எனது புது நாவல்.

செவ்வாய், 1 மே, 2018

ராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.


ராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சிறுமியாகவும் இருக்கலாம். ஒரு ஹோமில் தள்ளப்பட்டவளாகவும் இருக்கலாம். வேண்டும் வேண்டாம் என்பதைத் தீர்மானிக்கும் மனிதர்களின் கரங்களில் இன்னும் சராசரிப் பெண்களின் வாழ்வு உழல்வதைப் படம்பிடிக்கின்றன உமாமோகனின் கதைகள்.

உமாமோகனின் ஏழாவது நூல் இது. ஐந்து கவிதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுப்பின் பின் வந்த நூல். பன்னிரெண்டு கதைகள் உள்ள சிறுகதைத் தொகுப்பு . இதில் எல்லாமே பெண்களும் அவர்களைச் சுற்றிய பிரச்சனை அல்லது பிம்பங்கள் பற்றியது. அநேகமாகத் தன்னம்பிக்கைப் பெண்கள்தான் அனைவரும். ஏதோ ஒரு வழியில் தம் மேல் திணிக்கப்பட்டவற்றையோ அல்லது புகுத்தப்பட்ட எண்ணங்களையோ ஏற்றுக்கொண்டு அதன்படி வாழக் கற்பிக்கப்பட்டவர்கள்.

இக்கதைகளில் ஒவ்வொருவர் பற்றிய சித்திரமும் தெளிவாக விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு. ஒருவர் போல இன்னொருவர் இல்லை என்பதும். மனுஷிகள்தான் எத்தனை மாதிரி இருக்கிறார்கள் !

வீட்டில் வெளியேற்றப்பட்ட ஒரு பெண் தன்னுடைய தற்போதைய நிலைமையை மனதளவில் சாதகமாக்கிக் கொண்டு  ஹோமில் அரசியாகத் திகழ்வது ஆச்சர்யம்.


இறுக்கிய முடிச்சு வித்யாசமான கதை. அதில் மாமியாரும் மருமகளும் ஒரே பெண்ணிடம் ஏமாந்த கதை. அநேகமாக இயல்பான சராசரி வாழ்க்கையும் ஆசைகளும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் கதை மாந்தர்கள்.  

எட்டுக்கரைமேடு காலனி வீடுகளிலோ அல்லது லயன்வீடுகளிலோ வசித்தவர்களின் நினைவோட்டத்துடன் பயணிக்கிறது. முடிவு அற்புதம்.

என்னை மிகவும் கவர்ந்த கதை கஜிகஜி புடவை. உறவுமுறைகளுக்குள் நல்லது கெட்டதுகளில் வழங்கப்படும் ஒரு புடவைக்கான இடம் எப்பேர்ப்பட்டது எனப் புரியவைத்தது. பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் இம்மாதிரி நிகழ்வுகள் இன்னும் சில காலங்களில் போன நூற்றாண்டுப் பழக்க வழக்கமாகலாம். சாயம் போய்விடும் அப்புடவையை வழங்கிய உறவினரே அணிந்து படுத்திருப்பதைப் படித்ததும் சிரிப்பும் வருத்தமும் ஒருங்கே தோன்றியது. இக்கதையினூடாகச் சொல்லப்படும் மாமியாரின் உரையாடல், மருமகளின் நினைவோட்டம் எல்லாம் கதைக்கு மிகச் சிறந்த பரிமாணத்தை அளிக்கின்றன.

வீட்டில் பெரியவர்கள் கதை பேசும்போது அமர்ந்து கேட்கும் சுகமே அலாதி.அந்தச் சுகத்தை இந்தக்காலத்துப் பிள்ளைகள் மட்டுமல்ல. பெரியவர்களுமே இழந்துவிட்டார்கள் எனலாம். வீட்டுக்கு வரும் சாதாரணப் பணியாளர்களுடன் கூட அவர்களுக்குக் கதைக்கக் கதைகள் இருந்தன. கேட்க நமக்கும் பொழுது இருந்தது. அப்படியான ஒரு கதை சக்கர மூக்குத்தி. பாட்டியின் பிம்பமாகப் பேத்தியைப் பார்க்கும் கோவிந்தம்மாளின் மசமசப்பு முடிவில் நம் கண்ணிலும் படர்கிறது.

சம்பாதனை காணாமல்போன ஒரு பை கிடைத்த கதைதான் என்றாலும் சொல்லிய விதம் வித்யாசம். ஒரு பையைப் பற்றி இவ்வளவு விவரிக்க முடியுமா அம்மே J

சில்லுக்கட்டம் விலக்கி வைக்கும் குடும்பத்திடமிருந்து தன்னை எந்த மறுப்புமில்லாமல் விலக்கிக்கொண்டு செல்லும் பெண்ணின் கதை. ஏமாற்றம். ஏக்கம் ஏதுமே இல்லையா என்று அம்முக்குள்ளி என்று முத்திரை குத்தப்படும் பெண்ணின் உணர்வுகள் கடைசிவரை புரிபடாமல் போவதே வாழ்வின் யதார்த்தம். சில பிரச்சனைகளுக்குத் தீர்வே இல்லைதானே. ”அழுகை வரக்கூடாதா, திகைத்து நிற்கக் கூடாதா, குறைந்தபட்சம் சோகமாகத் தலையாட்டினால்தான் என்ன “ என்று கார்த்தியைப் போலவே மனம் மருகியது.

