எனது நூல்கள்.

செவ்வாய், 22 மே, 2018

காலம் செய்த கோலமடி :-

காலம் செய்த கோலமடி :-


முன்னுரை:-  பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ, தஞ்சை பிரகாஷ் கதையோ உண்டாக்கும் அதிர்ச்சி கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் . ஏனெனில் அது உறவுச்சிக்கலை அதி வித்யாசமான கோணத்தில் காட்டுவதால்தான். அதேபோல்தான் தில்லையகத்து துளசிதரனின் கதையான காலம் செய்த கோலமடியும் சிறிய கலாச்சார அதிர்ச்சியை உருவாக்கியது.

1983 இல் நடக்கும் கதை மிகச் சரளமானது . எந்தக் குழப்பமும் இல்லாதது. ஆனால் 2017 இல் நடக்கும் கதை முழுக்க முழுக்க சிக்கல்களை முன்வைக்கிறது. ஆசிரியராக துளசிதரன் இக்கதையில் ஆங்காங்கே வகுப்பறை, மாணவர்கள், கல்வித்திட்டம், அவற்றின் சீர்குலைவுகள் பற்றிச் சொல்லி வருவது எவ்வளவு பிரமிப்புக்குள்ளாக்குகிறதோ அதே போல் ஒரு பத்ரிக்கை செய்தி இக்கதையின் கடைசி மூன்று பாகங்களில் புகுந்து புரட்டிப் போட்டுவிடுவது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

புரிந்து கொள்வது சிரமம்தான் என்னும் போதிலும் இப்படியாப்பட்ட கதைகள் கோடியில் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம் . தேசத்திலே கூட நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையானதாய் இருக்கலாம். ஆனால் இக்கருவை கடைசியில் சேர்த்துக் கதையின் போக்கை கதாசிரியர் சாமர்த்தியமாக மாற்றி இருந்தாலும் இந்தமாதிரி ஒரு நிகழ்வு எல்லாம் தேவையா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

சரி இப்படி ஒருகதை நடந்துவிட்டது என்ற பின்னால் நம்முடைய அபிப்பிராயங்களுக்கு அங்கே இடமென்ன. அவர்கள் முடிவை நோக்கி கதாபாத்திரங்களே முன் நகர்கிறார்கள். கோபால் முடிவில் சினிமா நாயகன் மாதிரி அம்மன் சந்நிதியில் பொட்டு வைத்து லதாவுடன் இணைந்தாலும் முதல் சந்திப்பில்  கோயிலில் நடந்து கொள்ளும் முறைகள் அதீதமானவை. இப்படி நாகரீக வேஷம் போடும் பலர் நடந்துகொள்ளும் முறையைத்தான் ஆசிரியர் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் என்றபோதும் முன்பாதியில் சில இடங்களிலும் பின் பாதியில் நிறைய இடங்களிலும் சிறிது கதைப்போக்கை விட்டு விலகி சிந்திக்க வேண்டியதாயிற்று.

இப்படி ஒரு கதைக் கருவை எடுத்தாள கதாசிரியருக்குத் துணிச்சல் அதிகம் இருந்திருக்க வெண்டும். ஏனெனில் நூலிழையில் விரசமாகிவிடக்கூடிய ஒரு சப்ஜெக்டை எடுத்துக் கதை படைத்திருக்கிறார். இதனால் லதா, துரைராஜ், கோபால் ஆகியோர் கதையைச் சொல்லிச் செல்வதாக அமைத்திருக்கும் பாணி வித்யாசத்துக்குரியது மட்டுமல்ல. அவரவர் நியாயத்தை அவரவர் ( விருமாண்டி பாணியில் ) எடுத்தியம்ப முடிகிறது. மூவர் பார்வையிலும் நாம் கதையைப் படித்துச் செல்லும்போது அந்த ரகசியம் வெளிப்பட்டவுடன் யதார்த்தமாக கதையின் போக்கு மட்டுமல்ல உறவுமுறைகளும் மாறிவிடுகிறது.

இதில் துரைராஜ் மனம்தான் மிக மிக நொந்த மனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது எதுவும் தெரியாததால் லதாவின் மனதில் குற்ற உணர்வைத் தவிர வேறேதும் உணர்வுக் குழப்பங்கள் இல்லை. கோபாலுக்கும் கூட தான் இழைத்த அநீதி குறித்தே குற்ற உணர்வு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கல்லூரி ஆசிரியர் துரைராஜின் உணர்வுகள் குழப்பங்களுக்குள்ளானவை. ஜெயலெட்சுமி போன்ற புரிதல் உள்ள பெண் கிடைப்பது தவம். அப்படியே அவரை ஏற்றுக்கொண்டு அவள் வேறேதும் பேசுவதேயில்லை என்பது இக்கதையின் ஆச்சர்யம்.

ஒரே நாளில் காலையில் இருந்து மாலை வரை ஒரே மூச்சாக 227 பக்கங்களையும் படித்தேன். அவர்கள் உணர்வுகளில் ஏறிப் பயணித்தேன். ஒரு கட்டத்தில் அதாவது கடைசி மூன்று அத்யாயங்களில் நாடக மாந்தர்கள் போல அவர்கள் வேறு கதையை நிகழ்த்திக் காட்டிச் சென்றுவிட்டார்கள். அது சிறிது அதிர்ச்சிதான் எனக்கு.

