ள இடம் அதுதானாம்.

அக்கினி நட்சத்திரம் அல்ல அக்கினிச் சூரியன்  என்பதை என் வாழ்நாளில் முதன்முதலாக அங்கு உணர்ந்தேன். கனலும் அடுப்புக்குள் இருக்கும் உணர்வு.

கோயில் தரிசனம் அருமை. ஆனால் உணவகங்கள் சுமார்தான். அதிகம் ரோட்டோரக் கடைகளே. சுத்தம் என்பது மருந்துக்கும் இல்லை. சாப்பாடு பரவாயில்லை. மெஸ்கள் அதிகம். அசைவ உணவு வகைகளும் அதிகம். நல்ல ருசி. ஓரிரு பொரியல்களில் மல்லாட்டையை பொடித்துப் போட்டுச் செய்கிறார்கள். கீரை கடைசல் தெலுங்குக்காரர்களின் ஸ்பெஷல்.
திருமுருகன் ரெஸிடென்ஸியில் ஒரு நாள் வாடகை ரூ1, 200/-.  காலை உணவு எல்லாம் கிடையாது. இருவர் தங்கலாம்.

வெள்ளி, 11 மே, 2018

பொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.

தூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திராவுக்குச் சென்று நிகழ்வில் பங்கேற்றேன்.

https://www.youtube.com/watch?v=Yzyx6NvSPwc

எந்தத் தொய்வுமில்லாமல் அடுத்தடுத்து தொடர்புடைய மிக அருமையான கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கிய தொகுப்பாளினி கௌதமி ராஜாராமுக்கும் ( முதலில் நியூஸ் ரீடராகப் பணியாற்றி உள்ளார் ) அதுதான் முதல் நிகழ்ச்சியாம். தொய்வில்லாமல் நிகழ்ச்சியை சுவாரசியமாகக் கொண்டு சென்றதில் அரைமணிநேரம் போனதே தெரியவில்லை.

இரண்டு மூன்று இடங்களில் சரிவர என் பதிலை நான் சொல்லவில்லை. முதலில் எல் கே ஜி, யூ கே ஜி படித்தது  காரைக்குடி அழகப்பா ப்ரிப்பரேட்டரி மாண்டிசோரி, அதன் பின் இரண்டாம் வகுப்பு வரை  செயிண்ட் ஜோசப்  மன்னார்குடி, அதன்பின் எட்டாவது வரை கணபதி விலாஸில் படித்தேன். இவற்றைச் சொல்ல விட்டுவிட்டேன். அதன்பின் தான் திரும்ப ஒன்பதாவது, பத்தாவது, ப்ளஸ் ஒன் ,  ப்ளஸ்டூ வரை செயிண்ட் ஜோசப் பள்ளி.

அதே போல் பெண்பூக்கள் நூலில் 57 பூக்கள் என்று சொல்லும் இடத்தில் 57 புஸ்தகங்கள் என்று சொல்லி இருப்பேன். :)

குழந்தை பிறந்தவுடன் சிவப்புப் பட்டுக் கயிறு கட்டுவார்கள். அதைப் பிள்ளை விடும்போது அறுப்பார்கள். என்று சொல்ல நினைத்து குழந்தை  பிறந்தவுடன் பட்டுக்கயிறு அறுப்பார்கள் என்றிருப்பேன் :)

ஓரிடத்தில் கடற்கொள்ளையர்கள் மனைவி என்பார் அந்த இடத்தில் கடத்தப்பட்டவர்கள் மனைவி என்பதை நான் சொல்லி இருக்க வேண்டும்.

முடிவாக வட்டார மொழி வழக்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அழிந்துவரும் வட்டாரப் பழக்க வழக்கங்கள், மொழி, உணவு, வீடுகள், உடைகள், பழம் பெருமைகள், பெண்களின் நிலைகள் ஆகியன ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று சொல்ல நினைத்தேன். விட்டுப் போய்விட்டது. இங்கே சொல்லி விட்டேன். :)

சனி, 5 மே, 2018

கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.

