எனது நூல்கள்.

வியாழன், 24 மே, 2018

வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.


வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.

வாழ்க்கை ஒரு பரிசு  படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என்னைக் காட்டாறு போல இழுத்துச் சென்ற ஒரு அற்புதம் எனலாம். நிஜமாகவே படித்து முடித்ததும் வாழ்க்கை ஒரு பரிசு என உணர்கிறேன்.

கில் எட்வர்ட்ஸ்  ஒரு உளவியல் மருத்துவர், ஆன்மீக எழுத்தாளர், லிவிங் மேஜிக்கலி, ஸ்டெப்பிங் இண்டூ த மேஜிக், ப்யூர் ப்லிஸ் & வைல்ட் லவ் போன்ற நூல்களின் ஆசிரியை. தன்னுடைய ஒவ்வொரு கருத்திலும் அவர் நேர்மறை எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல் இதை மொழி பெயர்த்த பி எஸ் வி குமாரசாமியும் அட்சரம் பிசகாமல் அதை எதிரொலிக்கிறார்.


இந்நூலே தகுந்த சமயத்தில் எனக்குக் கிடைத்த சமீபத்திய பரிசு. வாழ்க்கையை நொந்துகொள்ளாமல் பரிசாகப் பார்த்தல், ஈர்ப்பு விதியைப் புரிந்து கொள்ளுதல், பிரபஞ்சப் பிரவாகத்தில் ஒரு துளியாக இருந்தாலும் நம்மை உணர்தல், நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தப் பயிற்சி செய்தல் இவையே அவர் கூறும் தாரக மந்திரங்கள்.

எந்த ஒரு பக்கத்தைத் திறந்தாலும் நமக்கேற்ற ஒரு கருத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இப்புத்தகம் திகழ்கிறது. பிரபஞ்சம் எல்லையற்ற கருணை உடையது. எதைக்கேட்டாலும் அதை வழங்கும் வல்லமை உடையது. நீங்கள் விரும்புவனவற்றை வழங்க ஆசையோடு காத்துக் கொண்டிருக்கிறது.

இது நடக்குமா நடக்காதா என்ற சிந்தனையே வேண்டாம். அது நியாயமான ஆசையா என்பதைக் கூட யோசிக்க வேண்டாம். நீங்கள் கேட்டீர்கள் என்ற காரணத்துக்காக அதை கட்டாயம் வழங்கிவிடும். கனவுகள் மெய்ப்படும் ஆனால் சிலசமயம் கேட்பதைப் பொறுத்து காலமாறுபாடுடன் மெய்ப்படும்.

அதீதமாகவோ வலியுறுத்தியோ இல்லாவிட்டால் எதிர்மறை சிந்தனையுடனோ அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் எண்ணத்தோடோ கேட்கக் கூடாது. அவற்றை மிகவும் கஷ்டத்துடன் போராடித்தான் பெற முடியும். உங்கள் எண்ணங்களை ஆசைகளை பிரபஞ்சத்திடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாயிருங்கள். அவை ஒரு நாள் நனவாகும். நிச்சயம் நனவாகும் என்பதே ஆசிரியர் கூறும் கருத்து.

எல்லாமே முடிந்துவிட்டது என்றோ எதுவும் ஒழுங்கில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றோ கிடையாது. இப்போதிலிருந்தும் தொடங்கலாம். எதுவும் ஒழுங்காக இருப்பதை விடவும் அதன் அதன் (கோணலிலேயே ) ஒழுங்கிலேயே தன்னுடைய நிம்மதியை அடைவது முடியும். சுய சந்தோஷம் முக்கியம்.

தன்னைப் போஷித்தல் தவறு இல்லை. உங்களை நீங்களே சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதையே பிரபஞ்சம் விரும்புகிறது. யாருக்காகவும் எதற்காகவும் உள்ளத்தை ஒளிக்காதீர்கள். நியாயம் தர்மம் தவறு சரி என்பதெல்லாம் கிடையாது. ஆள் பொறுத்தோ நேரம் பொறுத்தோ விட்டுக் கொடுப்பவர்கள் ஒரு நாள் அதிலிருந்து அதிரடியாக விடுபட்டு சுயத்தைக் காட்டியே தீருவார்கள். 

பயமும் அச்சமும் உங்களை எழும்பவிடாமல் செய்துவிடும். பயத்திலிருந்து, தடைகளில் இருந்து விடுதலையாகுங்கள்.