ஒருகதையை ஒரு முறை படிக்கலாம். ஆனால் ஏன் இரண்டு மூன்று முறை படிக்கவேண்டும் என்று முன்னுரையைப் படித்ததும் யோசித்தேன். கணவன் மனைவி அந்யோன்யம் என நினைத்தபின் அதைத்திரும்பப் படிக்கும் துணிவு எனக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. கடைசி மூன்று அத்யாயங்கள் உள்ளபடியே இதை மூன்று முறை படிக்காவிட்டாலும் மூன்று நாட்களாகச் சிந்திக்க வைத்துவிட்டன. இக்கதைக்கு நாம் முன்னுரை எழுதுவதா. இது கதையின் போக்கு யார் தவறும் இல்லை. அதுவும் தெரிந்து நடந்த தவறில்லை எனும்போது யார் குற்றம் இது.

உண்மைதான் இது கதாநாயகன் செய்த குற்றமுமில்லை, கதாநாயகி செய்த குற்றமுமுல்லை, காலம் செய்த கோலம்தான்.சரியான தலைப்பில் இக்கதையையும் இம்மாதிரி வித்யாசமான உறவுகளையும் நகர்த்திச் சென்று நல்ல முடிவை அளித்ததற்கு துளசிதரனுக்குப் பாராட்டுகள்.

சரளமாகச் செல்லும் கதையில் சாம்பிளாக ஒரு கதை எழுதித்தான் பார்ப்போமே இப்படி ஒரு கருவில் என அவர் திடீரென அந்த பத்ரிக்கை செய்தியைப் பார்த்து நினைத்ததாகத் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. பரீட்சார்த்த முயற்சி வெற்றியடைந்துவிட்டது. ஆனால் ஒரு வேண்டுகோள் இம்மாதிரிக் கருவைக் கொண்டு அடுத்தொரு கதை நீங்கள் எழுதவேண்டுமா என்ற என்னுடைய எண்ணத்தைப் பரிசீலனை செய்யுங்கள்.
பி. கு. நான் அனுப்பியுள்ள இம்முன்னுரையில் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு ஹார்ஷான வார்த்தைகளோ புண்படுத்தும் வார்த்தைகளோ இருப்பின் அவற்றை நீக்கி வெளியிடும் உரிமை உங்களுக்கு உண்டு. அப்படி ஏதேனும் வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.


-தேனம்மைலெக்ஷ்மணன் – காரைக்குடி , 6. 12. 2017 .

நூல் :- காலம் செய்த கோலமடி.
ஆசிரியர் :- தில்லை அகத்து துளசிதரன். 

7 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தங்கள் பதிவு மூலமாகத்தான் நூல் வெளியானதை அறிந்தேன். தங்களின் மதிப்புரையைக் கண்டேன். நூலாசிரியருக்கு பாராட்டுகள். அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது. என் வாழ்த்துரை இடம் பெற்றதறிந்து மகிழ்ச்சி. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார். எனக்கும் தெரியவில்லை.ஆனால் முன்னுரையைப் பகிர்ந்தேன்.


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Ramani S சொன்னது…

ஒளிவு மறைவின்றி மனதில் பட்டதை அப்படியே எழுதியது மனம் கவர்ந்தது அவரும் அதைத்தான் விரும்புவார்.

மீரா செல்வக்குமார் சொன்னது…

துளசி என் நண்பர்....ஆனால் அவர் நூல் வெளியிட்டது தெரியாது ..உங்கள் மதிப்புரை அதனை வாசிக்கத்தூண்டுகிறது..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

(அன்றே துளசி எனக்குச் சொல்லியும் என்னால் இங்கு வெளியிட முடியவில்லை. கணினி ரிப்பேர் ஆனதால்....இன்றுதான் பார்த்து வெளியிட முடிந்தது.)

மொபைலில் பார்த்துவிட்டேன் சகோ. மிக்க நன்றி சகோதரி தங்களின் உரைக்கு. புத்தகம் இனிதான் வெளிவரப் போகிறது.

சென்னை தலைமையகத்தில் கணினி டவுன் என்பதால், கருத்தை நான் அங்கு அனுப்பி அங்கிருந்து தங்க்லிஷ் தமிழ் எழுத்தாக மாறி வெளி வரும் என்பதால்...தாமதமாகும்...

புத்தக அறிமுகம் இனிதான் சகோதரி. ஜூன் 17 அன்றுதான் சென்னையில். என்னால் சென்னை போக இயலுமா என்று தெரியவில்லை.

மிக்க நன்றி மீண்டும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பர் செல்வா நூல் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இனிதான். அச்சடித்து வந்துள்ளது. சென்னையில் கீதாவின் வீட்டில் தான் இருக்கிறது. ஜூன் 17 அன்று அறிமுகம். சென்னையில் பெசன்ட் நகர் பீச்சில் என்று கீதா முடிவு செய்துள்ளார். நான் முக நூலில் மற்றும் எங்கள் தளத்திலும் கொடுத்துள்ளேன். மிக்க நன்றி செல்வா

துளசிதரன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி சார்.

முகநூலில் விபரம் பாருங்கள் செல்வகுமார்

நன்றி துளசி & கீதா. நான்தான் வாட்ஸப்பில் நீங்கள் அனுப்பிய அட்டைப்படம் பார்த்து புக் வெளியாகிவிட்டது என்று தவறாகக் கருதிவிட்டேன்.


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...