கானாடுகாத்தானில் கம்பீரமாக இன்றும் நிற்கும் வீடொன்றின் முன்புறம். நன்றாக 931 * மராமத்து செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பழமையின் விரிசல்கள். மிக உயரமான வீடுகள் என்பதால் 932* இடிதாங்கும் கலசங்கள் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பல கலசங்கள் கவின்மிகுஎழிலோடு காட்சி அளிக்கும்.

கீழே வீட்டின் பக்கவாட்டில் அரக்குநிறத்தில் காணப்படுவதுதான் 933 * செம்புறாங்கற்கள். இவை வீட்டின் அடித்தளம் அமைக்கப் பயன்படுகின்றன. இந்த செம்புறாங்கற்கள் பாறையாக இருக்கும். இவை செவ்வக வடிவில் வெட்டப்பட்டு பதிக்கப்படுகின்றன. பூமியின் கீழே எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. ஆனால் மேற்புறம் ஐந்து அடி உயரமாவது பதிக்கப்பட்டிருக்கும். வீட்டின் உள்புறத்தில் இந்த இடத்தில்தான் தரைத்தளம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதுவரை அடித்தளமே. மேலும் ஒவ்வொரு வீடும் பத்து படி அளவு உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் வீடுகளைக் கடல் கொண்ட காரணத்தால் இங்கே வீடுகளை இவ்வளவு உயரத்தில் அமைத்து இருக்கிறார்கள்.
இந்த வீடும் கானாடுகாத்தானில் உள்ளதே. ஒரு 934* அனுவல்சமயம் எடுத்தேன். இரட்டைத் தூண்கள்.  ஆறு ஜோடித் தூண்கள் உள்ளன. இரண்டு பக்கமும் முன் கோப்பான மேல்மாடி அறைகள். பக்கவாட்டில் பார்த்தால் தெரியும் செம்புறாங்கற்களின் அடுக்கை.இங்கே அவை ஆறடி உயரம் இருக்கின்றன. மேலும் கெட்டியான சிமிண்டினால் பூசப்பட்டிருக்கின்றன.

வெள்ளி, 4 மே, 2018

இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 4.

இன்னும் சில மழலையர்கள். என் ஓவியமாகவும் பத்ரிக்கைகளில் இருந்தும்.


இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 3

என்னைக் கவர்ந்த மழலையரும். நான் வரைந்த மழலையரும் அணிவகுக்கிறார்கள். :) ( பதின்பருவ கலெக்‌ஷன் )

வியாழன், 3 மே, 2018

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவர்மலர் - 16.

கொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன்.
யர்பாடி அன்று ஒரே கோலாகலமாயிருந்தது. பசுக்கள் தங்கள் கழுத்து மணியை ஆட்டியபடி பசும் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன.  வைக்கோல் வேய்ந்த குடில்கள் அன்று பசுஞ்சாணம் பூசியிருந்தன. இல்லங்களில் ஆய்ச்சியர் தயிர்கடையும் மத்தொலி கூட சரட் சரட் என்று கால்கள் கீறித் திமில் திருப்பிக் கொம்பசைத்துக் கிளர்ந்து நிற்கும் எருதுகளின் ஹீங்காரத்தை எதிரொலிக்கின்றது.
கொன்றை மரத்திலிருந்து பொன்னிறக் கொன்றைப்பூக்கள் அன்று நிகழப்போகும் ஏறு தழுவலுக்கு ஆசி அளிப்பதுபோல் உதிர்ந்துகொண்டே இருந்தன. ஆமாம் அன்று ஏறு தழுவப் போவது யார் ? அதுவும் ஏழு ஏறுகளைப் தழுவப் போகும் அந்த மாவீரன் யார் ?
வாருங்கள் தங்கள் நீண்ட கூந்தலில் பலவிதப் பூக்கள் அணிந்த ஆயர் மகளிர் ஒன்று கூடும் அந்த மைதானத்தை அடைவோம். அடடே அங்கே உயரத்தில் பரண் எல்லாம் கட்டப்பட்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. கூர் சீவிய கொம்புகளை உடைய ஏறுகள் கம்பிக்கட்டைகள் பின்னே அணிவகுக்கின்றன. அவை திமில் மிரள வாடிவாசலில் இருந்து உள்ளே ஓடி வருவதற்குள்  நாம் பாதுகாப்பாகப் பரணில் ஏறி அமரலாம். யாருக்காக இந்த ஏறுதழுவல் என்பதைப் பார்க்க நாம் அதோ சில குழந்தைகள் குரவைக்கூத்தாடும் இடத்துக்குப் போவோம்.