தனதான பிம்பத்தை உடைக்கத் தயங்காததை முட்கள் நகர்கின்றன விளக்கியது. வேலைக்குச் செல்லும் பெண்ணின் சின்ன சின்ன அபிலாஷைகள், அலங்காரம், அழகுணர்ச்சி, அழகு நிலையத்தில் தனக்கான சில நிமிடங்களை எடுத்துக் கொள்வதும் அங்கே சென்று வருவதுமே கூட ஒரு ஆடம்பரமானதாக, வேண்டாததாக, அடுத்தவரை அண்டியிருக்க வேண்டியிருப்பதாக இருப்பது நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது சிறுமியர் மட்டுமல்ல சிறுவர்களும் இப்படி நண்பர்கள் வீடு தேடிச் சென்றதால் உதைபட்டிருக்கிறார்கள். இதைப்படித்ததும் பத்துவயதில் ஏதாவது வாங்க கடைக்கு அம்மா அனுப்பினால் பராக்குப் பார்க்காம சீக்கிரம் வா என்று சொல்லி அனுப்பியது ஞாபகம் வந்து புன்னகையை உண்டாக்கியது. சின்னச் சின்ன அஜாக்கிரதைகள் நமக்கான கட்டுப்பாடுகளை இறுக்குகின்றன என்ற முத்தாய்ப்புடன் முடிகிறது கதை.

வள்ளிக்குட்டி என்ற ஜோதிகாவின் அம்மா இன்றைய தமிழகத்தின் அநேக கீழ்த்தட்டுப் பெண்களின் மனசாட்சி. முடிவில் குடித்தே அழியட்டும் என்று அவள் தலையோடு கால் ஆடுவது கொஞ்சம் மிரட்சி ஏற்படுத்தினாலும் அவள் பட்டபாடு எல்லாம் மேலேறி அவள் கூற்றின் உண்மையை ஏற்கச் செய்தது.

விருந்தும் மருந்தும் எல்லார் வீட்டிலும் நடப்பதுதான். வீட்டாருக்கே இப்போதெல்லாம் செய்யமுடியாதபோது மருத்துவத்துக்காக வந்து செல்வோர் எல்லாம் தேவையற்ற சுமையை ஏற்றிச் செல்வதாகவே தோன்றும். வியாதி தொத்திடுமோ, தன் வீட்டில் கூட தான் சுருங்கிக்கொண்டு அவர்களுக்கு உணவும் இடமும் வழங்கவேண்டுமோ என்ற யதார்த்தக் கவலைகள் கொண்ட கதை முடிச்சு. எங்கே தப்பிப் போனாலும் சில உறவுகள் நமக்காகக் காத்திருப்பது அவர்களின் வேறுவழியற்ற தேவை என்ற முடிவோடு அடுத்துக் குடும்பத்துள் எழும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்றும் தோன்றவைக்கிறது.

கமலாமகன். கடைசியாக ஒரு ஆண்மகனை நாயகனாக்கிக் கதை படைத்துள்ளார் உமா. எல்லாக் கதைகளிலும் ஆண்கள் ஊடுபாவாக வருகிறார்கள் என்றாலும் இதில் அப்பாவின் குளறுபடி பையனுக்கும் இருப்பது தெரியாமல் வேலைக்குச் சேர்த்து வீட்டில் இடம்கொடுத்து அவதிப்படும் பெண்ணின் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. பிறந்த வீட்டின் அல்லது ஊரின் உறவினர்கள் பற்றி நாம் அறியாமல் இருக்கும் பல்வேறு கோணங்களையும் பிரச்சனைகளையும் அலசியது இக்கதை.

உமாமோகனின் கதைகளின் இதுதான் பிரச்சனை என்று சுட்டப்படுவதோ அல்லது அதற்கு என்ன தீர்வு என்று தீர்ப்புச் சொல்வதோ இல்லை. கதைமாந்தர்கள் தம் வாழ்வைத் தாமே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அகஸ்மாத்தாக ஒவ்வொருவரின் பிரச்சனைகளையும் நாமும் கடந்து செல்கிறோம் அல்லது நினைவுகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறோம். மொத்தத்தில் ராஜகுமாரியின் வீடு வழியில்தான் இருந்தது.

”இங்கெல்லாம் தனியாவே வந்ததில்லந்த..”

”தனியாவா வர்ற. அதான் நானும் இருக்கேல்லந்த வா.. வா..”

என்று கூறும் செல்வாவின் கரம் பிடித்துக் கொஞ்சநேரம் கைகோர்த்து ஆடியபடி  செல்லும் நாம் இன்னும் சிறுமியர்தான் என்றே தோன்றுகிறது. 

  
நூல்:- ராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது.
ஆசிரியர் :- உமா மோகன்
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
விலை :- ரூ 100.

6 கருத்துகள் :

உமா மோகன் சொன்னது…

நெஞ்சம் நிறை நன்றி தேனு❤🙏❤ நல்ல அலசல்

ஸ்ரீராம். சொன்னது…

சிறுகதைகள் எப்போதுமே சுவாரஸ்யம்.

G.M Balasubramaniam சொன்னது…

உமா மோகனின் பதிவுகளை அவ்வப்போது படிப்பதுண்டு

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான படைப்பு என்று தோன்றுகிறது உங்கள் பதிவின் வரிகளில் சகோ/தேனு

R Muthusamy சொன்னது…

நூலறிமுகம் சிறப்பு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி உமா

நன்றி ஸ்ரீராம்

நன்றி பாலா சார்

நன்றி துளசி சகோ

நன்றி முத்துசாமி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...