விட்டுக் கொடுத்தல், நியாயவானாக இருக்க தன்னைக் கஷ்டப்படுத்திக் கொள்ளுதல் தியாகம் போன்றவை நல்லது என்றே கூறி வளர்க்கப்பட்டிருக்கிறோம். உங்களையே நீங்கள் வதைத்துக் கொண்டு பிறர்க்கு எப்படி நல்லதையோ அல்லது சிறப்பானதையோ வழங்க முடியும் . முதலில் உங்களுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு, உங்கள் ஆசைகளுக்குக் கனவுகளுக்கு நீங்கள் உறுதுணையானவராக இருங்கள். உங்கள் துணையாக பிரபஞ்சமும் செயல்படும். அது உங்களுக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதே அவர் கூறும் நற்செய்தி.

வாழ்க்கை ஒரு பரிசு என்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ளுதல் முதல்படி.  உங்கள் அக உலகம்தான் கண்ணாடியாக, புற உலகாகப் பிரதிபலிக்கிறது என்பது இரண்டாம் படி..

பிரபஞ்ச சக்தியின் போக்கோடு இணைந்து செல்லுங்கள் இது மூன்றாம் படி. நீங்கள் கேட்டதுதான் இதுவரை கிடைத்திருக்கிறது. உங்கள் மகிழ்ச்சி உங்கள் பொறுப்பு மட்டுமே. வாழ்க்கையைக் காதலியுங்கள்.

உங்கள் உள்ளக் கிடக்கையை அடக்க அடக்க அது பயம், துயரம் மனச்சோர்வாக கீழ்நிலையில் கிடத்துகிறது. ஏக்கம் வேண்டாம். எதிர்மறையான எதையும் கிட்டே சேர்க்காதீர்கள் 

உங்கள் ஆசைகளுக்காக வாழத் துவங்கும்போது மேல் நிலையில் ஏறி அது அன்பு, மகிழ்ச்சி , சுதந்திரம், உற்சாகம், நம்பிக்கையாக உயர்வான உணர்வலைகளாகப் பரிணமிக்கிறது. உலகத்தில் எதுவும் யாருமே மோசமல்ல. அவர்கள் வழிப்படி அவர்கள் நடக்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கிடைக்கும்

அன்பின் குரலுக்கு செவிமடுப்பது நான்காம் நிலை. அச்சநிலையிலிருந்து விடுபட்டு அன்பு நிலைக்கு மாறுங்கள்.முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உட்குரலைக் கேளுங்கள். அடுத்தவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழத்துவங்கும் போது கனவுகள் நனவாகும்.

லேசர் ஒளிக்கற்றையாய் மாறுவது ஐந்தாம் நிலை. நம் எண்ணங்களை ஆசைகளை ஒருமுகப்படுத்தும்போது அதற்கான நபர்களைச் சந்திக்கிறோம். அவை உடனடியாகவோ சிறிது தாமதமாகவோ கட்டாயம் சாத்தியமாகிவிடுகின்றன. ஆரோக்கியம், காதல், பணம், புகழ், செல்வம் என்று எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்க இந்தப் பிரபஞ்சம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. எனவே பிரபஞ்சத்திடம் கேளுங்கள். நீங்கள் தனித்தியங்கவில்லை. பிரபஞ்சமும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றத் துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

என்ன பரிசு வழங்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்திடம் நீங்கள் வேண்டும் பரிசைக் கேளுங்கள். விதம் விதமான பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிசைக் கேட்டாலும் அத்தனையையும் சித்தமாக்கக் காத்துக் கொண்டிருக்கிறது பிரபஞ்சம்.

பழையன கழிதலும் புதியன துணிதலும் ஆறாம் நிலை. டேக் இட் ஈஸி பாலிஸி. போராட வேண்டாம், பாரம் சுமக்க வேண்டாம், பெறுவதற்கு தயாராக இருந்தால் போதும். எல்லாம் கனிந்துவரும்போது நெகட்டிவ் எண்ணம் கொண்டு தடுக்க வேண்டாம்.