புதன், 2 மே, 2018

ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.

தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி
நத்துவார் தமக்கு நலம்பல பயக்கும்
முத்தே போற்றி மூலமே போற்றி
ஒற்றைக் கொம்பை உடையாய் போற்றி
அற்றம் அகற்றும் ஐயா போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.
கடலூர் ரயில்வே ஸ்டேஷன் விநாயகர்.
அதே கோயிலின் பின் பக்கம்
காரைக்குடி துபாய் நகரத்தார் சங்க விடுதிக் கட்டிடத்தின் மெயின் ஹாலில் உள்ள விநாயகர்.

ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.

நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.
போற்றுவார்க்(கு) அருளும் புண்ணியா போற்றி
நம்பிக்கைவைப்பார்தம் நாதா போற்றி
தும்பிக்கை யான்நீ துணையே போற்றி
நாவாரப் பாடும் நல்லமிழ் மந்திரமாம்.

ஸ்ரீமஹாகணபதிம்.

காரைக்குடி நகரச் சிவன் கோவிலில் இயற்கை ஓவியமாய் விடையேறுபாகன், சுப்ரமண்யருடன் விநாயகர்.

செவ்வாய், 1 மே, 2018

ராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.


ராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சிறுமியாகவும் இருக்கலாம். ஒரு ஹோமில் தள்ளப்பட்டவளாகவும் இருக்கலாம். வேண்டும் வேண்டாம் என்பதைத் தீர்மானிக்கும் மனிதர்களின் கரங்களில் இன்னும் சராசரிப் பெண்களின் வாழ்வு உழல்வதைப் படம்பிடிக்கின்றன உமாமோகனின் கதைகள்.

உமாமோகனின் ஏழாவது நூல் இது. ஐந்து கவிதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுப்பின் பின் வந்த நூல். பன்னிரெண்டு கதைகள் உள்ள சிறுகதைத் தொகுப்பு . இதில் எல்லாமே பெண்களும் அவர்களைச் சுற்றிய பிரச்சனை அல்லது பிம்பங்கள் பற்றியது. அநேகமாகத் தன்னம்பிக்கைப் பெண்கள்தான் அனைவரும். ஏதோ ஒரு வழியில் தம் மேல் திணிக்கப்பட்டவற்றையோ அல்லது புகுத்தப்பட்ட எண்ணங்களையோ ஏற்றுக்கொண்டு அதன்படி வாழக் கற்பிக்கப்பட்டவர்கள்.

இக்கதைகளில் ஒவ்வொருவர் பற்றிய சித்திரமும் தெளிவாக விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஒருவர் போல இன்னொருவர் இல்லை என்பதும். மனுஷிகள்தான் எத்தனை மாதிரி இருக்கிறார்கள் !

வீட்டில் வெளியேற்றப்பட்ட ஒரு பெண் தன்னுடைய தற்போதைய நிலைமையை மனதளவில் சாதகமாக்கிக் கொண்டு  ஹோமில் அரசியாகத் திகழ்வது ஆச்சர்யம்.
Related Posts Plugin for WordPress, Blogger...