அனைத்தும் கனகச்சிதமாக வெளிப்படுதல் ஏழாம் நிலை. முரண்பாடுகளைக் கண்டு கலங்க வேண்டாம். பரிசுதான் பெரிசாகக் கிடைக்கப் போகிறதே. எதிலும் பிரகாசமான மறுபக்கத்தைப் பாருங்கள். ரோஜாக்களைப் பாருங்கள்> முட்களைப் பார்த்துக் கவலைப்படாதீர்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் உங்கள் பாதையில் இருளும் முட்களும் இல்லாமலே போய்விடும். 

நீங்கள் எந்தச் சூழலிலும் பிரபஞ்சத்தால் அளவற்று நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை உணருங்கள்.

உங்களால் நேர்மறையான பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது எட்டாம் அத்யாயம். பிறவி நோக்கத்தைக் கண்டடையுங்கள். தங்கமயமான எதிர்காலத்தைக் கற்பனை செய்யுங்கள். நீங்கள் விரும்புவதைச் செய்யும் போது உலகம் உங்கள் வசப்படும். மற்றவர்களை அவர்கள் எண்ணங்களைத் திருத்த அல்ல. நம்மையே நாம் மாற்றிக் கொண்டால் நமது எண்ணங்களைச் சீரமைத்துக் கொண்டால் உலகும் மாறும் என்பது நிதர்சனம்.  உங்களைப் பேணுங்கள். அதை சுயநலம் என்று எண்ண வேண்டாம். உங்களையே நீங்கள் நன்றாக வைத்துக் கொள்ளாவிட்டால் பின் யாரை நீங்கள் நன்றாக வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள். ?

வாழத் துணியுங்கள். கனவுகாணத் துணியுங்கள். என்பது ஒன்பதாம் படி நிலை.அனைவரையும் அனைத்தையும் மனமாரப் பாராட்டுங்கள். மூலசக்தியிடமிருந்து தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தால் தியானம் செய்யுங்கள். பாசிட்டிவ் அப்ரோச், பாசிட்டிவ் மனிதர்களுடன்  தொடர்பில் இருங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும். இதுவே  பத்துக் கட்டளைகளின் மூலமந்திரம்.

இவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜி தரும் புத்தகத்தை என் வாழ்நாளில் நான் படித்ததே இல்லை. எனக்கு இதுவரை கிடைத்த எல்லாவற்றையும் யோசிக்கும் போது நான் எப்போதெல்லாம் கேட்டிருக்கின்றேனோ, வலுவாகவோ அல்லது மென்மையாகவோ அவை எல்லாம் நிகழ்ந்தே இருக்கின்றன. நன்மையும் தீமையும் கூட. ஒன்று கூட நான் கேட்காமல் நிகழ்ந்ததே இல்லை என உணரும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. 

எல்லா உயர்வும் எல்லா சந்திப்பும் நம் மனப்போக்கின் படியே நடக்கின்றன என்பதை நான் துல்லியமாக உணர்ந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்குக் கூட நான் காத்திருந்தது போல் உணர்கிறேன். இன்னும் இன்னும் எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி தேவை என்பதை உணர்ந்தது போல் தக்க தருணத்தில் இந்தப் புத்தகம் கைக்குக் கிடைத்ததும் அற்புதமான அனுபவம். என் மருமகள் எனக்களித்த பரிசு. நன்றி பெண்ணே :)  

நம்முடைய வாழ்க்கை என்பது பிரபஞ்சத்துடன் நாம் இணைந்து படைக்கும் அற்புத நடனம். அதை அன்போடும் ஆசையோடும் பிரியத்தோடும்  நமக்காகவும் ஆடித்தான் பார்ப்போமே. .

முன் முடிவுகளோடும் பழமையான எண்ணங்களோடும் சிக்கித் தவித்து வாழ்ந்து வந்த என்னை மீட்ட கில் எட்வர்ஸுக்கும் இதைத் தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்துத் தந்த குமாரசாமி அவர்களுக்கும் அன்பு நன்றிகள்.  

நூல் :- வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT.)
ஆசிரியர் :- கில் எட்வர்ட்ஸ்
தமிழில் பி எஸ் வி குமாரசாமி
பதிப்பகம் :- MANJUL PUBLICATIONS
விலை :- ரூ 195/-

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனம் சிறப்பு...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அருமையான கண்ணோட்டம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோ


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

R Muthusamy சொன்னது…

வாழ்க்கை ஒரு பரிசு. கில் எட்வர்ட். நூலறிமுகம். இந்நூல் பற்றிக் குறித்துக் கொண்டேன்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...